கிளைக்கோசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கிளைக்கோசன் மூலக்கூற்றின் கட்டமைப்பு. இதில் கிட்டத்தட்ட 30000 குளுக்கோசு அலகுகள் உள்ளன. இதன் நடுவில் ஒரு கிளைக்கோ-புரத மூலக்கூறொன்று உள்ளது.
ஒரு கிளைக்கோசன் மூலக்கூற்றின் கிளைவிடுதல்

கிளைக்கோசன்(Glycogen) என்பது ஒரு படித்தான பாலி சாக்கரைடு ஆகும். ஏனெனில் இது நீராற் பகுக்கப்படும்போது குளுக்கோசு அலகுகளை மட்டும் கொடுக்கிறது இது விலங்குகளிலும் பங்கசுக்களிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள காபோவைதரேட்டு ஆகும். கிளைகோசன் அனைத்து எலும்புத்தசை உயிரனுக்களிலும் (செல்களிலும்) கல்லீரலிலும் காணப்படுகிறது. இது நுங்குகளின் (சைட்டோபிளாஸ்மிக்) துகள்களாகக் காணப்படுகிறது. கிளைகோசன் என்பது பல கிளை வடிவ அமைப்பைக் கொண்டு, ஒவ்வொரு கிளைகளும் எட்டு முதல் பன்னிரெண்டு குளுக்கோசு மூலக்கூறுகளுக்கிடையே ஏற்படுகிறது. பசித்திருக்கும்போது கிளைகோசன் சேமிப்புத் திசுவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு கிளைகோஜன் பாசுபாரிலேசு என்ற நொதியால் குளுகோசாக மாற்றப்படுகிறது. சில வேளைகளில், நமது உடலக உயிரணுக்களுக்கு குளுக்கோசு கிடைக்காத நிலையில், கொழுப்பு பொருள்கள் ஆற்றலாக மாற்றப்படும். இம்மாற்ற நிகழ்வுக்கு புதிய குளுக்கோசு உற்பத்தி (Glconeogeneisis) எனப்படும்.இவ்வாறு குளுக்கோசு ஆக்சிசனேற்றமடைந்து ஆற்றலைத் தருகிறது. குளுக்கோசிலிருந்து கிளைகோஜன் உருவாதல் கிளைக்கோசன் ஆக்கம் என அழைக்கப்படுகிறது. கிளைக்கோசன் பிளவடைந்து குளுக்கோசாக மாறுவது கிளைக்கோசன் பகுப்பு என அழைக்கப்படுகிறது.[1][2][3]

விலங்குகளிலுள்ள கிளைக்கோசன் தாவரங்களில் சேமிப்புணவாகக் காணப்படும் மாப்பொருள் போன்றதாகும். எனினும் மாப்பொருளை விட இதன் மூலக்கூற்றுக் கட்டமைப்பு அதிகமாகக் கிளைத்திருப்பதுடன் சிறிய இடத்தையே பிடிக்கும். கிளைக்கோசன் உடனடியாகத் தேவைப்படும் குளுக்கோசுக்கான கேள்வியை ஈடு செய்ய பயன்படுத்தப்படுன்றது. எனினும் கொழுப்பே மனிதனில் பிரதான சக்தி சேமிக்கும் பொருளாகும்.

ஒரு சாதாரண உணவின் பின்னர் கிளைக்கோசன் ஈரலின் 8% (100–120 g) திணிவைப் பிடித்திருக்கும். ஈரலில் சேமிக்கப்பட்டிருக்கும் கிளைக்கோசனே ஏனைய உடலுறுப்புகளின் குளுக்கோசுத் தேவையை நிறைவு செய்ய பயன்படுகின்றது. ஈரலிலுள்ள கிளைக்கோசன் கிளைக்கோசுப் பகுப்புக்கு உட்பட்டு குளுக்கோசாக இரத்தத்தில் கலக்க்ப்படும். உடலின் ஏனைய உறுப்புகளான வன்கூட்டுத் தசைகளிலும், சிறுநீரகத்திலும், இரத்தச் சிவப்பணுக்களிலும், மூளையிலும் இது சேமிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு[தொகு]

ஒரு விந்துக் கலத்தில் காணப்படும் கிளைக்கோசன் துணிக்கைகள்
கிளைக்கோசனின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு

கிளைக்கோசனானது குளுக்கோசு அலகுகளாலான ஒரு பல்பகுதியம் ஆகும். கிளைக்கோசனில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளை மூலக்கூறுகள் இணைக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு குளுக்கோசு மூலக்கூறின் மத்தியில் ஒரு கிளைக்கோ-புரதமும் காணப்படும்.

உடலியல் செயற்பாட்டில் பயன்பாடு[தொகு]

ஈரல்[தொகு]

காபோவைதரேட்டுள்ள உணவினை உண்ட பின்னர் அது சமிபாடடைந்து, குளுக்கோசு குருதியால் உறிஞ்சப்பட்டு குருதியின் குளுக்கோசுச் செறிவு அதிகரிக்கும். அதிக குளுக்கோசுச் செறிவால் சதையியால் இன்சுலின் சுரக்கப்படும். இன்சுலின் ஈரல்க் கலங்களை கிளைக்கோசனைத் தொகுக்கத் தூண்டும். இவ்வாறு ஈரலில் குளுக்கோசு இன்சுலினின் தூண்டுதலால் அதிக கிளைக்கோசனைத் தொகுத்து சேமிக்கின்றது.

உணவு உட்கொண்ட பின்னர் சிறிது சிறிதாக குருதியில் குளுக்கோசுச் செறிவு குறைவடையும். எனவே உடலின் சக்தித் தேவையை நிறைவேற்ற ஈரலில் சேமிக்கப்பட்டுள்ள கிளைக்கோசன் சதையியால் சுரக்கப்படும் குளுக்காகொன் ஓமோனின் தூண்டுதலில் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது.

தசைகள்[தொகு]

தசைகளில் உடனடிச் சக்தித் தேவையை நிறைவேற்ற கிளைக்கோசன் சிறிதளவு சேமிக்கப்படுகின்றது. கிளைக்கோசனை மீண்டும் குளுக்கோசாக மாற்றும் குளுக்கோசு-6-பொஸ்படேசு தசைகளில் இல்லாமையால், தசைகளில் சேமிக்கப்படும் கிளைக்கோசன் முழுமையாக தசைகளின் தேவையை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோசன்&oldid=3894133" இலிருந்து மீள்விக்கப்பட்டது