உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிநொச்சிப் போர் (2008–2009)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிநொச்சி போர் (2008-2009)
ஈழப் போர் பகுதி

கிளிநொச்சி
நாள் நவம்பர் 23, 2008 - ஜனவரி 2, 2009
இடம் கிளிநொச்சி, வட மாகாணம், இலங்கை
இலங்கைத் தரைப்படை வெற்றி
பிரிவினர்

இலங்கைத் தரைப்படை

தமிழீழ விடுதலைப் புலிகள்
இழப்புகள்
இலங்கை இராணுவம்: தரவுகளில்லை[1] விடுதலைப் புலிகள்: குறைந்தளவு[2]

கிளிநொச்சி நகரை இலங்கைத் தரைப்படை கைப்பற்றியிருப்பதாக குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச நாட்டு மக்களுக்கு ஜனவரி 2, 2009 அன்று அறிவித்தார். "தெற்கே இரணைமடு சந்தியிலும், வடக்கே பரந்தன் சந்தியிலும் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர், கிளிநொச்சி நகருக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் உள்ள மற்றுமொரு முக்கிய சந்தியாகிய கரடிப்போக்கு சந்தியையும், கிளிநொச்சி நகரின் ரயில் நிலையப்பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது."[3] இப்படியான அறிவிப்புகள் முன்னர் வெளியிடப்பட்டாலும், ஈழப் போராட்ட ஆதரவு செய்தி வலைத்தளமான தமிழ்நெற்ரிலும் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.[4] அச் செய்தியின் படி விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தியபடி பெருமளவு இழப்புகள் இல்லாமல் பின்னகர்ந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள்

[தொகு]

இலங்கை தரைப்படை நவம்பர் 23, 2008 கிளிநொச்சி மீதான தாக்குதலை தொடங்கியது.[5] டிசம்பரில் அவர்கள் மேற்கொண்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் புலிகளால் முறியடிக்கப்பட்டன. ஜனவரி 2, 2009 "காலை கரடிப்போக்கு, இரணைமடு மற்றும் கிளிநொச்சிக்கு மேற்காக அக்கராயன் ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் கிளிநொச்சி நகருக்குள் நுழையத் தொடங்கினர்."[6]

விடுதலைப் புலிகளின் நிழல் தலைநகரம்

[தொகு]

1995 இல் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாக கருதப்படும் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைந்தது.[7] அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி 1996 ஆம் ஆண்டில் இலங்கைப் படையினரிடம் வீழ்ச்சி அடைந்தது. புலிகள் ஒரு பெரும் தாக்குதல் மூலம் கிளிநொச்சியை 1998 மீண்டும் கைப்பற்றினர். அதன் பின்னர் புலிகளின் defactro தலை நகரமாக கிளிநொச்சி மாறியது. குறிப்பாக 2000-2006 பேச்சுவார்த்தை காலப்பகுதியில் பல புதிய நிர்வாக கட்டிடங்கள் கிளிநொச்சியில் கட்டப்பட்டன. உத்யோகபூர்வமாக திருகோணமலையே தமிழீழத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டாலும் அது ஒரு போதும் நெடுங்காலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை.

படைத்துறை விளைவுகள்

[தொகு]

படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் இது புலிகளுக்கு மீளமுடியாத ஒரு பெரும் தோல்வி என்று குறிப்பிடுகிறார்.[8] கிளிநொச்சி வீழ்ச்சியினால் புலிகள் மேலும் மேலும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் சுற்றிவளைக்கப்படுகின்றனர். உளவியல் நோக்கிலும் புலிகளுக்கு இது ஒரு பெரும் பின்னடைவு ஆகும். இப்படி புலிகள் முன்னரும் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்தாலும் இம்முறை ஓயாத அலைகள் போன்ற பெரும் வெற்றி தந்த தாக்குதல்களை நடத்துவது எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குரியதே. படைத்துறை அந்த பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்று, இயன்றவரை அதேமாதிரியான பிழைகளைத் தவிர்ப்பர். மேலும் படைத்துறையின் தற்போதைய பலம் பல மடங்கு பெரியது.

இலங்கைப் படைத்துறைக்கு கிளிநொச்சி வீழ்ச்சி ஒரு பெரும் வெற்றியாகும். இது ஒரு குறியீட்டு வெற்றியும் ஆகும். படைத்துறையினரின் உளமுரத்தை இது அதிகரிக்கும். படை நடவடிக்கைகளுக்கு இது அரசியல் மக்கள் ஆதரவையும் கூட்டுவிக்கும்.

அரசியல் விளைவுகள்

[தொகு]

விடுதலைப் புலிகள் தங்களை ஒரு அரசாக நிறுவ அவர்களின் நிர்வாக அலகுகள் உதவிபுரிந்தன. காவல்துறை, நீதித்துறை, நிதித்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை, சூழலியல்துறை என பல அலகுகளைக் கட்டமைத்தனர். இவற்றின் பல தலைமையகங்கள் கிளிநொச்சியில் இயங்கின. கிளிநொச்சியின் வீழ்ச்சி புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கு ஒரு பின்னடைவு ஆகும்.[9]

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இரு ஒரு பெரும் வெற்றியாகும். சனாதிபதி மகிந்த ராசபக்சவும் இலங்கை சுதந்திரக் கட்சியும் மீண்டும் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான சாத்தியக்கூற்றை இந்த வெற்றி அதிகரித்தது.

பொருளாதார விளைவுகள்

[தொகு]

படைத்துறை வெற்றிச் செய்தியின் பின்பு கொழும்பு பங்கு பரிவர்த்தனை 5 வீதத்தால் உயர்ந்தது. இலங்கை ரூபா நிதான நிலையை அடைந்தது.[10]

போருக்கு உலக நாடுகளின் உதவி

[தொகு]

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, பாகிஸ்தான், இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு நேரடி படைத்துறை உதவியை வழங்கின. ஆயுத விநியோகம், படைப் பயிற்சி, மூலலோபாய உதவி, வேவு என பல வழிகளில் இவ்வுதவி வழங்கப்பட்டது. இலங்கை அரசின் பாரிய மனித உரிமை குற்றங்களை பொருட்படுத்தாமலே இந்த உதவிகள் வழங்கப்பட்டன. இப்படியான தொடர் உதவி கிளிநொச்சி வெற்றிக்கு பெரிதும் உதவியது.

உலக நாடுகள் கருத்து

[தொகு]
ஐக்கிய அமெரிக்கா

கிளிநொச்சி நகரை விடுதலைப் புலிகளிடம் இருந்து கொழும்பு கைப்பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்க அரசுத் திணைக்களத்தைச் சேர்ந்த பேச்சாளர் கோர்டன் டூகிட் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு தரப்பட வேண்டும் எனவும், அதற்காக இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்[11].

ஜப்பான்

விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தலைநகர் கிளிநொச்சி வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இலங்கைக்கு அதிகளவு உதவி வழங்கும் நாடுகளில் ஒன்றான ஜப்பான், இனநெருக்கடியை அரசியல் தீர்வினால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று ஜனவரி 5 திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பிராந்தியத்திற்கு உள்ளக சுயாட்சியை கொண்டுவருவதற்கான அரசியல் தீர்வை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஜப்பான் ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்[12].

இவற்றையும் பாக்க

[தொகு]

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1]
  2. LTTE concedes Kilinochchi defeat
  3. ஜனவரி 2, 2009. கிளிநொச்சியை இராணுவம் பிடித்தது. பிபிசி தமிழ்
  4. SLA occupies Ki'linochchi town
  5. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7749475.stm
  6. கிளிநொச்சி நகரம் வீழ்ந்ததது: கிளிநொச்சி நகருக்குள் இராணுவம் பரணிடப்பட்டது 2009-01-24 at the வந்தவழி இயந்திரம் - ஐஎன்லங்கா இணையம்
  7. en:Battle of Jaffna (1995)
  8. "This is a major defeat for the LTTE. The fall of Kilinochchi means the LTTE will have their only territory in Mullaitivu," said Iqbal Athas Sri Lankan troops march into rebel headquarters பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம்
  9. ""The capture indicates very clearly that the LTTE's attempt to build up a quasi-state has now collapsed" - Pakiasothy Saravanamuttu (அரசியல் ஆய்வாளர்) Sri Lankan troops march into rebel headquarters பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம்
  10. "Sri Lankan troops march into rebel headquarters". Reuters. Jan 2, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-01-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090109132533/http://www.reuters.com/article/homepageCrisis/idUSSP417902._CH_.2400. பார்த்த நாள்: 2009-01-02. 
  11. "US renews call for peaceful dialogue in Sri Lanka". Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2014-02-27.
  12. அரசியல் தீர்வுமட்டுமே இலங்கையின் இன மோதலுக்கு முடிவைத் தரும்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிநொச்சிப்_போர்_(2008–2009)&oldid=3990660" இலிருந்து மீள்விக்கப்பட்டது