உள்ளடக்கத்துக்குச் செல்

அட்டமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டமித் திதியைக் குறிக்கும் கோணம் செம்மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

அட்டமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் எட்டாவது திதி அட்டமி ஆகும். அஷ்ட எனும் வடமொழிச் சொல் எட்டு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் எட்டாவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் எட்டாம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் எட்டாம் நாளுமாக இரண்டு முறை அட்டமித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும் அட்டமியைச் சுக்கில பட்ச அட்டமி என்றும், பூரணையை அடுத்த அட்டமியைக் கிருட்ண பட்ச அட்டமி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்

[தொகு]

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது. அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.[1] அட்டமித் திதி எட்டாவது திதியும் 23 ஆவது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 84 பாகையில் இருந்து 96 பாகை ஆகும் வரை உள்ள காலம் சுக்கில பட்ச அட்டமித் திதியும், 264 பாகையிலிருந்து 276பாகை வரை செல்வதற்கான காலம் கிருட்ண பட்ச அட்டமியும் ஆகும்.

இந்து சமயச் சிறப்பு நாட்கள்

[தொகு]

பொதுவாக அட்டமி, நவமியில் எக்காரியத்தைச் செய்தாலும் அது துலங்காது என்பது நம்பிக்கை. ஆனால் தீயவர்கள் செய்தால் தான் துலங்காது என்றும் சொல்லப்படுகிறது.[2]

இந்து சமயத்தினர்க்கு உரிய சிறப்பு நாட்கள் பல திதிகளை அடிப்படையாகக் கொண்டே வருகின்றன. அட்டமித் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

  • திருமாலின் அவதாரமான கண்ணன் அட்டமி நாளில் அவதரித்ததால் இந்நாள் ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
  • சிவனுக்குரிய அட்டமி விரதம் - வைகாசி வளர்பிறை அட்டமி.[3]
  • கேதார கௌரி விரதம் தொடக்கம் - புரட்டாதி வளர்பிறை அட்டமி.[4]

நீலகண்டாஷ்டமி நீலகண்டாஷ்டமி என்பது ஆடி மாதத்தில் தேய்பிறையில் வருகின்ற அஷ்டமியாகும். இந்த நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வர். இந்த நாளில் அவரவர் விருப்ப தெய்வத்தினையும் அர்ச்சித்து வணங்கலாம்.

காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sharma, P.D., 2004. பக். 22.
  2. எம்.எஸ். சுப்பிரமணியம் (July 1, 2010). "அஷ்டமி, நவமியில் யாருக்கு தொட்டது துலங்காது?". நக்கீரன். பார்க்கப்பட்ட நாள் June 4, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. சிவனுக்கு உகந்த விரதங்கள் பரணிடப்பட்டது 2014-01-05 at the வந்தவழி இயந்திரம் - மாலைமலர்.காம்.
  4. சிவனுக்கு உகந்த விரதங்கள் பரணிடப்பட்டது 2014-01-05 at the வந்தவழி இயந்திரம் - மாலைமலர்.காம்.

உசாத்துணை

[தொகு]
  • இந்து மக்களுக்கு ஒரு கையேடு, அகில இலங்கை இந்து மாமன்றம், 2006.
  • திரவியம், மு., இந்துசமயக் களஞ்சியம், திருமகள் நிலையம், 1995.
  • Balachandra Rao, S., Indian Astronomy: An Introduction, University Press (India) Private Limited, 2002.
  • Sharma, P. D., Hindu Astronomy, Global Vision Publishing House, 2004.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டமி&oldid=3838690" இலிருந்து மீள்விக்கப்பட்டது