தீபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிகேடியர் தீபன்
தாய்மொழியில் பெயர்தீபன்
பிறப்புவே. பகீரதகுமார்
(1966-01-08)8 சனவரி 1966
இறப்பு4 ஏப்ரல் 2009(2009-04-04) (அகவை 43)
ஆனந்தபுரம், முல்லைத்தீவு மாவட்டம்
மற்ற பெயர்கள்தவபாலசிங்கம்,
சிவதீபன்
படித்த கல்வி நிறுவனங்கள்சாவகச்சேரி இந்துக் கல்லூரி
செயற்பாட்டுக்
காலம்
1984–2009
அமைப்பு(கள்)தமிழீழ விடுதலைப் புலிகள்
Call-signடேங்கோ பாப்பா

தீபன் (Theepan) என்னும் இயக்கப் பெயரால் அறியப்படும் வேலாயுதபிள்ளை பகீரதகுமார் ( 8 சனவரி 1966 – 4 ஏப்ரல் 2009) என்பவர் இலங்கை போராளி அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் முல்லைத்தீவு (1996), கிளிநொச்சி (1998), ஒட்டுசுட்டான் (1999), ஆனையிறவு (2000) உட்பட மூன்றாம் ஈழப்போரில் வன்னியில் விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார். ஈழப் போரின் கடைசி நாட்களில் ஆனந்தபுரம் சமரில் கொல்லப்பட்டார்.

துவக்ககால வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

பகீரதகுமார் 1966 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 ஆம் நாள் பிறந்தார். இவர் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சி கண்டாவளையைச் சேர்ந்தவர்.[1][2][3] இவரது குடும்பத்தின் பூர்வீகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வரணி ஆகும்.[4][5] இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.[5] 

பகீரதகுமாரின் சகோதரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனை மணந்தார்.[6] இவரது மூன்று அண்ணன்கள் கனடாவில் வசிக்கின்றனர்.[7] இவரது தம்பி சிவகுமார் (இயக்கப் பெயர் கில்மேன்), சாள்ஸ் அன்ரன் பிரிவின் கட்டளையாகத் தளபதியாக இருந்தார். அவர் 1994 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் ஒரு விபத்தில் இறந்தார்.[5] தென்மராட்சிக்கான புலிகளின் பிராந்திய தளபதியான திலீபன் (கர்டில்ஸ் அல்லது கெர்டி) இவருடைய உறவினர் ஆவார்.[5]

பதீரதகுமார் ஒரு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.[3]

போராளியாக[தொகு]

பகீரதகுமார் 1984 ஆம் ஆண்டு தனது உறவினரான திலீபனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டார்.[5] இவர் தீபன், டேங்கோ பாப்பா ஆகிய இயக்கப் பெயர்களைப் பெற்றார்.[5] இவர் சில சமயங்களில் தவபாலசிங்கம் அல்லது சிவதீபன் என்ற மாற்றுப்பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.[5]

தீபன் மாத்தையாவின் வன்னி கட்டளைப் பிரிவில் பணியாற்றினார்.[5] பின்னர் மாத்தையாவின் மெய்க்காப்பாளர் பிரிவில் சேர்ந்தார்.[5] மாத்தையா 1987 இல் புலிகளின் பிரதித் தலைவராகி, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். மாத்தையாவின் பிரதான மெய்க்காப்பாளராக தீபனும் அவருடன் யாழ்ப்பாணம் சென்றார்.[5] பின்னர் மாத்தையா மீண்டும் வன்னிக்கு பணி மாற்றப்பட்டதால் தீபன் அவருடன் வவுனியா மாவட்டம் பாலமோட்டைச் சென்றடைந்தார்.[5] இதனையடுத்து தீபன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு கிளிநொச்சி மாவட்டம் அங்கு இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிரான பல தாக்குதல்களை நடத்தினார்.[5]

1988 ஆம் ஆண்டில் வன்னியின் புலிகளின் மூன்று பிராந்திய கட்டளைகள் ஒன்றிணைக்கப்பட்டு பால்ராஜ் கட்டளையின் கீழ் கொண்டுவரப்பட்டன தீபன் பால்ராஜின் துணைக் கட்டளைத் தளபதியாக இருந்தார்.[5] 1990 இல் இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படை விலகிய சிறிது காலத்திலேயே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் வெடித்தது. பால்ராஜும், தீபனும் 1990 யூன்/யூலையில் மாங்குளம், கொக்காவில் போன்ற பகுதிகளைக் கைப்பற்றியது உட்பட இலங்கை இராணுவத்துக்கு எதிரான பல வெற்றிகரமான போர் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கினர்.[5] 1991 யூலை/ஆகத்தில் ஆனையிறவு மீதான தோல்வியுற்ற தாக்குதலிலும் இவர்கள் பங்கேற்றனர்.[5]

1992 ஆம் ஆண்டு பால்ராஜ் சாள்சு அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்ட போது தீபன் வன்னியின் புது பிராந்திய தளபதியாக பொறுப்பேற்றார்.[5] இதயபூமி, யாழ் தேவி நடவடிக்கை, தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை ஆகியவற்றில் தீபன் வெற்றிகரமாக ஈடுபட்டார்.[5]

1994 ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக மாத்தையாவுக்கு புலிகளால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் தீபன் வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.[5] இலங்கை இராணுவத்தின் லீப் ஃபார்வர்டு நடவடிக்கையில் இருந்து யாழ்ப்பாணத்தை பாதுகாக்க தீபன் உதவினார்.[5] இவர் புலிகளின் இடி தாக்குதல் நடவடிக்கையில் பங்குகொண்டார்.[5] 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் யாழ்ப்பாணக் குடாநாட்டை மீண்டும் கைப்பற்ற இலங்கை இராணுவம் சூரியக் கதிர் நடவடிக்கை என்னும் தாக்குதல் நடவடிக்கையைத் துவக்கியது. இராணுவம் யாழ்ப்பாண நகரின் புறநகரை அடைந்த நிலையில் தீபனும் பானுவும் யாழ்ப்பாணத்தை பாதுகாக்கும் புலிகளின் கூட்டுத் தளபதிகளாக ஆக்கப்பட்டனர்.[5] எல்லா பக்கங்களிலும் இலங்கை இராணுவத்தால் சூழப்பட்டிருந்த போதிலும் தீபனும் புலிகளும் 27 நவம்பர் 1995 (மாவீரர் நாள்) வரை தாக்குப்பிடித்து இருந்தனர்.[5] பின்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து விலகி யாழ்ப்பாணக் கடல் நீரேரி மூலமாக கடற்புலிகளால் மீட்கப்பட்டனர்.[5]

1996 ஆம் ஆண்டு யூலை மாதம் புலிகளால் முல்லைத்தீவு இராணுவ முகாம் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் தீபன் அதன் உளவுப் பணிகளை முன்னெடுத்தார்.[5] 1997 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப் பாதையைக் கைப்பற்றும் நோக்கில் ஜெயசிக்குறு நடவடிக்கையைத் துவக்கியது. A9 நெடுஞ்சாலையை பாதுகாக்கும் பணி தீபனுக்கு வழங்கப்பட்டது.[5] இவர் ஜெயசிக்குறுக்கு எதிரான புலிகளின் ஒட்டுமொத்த களத் தளபதியாகவும் இருந்தார்.[5] இவர் அந்த நேரத்தில் கருணா அம்மானுடன் வன்னியின் கூட்டுத் தளபதியாக இருந்தார்.[5] 1998 செப்டம்பரில் வெற்றிகரமாக கிளிநொச்சியைக் கைப்பற்றுதலில் நடவடிக்கையில் பங்கேற்றார்.[5] 1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு நிறுத்தப்பட்டதை அடுத்து, புலிகள் மூன்றாவது ஓயாத அலைகள் நடவடிக்கையைத் துவக்கினர். இதன் விளைவாக ஒட்டுசுட்டானில் இருந்து ஆனையிறவு வரை புலிகள் தொடர் வெற்றிகளை ஈட்டினர். வன்னி பிராந்தியத்தின் கூட்டுத் தளபதியாக தீபன் இந்த வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தார்.[5]

ஆனையிறவு வெற்றிக்குப் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் விடுதலைப் புலிகள் சில பிரதேசங்களைப்க் கைப்பற்றினர். மேலும் தீபன் புலிகளின் கிலாலி - முகமாலை - நாகர் கோவில் முன் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் இவர் வடக்கு பிராந்திய தளபதியாக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்குப் பகுதியை, குறிப்பாக ஆனையிறவுப் பகுதியை மீளக் கைப்பற்ற இராணுவம் அக்னி கீலா (நெருப்பு பந்து) நடவடிக்கையைத் துவக்கியது.[8] இந்த நடவடிக்கை இராணுவத்திற்கு பேரழிவாக ஆனது. அது பெரும் உயிரிழப்புகளை சந்தித்தது, இதில் இராணவத்தின் மீதான எதிர் தாக்குதலுக்கு தீபன் பொறுப்பேற்றார்.[5] இராணுவம் பரந்தனைக் கைப்பற்றிய பின்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் விலகினர். தீபானும் அவரது வீரர்களும் குடாநாட்டிலிருந்து சுண்டிக்குளம் கடல் நீரேரி வழியாக சால்லைக்குச் சென்றனர்.[5] இவர் கிளிநொச்சியை பாதுகாக்கும் பொறுப்பிலும் இருந்தார். புலிகள் சுற்றி வளைக்கப்பட்ட போதிலும் 2009 வரை அவர்களது நிர்வாகத் தலைநகரில் இருந்தார்.[5]

2001-06 போர் நிறுத்தத்தின் போது அரசாங்கம்/இராணுவம் மற்றும் நோர்வே மத்தியஸ்தர்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை தீபன் நடத்தினார்.[9][10] தீபனுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் பாதுகாப்புச் செயலாளர் ஆஸ்டின் பெர்னாண்டோ, மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, மேஜர் ஜெனரல் தேவிந்த களுபஹன (ஓய்வு), மேஜர் ஷவேந்திர சில்வா ஆகியோர் அடங்குவர்.[11][12][13]

2006-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கியது. 2006 ஆகத்தில் தீபன் சண்டையில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 2008 சனவரியில் கிளிநொச்சி மீதான விமானத் தாக்குதலில் இவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு மே மாதம் பால்ராஜ் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் பிரதி இராணுவத் தளபதியாக தீபன் ஆனார். 2009 சனவரியில் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகள் கிழக்கு நோக்கி பின்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தனமது குறைந்து வரும் நிலப்பரப்பை தக்கவைத்துக் கொள்ள போராடியபோது தீபன் கடும் சண்டையில் ஈடுபட்டார்.[5] முல்லைத்தீவு மாவட்டம், அனந்தபுரத்தில், தீபனும் அவரது படைகளும், ஏனைய மூத்த விடுதலைப் புலிகளின் தளபதிகளுடன் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.[5] பானு, லாரன்ஸ், கீர்த்தி ஆகியோர் முற்றுகையிலிருந்து வெளியேறினர், ஆனால் தீபன் செல்ல மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக தனது படைகளுடன் இருக்க விரும்பினார்.[5] பானு தலைமையிலான புலிகள் தீபனையும் அவரது படைகளையும் மீட்கும் முயற்சியில் தோல்வியுற்றனர்.[5] 2009 ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய நாட்களில் தீபன் காயமடைந்தார்.[5] இவர் உட்புற இரத்தப்போக்கு காரணமாக அவதிப்பட்டு 2009 ஏப்ரல் 4 அன்று இறந்தார்.[5] தீபனின் உடல் இராணுவக் காவலில் இருந்த ஒரு மருத்துவரால் அடையாளம் காணப்பட்டது, அவர் முன்பு இவரது மார்பு காயங்களுக்கு சிகிச்சையளித்தவர். தீபனின் அக்காளும், குடும்ப உறுப்பினர்கள் பிறரும் இராணுவத்திடம் சரணடைந்தனர். ஆனந்தபுரம் சமர் மறுநாள் முடிவுக்கு வந்தது, அதில் விடுதலைப் புலிகள் 500க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்திருந்தனர்.[14] கர்னல் தீபன் மரணத்திற்குப் பின் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்றதாக நம்பப்படுகிறது.[3][சான்று தேவை][மேற்கோள் தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gnanadass, Wilson (1 March 2009). "Last of the Tiger Leaders". http://www.nation.lk/2009/03/01/newsfe8.htm. 
  2. Jeyaraj, D. B. S. (12 April 2009). "LTTE debacle at Aanandapuram: Top Tiger leaders killed". http://www.thesundayleader.lk/20090412/FOCUS.HTM. 
  3. 3.0 3.1 3.2 Jeyaraj, D. B. S. (8 April 2012). "Anatomy Of The LTTE Military Debacle At Aananthapuram". http://www.thesundayleader.lk/2012/04/08/anatomy-of-the-ltte-military-debacle-at-aananthapuram/. 
  4. Jeyaraj, D. B. S. (11 April 2009). "Theepan of the LTTE: Heroic saga of a Northern warrior". http://archives.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=45957. 
  5. 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 5.17 5.18 5.19 5.20 5.21 5.22 5.23 5.24 5.25 5.26 5.27 5.28 5.29 5.30 5.31 5.32 5.33 5.34 5.35 5.36 5.37 5.38 Jeyaraj, D. B. S. (4 April 2012). "Theepan of the LTTE: Heroic saga of a Northern warrior". dbsjeyaraj.com.
  6. "Bodies buried throughout Mullivaikkal – Sritharan". 14 April 2012. http://www.ceylontoday.lk/16-4613-news-detail-bodies-buried-throughout-mullivaikkal-sritharan.html. 
  7. Perera, Tissa Ravindra (5 April 2009). "Army plans ‘No Fire Zone’ capture". http://www.nation.lk/2009/04/05/defence.html. 
  8. Jeyaraj, D. B. S. (15 October 2006). "Army suffers "Agni Kheela" type debacle again". Archived from the original on 3 November 2014.
  9. Kamalendran, Chris (17 November 2002). "Govt-LTTE in six hours of rehab talks". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/021117/news/4.html. 
  10. Athas, Iqbal (19 January 2003). "Curtains for Army - LTTE contacts". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/030119/columns/sitrep.html. 
  11. Shamindra Ferdinando (18 November 2002). "Tigers block EPDP Delft office". தி ஐலண்டு (இலங்கை). http://www.island.lk/2002/11/18/news01.html. 
  12. "SLA meets LTTE’s Northern Forces Commander". தமிழ்நெட். 12 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7463. 
  13. "Tigers, GOSL optimistic after first defence meet". தமிழ்நெட். 10 November 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7794. 
  14. Jeyaraj, D. B. S. (6 April 2009). "op Tiger leaders killed in a major debacle for LTTE". dbsjeyaraj.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபன்&oldid=3950625" இலிருந்து மீள்விக்கப்பட்டது