ஓயாத அலைகள் நடவடிக்கை 1996

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓயாத அலைகள் நடவடிக்கை
ஈழப் போர்
காலம் 1996 ஜூலை 18-
இடம் வன்னி பெருநிலப்பரப்பு
முடிவு புலிகள் முல்லைத்தீவைக் கைப்பற்றல்
தொடர்ச்சி ஓயாத அலைகள் இரண்டு
அணிகள்
இலங்கை அரசு தமிழ்ப் புலிகள்

ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.[1][2][3]

பின்னணி[தொகு]

1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுமையாக இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டது. விடுதலைப்புலிகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறி வன்னிப் பகுதியைத் தமது தளமாகக் கொண்டு செயற்பட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிகப்பெரும் இராணுவ வெற்றியைப் பெற்றுவிட்டதாக அரசபடை கருதியது. அதேநேரம் விடுதலைப்புலிகள் மிகவும் பலவீனப்பட்டுப் போய்விட்டனர் என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. யாழ்ப்பாணக் குடாநாடு அரசபடையினரால் கைப்பற்றப்பட்டு மூன்று மாதத்தில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் கைப்பற்றினர். இப்படை முகாம் மட்டுமே வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் துருத்திக்கொண்டிருந்த ஒரேயொரு படைமுகாம் ஆகும்.

தொடக்கத்தில் மிகச்சிறிய முகாமாக இருந்து, பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஒரு படைநடவடிக்கை மூலம் இம்முகாம் பெருப்பிக்கப்பட்டிருந்தது. தரைவழியாக தனித்துவிடப்பட்ட இப்படைத்தளம் குறிப்பிடத்தக்களவு நீளமான கடற்கரையைக் கொண்டிருந்ததால் கடல் வழியாகவும் வான்வழியாகவும் படையினருக்கான வினியோகத்தைச் செய்துகொண்டிருந்தது. வன்னியின் புகழ்பூத்த வற்றாப்பளை அம்மன் கோயில் இப்படை முகாமுக்கு மிகமிக அண்மையில் இருக்கும் கோயிலாகும்.

தாக்குதல்[தொகு]

1996 ஜூலை 17ம் நாள் இரவு முடிந்து 18ம் நாள் அதிகாலை இப்படைத்தளம் மீதான தாக்குதலை பலமுனைகளில் இருந்து விடுதலைப்புலிகள் தொடுத்தனர். தரைவழியாக ஏனைய படைமுகாம்களோடு தொடர்பற்ற இத்தளத்திலிருந்து படையினரால் உதவிகள் பெற முடியவில்லை. மூன்றுநாட்களுக்குள் படைமுகாம் முற்றாக புலிகளிடம் வீழ்ச்சியுற்றது. அங்கிருந்த ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றினர். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலாக ஆட்லறிப் பீரங்கிகள் புலிகளின் கைகளுக்கு வந்ததும் இச்சமரில்தான். முல்லைத்தீவுப் படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்த 122மிமீ ஆட்லறிப் பீரங்கிகள் இரண்டும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.

தரையிறக்கமும் எதிர்ப்புச்சமரும்[தொகு]

முல்லைத்தீவுப் படைத்தளம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானபோது படையினரையும் தளத்தையும் காப்பாற்றவென சிறிலங்கா அரசபடையால் தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலுக்குள்ளான தளத்திலிருந்து தெற்குப் பக்கமாக மூன்று மைல்கள் தொலைவில் அளம்பில் என்ற கிராமத்தில் கடல்வழியாக மிகப்பெரிய தரையிறக்கமொன்றை இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து மேற்கொண்டன. இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து நடத்திய இத்தரையிறக்கத்துக்கு திரிவிட பகர என்று அரசபடையால் பெயர் சூட்டப்பட்டது.

தரையிறக்கப்பட்ட படையினரை எதிர்த்து புலிகளின் அணிகள் சமர் புரிந்தன. சிலநாட்களாக, தரையிறங்கிய படையிரை முன்னேறவிடாது மறித்துவைத்திருந்த புலிகள், இறுதியில் முற்றாக அச்சமரை வென்றனர். அரசபடை, தரையிறங்கியவர்களில் மிகுதிப்படையினரை மீளப்பெற்றுக்கொண்டதோடு 'ஓயாத அலைகள் - ஒன்று' நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

தரையிறக்கத்தின் போது கடலில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமி்டையில் நடைபெற்ற சமரில் 'ரணவிறு' என்ற தாக்குதல் கலமொன்று கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இக்கலத்தை மூழ்கடித்த தாக்குதலில் :

  • மேஜர் பதுமன்,
  • மேஜர் கண்ணபிரான்,
  • மேஜர் மிதுபாலன்,
  • மேஜர் பார்த்தீபன்,
  • மேஜர் செல்லப்பிள்ளை

ஆகியோருட்பட ஏழு கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டனர்.

இப்படை முகாம் கைப்பற்றப்பட்டதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தனர்.

இழப்பு விவரங்களும் ஊடகத் தணிக்கையும்[தொகு]

இத்தாக்குதலில் 1200 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பலியானதாக புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் அரசதரப்பு அதை மறுத்ததோடு மிகக் குறைந்தளவு படையினரே கொல்லப்பட்டதாகச் சொன்னது. அத்தோடு ஆட்லறிகள் எவையும் புலிகளால் கைப்பற்றப்படவில்லையென அப்போதையை பிரதிப் பாதுகாப்பமைச்சரும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைப்பற்றியதால் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டவருமான ஜெனரல் அனுருத்த ரத்வத்த தெரிவித்திருந்தார்.

புலிகள் பலநூறு சடலங்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அரசதரப்புக்குக் கையளித்தபோதும் அரசு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிலவற்றை மட்டும் பெற்றுக்கொண்டு, ஏனையவை தமது இராணுவத்தினருடையவையல்ல என்று மறுப்புத் தெரிவித்தது.

பலநூறு சடலங்களை வன்னியில் பொதுமக்களும் புலிகளும் சேர்ந்து தீமூட்டினர். கொக்காவில் என்னுமிடத்தில் 600 வரையான படையினரின் சடலங்கள் ஒன்றாக தீமூட்டப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "LTTE top ranker dies". BBC Sinhala (London, U.K.). 20 May 2008. https://www.bbc.com/sinhala/news/story/2008/05/080520_commander. 
  2. Kumaaran, Satheesan (25 May 2008). "Death of Balraj and its implications". The Sunday Times (Colombo, Sri Lanka). https://www.sundaytimes.lk/080525/News/news0017.html. 
  3. "Mapping Militant Organizations: Liberation Tigers of Tamil Elam". Center for International Security and Cooperation. Stanford, U.S.A.: Stanford University. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓயாத_அலைகள்_நடவடிக்கை_1996&oldid=3889639" இலிருந்து மீள்விக்கப்பட்டது