வளர்சிதைமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனுவெறிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Structure of the coenzyme adenosine triphosphate, a central intermediate in energy metabolism.

வளர்சிதைமாற்றம் (Metabolism) என்பது உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், தமது உடலமைப்பைப் பராமரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதைமாற்றம் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, சிதைமாற்றம் (catabolism), வளர்மாற்றம் (anabolism) என்பனவாகும். சிதைமாற்றம் பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றது. வளர்மாற்றம் சத்தியைப் பயன்படுத்தி புரதம், நியூக்கிளிக் அமிலம் போன்ற கலத்தின் கூறுகளை உருவாக்குகின்றது.

வளர்சிதைமாற்றத்தின் வேதிவினைகள் வளர்சிதைமாற்றச் செல்வழிகளாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு வேதிப்பொருள் இன்னொன்றாக மாறுவது ஒரு தொகுதி நொதியங்களின் மூலம் நடைபெறுகின்றது. வளர்சிதைமாற்றத்துக்கு நொதியங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். ஏனெனில், இவையே விரும்பத்தக்க, ஆனால் வெப்ப இயக்கவியல் அடிப்படையில் சாதகமற்ற வேதிவினைகளை இணைத்தல் முறை மூலம் சாதகமானவையாக்கி உயிரினங்களில் அவை நிகழ உதவுகின்றன. நொதியங்கள், கலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு அல்லது பிற கலங்களில் இருந்து வரும் சைகைகளுக்கு அமைய, வளர்சிதைமாற்றச் செல்வழிகளை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.

ஒரு உயிரினத்தில் நிகழும் வளர்சிதைமாற்றங்களே எப்பொருள் அவ்வுயிரினத்துக்கு ஊட்டம் தருவது எது நஞ்சாக அமைவது என்பதையும் தீர்மானிக்கிறது. எடுத்துக்காட்டாக, சில நிலைக்கருவிலிகள் ஐதரசன் சல்பைடை ஊட்டச்சத்தாகப் பயன்படுத்துகின்றன, ஆனால் இவ் வளிமம் விலங்குகளுக்கு நஞ்சாகும். வளர்சிதைமாற்றத்தின் வேகம், அதன் வேகவீதம் என்பனவும் ஒரு உயிரினத்துக்கு எவ்வளவு உணவு தேவை என்பதைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.

அடிப்படையான வளர்சிதைமாற்றச் செல்வழிகள் மிகவும் வேறுபட்ட இனங்களிலும் ஒரேமாதிரியாக அமைந்திருப்பது, வளர்சிதைமாற்றம் தொடர்பான குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் ஆகும். சித்திரிக் அமில வட்டத்தில் இடைநிலைப் பொருளான காபொக்சிலிக் அமிலம், ஒருகலப் பாக்டீரியாவான எஸ்செரீக்கியா கோலை (Escherichia coli) என்பதிலும், பெரிய பல்கல விலங்கான யானையிலும் இருப்பது இதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். வளர்சிதைமாற்றத்தில் உள்ள இவ்வாறான ஒப்புமைகள் இச் செல்வழிகளின் உயர்ந்த செயல்திறன் காரணமாகவும், இவை உயிரினப் படிமலர்ச்சி (கூர்ப்பு) வரலாற்றின் தொடக்க காலத்திலேயே உருவானதன் காரணமாகவும் இருக்கலாம்.

முக்கிய உயிர்வேதிப் பொருட்கள்[தொகு]

டிரைசைல்கிளிசரோல் கொழுப்பின் அமைப்பு.

விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் போன்ற உயிரினங்களின் பெரும்பாலான அமைப்புக்களுக்கு அடிப்படையான மூலக்கூற்று வகைகள் அமினோ அமிலங்கள், காபோவைதரேட்டுக்கள் (மாப்பொருள்), லிப்பிட்கள் (கொழுப்பு) என்பனவாகும். இம் மூலக்கூறுகள் உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதன ஆதலால், உணவுச் சமிபாட்டின்போது, கலங்களையும் இழையங்களையும் உருவாக்குதல், இம் மூலக்கூறுகளை உடைத்து ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் வளர்சிதைமாற்றத்தின்போது நடைபெறுகின்றது. பல முக்கியமான உயிர்வேதிப் பொருட்களை இணைத்து டி.என்.ஏ, புரதங்கள் போன்ற பல்படிச் சேர்வைகளை (பல்பகுதியம்) உருவாக்க முடியும். இத்தகைய பெருமூலக்கூறுகள் எல்லா உயிரினங்களினதும் முக்கியமான கூறாக அமைகின்றன. சில மிகப் பொதுவான உயிரியல் பல்படிச் சேர்வைகள் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

மூலக்கூற்று வகை ஒருபடி வடிவப் பெயர் பல்படி வடிவப் பெயர் பல்படி வடிவ எ.கா.
அமினோ அமிலங்கள் அமினோ அமிலங்கள் புரதங்கள் (பல்பெப்டைட்டுகள் எனவும் அழைக்கப்படும்) நார்ப் புரதங்களும், கோளப் புரதங்களும்
காபோவைதரேட்டுக்கள் ஒற்றைச்சர்க்கரைகள் கூட்டுச்சர்க்கரைகள் மாப்பொருள், கிளைக்கோசன், செலுலோசும்
நியூக்கிளிக் அமிலங்கள் நியூகிளியோட்டைடுகள் பல்நியூகிளியோட்டைடுகள் டி.என்.ஏயும், ஆர்.என்.ஏயும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்சிதைமாற்றம்&oldid=2169052" இருந்து மீள்விக்கப்பட்டது