தும்புத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தும்புத் தொழில்
தும்புத்தொழில்19.jpg
பெயர்தும்புத் தொழில்
வகைதென்னை/ கிதுல்/ ஓலை/ பனை சார்ந்தவை (தேசிய அருங்கலைகள் பேரவை, இலங்கை)
நடைபெறும் இடங்கள்இலங்கை (ஆரையம்பதி, புத்தளம்), இந்தியா (பொள்ளாச்சி)
மூலப் பொருட்கள்தென்னந் தும்பு, தண்ணீர்
பயன்படுத்தப்படும் கருவிகள்ஆற்றங் கரை, தடி, கல்லு, தும்பு பிரிப்பு இயந்திரங்கள்
உற்பத்திப் பொருட்கள்தென்னங் கயிறு, தும்புத்தடி, தும்பு மெத்தை, மிதியாய், தரைவிரிப்பு
இன்றைய நிலைபரவலாக மேற்கொள்ளப்படுகிறது


தும்புத் தொழில் என்பது தென்னந் தும்பை மூலப் பொருளாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கைத்தொழில் ஆகும். தேங்காய் மட்டை அல்லது உரிமட்டைகளை பதப்படுத்தி தென்னந் தும்பைப் பெறுவதில் இருந்து தும்பைப் பயன்படுத்தி முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்தல் வரையிலான செயற்பாடுகள் தும்புத் தொழில் என்பதற்குள் வருகின்றன. இது இலங்கை, இந்தியா, மற்றும் தென்னை அதிகம் வளரும் நாடுகளில் முக்கிய ஒரு கைத்தொழில் ஆக விளங்குகிறது.

வரலாறு[தொகு]

இலங்கை மற்றும் தென்னிந்தியப் பிராந்திய வரலாற்றில் தும்புத் தொழில் ஒரு முக்கிய கைத்தொழிலாக வழங்கி வந்தமைக்கான பல வரலாற்றுச் சான்றுகள் காணக் கிடைக்கின்றன.

முதலாம் நூற்றாண்டு[தொகு]

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுலாமிய பல்துறை அறிஞரான அல்-பிறூனி (Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī) மாலைதீவுகளையும் லக்காதீவுகளையும் இருவகையாகப் பிரித்து, முதலாவது பிரிவை டிவா-கௌசா (Dyvah-kouzah) அல்லது சோழிகள் உற்பத்தி செய்யும் தீவுகள் எனவும், இரண்டாவது பிரிவை டிவா-கன்பர் (Dyvah-kanbar) அல்லது தென்னந்தும்பை உற்பத்தி செய்யும் தீவுகள் எனவும் வகைப்படுத்தி அழைத்துள்ளார்.[1]

11 ஆம் நூற்றாண்டு[தொகு]

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அராபிய புவியியலாளரான முகம்மது அல்-இட்றிசி (Muhammad al-Idrisi) தென்னந்தும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட கப்பல் கட்டுளைத்தொகுதி (cordage)[1] பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கப்பல் கட்டுளைத்தொகுதியானது கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல் கயிறுகளின் தொகுதியாகும். இதற்கான மூலப்பொருளான தென்னந்தும்பைப் பெறுவதற்கு ஓமான் மற்றும் யெமென் நாட்டைச் சேர்ந்தவர்கள் இலங்கையை நாடினர் [1] என அல்-இட்றிசி விபரித்துள்ளதாக குறிப்புகள் உள்ளன.

14 ஆம் நூற்றாண்டு[தொகு]

14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மொரோக்கோ நாட்டு அறிஞரும் நாடுகாண் பயணியுமான இப்னு பதூதாவும் தென்னந்தும்பின் பயன்பாடு பற்றி விரிவாக எழுதியுள்ளார். யெமென் நாட்டிலுள்ள சபார் (Zafar) என்னும் நகரில் கப்பல் பலகைகளை இணைத்துத் தைத்துக் கட்டுவதற்கு கயிறுகள் பயன்படுத்தும் வழக்கம்[1] இருந்ததாக பதூதா தனது பயணக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

16 ஆம் நூற்றாண்டு[தொகு]

16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்த்துக்கேய வரலாற்றாசிரியரான கஸ்டன்ஹெடா (Fernão Lopes de Castanheda) தனது இந்தியக் கண்டுபிடிப்பின் வரலாறு என்னும் நூலில் சொவலா (Sofalah) என்னும் துறைமுக நகரைச் சேர்ந்த இசுலாமியர்களின் தனித்துவமான கப்பல் கட்டுமான நுட்பங்கள்[2] பற்றி விபரித்துள்ளார். இக்கப்பல்களின் தனிச்சிறப்பு அவை மேல்தளமற்றுக் காணப்படுவதுடன், அவற்றின் கட்டுமானத்தில் ஆணிகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, கப்பல்களை “கேரோ/கயிரோ” (cayro) வினால் தைத்து இணைக்கும் முறையை[2] அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இக் கேரோ/கயிரோ என்பது இந்தியாவிலுள்ள கக்கோ என்னும் காயின் பட்டையாகும் எனவும், அவற்றிலிருந்து கயிறுகள் தயாரிக்கப்பட்டன[2] எனவும் கஸ்டன்ஹெடா குறித்துள்ளார்.

“கேரோ/கயிரோ” (cayro) என்னும் பதம் தமிழ்ச் சொல்லான கயிறு என்னும் சொல்லில் இருந்து மருவி வந்திருக்கக் கூடும். இதனைக் கருத்திற் கொண்டு ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் போர்த்துக்கேயர் இச்சொல்லை இந்துக்களிடமிருந்து சுவீகரித்திருக்க வேண்டும்[1] எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப் பண்டைய வணிகத் தொடர்புகள் காரணமாக தென்னாசியாப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்தவர்கள் தென்னந்தும்பைப் பதப்படுத்தும் முறைமைகளையும், அதிலிருந்து கயிறு திரிப்பதற்கான நுட்பங்களையும் பல்நூற்றாண்டு காலமாக அறிந்திருக்கக்கூடும்.

17 ஆம் நூற்றாண்டு[தொகு]

காலனிய அரசுகளின் ஆதிக்கத்திற்கு முற்பட்ட யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை வீட்டுத் தோட்டங்களிலேயே பெருமளவு மேற்கொள்ளப்பட்டது.[3] தென்னை உற்பத்திகளுள் ஒன்றான பொச்சுக் கயிறு தனியாரால் தென்னிந்திய கரையோரப் பிரதேசங்களுக்கு, குறிப்பாக சோழ மண்டலத்திற்கும் தொண்டை நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. உள்நாட்டில் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் விற்பனை செய்யப்பட்டது.[4] இதன் விலையும், விற்பனையால் பெறப்பட்ட இலாபமும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டிருந்தமையை டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஹென்ட்றிக் சுவார்திகுறூன் (Hendrick Zwaardecroon)[5] பதிவு செய்துள்ளார்.

19 ஆம் நூற்றாண்டு[தொகு]

இலங்கையில் ஏறத்தாழ 20 மில்லியன் தென்னை மரங்கள்[6] இருந்ததாக பிரித்தானிய காலனிய அரசின் ஐந்தாவது செயலாளராக 1846 இலிருந்து 1850 வரை பதவி வகித்த ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் கணிப்பிட்டிருந்தார்.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் தென் மற்றும் தென்மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்வோருக்கு தும்புத்தொழில் பரவலான தொழில் வாய்ப்புகளை வழங்கும் தொழிலாக இருந்துள்ளது.[1] இப்பிரதேசத்திலுள்ள வீதியோரங்களில் குழிகள் வெட்டி, அவற்றுள் தென்னை மட்டைகளை புதைக்கும் வழக்கம்[6] இருந்திருக்கிறது. தென்னை மட்டைகளின் நார்த்திசுக்களை மக்கிச் சிதைத்து கயிறாக்கும் நோக்குடன்[6] இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வகையில் பெறப்பட்ட தென்னந்தும்பானது கட்டில், மெத்தை, தூரிகை, வலை, கயிறு, கம்பிவடம், கப்பல் கட்டுளைத் தொகுதி,[7] கன்வசு (ஓவியம் தீட்டப் பயன்படும் துணி), தரைவிரிப்பு[8] போன்றவற்றின் தயாரிப்புக்கு பயன்பட்டு வந்துள்ளது. இவைதவிர, மக்களின் நாளாந்த வாழ்வில் ஒரு முக்கிய எரிபொருளாகவும்[8] தென்னந்தும்பு பயன்பட்டு வந்துள்ளது.

பெருந்தொழில் தும்பு உற்பத்தி[தொகு]

தென்னைப் பயிர்ச்செய்கையானது மேற்கத்திய காலனித்துவத்துடன் பாரிய பொருளாதார உருமாற்றங்களுக்கு[9] உள்ளானது.

பிரித்தானியர் ஆட்சியின்போது பெருந்தோட்ட உற்பத்திப் பொருளாதார மையமாக இலங்கையின் மலைநாடே காணப்பட்டது. கண்டியின் மலைகளுக்கு வடக்கேயும் கிழக்கேயும் உள்ள நிலப்பகுதியானது 1840 வரை அவர்களால் அதிகம் ஆராயப்படாத பிரதேசமாக[10] இருந்துள்ளது. பிரித்தானியர் தென்னையை ஒரு முதன்மையான பெருந்தோட்டப் பயிராகக் கருதவில்லை. ஆயினும், இந்நிலப்பகுதியை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 1840 - 60 காலப்பகுதியில் பெரும் தென்னந்தோட்டங்கள் அமைக்கும் முயற்சியில்[10] அவர்கள் ஈடுபட்டனர்.

இலங்கையின் கரையோர நிலப்பகுதியிலும், குறிப்பாக கிழக்கிலுள்ள மட்டக்களப்பிலும், வடக்கிலுள்ள யாழ்ப்பாணத்திலும், வடமேற்கிலுள்ள சிலாபத்திலும் தென்னந்தோட்டங்கள் அமைக்கப்பட்டன.[10] இதனைத் தொடர்ந்து முதலாளித்துவ பெருந்தோட்ட பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெருந்தொழில் தும்பு உற்பத்தியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதைய நிலை[தொகு]

இலங்கை[தொகு]

இலங்கையில் தும்புத் தொழிலின் நீண்ட வரலாறும் 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தொழில் தும்பு உற்பத்தி முறைமையும் உலக தும்புச் சந்தையில் இலங்கையை ஒரு முக்கிய தும்பு உற்பத்தி நாடாக நிலைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, மண்ணிற தென்னந்தும்பு ஏற்றுமதியில் உலகளாவிய ரீதியில் முதலிடம் வகிக்கும் நாடாக இலங்கை விளங்குகிறது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தும்பானது தடித்த, நீளமான, தூய்மையான இழைகளைக் கொண்டிருப்பதாக உலக தும்புச் சந்தையில் கருதப்படுகிறது.[11] இத்தும்பானது பெருமளவு மரபார்ந்த தும்புக் கைத்தொழில் நுட்பங்களைப் பின்பற்றியே உற்பத்தி செய்யப்படுகிறது.

இலங்கையின் தும்புத் தொழிற்துறை ஏறத்தாழ 35,000[11] தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 75-90%[12] பெண்கள் ஆவர்.

நடைபெறும் இடங்கள்[தொகு]

இலங்கை[தொகு]

கிழக்கு மாகாணம்[தொகு]

ஆரையம்பதி[தொகு]

ஆரையம்பதியில் தும்புத்தொழில் ஒரு முக்கிய பாரம்பரியக் கைத்தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தும்புத்தொழிலை மேற்கொள்வதற்குச் சாதகமான புவியியல் அமைவையும் நீர், நில வளங்களையும் மூலப்பொருட்களின் செறிவையும் ஆரையம்பதி இயற்கையாகவே கொண்டுள்ளது. இது கிழக்கே ஆழ்ந்த வங்காள விரிகுடாக் கடலுக்கும் மேற்கே அகன்ற மட்டக்களப்பு வாவிக்கும் இடைப்பட்ட தாழ்ந்த நிலப்பகுதியில் அமைந்துள்ளது.[13] மட்டக்களப்பு வாவியானது பல இடங்களில் குடாவாக உட்புகுந்து செல்வதன் காரணமாக பல்வகையான சிறு நன்னீர் நீர் நிலைகளை உருவாக்கியுள்ளது.[13] ஆரையம்பதியின் மணற்பாங்கான நிலப்பகுதி தென்னைப் பயிர்ச்செய்கைக்கு சாதகமாகவும் வாவி, குளம், மடு, குட்டை[14] போன்ற நீர் நிலைகள் தும்புத் தொழிலின் முக்கிய செயற்பாடுகளான மட்டை புதைத்தல், தட்டல் போன்றவற்றுக்குத் தேவையான இயற்கைச் சூழமைவையும் கொண்டுள்ளன.

ஆரையம்பதியில் தும்புத்தொழில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1930 ஆம் ஆண்டிலேயே ஆரையம்பதி நாலாம் கட்டையில் ஒரு தென்னந்தும்பு ஆலையும் பயிற்சிப் பாடசாலையும்[15] இருந்துள்ளன.

ஆரையம்பதியின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள பரமநயினார் ஆலயத்திற்கு எதிர்ப்புறத்தில் உள்ள இடம் தீர்வைத்துறை என்னுமிடத்தில் ஏற்றுமதிப் பொருட்கள் கிட்டங்கி எனப்படும் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டன.[16] தும்பும் கயிறும்[16][17] இவ் ஏற்றுமதிப் பொருட்களில் முதன்மையாக விளங்கின. இப்பொருட்கள் பெரிய உருக்கள் எனப்படும் நாவாய்களிலும் வத்தைககளிலும் ஏற்றப்பட்டு தூத்துக்குடி,[17] கொச்சின் முதலான இந்தியத் துறைமுகங்களுக்கும் பர்மா, சிங்கப்பூர்[16] போன்ற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் வத்தைகளுக்கும் உருக்களுக்கும் வரி அறவிடப்பட்டது. அதன் காரணமாகவே இவ்விடம் "தீர்வைத்துறை" என்று அழைக்கப்பட்டது.[16] கிட்டங்கி அமைந்திருந்த இடம் கிட்டங்கியடி[18] எனவும் அழைக்கப்பட்டது. இவ் ஏற்றுமதி வர்த்தகம் அன்றைய காலகட்டத்தில் பாரிய வருமானத்தை இக்கிராமத்துக்குப் பெற்றுத் தந்திருக்கின்றது.[17] ஆரையம்பதியில் பாடப்படும் ஓர் ஊஞ்சல் பாடலிலும்[17] இது தொடர்பான விவரணங்கள் காணப்படுகின்றன:

“அதிமுருகு திரிகயிறு கொப்பரை தேங்காய்

அரிவேம்பு அரிசி தவிடு எண்ணெயாம்

பொருட்கள்

ஆறுமுகச் சாமியார் அருள்கொண்டு வாழ்த்த

பன்னிரண்டு கப்பலிலும் பாய்மரம் கட்டி

போகுதாம் கப்பல்கள் பெரியதுறை பார்க்க

பொங்கி படைத்திங்கு பூசைகள் செய்வோம்.”

(திரிகயிறு - முப்புரியாக திரிக்கப்பட்ட தேடாக்கயிறு; பெரியதுறை - கொற்கை, தூத்துக்குடியாகிய தென்னிந்தியத் துறைமுகங்கள்)[19]

பிற்காலத்தில் ஆரையம்பதியில் கிராமிய சிறு குடிசைக் கைத்தொழில் திணைக்களத்தின் மூலம் கயிற்றுச் சங்கங்கள் அமைக்கப்பட்டு தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.[20] நெல் அறுவடை இயந்திரத்தின் அறிமுகத்திற்கு முன்னரான காலப்பகுதியில் நெல் அறுவடைக்குப் பயன்பட்ட கயிறுகளான உப்பட்டிக் கயிறு, வரிச்சிக் கயிறு, தேடாக்கயிறு போன்றன ஆரையம்பதியிலிருந்தே படுவான்கரைப் பகுதிக்கும் கரைவாகுப் பிரதேசத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.[20]

தற்போது காயத்திரி சங்கம்[21] என அழைக்கப்படும் சங்கமே இங்கு முதன்மையாகத் தொழிற்படும் சங்கமாகக் காணப்படுகிறது. இச்சங்கத்தின் கீழ் தொழிலாளர்கள் இணைந்து தும்புத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருதமுனை[தொகு]

மருதமுனையிலுள்ள பிரான்ஸ் சிற்றி என்னும் பிரதேசத்தில் சிறியளவிலான தும்புத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு தும்புப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலையில் சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.[22]

வட மாகாணம்[தொகு]

வல்வெட்டித்துறை[தொகு]

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை ஒரு முக்கிய துறைமுக, கப்பல் கட்டும் நகராக இருந்தமையால் இங்கே தும்பு மற்றும் கயிறு திரிக்கும் கைத்தொழில் ஒரு முக்கிய கைத்தொழிலாக பல் நூற்றாண்டு காலமாக இருந்து வந்துள்ளது.

கச்சாய்[தொகு]

கச்சாய் தும்பு உற்பத்தி நிலையம்.[23]

அல்லாரை[தொகு]

அல்லாரை தும்பு கைத்தொழில் உற்பத்தி நிலையம்.

கொழும்புத்துறை[தொகு]
பளை[தொகு]
முல்லைத்தீவு[தொகு]

வடமேல் மாகாணம்[தொகு]

விருதோடை[தொகு]

கொகோ லங்கா தும்புக் கைத்தொழில் அமைப்பு.

புத்தளம்[தொகு]

தும்புத் தொழிலுடன் தொடர்புடைய இடப்பெயர்கள்[தொகு]

தும்பளை[தொகு]

தும்பளை இலங்கையின் வடபகுதியிலுள்ள பருத்தித்துறைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். தும்பளை என்னும் பெயர் "தும்பு + அளை"[24] என்பதிலிருந்து மருவி வந்திருக்க வேண்டும். அளை என்பது வாய்க்கால் அல்லது ஓடையைக் குறிக்கும்[24] சொல்லாகும். முற்காலத்தில் தும்புக் கைத்தொழிலே இக்கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென இடப் பெயர் ஆய்வாளர்கள்[25] கருதுகின்றனர். தேங்காய் மட்டைகளிலிருந்து தும்பைப் பெறுவதற்கு அவற்றை நீரில் சில காலம் ஊற வைக்க வேண்டும். இதற்காக சிறு ஓடைகளை வெட்டி, நீர் பாய்ச்சி அதனுள் மட்டைகளைப் புதைத்து வைப்பது வழக்கமாகும்.[24] இங்கு தும்பு அளைகள் (ஓடைகள்) பல காணப்பட்டமையால் இவ்விடத்திற்கு (தும்பு + அளை) தும்பளை[25] எனப்படும் காரணப் பெயரை வழங்கியிருக்கலாம். மக்கள் எந்நேரமும் தும்பை அளைந்து தொழில் புரிந்தமையால் தும்பளை என்ற காரணப்பெயர் வந்தது[25] எனவும் கருதப்படுகிறது.

மட்டைத் துறை[தொகு]

ஆரையம்பதிக்கு அருகிலுள்ள காங்கேயனோடைக்கும் ஆற்றங்கரைக்கும் இடையிலுள்ள மட்டை புதைக்கும் இடம் "மட்டைத் துறை" என அழைக்கப்படுகிறது.[15]

செயற்பாடுகள்[தொகு]

தேங்காய்களில் இருந்து அதன் மட்டைகள் அகற்றப்படுவதில் இருந்து மட்டைகளில் தும்பை வேறுபடுத்தி அவற்றை பதப்படுத்தி அத்தும்பை கொண்டு தும்புத்தடி, மெத்தை, கால்மிதி மற்றும் கயிறு போன்ற முடிவுப்பொருட்களின் உற்பத்திகளை மேற்கொண்டு அதனை விற்பனை செய்யும் செயற்பாடுகள் வரை இவ் தும்பு தொழிலின் செயற்பாடுகளாய் அமையும்.[26]

தேங்காய் உரித்தல்[தொகு]

தென்னையில் காய்க்கும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படும் நோக்கோடு தென்னம் தோட்டங்களில் தேங்காய்கள் சேகரிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு செல்லப்படும். சந்தையில் குறித்த தேங்காய்களில் உள்ள மட்டைகள் கடப்பாரை (அலவாங்கு) அல்லது “உல்” எனப்படும் கூரான இரும்புக் கம்பி போன்ற ஆயுதத்தைக் கொண்டு தேங்காயில் இருந்து அகற்றப்படும். இச்செயற்பாடு “தேங்காய் உரித்தல்” என அழைக்கப்படும். பின்னர் தேங்காய்கள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படும். தேங்காயில் இருந்து அகற்றப்படும் உரிமட்டைகள் பிறிதாக சேகரிக்கப்படும்.

மட்டை புதைத்தல்[தொகு]

உரிமட்டைகள் குறிப்பிட்ட அளவு சேகரிக்கப்பட்ட பின் அவற்றை தும்புத் தொழில் மேற்கொள்பவர்களின் பாவனைக்காக ஒரு வணிகரால் அல்லது குறித்த தும்புத் தொழில்முனைவோரால் கொள்வனவு செய்யப்பட்டு அவற்றை உவர்ப்புத் தன்மை கொண்ட நீர் நிலைகளுக்கு அருகாமையில் கொண்டு சேகரிக்கப்படும்.

மட்டைகளை வாங்கிய தும்புத் தொழில்முனைவோர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் குறித்த நீர் நிலைகளின் ஒரத்தில் (கரைகளில்) தேங்காய் மட்டைகளை புதைத்து விடுவார்கள். புதைக்கப்பட்ட மட்டைகள் நீர் நிலைகளின் கரைகளில் 6 மாதம் தொடக்கம் 1 வரும் வரை அவை பதப்படும் காலம் வரை ஈரப்பதன் உள்ள நிலத்தின் அடியில் ஊறவிடப்படும். குறித்த மட்டைகள் 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை குறிப்பிட்ட பதத்தை அடைந்ததன் பின்னர். உரிமட்டைகளை மீண்டும் தோண்டி எடுத்து அவற்றை ஒவ்வொரு மட்டைகளாக பிரித்து எடுப்பார்கள்.

மட்டை தட்டல்[தொகு]

மட்டை தட்டுதல்

ஒவ்வொரு மட்டைகளிலும் உள்ள தோலையும் தும்பையும் தனித்தனியான கையால் பிரித்து எடுப்பார்கள். தும்பில் இருந்து பிரித்து எடுக்கப்படும் தோல் வீடுகளில் பூ மரங்கள் வளர்க்கும் போது பசளைகளாக பயன்படுத்தல் போன்று சேமிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும். பின்னர் தும்பில் ஊறிக் கணப்படும் நீரை கைகளால் புளிந்து வெளியேற்றியபின் பெறப்படும் தும்பை மரக்கட்டை அல்லது சீமெந்து கொங்கிறீற்றுக் கட்டி ஒன்றில் வைத்து இரும்பு பொல் ஒன்றால் தட்டி அடித்து பதப்படுத்துவார்கள். இதை மட்டை தட்டல் என அழைப்பார்கள். மட்டை தட்டுதல் இயந்திரங்களைக் கொண்டும் செய்யப்படுகின்றது.

உலர விடுதல்[தொகு]

மட்டை தட்டிப் பதப்படுத்தி பெறப்படும் தும்பை வெயிலில் உலரவிட்டு அடுத்த கட்ட உற்பத்திக்கான ஆயத்த தும்பாக மாற்றி அவற்றை சேகரித்து எடுப்பார்கள்.

உற்பத்திப் பொருட்களும் பயன்களும்[தொகு]

இயற்கை உற்பத்திப் பொருட்களுக்கான ஆர்வம் உலக சந்தையில் அதிகரித்தும் வரும் இன்றைய நிலையில் இயற்கையான தாவர மூலப்பொருளான தும்பு மற்றும் தும்பிலிருந்து பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் மீதான சந்தையும் அதிகரித்து வருகிறது.

கயிறு[தொகு]

தும்பு உற்பத்திப் பொருட்களில் முதன்மையாக விளங்குவது தும்பிலிருந்து திரிக்கப்பட்ட பல்வகை கயிறுகளாகும். அவற்றில் சில பின்வருமாறு:

உப்பட்டிக் கயிறு[தொகு]

உப்பட்டிக் கயிறானது வேளாண்மையில், குறிப்பாக நெல் அறுவடையில் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கயிறாகும். இது துண்டுக் கயிறு எனவும் அழைக்கப்படும்.[21] உப்பட்டி என்பது அறுவடை செய்த நெற்கதிர்களை வெட்டி அடுக்கடுக்காக, சிறு குவியலாக இட்டு வைப்பதாகும். இவற்றை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் நன்கு காயவிட்ட பின்னர் உப்பட்டிக் கயிறால் பெரும் கட்டாகக் கட்டி சூடுவைக்கும் இடத்திற்கு கொண்டு செல்வர்.[27][28]

இளைக்கயிறு[தொகு]

இளைக்கயிறு அல்லது இளக்கயிறு என அழைக்கப்படும் கயிறானது பெரும்பாலும் வேலிகள் கட்டுவதற்குப் பயன்படும்.[21] இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தில் மக்களின் மரபுவழி வாழ்விடங்களைச் சுற்றிவர இருந்த வேலிகள் தென்னோலையினால் பின்னப்பட்ட கிடுகுகளால் அமைக்கப்பட்டன. இக்கிடுகுகளை இணைத்துக் கட்டுவதற்கு இளைக்கயிறுகள் பயன்பட்டன.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள வல்வெட்டித்துறையில் இளைக்கயிறைப் பயன்படுத்தி பிரேத ஊர்வலக் கட்டில் (சவக்கட்டில்)[29] கட்டும் வழக்கம் இருந்துள்ளது.

வலக்கயிறு/ மடங்கு[தொகு]

வலக்கயிறு அல்லது மடங்கு என அழைக்கப்படும் கயிறு வலைகள் தயாரிப்பதற்கு பயன்படும் கயிறு வகையாகும்.[21]

தேர்க்கயிறு/ தேர்வடம்[தொகு]

தேர்க்கயிறு அல்லது தேர்வடம் என அழைக்கப்படும் கயிறு பெரும்பாலும் கோவில் திருவிழாக் காலங்களில் தேரை இழுப்பதற்குப் பயன்படும்.

வரிச்சிக்கயிறு[தொகு]

வரிச்சிக்கயிறானது வேளாண்மையில், குறிப்பாக நெல் அறுவடையில் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கயிறாகும்.[15]

தேடாக்கயிறு[தொகு]

தேடாக்கயிறானது நெல் அறுவடையில் பயன்படுத்தப்படும் ஒரு வகைக் கயிறாகும்.[15] இது ஆரையம்பதிக் கிராமத்தில் விளையாடப்படும் உத்தூஞ்சல் எனப்படும் விளையாட்டு/ கலை நிகழ்வின் ஊஞ்சலைக் கட்டுவதற்கும் பயன்படும்.[30]

வடக் கயிறு[தொகு]

வடக்கயிறு என அழைக்கப்படும் கயிறு ஊஞ்சல் கட்டுவதற்குப் பயன்படும் கயிறு வகையாகும்.

ஆரையம்பதி ஆ. தங்கராசா யுகமொன்று உடைகிறது என்னும் நூலில் வருடப்பிறப்பு நிகழ்வுகளுள் ஒன்றான ஊஞ்சல் கட்டுவதில் வடக்கயிறின் பயன்பாடு பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறார்:

"வருஷம் எண்டா ஒரே புதினந்தான். கோயில் வெட்டையில பெரிய தென்னங்குத்திகளை நாட்டி வடக்கயிறுகளால் புனைஞ்சு ஊஞ்சில் போடுவானுகள். அதில நல்லா பாடக் கூடிய அண்ணாவி நல்லார் இரிந்து. அர்ச்சுனன் சின்னத் தம்பியர் வரை பாட்டுப்பாடி ஆக்களையும் அதில ஏத்தி ஊஞ்சில் ஆடுற அழகு வருஷத்தத் தூக்கிக் காட்டாதா."[31]

உறிக்கயிறு[தொகு]

உறிக்கயிறானது வீட்டிலுள்ள சட்டி பானைகளைக் கட்டி தூக்கும் உறிகளுக்கு பயன்படும் கயிறாகும். மாரிகாலத்திற்காகக் கொள்ளிகளைச் சேகரித்து வைக்கும் அசவுகளுக்கும் இக்கயிறுகள் பயன்படும்.[15]

மாடு கட்டும் கயிறு[தொகு]

இது மாடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கயிறு வகையாகும்.

கப்பல் கட்டும் தொழிற்துறையில் கயிறுகளின் பயன்பாடு[தொகு]

தமிழரின் கடல் வணிகம் சிறப்புற்றிருந்த காலத்தில் கப்பல் கட்டும் தொழிற்துறையில் கயிறுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.

பாய்மரக் கப்பல்களின் பாய்களை இணைத்துத் தைப்பதற்கும், பாய்களை உயர்த்துவதற்கும், நங்கூரத்தை இணைப்பதற்கும்[32] கயிறுகள் பயன்படுத்தப்பட்டன.

இவைதவிர, கப்பல் கட்டும் தொழிற்துறையின் ஏனைய கட்டுமான தேவைகளுக்கும் கயிறுகள் பயன்பட்டன. கப்பல் கட்டுளைத்தொகுதி எனப்படும் தென்னந்தும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட நூல் கயிறுகளின் தொகுதி கப்பல்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவற்றை அராபிய நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் கப்பல் கட்டுவோர் பயன்படுத்தியமைக்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

சொரி கயிறு[தொகு]

சூழியக் கயிறு[தொகு]

மடக் கயிறு[தொகு]

வலை[தொகு]

தென்னந்தும்பிலிருந்து மண்ணரிப்பைத் தடுக்கும் இயற்கையான வலை தயாரிக்கப்படுகிறது. ஆற்றங்கரைகளிலும் தோட்டங்களிலும் ஏனைய நிலப்பகுதிகளிலும் மண்ணரிப்பைத் தடுப்பதற்காக இது பயன்படுகிறது.[11] இலங்கையில் தயாரிக்கப்படும் இத் தென்னந்தும்பு வலையானது சீனா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.[11]

கால்மிதி[தொகு]

கால்மிதிகள் (மிதியடி) தடித்த இழைகளைக் கொண்ட மண்ணிற தும்பை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை பல்வகையானவை. தனியே தும்பை மாத்திரம் கொண்டும் தும்பும் இறப்பரும் கொண்டும்[33] தும்பும் உருக்குக் கம்பிச் சட்டகம் கொண்டும்[34] தயாரிக்கப்படுகின்றன. இவை வீடுகளின் உட்புறத்திலும் வெளியேயும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் வீட்டு வாசலுக்கு முன்னே கால் துடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை காலணிகளில் சிக்குப்பட்டிருக்கும் வெளிப்புற மண், புழுதி, சேறு, பனி மற்றும் ஏனைய அழுக்குகளை அகற்றுவதற்கு உதவுகின்றன.[34] அத்துடன் தரையை ஈரப்பதன், தூசுகள் இன்றி தூய்மையாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

தரைவிரிப்புகள்[தொகு]

தும்புத்தடி[தொகு]

தும்பு மெத்தை[தொகு]

தூரிகை[தொகு]

கன்வசு (ஓவியம் தீட்டப் பயன்படும் துணி)[தொகு]

தென்னந் தும்பு[தொகு]

தென்னந்தும்பை மெத்தை தும்பு, கலப்புத் தும்பு, தடித்த தும்பு, ஓமற் தும்பு என நான்கு தரங்களைக் கொண்டதாக வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

தென்னந்தும்பு இழைமம்[தொகு]

வேளாண்மை, தோட்டக்கலை நடவடிக்கைகளில் தென்னந்தும்பு இழைமமானது இயற்கைப் பசளையாகவும் மண் திருத்தியாகவும்[11] பயன்படுகிறது. இதனைப் பூச்சாடிகளைப் போன்று வார்த்து வீட்டுத் தாவரச் சாடிகளின் அடித்தளமாகப் பயன்படுத்துகின்றனர். ஓர்கிட் பூச்செய்கையிலும்[11] இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தும்புத் தூள் | தென்னங்கரி[தொகு]

கொக்கோ பீட் (தென்னங்கரி)[35] என அழைக்கப்படும் தென்னந்தும்புத் தூளானது மண்ணிற தென்னந்தும்பின் ஒரு துணை விளைபொருளாகும்.[36] உலக சந்தையில் இயற்கை முறையில் சூழலியல் சார்ந்த பிரக்ஞையுடன் நாற்றுகள் வளர்ப்பதற்கும், பசுமைக்குடில் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய வேளாண்மை முயற்சிகளுக்கும் வீட்டுத் தோட்டங்களிலும்[11] இது பரவலாகப் பயன்படுகிறது. தென்னங்கரி அதிக நீர் தேங்கு தன்மையையும் காற்று புகக்கூடிய நெகிழ்வு தன்மையையும் கொண்டமையினால் விரைவான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.[11] சிறு கட்டிகளாகவும் தட்டுக்களாகவும் பொதிகளாகவும் இது விற்பனை செய்யப்படுகிறது. இது அதிகமாக பிரான்ஸ், தென் கொரியா, யப்பான், மெக்சிகோ, நெதர்லாந்து[36] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தானுந்துகளில் தென்னந்தும்பின் பயன்பாடு[தொகு]

உலக தானுந்து தொழிற்துறையில் இயற்கையான தென்னந்தும்பின் பயன்பாடு தொடர்பான ஆர்வமும் ஆய்வுகளும் கடந்த பத்தாண்டு காலப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளன. தானுந்து தொழிலகங்களில் தானுந்து கூரைகளின் உள் உறையாகவும் தரை விரிப்புகளாகவும் இருக்கைகளிலும் இயந்திரப் பெட்டியின் காப்புறையாகவும் பொதி தட்டங்களிலும் பயணப்பெட்டிகளிலும் சில்லின் உள் உறையாகவும் பின் மற்றும் பக்கச் சுவர்களின் காப்புறையாகவும்[11] தும்பைப் பயன்படுத்துவது தொடர்பில் பல ஆய்வுகளும் வளராக்கமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உலகப் பிரசித்தி பெற்ற மேர்சிடீஸ் பென்ஸ் தானுந்து மாதிரிகளின் இருக்கைகளை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட தும்பைக் கொண்டு வடிவமைத்துள்ளனர்.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island - Physical, Historical, and Topographical with Notices of its Natural History, Antiquities and Productions, Vol I. London: Longman. Pg. 450.
 2. 2.0 2.1 2.2 Castanheda, F. L. D (trans. Lichefield, N.) 1582. The first booke of the Historie of the discouerie and conquest of the East Indias. London: Thomas East. Pg. 47.
 3. வி. நித்தியானந்தம். 2003. இலங்கையின் பொருளாதார வரலாறு: வடக்குக்கிழக்கு பரிமாணம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை நிலையம். பக். 31.
 4. சி. பத்மநாதன். 2002. இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும். கொழும்பு - சென்னை: குமரன் புத்தக இல்லம். பக். 77.
 5. Zawardecroon, Hendrick (trans. Pieter, Sophia). 1911. Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatam (1697). Colombo: H. C. Cottle, Government Printer.
 6. 6.0 6.1 6.2 Tennent, J. E. 1860. Ceylon: An Account of the Island Physical, Historical, and Topographical, Vol II. London: Longman. Pg. 127.
 7. Tennent, J. E. 1860. Vol II. Pg. 125.
 8. 8.0 8.1 Tennent, J. E. 1860. Vol I. Pg. 109.
 9. வி. நித்தியானந்தம். 2003. பக். 97.
 10. 10.0 10.1 10.2 Tennent, J, E. 1860. Vol. II. Pg. 408.
 11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 11.7 11.8 11.9 More value addition will drive the growth of Sri Lankan Coir industry. 2015. Sri Lanka Export Development Board. பார்த்த நாள்: 12 மே 2018.
 12. The Coir Industry in the Southern Provinces of Sri Lanka. 2006. Oxfam Humanitarian Field Studies Report. Oxfamamerica.org. பார்த்த நாள்: 12 மே 2018.
 13. 13.0 13.1 க. சபாரெத்தினம். 2014. ஆரையம்பதி மண்: உள்ளதும் உரியதும். மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம். பக். 17.
 14. க. சபாரெத்தினம். 2014. பக். 292.
 15. 15.0 15.1 15.2 15.3 15.4 மூத்ததம்பி, அருளம்பலம். வாழ்வை வளமாக்கிய பாரம்பரிய தும்புக் கைத்தொழில். ஆரையம்பதி. பார்த்த நாள்: 15 மே 2018.
 16. 16.0 16.1 16.2 16.3 க. சபாரெத்தினம். 2014. பக். 34.
 17. 17.0 17.1 17.2 17.3 க. சபாரெத்தினம். 2014. பக். 58.
 18. க. சபாரெத்தினம். 2014. பக். 36.
 19. க. சபாரெத்தினம். 2014. பக். 59.
 20. 20.0 20.1 க. சபாரெத்தினம். 2014. பக். 293.
 21. 21.0 21.1 21.2 21.3 சொக்கலிங்கம், பிரசாத். 2017. சிவபாக்கியம் மயில்வாகனம் (தும்புத் தொழிற்கலைஞர்) வாய்மொழி வரலாறு (நிகழ்படம்). நூலக நிறுவனம்: வாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம்.
 22. எம். எல். சரிப்டீன். 2016. தும்புக் கைத்தொழிலின் மூலம் கூடுதல் வருமானம். தினகரன் (31 டிசெம்பர் 2016). பார்த்த நாள்: 22 மே 2018.
 23. வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை. 2016. யாழ்ப்பாண மாவட்டம்: தொழிற்துறைத் திணைக்களம். பார்த்த நாள்: 23 மே 2018.
 24. 24.0 24.1 24.2 இ. பாலசுந்தரம். 1989. இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2: வடமராட்சி - தென்மராட்சி. யாழ்ப்பாணம்: வல்லிபுர இந்து கல்வி, பண்பாட்டு சங்கம். பக். 33.
 25. 25.0 25.1 25.2 இ. பாலசுந்தரம். 1989. பக். 34.
 26. "Coir". How Products Are Made. madehow.com. பார்த்த நாள் 8 திசம்பர் 2017.
 27. லிங்கராஜா, திகரன். "மொழிக்கலப்பும், மொழித்திரிபும் சுருக்கமாக ஒரு சிறியதேடல்." மாருதம் (17 ஆகஸ்ட் 2017). பார்த்த நாள்: 15 மே 2018.
 28. இரா. வை. கனகரத்தினம். வன்னிமை விவசாயச் சடங்கு முறை. வவுனியா: வவுனியா பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம். பார்த்த நாள்: 15 மே 2018.
 29. அப்பாத்துரை. 2015. இறுதியாத்திராரதம். வல்வெட்டித்துறை. பார்த்த நாள்: 22 மே 2018.
 30. க. சபாரெத்தினம். 2014. பக். 277.
 31. ஆ. தங்கராசா. 2001. யுகமொன்று உடைகிறது. கொழும்பு: மூன்றாவது மனிதன் பதிப்பகம். பக். 31.
 32. அப்பாத்துரை. 2015. கயிறு திரித்தல். வல்வெட்டித்துறை. பார்த்த நாள்: 22 மே 2018.
 33. Natural Rod Mat. Sri Lanka Export Development Board. பார்த்த நாள்: 14 மே 2018.
 34. 34.0 34.1 Escalera. Sri Lanka Export Development Board. பார்த்த நாள்: 14 மே 2018.
 35. சா. வைகுந்தவாசன். தென்னந் தும்பு உற்பத்தி நிறுவனங்களிற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான பெறுமதி சேர்க்கும் தந்திரோபாயத்தின் தேவையும், அதன் மாதிரியும். 2017. வடதொழில் சுபீட்சம் (தொகுப்பாசிரியர்: ஆ. சுதன்) யாழ்ப்பாணம்: தொழிற்துறை திணைக்களம் - வடக்கு மாகாணம்.
 36. 36.0 36.1 Coco Peat Products. Sri Lanka Export Development Board. பார்த்த நாள்: 12 மே 2018.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்புத்_தொழில்&oldid=2802132" இருந்து மீள்விக்கப்பட்டது