ஜுராசிக் பார்க் (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜுராசிக் பார்க்
ஜுராசிக் பார்க் புதினம்.jpg
முதல் பதிப்பு அட்டை
நூலாசிரியர்மைக்கேல் கிரைட்டன்
அட்டைப்பட ஓவியர்சிப் கிட்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
வகைஅறிவியல் புனைவு,
தொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு, திகில் புனைவு
வெளியீட்டாளர்ஆல்பிரட் ஏ. கேனோஃப்
வெளியிடப்பட்ட திகதி
நவம்பர் 20, 1990[1]
ஊடக வகைஅச்சு (மேலட்டை)
பக்கங்கள்448
ISBN0-394-58816-9
OCLC22511027
813/.54 20
LC வகைPS3553.R48 J87 1990
அடுத்த நூல்தி லாஸ்ட் வேர்ல்ட்

ஜுராசிக் பார்க் (Jurassic Park) என்பது அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்டு 1990-ஆம் ஆண்டில் வெளிவந்த அறிவியல் புனைவுப் புதினமாகும். இப்புதினத்தில் ஏழு பிரிவுகள் (iterations) உள்ளன.

இப்புதினமானது, மரபணுப் பொறியியல் குறித்த எச்சரிக்கைக் கதையாக (Cautionary tale) விளங்குகிறது. இத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மீளுருவாக்கப்பட்ட தொன்மாக்களைக் காட்சிப்படுத்தும் ஒரு கேளிக்கை பூங்காவின் சரிவே இதன் மையக்கருத்தாகும். இதன்மூலம் கணிதக் கருத்தாக்கமான ஒழுங்கின்மை கோட்பாட்டையும், நிஜ வாழ்க்கையின் மீதான அதன் தாக்கத்தையும் இப்புதினம் விளக்குகிறது.

இதன் தொடர்ச்சியாக மைக்கேல் கிரைட்டனால் எழுதப்பட்ட த லொஸ்ட் வேர்ல்ட் என்ற புதினம் 1995-இல் வெளியானது. பின்பு 1997-இல் இவ்விரு புதினங்களும் மைக்கேல் கிரைட்டன்ஸ் ஜுராசிக் வேர்ல்ட்(Michael Crichton's Jurassic World) என்ற ஒரே நூலாக வெளியாயின(இத் தொகுப்புக்கும் ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்துக்கும் தொடர்பில்லை).[2][3][4]

1993-ஆம் ஆண்டில் அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க், இப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஜுராசிக் பார்க் என்ற வெற்றிப்படத்தை இயக்கினார். பின்பு அவரே த லொஸ்ட் வேர்ல்ட் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் பிறிதொரு திரைப்படத்தையும் இயக்கினார்.

பின்பு மூன்றாவதாக ஜோ ஜான்ஸ்டன் இயக்கத்தில் ஜுராசிக் பார்க் III என்ற திரைப்படம் 2001-இல் வெளியானது.இரு புதினங்களிலும் இடம்பெற்ற, ஆனால் முந்தைய இரு படங்களிலும் பயன்படுத்தப்படாத உறுப்புகள், கருப்பொருள்கள் மற்றும் காட்சிகளை இப் படம் உள்வாங்கிக் கொண்டது. நான்காவதாக ஜுராசிக் வேர்ல்ட் என்ற திரைப்படம், ஜூன் 12,2015-இல் வெளியானது.

கிரைட்டன், முதன்முதலில், ஒரு தொன்மாவை மீளுருவாக்கும் பட்டதாரி மாணவரைப் பற்றிய திரைக்கதையைத்தான் சிந்தித்து வைத்திருந்தார்.[5] பின்பு அக் கதையை வனவிலங்குப் பூங்கா ஒன்றில் நிகழ்வதாக மாற்றியமைத்தார்.[6] மேலும் கதையின் விவரிப்பைக் குழந்தைகளின் பார்வையிலிருந்து பெரியவர்களின் பார்வைக்கு மாற்றினார்.[7]

கதைச் சுருக்கம்[தொகு]

1989 ஆம் ஆண்டில், கோஸ்ட்டா ரிக்கா நாட்டிலும் அதன் அருகிலுள்ள ஈஸ்லா நுப்லார்[8] (Isla Nublar) என்ற (கற்பனை) தீவிலும் சில மர்ம விலங்குகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்துகின்றன.இறுதியில் அவற்றுள் ஒன்று ப்ரோ காம்ப்ஸோக்னாதஸ் (Procompsognathus) என அடையாளம் காணப்படுகிறது.

இச்சமயத்தில் தொல்லுயிர் ஆய்வாளர் ஆலன் கிரான்ட் (Dr. Alan Grant) மற்றும் அவரது தொல் தாவரவியல் பட்டதாரி மாணவியான எல்லி சாட்லர் (Ellie Sattler) ஆகியோருக்கு ஓர் அழைப்பு வருகிறது. அவ்வழைப்பை விடுத்தவர், பன்னாட்டு மரபணுத் தொழில்நுட்ப நிறுவனமான இன்-ஜென்னின் (InGen) தோற்றுனரும் அதன் தலைமைச் செயல் அலுவலரும்(CEO) ஆன ஜான் ஹேமண்ட் (John Hammond) ஆவார். இவர், ஈஸ்லா நுப்லாரில் தாம் உருவாக்கியுள்ள உயிரியல் காப்பகத்தை ஒரு வார இறுதியில் வந்து பார்வையிடுமாறு மேற்கூறிய இருவரையும் அழைக்கிறார்.

அவ்வாறே ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கிரான்டும் சாட்லரும் அக் காப்பகமானது உண்மையில் ஜுராசிக் பார்க் எனப் பெயர்கொண்ட, அதிநவீன முறையில் படியெடுக்கப்பட்ட தொன்மாக்களைக் காட்சிப்படுத்தும் ஒரு கேளிக்கைப் பூங்கா என அறிகின்றனர். இனப்பெருக்கத்தைத் தடுப்பதற்காக அங்குள்ள விலங்குகள் அனைத்தும் லைசின்-குறைபாடுள்ள (lysine) பெண் விலங்குகளாக உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர்களுக்குக் கூறப்படுகிறது. மரபணுப் பொறியியல் துறையில் தன் நிறுவனத்தின் முன்னேற்றங்களைக் குறித்துப் பெருமையுடன் விரித்துரைக்கும் ஹேமண்ட், பார்வையாளர்கள் இருவரையும் அத் தீவின் பல்வேறு தானியங்கி அமைப்புகளூடே அழைத்துச் செல்கிறார்.

[அப் பூங்காவில் அண்மையில் நடந்த நிகழ்வுகள், ஹேமண்டின் முதலீட்டாளர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. அவர்களை அமைதிப்படுத்துவதற்காக கிரான்ட் மற்றும் சாட்லர் ஆகியோரைப் புதிய ஆலோசகர்களாகச் செயல்பட ஹேமண்ட் விரும்புகிறார்].

இவர்களுக்கு எதிர்த்தரப்பில் பிரபல கணித வல்லுநரும் ஒழுங்கின்மை கோட்பாட்டாளருமான இயான் மால்கம் (Dr.Ian Malcolm) மற்றும் முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் டொனால்ட் ஜென்னாரோ (Donald Gennaro) ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பூங்காவின் வாய்ப்புகள் பற்றிய அவநம்பிக்கை இருக்கிறது. இப்பூங்காவின் உருவாக்கத்திற்கு முன்னரே கலந்தாலோசிக்கப்பட்டிருந்த மால்கம், இப்பூங்கா விரைவில் அழிந்துவிடும் என்று தற்போது உறுதிபடக் கணிக்கிறார். ஆயினும் இக் கணிப்பை ஹேமண்ட் மறுக்கிறார்.

பூங்காவில் நடக்கவிருந்த நிகழ்வுகளை உருவகப்படுத்துவதற்காக இயான் மால்கம் உருவாக்கிய டிராகன் வளைவு வரைபடம்.

பின்னர் இப் பூங்காவைப் பார்வையிட ஆலோசகர் குழுவினர் தயாராகும்பொழுது அவர்களோடு ஹேமண்டின் பேரக்குழந்தைகளான டிம் (Tim Murphy) மற்றும் லெக்ஸ் மர்பி (Lex Murphy) ஆகியோர் இணைந்துகொள்கின்றனர். இச் சுற்றுப்பயணத்தின்போது கிரான்ட் ஒரு வெலாசிராப்டர் முட்டை ஓட்டைக் கண்டெடுக்கிறார். இதனால் பூங்காவிலுள்ள தொன்மாக்கள் இனப்பெருக்கம் செய்யத்தொடங்கிவிட்டன என்ற மால்கம்-மின் கூற்று நிறுவப்படுகிறது.

இதற்கிடையில் ஒரு வெப்பமண்டலப் புயல், ஈஸ்லா நுப்லார் தீவைத் தாக்குகிறது. இப்புயலின்போது ஜுராசிக் பார்க்-கின் தலைமைக் கணிப்பொறி நிரலாளரான டென்னிஸ் நெட்ரி (Dennis Nedry) தொன்மாக்களின் முளையங்களை (Embryos) திருடி இன்-ஜென் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பயோசின்-னுக்கு (Biosyn) விற்கத் திட்டமிடுகிறார் (ஏற்கெனவே இதற்கான கையூட்டை பயோசின்-னின் முகவரான லூயி டாட்ஜ்சன்-னிடம் (Dr.Lewis Dodgson) இவர் பெற்றிருந்தார்).

இதற்காகப் பூங்காவின் பாதுகாப்பு அமைப்பைச் செயலிழக்க வைக்கும் நெட்ரி பின்பு முளையச் சேமிப்பு அறைக்குள் நுழைந்து பூங்காவிலுள்ள பதினைந்து வகைத் தொன்மாக்களின் முளையங்களையும் திருடுகிறார். பின்பு அவற்றைப் பூங்காவிலுள்ள ஒரு துணைக் கப்பல்துறையில் காத்துக்கொண்டிருக்கும் பயோசின் ஆட்களுக்குக் கொண்டுசெல்லும் வழியில் சிக்கிக்கொள்ளும் அவரை டைலோஃபோ சாரஸ் (Dilophosaurus) என்ற தொன்மா கொன்றுவிடுகிறது.

நெட்ரியின் திட்டத்தால் பூங்காவின் பெரும்பாலான பாதுகாப்பு வேலிகள் செயலிழக்கின்றன. தொன்மாக்களும் அவற்றின் இருப்பிடங்களிலிருந்து தப்பிவிடுகின்றன. ஆலோசகர் குழுவினரை டைரனோசாரஸ் என்ற தொன்மா தாக்குகிறது. இதன் விளைவாக கிரான்டும் இரு சிறார்களும் வழி தவறிவிடுகின்றனர். இத் தாக்குதலில் படுகாயமடையும் மால்கம்-ஐ ஜென்னாரோவும் பூங்காவின் காப்பாளர் இராபர்ட் முல்டூனும் (Robert Muldoon) மீட்கின்றனர். அவரைப் பூங்காவின் கால்நடை மருத்துவரான ஹார்டிங் (Dr.Harding) பார்த்துக்கொள்கிறார். எனினும் அவர் நிலை கவலைக்கிடமாகிறது.

பின்னர் பூங்காவின் தலைமைப் பொறியாளரும் மேற்பார்வையாளருமான ஜான் அர்னால்ட் (John Arnold), மரபணுப் பொறியாளர் ஹென்றி வூ (Henry Wu), முல்டூன், ஹேமண்ட் ஆகியோர் பூங்காவின் மின்சாரத் தொடர்பை உயிர்ப்பிக்கப் போராடுகின்றனர். இம்முயற்சி முதலில் பலனளித்தாலும் பின்பு மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இச்சமயத்தில் வெலாசிராப்டர்களும் அவற்றின் இருப்பிடங்களிலிருந்து தப்பிவந்து வூ, அர்னால்ட் இருவரையும் கொன்றுவிடுகின்றன.

இதற்கிடையில் கிரான்டும் இரு சிறார்களும் ஒரு காட்டாற்றின் வழியாக படகு சவாரி செய்து பூங்காவின் பார்வையாளர் மையத்தை வந்தடைகின்றனர். தற்போது அத் தீவிலிருந்து கோஸ்ட்டா ரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கும் ஒரு சரக்குக் கப்பலில் பல இளம் வெலாசிராப்டர்கள் பதுங்கியுள்ளதாக பூங்காவின் மேலாண்மைக் குழுவினரிடம் அவர்கள் கூறுகின்றனர். பின்பு கிரான்ட் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கிறார். இதனால் அக் கப்பலில் வெலாசிராப்டர்கள் பதுங்கியுள்ள செய்தி தக்க சமயத்தில் அதன் மாலுமிகளிடம் தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் அவ் விலங்குகளை உடனடியாகக் கொன்றுவிடுகின்றனர்.

ஜென்னாரோ அத் தீவை விரைவில் அழிக்கவேண்டும் என வலியுறுத்துகிறார். ஆனால் முதலில் முழு சூழ்நிலையையும் ஆய்வு செய்யவேண்டும் எனக் கூறும் கிரான்ட், அவரையும் சாட்லர், முல்டூன் ஆகியோரையும் அழைத்துக்கொண்டு பூங்காவுக்குள் செல்கிறார். வெலாசிராப்டர்களின் கூடுகளை அவர்கள் கண்டுபிடித்து, அங்கு பொறித்த முட்டைகளின் எண்ணிக்கையையும் பூங்காவின் திருத்தப்பட்ட கணக்கீட்டையும் ஒப்பிடுகின்றனர். பின்பு பார்வையாளர் மையத்துக்குத் திரும்புகின்றனர்.

இதற்கிடையில் பூங்காவுக்குள் நடைபயிலும் ஹேமண்ட், அவரது முந்தைய தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் ஒரு புதிய பூங்காவைக் கட்டமைப்பது குறித்து சிந்திக்கிறார். அப்போது திடீரென ஒரு டி ரெக்ஸின் முழக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்து ஒரு குன்றின் மீதிருந்து தவறி விழுகிறார். அங்கு கூட்டமாக வரும் ப்ரோ காம்ப்ஸோக்னாதஸ்கள் அவரைக் கொல்கின்றன.

தொன்மாக்களின் இனப்பெருக்கத்தைப் பொறுத்தவரையில், அவற்றின் மரபணு இடைவெளிகளை நிரப்புவதற்காகத் தவளைகளின் மரபணுக்கள் பயன்படுத்தபட்டதால் பெண் தொன்மாக்கள் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொண்டு இனப்பெருக்கம் செய்திருக்கின்றன எனத் தெரியவருகிறது.

விரைவில் ஈஸ்லா நுப்லாருக்கு வரும் கோஸ்ட்டா ரிக்கா நாட்டு வானூர்திப் படையினர் (கற்பனை) அவ்விடத்தை அபாயகரமானதாக அறிவிக்கின்றனர். அத்துடன் நாபாம் (napalm) கொண்டு அதை அழித்தும் விடுகின்றனர். நடந்த சம்பவங்களில் உயிர்பிழைத்தவர்கள் (கிரான்ட் முதலானோர்) காலவரையின்றி ஐக்கிய அமெரிக்கா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் அரசுகளால் ஒரு விடுதியில் தடுத்துவைக்கப்படுகின்றனர்.

சில வாரங்கள் கடந்தபின், கோஸ்ட்டா ரிக்கா வாழ் அமெரிக்க மருத்துவரான டாக்டர் மார்ட்டின் குய்டியெர்ரேஸ் (Dr. Martin Guitierrez) என்பவர் அவ்விடுதிக்கு வந்து கிரான்டைச் சந்திக்கிறார்.

கிரான்டிடம் அவர், சில மர்ம விலங்குகள் கூட்டமாக கோஸ்ட்டா ரிக்கா காடுகளின் வழியாக இடப்பெயர்ச்சி செய்வதாகவும் லைசின் நிறைந்த பயிர்கள் மற்றும் கோழிகளை உண்பதாகவும் கூறுகிறார். மேலும் அவர், உயிர்பிழைத்தவர்களில் யாரும் (டிம் மற்றும் லெக்ஸ் நீங்கலாக) அவ்வளவு விரைவில் அவ்விடுதியை விட்டு வெளியேறப்போவதில்லை என கிரான்டிடம் கூறி விடைபெற்றுச் செல்கிறார்.

புதினத்தில் இடம்பெறும் தொல் பழங்கால விலங்குகள்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஜுராசிக் பார்க்கில் இடம்பெறும் படியெடுக்கப்பட்ட விலங்குகளின் பட்டியல்

எண் விலங்கு ஆங்கிலப் பெயர் குறிப்பு
1 அபடோசாரஸ் Apatosaurus புதினத்தின் சில பதிப்புகள் இதற்கு மாற்றாக கேமராசாரஸ் (Camarasaurus) என்ற தொன்மாவைக் குறிப்பிடுகின்றன
2 ஸியராடேக்டைலஸ் Cearadactylus
3 கோயலூரோசாரஸ் Coelurosaurus மரபணு பிரித்தெடுத்தலை எதிர்நோக்கியிருக்கும் ஒரு "கோயலூரோசாரஸ்" என இது ஊகிக்கப்படுகிறது
4 டெய்னானிக்கஸ் Deinonychus இவை,வெலாசிராப்டர் ஆன்டிரோஃபஸ் (Velociraptor antirrhopus) எனக் குறிப்பிடப்பட்டுள்ளன
5 டைலோஃபோ சாரஸ் Dilophosaurus
6 டிரையோசாரஸ் Dryosaurus இவை "ஹிப்சிலோஃபோடான்ட்டுகள்" அல்லது "ஹிப்சிலோஃபோடான்ட்டிட்" டுகள் என முதலில் குறிப்பிடப்பட்டாலும் தி பார்க் ("The Park") என்ற அத்தியாயத்தில் டிரையோசாரஸ் என அடையாளம் காணபடுகின்றன
7 யுவோப்லசெப்பலஸ் Euoplocephalus
8 ஹாட்ரோசாரஸ் Hadrosaurus
9 மையாசாரா Maiasaura
10 மெகாநியூரா Meganeura இவை, பெரியவகைத் தட்டாரப்பூச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளன
11 மைக்ரோசெராட்டஸ் Microceratops புதினத்தின் சில பதிப்புகள் இதற்கு மாற்றாக கேலாவோ சாரஸ் (Callovosaurus) என்ற தொன்மாவைக் குறிப்பிடுகின்றன
12 ஒத்னியேலியா Othnielia
13 ப்ரோ காம்ப்ஸோக்னாதஸ் Procompsognathus
14 ஸ்டெகோசாரஸ் Stegosaurus
15 ஸ்டைரகோசாரஸ் Styracosaurus
16 டிரை செராடாப்ஸ் Triceratops
17 டைரனோசாரஸ் Tyrannosaurus
18 வெலாசிராப்டர் Velociraptor

வரவேற்பு[தொகு]

இப்புதினம் வெளியானபின் அதிக அளவில் விற்பனையானது. கிரைட்டனின் ஆகச்சிறந்த புதினமாகவும் ஆனது.விமர்சகர்கள் இதற்குப் பெருமளவில் நேர்மறையான விமர்சனங்களை அளித்தனர்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு விமர்சனத்தில், எழுத்தாளர் கிறிஸ்டோபர் லேமன்-ஹாப்ட் ( Christopher Lehmann-Haupt) இவ்வாறு குறிப்பிட்டார்: (இப்புதினம்) [பிராங்கென்ஸ்டைன்] தொன்மத்தின் மேம்பட்ட மாதிரி... தற்போது வரை திரு.கிரைட்டன் எழுதிய புதினங்களுள் மிகச்சிறந்தது.[9]

கட்டுரையாளர் ஜீன் லியோன்ஸ் ( Gene Lyons) எண்டர்டெயின்மெண்ட் வீக்லி வார இதழுக்கு அளித்த விமர்சனத்தில் அறிவார்ந்த பொழுதுபோக்கு நிறைந்த, தோற்கடிக்க முடியாத நூல்... பொழுது போக்குவிக்கும் புதுமைச் செய்திகளை எளிதாகச் செரிக்கும் வகையில் வழங்குகிறது என்பதாகக் குறிப்பிட்டார்.[10]

ஆயினும் லியோன்ஸின் இந்த விமர்சனமும், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு எழுத்தாளர் ஆண்ட்ரூ ஃபெர்குஸன் ( Andrew Ferguson) அளித்த விமர்சனமும் கிரைட்டனின் பண்புரு வருணனை (characterization) பாணியை உணர்ச்சியும் சுயமானத்தன்மையும் அற்றது என விமர்சித்தன. ஃபெர்குஸன் மேலும் கூறுகையில் இப்புதினத்தில் தோன்றும் கதாபாத்திரமான மால்கம்-மின் மலிவான தத்துவப்படுத்தலைக் குறைகூறினார். இந்நூலைத் திரைப்படமாக்கினால் ஐயத்திற்கு இடமின்றி அது மோசமான தரம் கொண்டதாகத்தான் இருக்கும் என்று அவர் கணித்தார். எனினும் தொன்மாக்கள், மரபணு ஆய்வு, தொல்லுயிரியல் மற்றும் ஒழுங்கின்மை கோட்பாடு குறித்த, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விவாதங்கள்தான் இந்நூலின் (ஒரே) உண்மையான மதிப்பு என அவர் ஒப்புக்கொண்டார்..[11]

இப்புதினம் திரைப்படமாக்கப்பட்டபோது மேலும் பிரபலமடைந்தது. அத்திரைப்படம் நூறு கோடி டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியது. பல தொடர்ச்சிகளும் வெளிவந்தன.[12]

1996-ஆம் ஆண்டில் இப்புதினம், இரண்டாம் நிலை BILBY விருது பெற்றது.[13]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Copyright information for Jurassic Park". United States Copyright Office. பார்த்த நாள் June 15, 2016.
 2. Crichton, Michael (1997). Michael Crichton's Jurassic World. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0375401077. 
 3. "Michael Crichton's Jurassic world (information)". அமெரிக்கக் காங்கிரசு நூலகம். பார்த்த நாள் 2015-01-28.
 4. "Michael Crichton's Jurassic World: Jurassic Park, The Lost World". Barnes & Noble. பார்த்த நாள் 2015-01-28.
 5. Crichton, Michael (2001). Michael Crichton on the Jurassic Park Phenomenon (DVD). Universal.
 6. "Return to Jurassic Park: Dawn of a New Era", Jurassic Park Blu-ray (2011)
 7. Michael Crichton's notes on Jurassic Park
 8. ஸ்பானிய மொழியில் தோராயமான பொருள்: "முகில் சூழ்ந்த தீவு" அல்லது "தெளிவற்ற தீவு" ".
 9. Lehmann-Haupt, Christopher (November 15, 1990). "Books of The Times; Of Dinosaurs Returned And Fractals Fractured". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/1990/11/15/books/books-of-the-times-of-dinosaurs-returned-and-fractals-fractured.html. பார்த்த நாள்: 27 September 2015. 
 10. Lyons, Gene (November 16, 1990). "Jurassic Park". Entertainment Weekly. http://www.ew.com/article/1990/11/16/jurassic-park. பார்த்த நாள்: 27 September 2015. 
 11. Ferguson, Andrew (November 11, 1990). "The Thing From the Tar Pits : JURASSIC PARK By Michael Crichton (Alfred A. Knopf: $19.95; 413 pp.)". Los Angeles Times. http://articles.latimes.com/1990-11-11/books/bk-5972_1_jurassic-park. பார்த்த நாள்: 27 September 2015. 
 12. Jurassic Park (1993). Box Office Mojo (1993-09-24). Retrieved on 2013-09-17.
 13. "Previous Winners of the BILBY Awards: 1990 – 96". The Children's Book Council of Australia Queensland Branch.

கூடுதல் வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]