டிரைகிளிசரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறைவுறாக் கொழுப்பு டிரைகிளிசரைடிற்கு ஒரு உதாரணம். இடப்பகுதி: கிளிசரால், வலப்பகுதி மேலிருந்து கீழாக: பால்மிடிக் அமிலம், ஒலெயிக் அமிலம், ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம், வேதி வாய்பாடு: C55H98O6

டிரைகிளிசரைடு (triglyceride) [TG; டிரையசைல்கிளிசரால்; TAG; டிரையசைல்கிளிசரைடு) எனப்படும் மணமியம் கிளிசரால் மற்றும் மூன்று கொழுப்பு அமிலங்களிலிருந்து வருவிக்கப்பட்டதாகும்[1]. பல்வேறு டிரைகிளிசரைடுகள் எண்ணெய் மூலத்தைப் பொருத்து நிறைவுறாக் கொழுப்பாகவோ அல்லது நிறைவுற்ற கொழுப்பாகவோ உள்ளன. நிறைவுறாக் கொழுப்புகள் குறைந்த உருகுநிலையைக் கொண்டவை. எனவே, திரவங்களாகக் காணப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்புகள் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டவை. எனவே, திண்மங்களாகக் காணப்படுகின்றன. டிரைகிளிசரைடுகள், தாவர எண்ணெய்களிலும் (பொதுவாக அதிக அளவு நிறைவுறாக் கொழுப்புகளைக் கொண்டவை), விலங்கு கொழுப்புகளிலும் (பொதுவாக அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டவை) முக்கிய கூறுகளாக உள்ளன[2]. மனிதர்களில் உபயோகப்படுத்தாத கலோரிகளைச் சேமிக்கும் வழிமுறையாக டிரைகிளிசரைடுகள் பயன்படுகின்றன. இரத்தத்தில் இவை அதிக அளவு இருப்பது மாவுசத்து மற்றும் கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளுவதுடன் நேரடியாகத் தொடர்புடையதாகும்.

வேதி வடிவம்[தொகு]

கிளிசரால், மூன்று கொழுப்பு அமிலங்களுடன் இணைவதால் டிரைகிளிசரைடு உருவாகிறது. மதுவில் (ஆல்கஹால்) ஐட்ராக்சில் (HO-) தொகுதி உள்ளது. இதைப்போல கரிம அமிலங்களில் கார்பாக்சில் (-COOH) தொகுதி உள்ளது. ஆல்கஹாலும், கரிம அமிலங்களும் இணைந்து மணமியங்களை உருவாக்குகின்றன. கிளிசரால் மூலக்கூறில் மூன்று ஐட்ராக்சில் (HO-) தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு கொழுப்பு அமிலமும் கார்பாக்சில் (-COOH) தொகுதியைக் கொண்டுள்ளன. டிரைகிளிசரைடுகளில், கிளிசராலின் ஐட்ராக்சில் தொகுதிகளுடன் கொழுப்பு அமிலங்களின் கார்பாக்சில் தொகுதிகள் இணைந்து மணமியப் பிணைப்புகளை உருவாக்குகின்றன:

HOCH2CH(OH)CH2OH + RCO2H + R'CO2H + R''CO2H → RCO2CH2CH(O2CR')CR'' + 3H2O

மேற்கண்ட சமன்பாட்டில் உள்ள மூன்று கொழுப்பு அமிலங்கள் (RCO2H, R'CO2H, R''CO2H) சாதாரணமாக வெவ்வேறாக இருக்கும்.

நோய்களில் பங்கு[தொகு]

நம் உடலில் அதிக அளவு டிரைகிளிசரைடுகள் இரத்த ஓட்டத்தில் இருப்பது தமனித் தடிப்பினை உண்டாக்கவும், இதன் விளைவாக இதயத்தமனி நோய்க்கும், வாதத்திற்கும் அடிகோலுகின்றன.

வரையறைகள்[தொகு]

இரத்த சோதனைகளில் ஆதார வீச்சுகள், வலது பக்கம் இளம்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் வழக்கமாக வயது அதிகரிப்பதால் உயரும் டிரைகிளிசரைடு அளவு வீச்சுகள் காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்க இதயக்கழகம் கீழ்காணும் டிரைகிளிசரைடு அளவுகளை வரையறுத்துள்ளது:[3]

அளவு மிகி/டெ.லி. அளவு மி.மோல்/லி பொருள் விளக்கம்
<150 <1.70 சாதாரண வீச்சு, குறைந்த இடர்
150-199 1.70-2.25 சாதாரண அளவினைவிட சிறிது அதிகம்
200-499 2.26-5.65 உயரளவு, இடர்
>500 >5.65 மிகு உயரளவு, அதிக இடர்

இந்த அளவுகள் எட்டிலிருந்து பன்னிரெண்டு மணித்தியாலங்கள் உண்ணாநிலைக்குப் பிறகு கணக்கிடப்பட்டவை. சாப்பிட்ட பிறகு தற்காலிகமாக டிரைகிளிசரைடு அளவுகள் சிலகாலம் அதிகமாகக் காணப்படும்.

டிரைகிளிசரைடு அளவுகளைக் குறைத்தல்[தொகு]

அதிக அளவு மாவுப் பொருள்களைக்கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போதும், மொத்த சக்தி கொள்ளவுகளில் அறுபது சதவிகிதத்திற்கும் மேல் மாவுப் பொருள்களின் பங்கு இருக்கும்போதும் டிரைகிளிசரைடு அளவுகள் அதிகரிக்கின்றன[3]. பரும எண் (BMI; 28+) இருபத்தியெட்டிற்கும் அதிகமாக உள்ளவர்களில், டிரைகிளிசரைடு அளவுகளுக்கும் இன்சுலின் எதிர்பிற்கும் உள்ள வலுவான தொடர்பானது (எடை கூடுதலாக உள்ளவர்களிலும், பருமனாக உள்ளவர்களிலும் பொதுவாகக் காணப்படுவது) மாவுப்பொருள்களால் தூண்டப்படும் உயர்இரத்த டிரைகிளிசரைடு அளவுகளுக்கு முதன்மை காரணியாக உள்ளதாகக் கருதப்படுகின்றது[4].

அதிக அளவு மாவுப்பொருள்களை சாப்பிடுவது சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினை அதிகரிக்கிறது. இந்நிலையானது, பெண்களின் அதிக இன்சுலின் உற்பத்திக்கும், டிரைகிளிசரைடு அளவுகள் அதிகமாவதற்கும் காரணமாகிறது[5].

அதிக அளவு மாவுப்பொருள்களை சாப்பிடுவதால் ஏற்படும் (டிரைகிளிசரைடு அளவுகள் அதிகமாவதையும் சேர்த்து) பாதகமான மாற்றங்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இதயநோய் வருவதற்கான உறுதியான இடர்காரணிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது[6].

உடற்பயிற்சியின் மூலமாகவும், மீன், ஆளிவிதை எண்ணெய் மற்றும் பிற மூலங்களிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதன் மூலமாகவும் டிரைகிளிசரைடு அளவுகளைக் குறைக்கலாம்.

கார்னிதின் இரத்த டிரைகிளிசரைடு அளவுகளைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டது[7]. சில தருணங்களில் நீர்-கொழுப்பு நாட்டமுள்ள ஃபைப்ரேட்டுக்களைப் பயன்படுத்தி டிரைகிளிசரைடு அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டுள்ளன[8]. அதிக அளவு மது அருந்துவது டிரைகிளிசரைடு அளவுகளை அதிகரிக்கச் செய்யும்[9].

தொழிலகங்களில் பயன்பாடுகள்[தொகு]

எண்ணெய் வண்ணம் (குழைவனம்) மற்றும் பூச்சுக்களில் ஆளிவிதையும், அதன் தொடர்புடைய எண்ணெய்களும் முக்கிய பாகங்களாக உள்ளன. ஆளிவிதை எண்ணெயில் இரண்டு மற்றும் மூன்று நிறைவுறாக் கொழுப்பு அமிலப் பகுதிகள் செறிவாக உள்ளதால் உயிர்வளி முன்னிலையில் இது எளிதாகக் கடினப்பட்டு விடுகின்றது. இங்ஙனம் கெட்டிப்படும் தன்மையானது இவ்வித உலர் எண்ணெய்களின் ஒரு தனிப்பட்ட பண்பாகும். இது, உயிர்வளியானது கார்பன் அடித்தளத்தைத் தாக்கும்போது தொடங்கும் பல்படியாக்க முறையினால் விளைகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

கொழுமியம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nomenclature of Lipids". IUPAC-IUB Commission on Biochemical Nomenclature (CBN). பார்க்கப்பட்ட நாள் 2007-03-08.
  2. Nelson, D. L.; Cox, M. M. "Lehninger, Principles of Biochemistry" 3rd Ed. Worth Publishing: New York, 2000. ISBN 1-57259-153-6.
  3. 3.0 3.1 "Your Triglyceride Level". What Your Cholesterol Levels Mean. American Heart Association. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  4. Parks, E.J. (2002). "Dietary carbohydrate’s effects on lipogenesis and the relationship of lipogenesis to blood insulin and glucose concentrations". British Journal of Nutrition 87: S247–S253. doi:10.1079/BJN/2002544. பப்மெட்:12088525. 
  5. "Focusing on Fiber?". Drweil.com. Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  6. "Dietary Glycemic Load and Index and Risk of Coronary Heart Disease in a Large Italian Cohort". Archives of internal medicine. பார்க்கப்பட்ட நாள் 2012-02-11.
  7. Balch, Phyllis A. Prescription for nutritional healing. 4th ed. New York: Avery, 2006. p. 54 Carnitine
  8. "Fibrates: Where Are We Now?: Fibrates and Triglycerides". Medscape.com. பார்க்கப்பட்ட நாள் 2010-08-02.
  9. Hemat, R A S (2003). Principles of Orthomolecularism. Urotext. பக். 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1903737060. http://books.google.com/?id=ED_xI-CEzFYC&pg=PA254&lpg=PA254&dq=alcohol+consumption+can+elevate+triglyceride+levels. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைகிளிசரைடு&oldid=3556674" இலிருந்து மீள்விக்கப்பட்டது