த லொஸ்ட் வேர்ல்ட் (கிரைட்டன் புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த லொஸ்ட் வேர்ல்ட்
படிமம்:Big-lostworld.jpg
முதல் பதிப்பு அட்டை
நூலாசிரியர்மைக்கேல் கிரைட்டன்
அட்டைப்பட ஓவியர்சிப் கிட்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
வகைஅறிவியல் புனைவு
தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு
திகில் புனைவு
வெளியீட்டாளர்கேனோஃப்
வெளியிடப்பட்ட நாள்
செப்டம்பர் 8, 1995[1]
ஊடக வகைஅச்சு (மேலட்டை)
பக்கங்கள்393
ISBN0-679-41946-2
மற்றும் 0-345-40288-X (1996 காகித அட்டைப் பதிப்பு)
OCLC32924490
813/.54 20
LC வகைPS3553.R48 L67 1995b
முன்னைய நூல்ஜுராசிக் பார்க்

த லொஸ்ட் வேர்ல்ட் (The Lost World) என்பது அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்டு 1995-ஆம் ஆண்டில் வெளிவந்த தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவுப் புதினமாகும். மேலும் இது 1990-இல் கிரைட்டன் எழுதி வெளியிட்ட ஜுராசிக் பார்க்கின் தொடர்ச்சியாகும்.

1997-இல் ஜுராசிக் பார்க் மற்றும் த லொஸ்ட் வேர்ல்ட் ஆகிய இரு புதினங்களும் மைக்கேல் கிரைட்டன்ஸ் ஜுராசிக் வேர்ல்ட்(Michael Crichton's Jurassic World) என்ற ஒரே நூலாக வெளியாயின (இத்தொகுப்புக்கும் 2015-இல் வெளியான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்துக்கும் தொடர்பில்லை).[2][3][4]

கதைச் சுருக்கம்[தொகு]

ஜுராசிக் பார்க் அழிந்து நான்காண்டுகள் கழிந்தபின் 1993-இல் கோஸ்ட்டா ரிக்கா நாட்டுக் கடற்கரையில் சில மர்ம விலங்குகளின் உடல்கள் ஒதுங்கியுள்ளதாக வதந்தி நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, முந்தைய நிகழ்வுகளில் உயிர்தப்பியவர்களுள் ஒருவரான கணித வல்லுநர் இயான் மால்கம் (Ian Malcolm), தொல்லுயிர் ஆய்வாளர் ரிச்சர்ட் லெவினுடன் (Richard Levine) இணைந்து தொன்மாக்களின் "தொலைந்துபோன உலகம்" ஒன்றைக் கண்டறிய முயல்கிறார். 1995-இல் அவர்கள் ஈஸ்லா சோர்னா (Isla Sorna) என்ற (கற்பனை) தீவிலுள்ள Site B பற்றி அறிகின்றனர்.[ தற்போது செயலிழந்துவிட்ட இன்ஜென் (InGen) நிறுவனம் முன்பு அவ்விடத்தை ஒரு தயாரிப்புக் களமாகப் பயன்படுத்தி வந்தது. அங்கு தாங்கள் உருவாக்கி வளர்த்த தொன்மாக்களை அருகமைத் தீவான ஈஸ்லா நுப்லாரில் "ஜுராசிக் பார்க்" என்ற பெயரில் அந்நிறுவனத்தினர் காட்சிப்படுத்தி வந்தனர்.]

கோஸ்ட்டா ரிக்கா நாட்டு அரசு அத்தீவை விரைவில் கண்டறிந்து அழித்துவிடக்கூடும் என அஞ்சும் லெவின், மால்கம்முக்குத் தெரியாமல் டியாகோ என்ற கோஸ்டா ரிக்க வழிகாட்டியுடன் ஈஸ்லா சோர்னாவுக்குப் பயணிக்கிறார். அங்கு சென்றுசேர்ந்த சிறிதுநேரத்திலேயே, இருவரும் மர்ம விலங்குகளால் தாக்கப்படுகின்றனர். இதில் டியாகோ இறக்கிறார். லெவின் பயணப்பட்டதை அறியும் மால்கம், ஓர் மீட்புக் குழுவுடன் அத்தீவுக்குச் செல்கிறார். அக்குழுவில் இருப்போர்:

பெயர் ஆங்கிலம் குறிப்பு
ஜாக் தார்ன் Jack "Doc" Thorne பொறியாளர் ; ஓய்வு பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்
எட்டி கார்ர் Eddie Carr தார்னின் உதவியாளர்
ஆர்பி பென்டன் மற்றும் கெல்லி கர்டிஸ் R.B. "Arby" Benton and Kelly Curtis தங்கள் பள்ளித் திட்டத்தின் ஒரு பகுதியாக, லெவினின் ஆராய்ச்சி உதவியாளர்களாகப் பணிபுரியும் பள்ளிச் சிறார்கள் ;

மேற்கூறிய பெரியவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு ஈஸ்லா சோர்னாவுக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகை பிறருக்குச் சற்றுத் தாமதமாகவே தெரியவருகிறது.

[ விலங்கியல் வல்லுநரும் மால்கம்மின் முன்னாள் தோழியுமான சாரா ஹார்டிங் (Dr. Sarah Harding), முதலில் இக்குழுவில் இணைய மறுத்தாலும், பின்னர் அவர்களை நேரடியாக அத் தீவில் சந்திக்கத் திட்டமிடுகிறார்.]

இக்குழுவினர் ஆயுதங்களோடும், நடமாடும் ஆய்வகமாகப் பயன்படக்கூடிய இரு RV டிரெய்லர்களோடும் ஈஸ்லா சோர்னாவுக்கு வருகின்றனர். அங்கு இன்-ஜென் நிறுவனத்தால் கைவிடப்பட்ட ஒரு வளாகமும் அதன் பணியாளர்கள் தங்கியிருந்த ஒரு சிற்றூரும், ஆய்வகமும் உள்ளன. இவை புவிவெப்பச் சக்தியில் இயங்குவதை இவர்கள் அறிகின்றனர். இறுதியில் லெவினையும் கண்டுபிடிக்கின்றனர். அத் "தொலைந்துபோன உலகத்தில்" தான் சேகரிக்கப்போகும் "தகவல் களஞ்சியத்தை" எண்ணி லெவின் பெருமகிழ்ச்சி கொள்கிறார்.

இதே நேரத்தில், மரபணு வல்லுநர்களான லூயி டாட்ஜ்சன்(Lewis Dodgson), ஹோவர்ட் கிங் (Howard King) மற்றும் பிரபல உயிரியலாளர் ஜார்ஜ் பேசல்டன் (George Baselton) ஆகியோர் அடங்கிய மற்றொரு குழுவுக்கு லெவினின் திட்டம் தெரியவருகிறது. இன்-ஜென்னின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்காக (Biosyn) தொன்மாக்களின் முட்டைகளைத் திருடும் நோக்கத்துடன் மூவரும் ஈஸ்லா சோர்னாவுக்கு வருகின்றனர். முன்னதாக எதிர்ப்படும் ஹார்டிங்கை தீவில் கொண்டு விடுவதாக உறுதியளிக்கின்றனர். தீவை நெருங்குகையில் டாட்ஜ்சன் அவரைப் படகிலிருந்து தள்ளிவிட்டுக் கொல்ல முயல்கிறார். எனினும் ஹார்டிங் உயிர்பிழைத்து மால்கம் குழுவோடு சேர்கிறார்.

லெவினும் மால்கம்மும் தொன்மாக்களின் நடத்தையை ஒரு தற்காலிகக் கோபுரத்திலிருந்து நோக்குகின்றனர். டாட்ஜ்சன் குழுவினரின் வருகை இவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. பிற தொன்மாக்களின் முட்டைகளைத் திருடியபின் டி-ரெக்ஸின் கூட்டுக்குச் செல்லும் டாட்ஜ்சன் குழுவினரை அவ்விலங்குகள் தாக்குகின்றன. இதில் பேசல்டன் உயிரிழக்கிறார். டாட்ஜ்சன்னும் கிங்கும் பிரிந்துவிடுகின்றனர்.

அக் கூட்டை ஆய்வு செய்கையில் மால்கம், கால் முறிந்த இளம் டி-ரெக்ஸ் ஒன்றைக் காண்கிறார். அது காட்டில் உயிர்பிழைக்கும் வாய்ப்பில்லை எனக் கருதி அதைக் கொன்றுவிடுமாறு எட்டியை வலியுறுத்துகிறார். எட்டியோ பிறருக்குத் தெரியாமல் குட்டியை மீட்டு டிரெய்லருக்குக் கொண்டுவருகிறார். இதைக் அறியும் மால்கம்மும் ஹார்டிங்கும் வேறுவழியின்றி அதன் காலுக்குக் கட்டுப்போட ஒப்புகின்றனர். குழுவின் பிற உறுப்பினர்கள் கோபுரத்துக்குத் திரும்புகின்றனர்.

அன்றிரவு வெலாசிராப்டர்கள் காட்டிலிருந்து வந்து கிங்கைக் கொல்கின்றன. இச்சமயத்தில் மால்கம்மும் ஹார்டிங்கும் இளம் டி-ரெக்ஸின் காலுக்குக் கட்டுப்போட்டு முடிக்கும்பொழுது பெற்றோர் ரெக்ஸ்கள் அங்கு வந்து அவ்விரு டிரெயிலர்களுள் ஒன்றைக் குன்றின் உச்சியிலிருந்து தள்ளிவிட்டுப் பின் குட்டியை அழைத்துச்செல்கின்றன. இத்தாக்குதலில் மால்கம் காயமடைகிறார். அவரையும் ஹார்டிங்கையும் தார்ன் மீட்கிறார். வெலாசிராப்டர்கள் கோபுரத்தைத் தாக்கியதில் எட்டியும் உயிரிழக்கிறார்.

இத்தாக்குதல்களில் தப்பும் அறுவரும், இன்ஜென்னின் பணியாளர் சிற்றூரிலுள்ள அங்காடி ஒன்றில் அடைக்கலம் புகுகின்றனர். மறுநாள் காலையில் அவர்களை அழைத்துச்செல்லவுள்ள சுழலிறகி (helicopter) இறங்கும் தளத்தை அடையும் வழியைத் திட்டமிடுகின்றனர். அவர்களின் சிற்றுந்துக்கு எரிபொருள் தேடச் செல்லும் தார்ன், பச்சோந்தி போல நிறம் மாறும் கார்னோடாரஸ் (Carnotaurus) என்ற இரு தொன்மாக்களைக் காண்கிறார். எனினும் அவற்றிடம் சிக்காமல் பாதுகாப்பாக அங்காடிக்குத் திரும்புகிறார். லெவினும் ஹார்டிங்கும் அவற்றின்மீது ஒளிபாய்ச்சி அவற்றின் நிறமாற்றத்தைக் குழப்பி விரட்டுகின்றனர்.

காலையில், சுழலிறகியைக் கண்டு தங்கள் இருப்பைக் காட்டும் எண்ணத்துடன் ஹார்டிங் ஒரு சிற்றுந்தில் புறப்படுகிறார். வழியில் அவரை இடைமறிக்கும் டாட்ஜ்சனை திடீரென்று அங்கு வரும் டி ரெக்ஸ் தூக்கிச்சென்று தன் குட்டிகளுக்கு இரையாக்குகிறது. தாமதமாகச் சென்றதால் சுழலிறகியைப் பிடிக்க இயலாமல் அங்காடிக்குத் திரும்புகிறார் ஹார்டிங். மற்றுமொரு ராப்டர் தாக்குதலை சமாளித்தபின் அறுவரும் தீவின் கப்பல்துறையிலுள்ள ஒரு படகிலேறி ஈஸ்லா சோர்னாவை விட்டு வெளியேறுகின்றனர்.

அப்பொழுது மால்கம், தீவின் ஆய்வகத்தில் தான் கண்டறிந்த செய்தியைப் பகிர்கிறார்:

Site B இயங்கிய காலத்தில் இன்ஜென், அங்கிருந்த இளம் ஊணுண்ணித் தொன்மாக்களுக்கு செம்மறியாட்டு இறைச்சிச் சாற்றை உணவாக வழங்கியது. புரதப்பீழைத் தொற்றுள்ள இச் சாறு, ஸ்க்ரேப்பி (Scrapie) என்ற நோயைப் பரப்பி அவற்றின் வாழ்நாளைக் குறைத்தது. இன்ஜென் அறிவியலர்கள் அந்நோயைக் கட்டுப்படுத்தினர். எனினும் தீவு கைவிடப்பட்டபின் மீண்டும் நோய்ப்பரவல் தொடர்ந்தது.

இதனால் ஈஸ்லா சோர்னாவிலுள்ள தொன்மாக்கள் காலப்போக்கில் அழிந்துவிடக்கூடும் என்கிறார் மால்கம்.

பின் நாம் அனைவரும் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது என தார்ன் கூறுவதுடன் புதினம் நிறைகிறது.

பின்புலம்[தொகு]

1990-இல் ஜுராசிக் பார்க் புதினம் வெளியானபின், கிரைட்டன் ஒரு தொடர்ச்சியை எழுதவேண்டும் என்று அவரின் ரசிகர்கள் வலியுறுத்தினர். இப் புதினத்தைத் தழுவி அதேபெயரில் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் ஒரு திரைப்படத்தை 1993-இல் இயக்கினார். இப் படத்தின் வெற்றிக்குப்பின் அதற்கொரு தொடர்ச்சியை இயக்க ஆர்வம் கொண்ட ஸ்பில்பேர்க்கும் கிரைட்டனிடம் இதையே கூறினார்.

ஆனால் அதற்குமுன் தான் எழுதிய எந்தவொரு புதினத்துக்கும் தொடர்ச்சியை எழுதியிராததால் கிரைட்டன் தயக்கம் காட்டினார். ஒரு தொடர்ச்சியானது மிகவும் கடினமான கட்டமைப்புச் சிக்கலாகும்; அது ஒரே மாதிரியாக, ஆனால் வேறுபட்டதாக இருக்கவேண்டும்; அது உண்மையாகவே ஒரே மாதிரி இருந்ததென்றால் முந்தைய புதினத்துக்கும் அதற்கும் வேறுபாடில்லை. ஆனால் அது உண்மையாகவே வேறுபட்டதாக இருந்தால் அது ஒரு தொடர்ச்சியே அல்ல. எனவே அது ஒரு வேடிக்கையான இடைநிலைப் பகுதியில் உள்ளது என்பதாக அவர் கூறினார்.[5] மேலும் 1994 மார்ச்-இல் பேசும்பொழுது ஒரு புதினத் தொடர்ச்சியும் ஒரு திரைப்படத் தழுவலும் வரக்கூடும் என்றார்.[6]

முதல் புதினத்தில் இயான் மால்கம்மின் பாத்திரம் உயிரிழப்பதாகக் குறிப்பிடப்படினும் த லொஸ்ட் வேர்ல்ட் தொடர்ச்சிக்காக கிரைட்டன் அவரை திரும்பக் கொண்டு வர முடிவு செய்தார். அவர் பின்பு கூறியதாவது:

மால்கம் எனக்குத் தேவைப்பட்டதால் அவர் திரும்ப வந்தார். பிற பாத்திரங்கள் இல்லாமல் என்னால் சமாளிக்க முடியும். ஆனால் அவர் இல்லாமல் முடியாது. ஏனெனில் அவர் கதைப்போக்கின் 'முரண் வர்ணனையாளர்' (ironic commentator). கதைப்போக்கு ஏன் மோசமாகப் போகப்போகிறது என அவர் நமக்குக் கூறிக்கொண்டே இருக்கிறார். ஆகவே நான் அவரை மீண்டும் கொண்டு வரவேண்டியதாயிற்று

உயிரிழந்ததாகக் கருதப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வரும் உத்தியை கிரைட்டன், பிரபல ஸ்காட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கொனன் டொயிலிடமிருந்து தெரிந்துகொண்டார். [இவ்வெழுத்தாளர், தான் உருவாக்கிய ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தை ஒரு கட்டத்தில் இறந்துபோவதாகக் காட்டிப் பின் மீண்டுவரச் செய்தார்]

முதல் புதினமான ஜுராசிக் பார்க்கின் வாசகர்களுக்கும் அதன் திரைப்படத் தழுவலைப் பார்த்தவர்களுக்கும் மால்கம் ஒரு பிடித்தமான கதைமாந்தராக விளங்கினார்.[5]

தி லொஸ்ட் வேர்ல்ட் புதினத்தின் முந்தைய வரைவொன்றில், கடவுள் மற்றும் படிவளர்ச்சிக் கொள்கையைப்பற்றி மால்கம் நீண்ட உரையொன்றை நிகழ்த்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது பொருத்தமாக இல்லாததால் கிரைட்டன் அதை நீக்கிவிட்டார்.[5]

1995 மார்ச்சில், புதினத்தை எழுதிவிட்டதாகவும், அவ்வாண்டின் பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கிரைட்டன் அறிவித்தார். எனினும் புதினத்தின் தலைப்பையோ கதையையோ குறிப்பிட மறுத்துவிட்டார்.[7] இப்புதினமானது, 1912-இல் இதேபெயரில் கொனன் டொயில் எழுதி வெளியான புதினத்துக்கும் அதைத் தழுவி 1925-இல் வெளியான திரைப்படத்துக்கும் ஒரு அஞ்சலி என்றார் கிரைட்டன்.[8] இவ்விரு புதினங்களும் கதையளவில் சில ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே நடு அமெரிக்காவில் தொன்மாக்கள் உலாவும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மேற்கொள்ளப்படும் பயணத்தைக் கூறுகின்றன.[9] எனினும் கிரைட்டனின் புதினத்தில் தொன்மாக்கள் பழங்காலத்திலிருந்து வாழ்வதாக இல்லாமல் மரபணு பொறியியல் மூலம் உருவாக்கப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளன. கிரைட்டன் எழுதிய ஒரே புதினத் தொடர்ச்சி த லொஸ்ட் வேர்ல்ட் மட்டுமே.[5]

வரவேற்பு[தொகு]

த லொஸ்ட் வேர்ல்ட் புதினம் நியூயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனைப் பட்டியலில்[5] அக்டோபர் 8, 1995 முதல்[10] நவம்பர் 26,1995 வரை எட்டு வாரங்கள் முதலிடம் பிடித்திருந்தது.[11] 1996 வரை அப்பட்டியலில் இப்புதினம் இடம் பிடித்தது.[12][13][14]

சூசன் டோப்ஃபர் (Susan Toepfer) பீப்பிள் இதழுக்காக எழுதிய மதிப்புரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

த லொஸ்ட் வேர்ல்ட் புதினம், சாகசமும் புகைப்படத் தரமும் நிறைந்தது. வீட்டுப்பக்குவத்தில் செய்யப்பட்ட உணவுகளுக்கு நுண்ணலை அடுப்புகள் மூலம் சமைக்கப்பட்ட உணவுகள் எப்படியோ அதுபோலத் தனது முன்னோடிகளுக்கு இப்புதினமும் விளங்குகிறது: உண்மைத்தன்மை அரிதாகக் கொண்டது. எனினும் தேவையான சமயங்களில் முழு நிறைவு தரக்கூடியது.

மேலும் முதல் புதினத்தில் தோன்றிய பிற முக்கிய கதாபாத்திரங்கள் கைவிடப்பட்ட நிலையில், இயான் மால்கம் மட்டும் விசித்திரமான முறையில் மீண்டும் திரும்பியிருப்பது, திரைப்படத் தொடர்ச்சியில் நடிப்பதற்கு ஜெஃப் கோல்ட்ப்ளும் (Jeff Goldblum- ஜுராசிக் பார்க்திரைப்படத்தொடரில் மால்கம்மின் பாத்திரத்தை ஏற்றவர்) மட்டுமே தயாராக இருந்தாரா என்ற ஐயத்தை எழுப்புகிறது. ஆயினும் இரு குறும்புக்காரச் சிறார்களைச் சேர்த்திருக்கும் பாங்கிலும் பெண்ணியவாதியான ஒரு கதாநாயகியை உருவாக்கியிருக்கும் பாங்கிலும் புதின ஆசிரியரின் அறிவுக்கூர்மையும் மகிழ்வூட்டும் தன்மையும் வெளிப்படுகின்றன. மைக்கேல் கிரைட்டனின் சமீபத்திய இந்நூல், தனக்கேயுரிய அறிவுத்தன்மையும் விறுவிறுப்பும் வசீகரத் தன்மையும் கொண்டது. அவர் செய்ய முனைந்ததை (இப்பொழுது பிரபலமாகிவிட்ட சவாரி ஒன்றின் அச்சுறுத்தும் சிலிர்ப்புகளை வழங்குதல்) இப்புதினம் நிறைவேற்றுகிறது என்பதாக டோப்ஃபர் கூறினார்.[15]

த நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் மிச்சிகோ காக்குடானி (Michiko Kakutani) இப்புதினத்துக்குக் கீழ்க்காணும் எதிர்மறை மதிப்புரையை அளித்திருந்தார்:

இப்புதினம் ஜுராசிக் பார்க்-கின் சோர்வான மீளுருவாக்கம்; அப்புதினத்திலிருந்த வியப்பும் கூர்மதியும் இதில் இல்லை. கணிக்கக்கூடிய தன்மையும் கற்பனையற்ற தன்மையும் மிகுந்துள்ளது. திரைப்படத் தொடர்ச்சியில் புதிய பணியாற்றும் தொல்லையிலிருந்து சிறப்பு விளைவுத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் காப்பாற்றும் நோக்குடன் படைக்கப்பட்டுள்ளதுபோலத் தெரிகிறது

அவர் மேலும் கூறுகையில் கிரைட்டன், பாத்திரப்படைப்பில் காட்டும் கவனத்தில் புதிய சுணக்கம் ஏற்பட்டுள்ளதை இப்புதினம் பிரதிபலிக்கிறது...ஜுராசிக் பார்க்கில் தான் பட்ட காயங்களைப் பற்றிக் கூறும் புகாரைத் தவிர மால்கம், தான் டைனோ-லேன்டுக்கு ( dino-land) முன்பு வருகை தந்ததைபற்றிக் கிட்டத்தட்ட எதுவும் கூறுவதில்லை[…]. அவரை ஒரு நபரின் நியாயமான தொலைநகலாக மாற்ற ஒரு அரைகுறை முயற்சியைக்கூட கிரைட்டன் செய்யவில்லை. மாறாக ஒழுங்கின்மை கோட்பாடு, அழிவுக் கோட்பாடுகள், மற்றும் மனிதகுலத்தின் அழிக்கும் தன்மை ஆகியன குறித்த ஆடம்பரமான தொழில்நுட்பரீதியான உளறல்களின் ஊதுகுழலாக, இழிந்த முறையில் அவரைப் பயன்படுத்தியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எளிதாக இனங்காணும் வகையிலான எளிய அடையாளங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.[16]

எண்டர்டெயின்மெண்ட் வீக்லியைச் சேர்ந்த டாம் டி ஹேவன் (Tom De Haven) இப்புதினத்துக்கு B- மதிப்பீடு அளித்தார். அவர் எழுதிய மதிப்புரையில் உரைநடை வடிவிலான நிகழ்பட ஆட்டம் (videogame) போலுள்ள இப்புதினத்தில் ஓடுதல், ஒளிதல், கொல்லுதல் மற்றும் இறத்தல் ஆகியவை மட்டுமே மீண்டும் மீண்டும் சிலநூறு பரபரப்பான பக்கங்களில் இடம்பெறுகின்றன. எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர், கிரைட்டனின் பண்புரு வருணனையற்ற தன்மையைக் கீழ்க்கண்டவாறு விமர்சித்தார்:

புதினத்தின் தொடக்கத்திலிருந்தே கிரைட்டன் தடுமாறுவது தெளிவாகத் தெரிகிறது. கதைக்குள் அறிவியல்ரீதியான நம்பகத்தன்மையைக் கட்டமைக்கும் (கடந்த முறை அவர் அதை அழகாகச் செய்தார்) தேவை இல்லாத நிலையில் தனது கருத்துப்பொருளால் அவர் ஈர்க்கப்படாமல் அதிலிருந்து தள்ளியே இருக்கிறார். அற்றுப்போதல் மற்றும் இயற்கைத் தேர்வு பற்றிய அவருடைய எச்சரிக்கை விரிவுரைகள், தனக்குப் பழக்கமான பகுதிக்கு அவர் திரும்புவதை நியாயப்படுத்தும் வகையிலான அரைகுறை முயற்சிகளாகத் தோன்றுகின்றன. எனினும் இப்புதினத்தில் புத்துணர்ச்சி பற்றாக்குறை இருந்தாலும் கூட (இதன் தலைப்பு கூட புதியதன்று; தொன்மாக் கதைகள் அனைத்துக்கும் பாட்டனாரான ஆர்தர் கொனன் டொயிலிடம் இருந்து அது கடன்வாங்கப்பட்டுள்ளது) இது மிகவும் அச்சுறுத்தும் வாசிப்பாக உள்ளது[…] [17]

[…] இப்புதினத்தின் தொடக்க அத்தியாயங்கள் விரைந்தோடுவனவாகவும் திட்டமிடப்பட்டனவாகவும் உள்ளன. இம் முறையானது, 1950-களின் மான்ஸ்டர் திரைப்படங்களில் (monster movies) பிரதானமாகக் கையாளப்பட்ட பழைய முறைக் கதைசொல்லலுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலாக இருந்தாலும் கூட அது இன்னும் அறுவையாகவே உள்ளது.[…] இதன் முகவுரை எவ்வளவு வலுவற்றதாக இருப்பினும், அல்லது பாத்திரப்படைப்பு எவ்வளவு ஆழமற்றதாக இருப்பினும், நான் யாரையும் இப்புதினத்தை வாசிப்பதிலிருந்து பின்வாங்கச் செய்வது பற்றிக் கனவுகாண மாட்டேன். இதிலுள்ள தெளிவு, திகில்,அப்பட்டமான அச்சுறுத்தும் தன்மை ஆகியவற்றால் இதன் கதைப்போக்கு, முந்தைய புதினத்திலுள்ளவற்றையும் மிஞ்சிவிடுகிறது; இன்னும் சிறப்பாகச் சொல்லப்போனால், இதன் தீர்மானமின்மை (suspense) மிகவும் திறமையான முறையில் இழுத்துப் பரப்பப்பட்டுப் பின்னர் திடீரென்று நீங்கள் எதிர்பாராத வேளையில் விடுவிக்கப்படுகிறது.[…]

[…]ஜுராசிக் பார்க் புதினம், பிரபல அமெரிக்க இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு பாதுகாப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. தி லொஸ்ட் வேர்ல்ட், அதிகபட்சம் ஒரு அடிக்குறிப்பாக இருக்கும். ஆனாலும் கூட அது என் உள்ளங்கைகளை வியர்க்கச்செய்தது[17]

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸில் நீல் கார்லென் (Neal Karlen) அளித்த விமர்சனம் பின்வருமாறு:

முந்தைய புதினத்தின் உருவக மொழிப் பதங்களை (tropes) ரசிகர்களுக்குப் பழக்கப்பட்டதாகத் தக்கவைத்திருக்கும் பாங்கிலும், கருத்துகளையும் கதைப்போக்கையும் மாற்றியிருப்பதன் மூலமாக அவரது மிகக்கடுமையான, பொறாமை மிக்க விமர்சகர்களையும் அடுத்து நடப்பது என்ன எனக் கண்டுபிடிக்கும் நோக்கில் இப்புதினத்தின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருக்க வைத்திருக்கும் பாங்கிலும் புதின ஆசிரியர் (கிரைட்டன்) தொடர்ச்சி படியை சரியாகத் தாண்டியுள்ளார் […]

[…] மற்றுமொரு முறை தொன்மாக்களே உண்மையான நட்சத்திரங்களாகத் தெரிகின்றன.(அதேநேரத்தில்) மனிதக் கதாபாத்திரங்கள் சுருக்கெழுத்துத் திரைக்கதை வடிவத்தில் உள்ளனபோன்று அறிமுகப்படுத்தப்படுகின்றனர். (வெலாசி)ராப்டர்கள் பயங்கரமான வெளித்தோற்றம் கொண்டனவாகவும் இன்னும் அருவருக்கத்தக்கனவாகவும் (மற்றுமொரு முறை) கிட்டத்தட்ட இந்நூலின் மனிதக் கதாபாத்திரங்கள் அனைவரைக் காட்டிலும் நன்கு முன்னேறியனவாகவும் திரும்பி வந்துள்ளன.[18]

திரைப்படத் தழுவல்[தொகு]

த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் என்பது ஜுராசிக் பார்க்-கின் தொடர்ச்சியாகும். இப்படம் 1997-ஆம் ஆண்டில் வெளியானது. இவ்விரு படங்களும் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கியவையே.

ஸ்பில்பேர்க்கின் வேண்டுகோளுக்கிணங்க கிரைட்டன் எழுதிய இரண்டாம் புதினம் வெளியானவுடன், 1997-ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடும் இலக்குடன் அதன் திரைப்படத் தழுவலுக்கான முன் தயாரிப்பு தொடங்கியது.

இத் திரைப்படம் வெளியிடப்பட்டபோது பல்வேறு வகைப்பட்ட விமர்சனங்கள் அளிக்கப்பட்டன. எனினும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகள் பலவற்றை முறியடித்து இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[சான்று தேவை]

இதற்கும் மூலக்கதைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. ஜுராசிக் பார்க் புதினத்தில் இடம்பெற்றிருந்தும் அதன் திரைப்படத் தழுவலில் இடம்பெறாத காட்சிகளை த லொஸ்ட் வேர்ல்ட்: ஜுராசிக் பார்க் இணைத்துக்கொண்டது [எ-கா. புரோகாம்ப்ஸோக்னாதஸ்களால் ஒரு சிறுமி தாக்கப்படுதல்].

புதினத்தில் இடம்பெற்ற தொன்மாக்கள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க் தொடரில் தோன்றிய விலங்குகளின் பட்டியல்

(புதினத்தில் தோன்றும் வரிசையின்படி)

எண் தொன்மா ஆங்கிலப் பெயர்
1 ஆர்னித்தோலெஸ்டிஸ் Ornitholestes
2 முஸ்ஸாரஸ் Mussaurus
3 கார்னோடாரஸ் Carnotaurus
4 புரோகாம்ப்ஸோக்னாதஸ் Procompsognathus
5 டிரைசெரடாப்ஸ் Triceratops
6 டிரையோசாரஸ் Dryosaurus
7 ஹிப்ஸிலோஃபோடான் Hypsilophodon
8 பாராசாரோலோஃபஸ் Parasaurolophus
9 மையாசாரா Maiasaura
10 இசுடெகோசாரஸ் Stegosaurus
11 அபடோசாரஸ் Apatosaurus
12 டைரனோசாரஸ் Tyrannosaurus
13 காலிமைமஸ் Gallimimus
14 வெலாசிராப்டர் Velociraptor
15 பாக்கிசெஃபலோசாரஸ் Pachycephalosaurus

மேற்கோள்கள்[தொகு]

 1. "Copyright information for The Lost World". United States Copyright Office.
 2. Crichton, Michael (1997). Michael Crichton's Jurassic World. Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-375-40107-7. 
 3. "Michael Crichton's Jurassic world (information)". அமெரிக்கக் காங்கிரசு நூலகம்.
 4. "Michael Crichton's Jurassic World: Jurassic Park, The Lost World". Barnes & Noble.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 "In His Own Words".
 6. Spillman, Susan (March 11, 1994). "Crichton is plotting 'Jurassic 2'". USA Today. http://nl.newsbank.com/. 
 7. Spillman, Susan (March 22, 1995). "'Jurassic' sequel in sight: Crichton says book will be out this year". USA Today. http://nl.newsbank.com/. 
 8. Wilmington, Michael (June 8, 1997). "The First 'Lost World'". Chicago Tribune.
 9. Armstrong, Curtis (December 24, 1995). "The First 'Lost World'". Los Angeles Times.
 10. "The New York Times Best Seller List (October 8, 1995)". Hawes Publications (October 8, 1995).
 11. "The New York Times Best Seller List (November 26, 1995)". Hawes Publications (November 26, 1995).
 12. "The New York Times Best Seller List (March 3, 1996)". Hawes Publications (March 3, 1996).
 13. "The New York Times Best Seller List (March 10, 1996)". Hawes Publications (March 10, 1996).
 14. "The New York Times Best Seller List (March 24, 1996)". Hawes Publications (March 24, 1996).
 15. Toepfer, Susan (September 18, 1995). "Picks and Pans Review: The Lost World". People.
 16. Kakutani, Michiko (October 10, 1995). "Books of the Times: The Dinosaurs Are Back, and So Is a Late Hero". த நியூயார்க் டைம்ஸ்.
 17. 17.0 17.1 De Haven, Tom (September 22, 1995). "The Lost World". Entertainment Weekly.
 18. Karlen, Neal (October 29, 1995). "Romancing the Raptor: The Dino Finally gets Heroine Status". Los Angeles Times.

வெளி இணைப்புகள்[தொகு]