உள்ளடக்கத்துக்குச் செல்

தத்த ஜெயந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தத்த ஜெயந்தி
தத்தாத்ரேயர், திரிமூர்த்திகளின் அவதாரம் (பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன்)
பிற பெயர்(கள்)தத்தாத்ரேய ஜெயந்தி
கடைபிடிப்போர்தத்தாத்ரேயருக்கு பூசை உட்பட பிரார்த்தனைகள் மற்றும் மதச் சடங்குகள்
வகைஇந்து சமயம்
முக்கியத்துவம்நோன்பு, தியானம் மற்றும் பிரார்த்தனை நாள்

தத்த ஜெயந்தி (Datta Jayanti) தத்தாத்ரேய ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இது ஒரு இந்துப் பண்டிகையாகும். இது இந்துக் கடவுளான தத்தாத்ரேயரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நினைவுகூர்கிறது. தத்தாத்ரேயர் இந்து ஆண் தெய்வீக மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் ஒருங்கிணைந்த வடிவமாகும்.

இது நாடு முழுவதும், குறிப்பாக மகாராட்டிராவில் இந்து நாட்காட்டியின்படி (திசம்பர் / சனவரி) மார்கழி மாதத்தின் முழுநிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.[2][3]

புராணக் கதை

[தொகு]

தத்தாத்ரேயா முனிவர் அத்திரி மற்றும் அவரது மனைவி அனுசூயாவின் மகனாவார். ஒரு பழமையான தூய்மையான மற்றும் நல்லொழுக்கமுள்ள மனைவியான அனுசூயா, இந்து மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்ற தகுதிகளில் சமமான ஒரு மகனைப் பெறுவதற்கு கடுமையான தவம் செய்தார். மும்மூர்த்திகளின் துணைவியரும் முப்பெரும் தேவியர்களுமான சரசுவதி, லட்சுமி மற்றும் பார்வதி, ஆகியோர் பொறாமைப்பட்டனர். அனுசுயாவின் நல்லொழுக்கத்தை சோதிக்க அவர்கள் தங்கள் கணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

மூன்று கடவுள்களும் சந்நியாசிகளைப் போல மாறுவேடத்தில் அனுசுயா முன் தோன்றி, தங்களுக்கு நிர்வாணமாக பிச்சை கொடுக்கும்படி கேட்டனர். அனுசுயா ஒரு மந்திரத்தை உச்சரித்து, மூன்று சந்நியாசிகளின் மீதும் தண்ணீரைத் தூவி, குழந்தைகளாக மாற்றினாள். அவர்கள் விரும்பியபடி அவளது மார்பகத்திலிருந்து நிர்வாணமாக பால் கொடுத்தாள். அத்திரி தனது ஆசிரமத்திற்கு திரும்பியவுடன், அனசுயா இந்த நிகழ்வை விவரித்தாள். ஆனாலும், அவர் ஏற்கனவே தனது மன சக்திகள் மூலம் இந்நிகழ்வை அறிந்திருந்தார். அவர் மூன்று குழந்தைகளையும் தனது மார்புடன் சேர்த்தணைத்து, மூன்று தலைகள் மற்றும் ஆறு கைகளைக் கொண்ட ஒரே குழந்தையாக மாற்றினார்.

மும்மூர்த்திகள் திரும்பாததால், அவர்களின் மனைவிகள் கவலைப்பட்டு அனுசுடாவிடம் விரைந்தனர். முப்பெருந்தேவியரும் அவளிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் கணவர்களைத் திருப்பித் தரும்படி கேட்டுக்கொண்டன. அவர்களின் கோரிக்கையை அனுசுயா ஏற்றுக்கொண்டார். மும்மூர்த்திகளும் பின்னர் அத்திரி மற்றும் அனுசுயா ஆகியோருக்கு முன்பாக தங்களின் உண்மையான வடிவத்தில் தோன்றி, தத்தாத்ரேயர் என்ற மகனை ஆசீர்வதித்தார்.

தத்தாத்ரேய மூன்று தெய்வங்களின் ஒரு வடிவமாகக் கருதப்பட்டாலும், அவர் குறிப்பாக விஷ்ணுவின் அவதாரமாகவேக் கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவரது உடன்பிறப்புகள் சந்திரக்கடவுள் சந்திர தேவன் மற்றும் துர்வாச முனிவர் முறையே பிரம்மா மற்றும் சிவன் வடிவங்களாகக் கருதப்படுகிறார்கள்.[3][4]

வழிபாடு

[தொகு]

தத்த ஜெயந்தியில், மக்கள் அதிகாலையில் புனித ஆறுகள் அல்லது நீரோடைகளில் குளிக்கிறார்கள். நோன்பு நோற்கிறார்கள். தத்தாத்ரேயரின் பூசை பூக்கள், தூபங்கள், விளக்குகள் மற்றும் கற்பூரங்களுடன் செய்யப்படுகிறது. பக்தர்கள் அவரது உருவத்தை தியானித்து, தத்தாத்ரேயரிடம் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கான சபதத்துடன் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் தத்தாத்ரேயரின் படைப்புகளை நினைவில் வைத்து, கடவுளின் சொற்பொழிவை உள்ளடக்கிய அவதூத கீதை மற்றும் ஜீவன்முக்த கீதை என்ற புனித புத்தகங்களைப் படிக்கிறார்கள்.[3] காவடி பாபாவின் தத்த பிரபோத் (1860) மற்றும் பரம் பூஜ்ய வாசுதேவனந்த சரசுவதி (தெம்பே சுவாமி மகாராஜ்) எழுதிய தத்த மகாத்மியம் போன்ற பிற புனித நூல்கள், (இவை இரண்டும் தத்தாத்ரேயாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை) அத்துடன் தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் நரசிம்ம சரசுவதியின் (1378−1458) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட குரு-சரிதங்களும் பக்தர்களால் படிக்கப்படுகின்றன.[5] பஜனைகளும் (பக்தி பாடல்கள்) இந்த நாளில் பாடப்படுகின்றன.

தத்த ஜெயந்தி கோவில்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் கொண்டாடப்படுகிறது. தத்தாத்ரேயருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்தியா முழுவதும் அமைந்துள்ளது. அவரது வழிபாட்டின் மிக முக்கியமான இடங்களாக கர்நாடகாவில் குல்பர்கா அருகே கனகாப்பூர், ஆந்திராவின் காக்கிநாடா அருகே பிதாபுரம், மகாராஷ்டிராவில் சாங்குலி மாவட்டத்தில் ஆடும்பர், உஸ்மானாபாத் மாவட்டத்தில் ருய்பார், கோல்ஹாபூர் மாவட்டத்தில் நரசிம்ம வாடி, குசராத்தில் சௌராட்டிராவில் கிர்நார் ஆகிய இடங்கள்.[6]

இந்தியாவின் மகாராட்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஆலம்னர் நகரில் சத்குரு சிறீ அனிருத்த உபாசனா அறக்கட்டளை (மும்பை) தத்தா ஜெயந்தியை 2017 நவம்பர் 30 முதல் திசம்பர் 3 வரை கொண்டாடியது. இதில் மகாராட்டிராவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தத்தாத்ரேயரின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.[7]

தத்த ஜெயந்தி கொண்டாட்டங்கள், ஆலம்னர்

குறிப்புகள்

[தொகு]
  1. "2012 Dattatreya Jayanti". Dripanchang. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
  2. Dr. Bhojraj Dwivedi (2006). Religious Basis Of Hindu Beliefs. Diamond Pocket Books (P) Ltd. pp. 125–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-288-1239-2. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
  3. 3.0 3.1 3.2 Sunil Sehgal (1999). Encyclopaedia of Hinduism: C-G. Sarup & Sons. pp. 501–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-064-1. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
  4. Datta Jayanti[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Eleanor Zelliot (1988). The Experience of Hinduism: Essays on Religion in Maharashtra. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88706-664-1. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
  6. Sir Swami Samarth. Sterling Publishers Pvt. Ltd. 21 February 2008. pp. 203–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-207-3445-6. பார்க்கப்பட்ட நாள் 10 December 2012.
  7. http://epaperdivyamarathi.bhaskar.com/chalisgaon/265/05122017/0/3/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்த_ஜெயந்தி&oldid=3599393" இலிருந்து மீள்விக்கப்பட்டது