ஜுராசிக் பார்க் III

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுராசிக் பார்க் III
இயக்கம்ஜோ ஜான்ஸ்டன்
தயாரிப்பு
 • கேத்தலின் கென்னடி லேரி ஃப்ராங்கோ
கதை
 • பீட்டர் புக்மன்
 • அலெக்ஸாண்டர் பெய்ன்
 • ஜிம் டெய்லர்
மூலக்கதைமைக்கேல் கிரைட்டன் இயற்றிய கதாபாத்திரங்கள்
படைத்தவர்
இசை
 • டான் டேவிஸ்
 • (ஜுராசிக் பார்க் திரையிசையை இயற்றியவர்- ஜான் வில்லியம்ஸ்)
நடிப்பு
 • சாம் நெய்ல்
 • வில்லியம் ஹெச். மேசி
 • டியா லியோனி
 • அலெஸ்ஸாண்ட்ரோ நிவோலா
 • ட்ரெவர் மோர்கன்
 • மைக்கேல் ஜெட்டர்
ஒளிப்பதிவுஷெல்லி ஜான்சன்
படத்தொகுப்புஇராபர்ட் டல்வா
கலையகம்அம்ப்ளின் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்யுனிவெர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 16, 2001 (2001-07-16)(யுனிவெர்சல் ஆம்பிதியேட்டர்)
சூலை 18, 2001 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்92 மணித்துளிகள்[1]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$9.3 கோடி[2]
மொத்த வருவாய்$36.88 கோடி[2]

ஜுராசிக் பார்க் III (Jurassic Park III) என்பது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க அறிபுனை சாகசத் திரைப்படம் ஆகும். ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் மூன்றாம் படம் இதுவேயாகும்.இத்தொடரில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்-கினால் இயக்கப்படாத, மைக்கேல் கிரைட்டன் புதினம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டிராத முதல் படமும் இதுவே (எனினும் இப்படத்தில் பல காட்சிகள் ஜுராசிக் பார்க் மற்றும் த லொஸ்ட் வேர்ல்ட் ஆகிய இரு கிரைட்டன் புதினங்களிலிருந்து கையாளப்பட்டன).

இரண்டாம் படத்தின் கதைக்களமான ஈஸ்லா சோர்னா தீவிலேயே இந்த மூன்றாம் படத்தின் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு தொலைந்துபோன தங்கள் மகனை மீட்பதற்காக ஒரு மணவிலக்கு பெற்ற தம்பதியர், தொல்லுயிர் ஆய்வாளரான ஆலன் கிரான்ட்-ஐ ஏமாற்றி அழைத்துச்செல்கின்றனர்.

ஸ்பில்பேர்க்-கின் ஜுராசிக் பார்க் திரைப்படம் வெற்றியடைந்த பின் அதன் தொடர்ச்சியை இயக்க ஜோ ஜான்ஸ்டன் ஆர்வம் காட்டினார். எனினும் ஸ்பில்பேர்க், இத்தொடரில் மூன்றாவதாக ஒரு படம் தயாரிக்கப்படுமானால் அதை இயக்கும் வாய்ப்பை ஜான்ஸ்டனுக்கு வழங்குவதாக உறுதியளித்தார். மூன்றாம் படத்தின் தயாரிப்பு ஆகஸ்ட் 30, 2000 அன்று தொடங்கியது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் இப்படம் உலகம் முழுவதும் $ 36.8 கோடி வசூலைப் பெற்று ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியாக, ஜுராசிக் வேர்ல்ட் என்ற திரைப்படம், ஜூன் 12, 2015 அன்று வெளியானது.

கதைச் சுருக்கம்[தொகு]

பென் ஹில்டெப்ரன்ட் என்பவரும் எரிக் கர்பி என்ற 12 வயதுச் சிறுவனும் ஈஸ்லா சோர்னா தீவைச் சுற்றி பாராசைலிங் (parasailing) மேற்கொள்கின்றனர். திடீரென்று அவர்களின் படகுக் குழுவினரை ஒரு மர்ம விலங்கு தாக்கிக் கொல்கிறது. இதனால் தங்களையும் படகையும் இணைத்திருந்த கயிறை இருவரும் துண்டித்துவிட்டு அத்தீவை நோக்கிக் காற்றில் மிதந்து செல்கின்றனர்.

இச்சமயத்தில் , ஜுராசிக் பார்க்-குடன் தனக்கிருந்த தொடர்பால் தலைநிலத்தில் ஆலன் கிரான்ட் பிரபலமாகிறார். அக் காலகட்டத்தில் அவரோடு இருந்த எல்லி சாட்லர், தற்போது திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயாகியிருக்கிறார். அவரைச் சந்திக்கும் கிரான்ட், அவர்கள் முன்பு கருதியதைவிட எப்படி ராப்டர்கள் அறிவார்ந்தவையாக இருந்தன என்பது குறித்துக் கலந்துரையாடுகிறார். பின்பு கிரான்டை அகழ்வுக் களம் ஒன்றில் சந்திக்கும் அவரது உதவியாளர் பில்லி பிரென்னன், முப்பரிமாண அச்சுப்பொறியைப் பயன்படுத்தி ஒரு வெலாசிராப்டரின் குரல்வளையை மீளுருவாக்கிக் காட்டுகிறார்.

வெளித்தோற்றத்தில் பணக்காரர்களாகத் தெரியும் பால் மற்றும் அமண்டா கர்பி இணையர், ஈஸ்லா சோர்னாவுக்குத் தங்களை ஒரு வான்வழிச் சுற்றுலா அழைத்துச் சென்றால் கிரான்ட்-டின் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்வதாகக் கூறுகின்றனர். முதலில் அவர்களின் நோக்கங்களின் மேல் ஐயங்கொள்ளும் கிரான்ட், தனக்கு ஆய்வுரீதியான உதவி தேவைப்படுவதால் தயக்கத்தோடு ஒப்புக்கொள்கிறார். பின்பு அவர் பால், அமண்டா, பில்லி, கர்பி இணையரின் கூலிப்படை கூட்டாளிகளான யுடெஸ்கி, கூப்பர், மற்றும் அவர்களின் விமானியான நாஷ்-உடன் சேர்ந்து ஈஸ்லா சோர்னாவுக்குப் பயணிக்கிறார்.

இப் பயணத்தின்போது, அக் குழுவினரின் உண்மையான திட்டம் ஈஸ்லா சோர்னாவில் தரையிறங்குவதே என அறியும் கிரான்ட் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவரை கூப்பர் மயக்கமடையச் செய்கிறார். அவர் மீண்டெழுகையில் அமண்டா ஒரு ஒலிப்பெருக்கியைப் பயன்படுத்துவதைக் காண்கிறார். அச்செயலால் ஈர்க்கப்படும் ஸ்பைனோசாரஸ் என்ற தொன்மா, கூப்பர் மற்றும் நாஷ்-ஐக் கொன்று உண்கிறது. இவ்விலங்கின் தாக்குதலால் கிரான்ட் குழுவினரின் வானூர்தியும் தன் கட்டுப்பாட்டை இழந்து அத்தீவிலுள்ள காட்டுப்பகுதியில் மோதி சேதமடைகிறது. இதில் உயிர்பிழைக்கும் உறுப்பினர்கள், ஸ்பைனோசாரஸிடமிருந்து தப்பியோடும் வழியில் ஒரு டி.ரெக்ஸ் எதிர்ப்படுகிறது. இத்தொன்மாவும் அக்குழுவினரைப் பின்தொடர்ந்து வரும் ஸ்பைனோசாரஸும் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. இறுதியில் ஸ்பைனோசாரஸ், டி.ரெக்ஸைக் கொல்கிறது. கிரான்ட் குழுவினர் அங்கிருந்து தப்புகின்றனர்.

இதன்பின்பு கர்பி இணையரை விசாரிக்கும் கிரான்ட், அவர்கள் உண்மையில் மணவிலக்கு பெற்ற நடுத்தர வர்க்கத்தினர் என அறிகிறார். மேலும் எட்டு வாரங்களுக்கு முன் அத்தீவில் காணாமல் போன அவர்களின் மகன் எரிக் மற்றும் அமண்டாவின் தோழனான பென் ஆகிய இருவரையும் தேடும் நோக்கத்துடன் உள்ளதையும் அறிகிறார். பின்பு இக்குழுவினர், பென்-னின் சடலத்துடன் இணைக்கப்பட்ட பாராசைலைக் கண்டெடுக்கின்றனர்.

அப் பாராசைலை எடுத்துக்கொண்டு அவர்கள் முன்செல்லும் வழியில் வெலாசிராப்டர் கூடுகள் தென்படுகின்றன. கைவிடப்பட்ட இன்-ஜென் வளாகம் ஒன்றும் தென்படுகிறது. அங்கு அமண்டா ஒரு வெலாசிராப்டரால் தாக்கப்படுகிறார்.அக் குழுவினர் அதை அடைத்துவிடுகின்றனர். எனினும் அது தப்பி தன் கூட்டத்தைத் தொடர்புகொள்கிறது. அதனிடமிருந்து தப்பும் கிரான்ட் குழுவினர், காரெத்தொசாரஸ் மற்றும் பாரா சாரோலோஃபஸ் ஆகிய தொன்மாக்கள் அடங்கிய ஒரு மந்தைக்குள் ஓடுகின்றனர். இதனால் ஏற்படும் நெரிசலில் கிரான்டும் யுடெஸ்கியும் மற்றவர்களிடமிருந்து பிரிந்துவிடுகின்றனர்.

பில்லியின் பையை கிரான்ட் மீட்கிறார். இச்சமயத்தில் யுடெஸ்கியைக் கடுமையாகத் தாக்கும் ராப்டர்கள், பிறரையும் கவரும் முயற்சியில் அவரை ஒரு பொறியாக வைக்கின்றன. அவரைக் காப்பாற்ற முயலும் அமண்டா மயிரிழையில் தப்புகிறார். தங்கள் திட்டம் தோல்வியுற்றதை உணரும் ராப்டர்கள், புறப்படும் முன் யுடெஸ்கியைக் கொன்றுவிட்டுச் செல்கின்றன.

பின்னர் இரு ராப்டர்கள் தங்களுக்குள் தொடர்புகொள்வதைக் கவனிக்கும் கிரான்ட், அவை எதையோ தேடுவதாக ஐயப்படுகிறார். ராப்டர்களால் சூழப்படும் அவர், எதிர்பாராவிதமாக எரிக்-கால் மீட்கப்படுகிறார். எரிக் தங்கியிருந்த பழைய சுமையுந்தில் இருவரும் அன்றைய இரவைக் கழிக்கின்றனர். மறுநாள், பால் கர்பியின் செயற்கைக்கோள் கைபேசி ஒலி எழுப்புவதைக் கேட்கும் அவர்கள் கர்பி இணையரோடும் பில்லியோடும் இணைகின்றனர். நாஷ், ஸ்பைனோசாரஸால் கொல்லப்படும் முன் தான் அவரிடம் தன் கைபேசியை அளித்ததாக பால் விளக்குகிறார். அப்பொழுது அக்குழுவினரை மீண்டும் ஸ்பைனோசாரஸ் தாக்குகிறது. எனினும் அவர்கள் தப்புகின்றனர்.

பில்லி, நிதித் தேவைக்காக இரு ராப்டர் முட்டைகளைக் களவாடியதே ராப்டர் தாக்குதலுக்குக் காரணம் என கிரான்ட் அறிகிறார். அக் குழுவினர் உயிர்தப்புவதற்காக அவ்விரு முட்டைகளையும் பாதுகாக்க அவர் முடிவுசெய்கிறார்.

பின்பு அவர்கள் எதிர்பாராவிதமாக ஒரு பெரிய பறவைக்கூண்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அங்குள்ள டெரெனெடான் என்ற பழங்காலப் பறவைகள் அவர்களைத் தாக்கி எரிக்கைக் கவர்ந்துசெல்கின்றன. பென்-னின் பாராசைலைக் கொண்டு அவரை மீிட்கும் பில்லி, டெரெனெடான்களால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். அவர் இறந்துவிட்டதாக எண்ணும் பிற உறுப்பினர்கள் பறவைக்கூண்டிலிருந்து தப்பி (அதன் கதவு திறந்துள்ளதை அறியாமல்) ஒரு படகில் நதியோரமாகப் பயணிக்கின்றனர்.

அன்றிரவில் கிரான்ட் குழுவினர், நாஷ் வைத்திருந்த கைபேசியை ஸ்பைனோசாரஸின் சாணத்திலிருந்து மீட்டெடுக்கின்றனர். விரைவில் மழையும் பெய்யத்தொடங்குகிறது. அச்சமயத்தில் கிரான்ட், சாட்லரைத் தொடர்புகொள்ள முயல்கிறார். திடீரென்று ஸ்பைனோசாரஸ் அப் படகைத் தாக்குகிறது. கிரான்டும் கர்பியும் படகின் எரிபொருளைப் பற்ற வைத்து அதை விரட்டுகின்றனர்.

மறுநாள் அவர்கள் அனைவரும் கடற்கரை நோக்கி செல்கின்றனர். ஆனால் மீண்டும் அவர்களை ராப்டர் கூட்டம் சூழ்ந்துகொள்கிறது. ராப்டர் முட்டைகள் மீண்டும் அவற்றிடம் ஒப்படைக்கப்படுகின்றன. கிரான்ட், ராப்டரின் மாதிரிக் குரல்வளையைக் கொண்டு அவற்றைத் திசைத்திருப்பி அனுப்பிவிடுகிறார்.


பின்னர் கடற்கரைக்குச் செல்லும் கிரான்ட் குழுவினரை மீட்க சாட்லர் அனுப்பிய ஈரூடகப் படைப்பிரிவும் கடற்படையும் காத்திருக்கின்றன. பில்லி, படுகாயமடைந்த நிலையில் இன்னும் உயிருடன் அவர்கள் பாதுகாப்பில் இருக்கிறார். தீவை விட்டு அவர்கள் அனைவரும் வெளியேறும்பொழுது டெரெனெடான்கள் பறந்துசெல்வதைக் காண்கின்றனர். அவை, கூடு கட்டப் புதிய இடங்களைத் தேடுகின்றன என கிரான்ட் கூறுவதுடன் படம் நிறைவடைகிறது.

நடித்தவர்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய கதாபாத்திரங்களின் பட்டியல்

எண் கதாபாத்திரம் நடித்தவர் குறிப்பு
1 ஆலன் கிரான்ட் (Dr.Alan Grant) சாம் நெய்ல் (Sam Neill) தொல்லுயிர் ஆய்வாளர்
2 பால் கர்பி (Paul Kirby) வில்லியம் ஹெச். மேசி (William H. Macy) ஓக்லகோமாவைச் சேர்ந்த வணிகர்
3 அமண்டா கர்பி (Amanda Kirby) டியா லியோனி (Téa Leoni) பால் கர்பியின் முன்னாள் மனைவி
4 பில்லி பிரென்னன் (Billy Brennan) அலெஸ்ஸாண்ட்ரோ நிவோலா (Alessandro Nivola) கிரான்டின் உதவியாளர்
5 எரிக் கர்பி (Eric Kirby) ட்ரெவர் மோர்கன் (Trevor Morgan) கர்பி இணையரின் மகன்
6 யுடெஸ்கி (Udesky) மைக்கேல் ஜெட்டர் (Michael Jeter) கூலிப்படை விமானி / பயணப்பதிவு முகவர்
7 கூப்பர் (Cooper) ஜான் டீல் (John Diehl) கூலிப்படை உறுப்பினர்
8 எம்.பி. நாஷ் (M.B.Nash) புரூஸ் ஏ. யங் (Bruce A. Young) கூலிப்படை விமானி
9 எல்லி சாட்லர் (Dr.Ellie Sattler) லாரா டென் (Laura Dern) தொல் தாவர ஆய்வாளர்
10 மார்க் டெக்ளர் (Mark Degler) டெய்லர் நிக்கல்ஸ் (Taylor Nichols) எல்லியின் கணவர்
11 பென் ஹில்டெப்ரன்ட் (Ben Hildebrand) மார்க் ஹேர்லிக் (Mark Harelik) அமண்டாவின் தோழன்
12 என்ரீகே கார்டோஸோ (Enrique Cardoso) ஜூலியோ ஆஸ்கர் மெச்சோஸோ (Julio Oscar Mechoso) கோஸ்ட்டா ரிக்காவைச் சேர்ந்த படகு உரிமையாளர்

திரையில் தோன்றிய உயிரினங்கள்[தொகு]

மேலும் பார்க்க: ''ஜுராசிக் பார்க்'' தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

மனிதனின் அளவோடு ஒப்பிடப்பட்டுள்ள ஸ்பைனோசாரஸ் (சிவப்பு), சுச்சோமைமஸ் (பச்சை), பேரியோனிக்ஸ் (மஞ்சள்) மற்றும் இரிட்டேட்டர் (நீலம்)

முந்தைய படங்களைப் போலல்லாமல் இத் திரைப்படத்தில் ஸ்பைனோசாரஸே முதன்மை எதிரியாகக் கருதப்படுகிறது:[3] ஜான்ஸ்டன் கூறுகையில் பல தொன்மாக்களின் நிழலுருவங்கள் டி-ரெக்ஸை ஒத்துள்ளன. எனவே பார்வையாளர்கள் இதை (பார்த்தமட்டில்) வேறொன்றாக அடையாளம் காண நாங்கள் விழைந்தோம் என்றார்.[4]

முந்தைய திரைப்படச் சுவரொட்டிகளில் டி.ரெக்ஸ் தக்கவைத்திருந்த இடத்தை இம்முறை ஸ்பைனோசாரஸும் டெரெனெடானும் எடுத்துக்கொண்டன. ஸ்பைனோசாரஸ் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் பேரியோனிக்ஸ் முதன்மை எதிரியாகப் பரிசீலிக்கப்பட்டது. துவக்கச் சுவரொட்டிகளும் இதைப் பிரதிபலித்தன. திரைக்கதையிலும் ஓரிடத்தில் பில்லி, ஸ்பைனோசாரஸை பேரியோனிக்ஸ் அல்லது சுச்சோமைமஸ் என அடையாளப்படுத்துகிறார். எனினும் கிரான்ட், அத் தொன்மாவின் அளவையும் அதன் முதுகிலுள்ள பாய்மரம் போன்ற அமைப்பையும் கருத்திற்கொண்டு அதைச் சரியாக அடையாளம் காணுகிறார்.[5]

தொல்லுயிரியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் தோன்றியமையால் பல தொன்மாக்களின் சித்தரிப்பு முந்தைய படங்களிலிருந்து வேறுபடுகின்றது. குறிப்பாக, வெலாசிராப்டர்களுக்கு இறகுகள் இருந்தன எனத் தெரியவந்ததால், படத்தில் தோன்றிய ஆண் ராப்டர்களின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இறகு போன்ற கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டன. இத் திரைப்படத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் ஜாக் ஹார்னர் கூறுகையில் ராப்டர்களுக்கு இறகுகள் அல்லது இறகு போன்ற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன. எனவே நாங்கள் அதை ராப்டரின் புதிய தோற்றத்தில் இணைத்திருக்கிறோம் என்றார்.[6]

இப் படத்தில் டெரெனெடான்களைச் சேர்க்கவேண்டும் என்று ஜான்ஸ்டனை ஸ்பில்பேர்க் வலியுறுத்தினார் (நிதிக் காரணங்களுக்காக முந்தைய படங்களில் இருந்து இவ்விலங்குகள் நீக்கப்பட்டன).[7] முதல் வரைவில் இடம்பெற்றிருந்த ஒரு நீர்வாழ் ஊர்வன விலங்கும் இறுதி வரைவிலிருந்து நீக்கப்பட்டது.[7] அனைத்து உயிரினங்களுக்கும் அசைவூட்ட மாதிரிகள் மற்றும் CGI ஆகியவை சிறப்பு விளைவுகளாகப் பயன்படுத்தப்பட்டன.[4]

இத் திரைப்படத்தில் தோன்றும் உயிரினங்கள் பின்வருமாறு:

எண் தொன்மா ஆங்கிலப் பெயர்
1 ஆங்கிலோசாரஸ் Ankylosaurus
2 பிராக்கியோ சாரஸ் Brachiosaurus
3 செரடோசாரஸ் Ceratosaurus
4 காம்ப்ஸோக்னாதஸ் Compsognathus
5 காரெத்தொசாரஸ் Corythosaurus
6 பாராசாரோலோஃபஸ் Parasaurolophus
7 டெரெனெடான் Pteranodon
8 ஸ்பைனோசாரஸ் Spinosaurus
9 இசுடெகோசாரஸ் Stegosaurus
10 டிரை செராடாப்ஸ் Triceratops
11 டைரனோசாரஸ் Tyrannosaurus
12 வெலாசிராப்டர் Velociraptor

தயாரிப்பு[தொகு]

துவக்க முன்னேற்றம்[தொகு]

முன் தயாரிப்பு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இசை[தொகு]

வெளியீடு[தொகு]

வரவேற்பு[தொகு]

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

சந்தைப்படுத்தலும் விற்பனையும்[தொகு]

கைபேசி விளம்பரம்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Jurassic Park III". British Board of Film Classification. பார்த்த நாள் April 4, 2013.
 2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BOM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. Elley, Derek (July 17, 2001). "Jurassic Park III". Variety. http://www.variety.com/review/VE1117798505.html?categoryid=31&cs=1. பார்த்த நாள்: July 9, 2007. 
 4. 4.0 4.1 "Production Notes". Cinema Review. பார்த்த நாள் July 16, 2008.
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; making என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. "Jurassic Park 3: Production Notes".
 7. 7.0 7.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Jul01 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுராசிக்_பார்க்_III&oldid=2705265" இருந்து மீள்விக்கப்பட்டது