தூமாவதி
தூமாவதி | |
---|---|
தூமாவதியின் இருபதாம் நூற்றாண்டு இராசபுத்திர ஓவியம் ஒன்று. | |
வகை | பார்வதி, மகாவித்யா |
இடம் | சுடுகாடு |
மந்திரம் | தூம் தூம் தூமாவதி ஸ்வாஹா |
துணை | சிவன் |
தூமாவதி என்பவள் பத்து மகாவித்யாக்களில் ஒருத்தி ஆவாள். "புகைத்தேவதை" எனப்பொருள் படும் பெயர்கொண்ட இவள், அன்னைத் தெய்வத்தின் குரூரமான வடிவங்களில் ஒன்றைத் தாங்கியவள். அசிங்கமான- வயதான விதவையாக இவள் சித்தரிக்கப்படுகிறாள். அமங்கலகரமான சந்தர்ப்பங்கள், தீய சகுனங்களுக்குரிய பறவையான காகம், பீடமாதங்கள் முதலியவை இவளுக்குரியவையாகச் சொல்லப்படுகின்றன.
பெருவூழிக்குப் பின்னும், படைப்புக்கு முன்னும் விளங்கும் வெறுமையை தூமாவதி குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. தலைசிறந்த குருவாகவும், வரங்களை அள்ளித் தருபவளாகவும், தூமாவதியைச் சொல்வது வழக்கம்.
தோற்றம்
[தொகு]மகாவித்யாக்களுள் சேர்ப்பதற்கு முந்தைய, தூமாவதி பற்றிய பழைமையான குறிப்புக்களைக் காணமுடியவில்லை. வறுமை, விரக்தி, நம்பிக்கையின்மை என்பவற்றின் தேவதையான, இவளை, வேத காலத் தெய்வம் நிர்ரித்ரீயுடனும் அமங்கலத்தைக் குறிக்கும் அலட்சுமி, மூதேவி[1] போன்ற பழந்தெய்வங்களுடனும், இணைத்துப் பார்ப்பதுண்டு[2] அலட்சுமி, தூமாவதி இருவருமே, வயதனவர்களாக, காகத்தில் இவர்பவர்களாக, துடைப்பம் ஏந்தியவர்களாக சித்தரிக்கப்படுவது, இருவருக்குமிடையிலான முக்கியமான ஒற்றுமை ஆகும்.[1] தூமாவதி போல, அசிங்கம், கைம்மை, போர்க்குணம் முதலானவை, மூதேவி, அலட்சுமி, நிர்ரித்ரீ போன்றவர்களுக்கு கூறப்படாததால், அவர்களின் வழிபாடே, தூமாவதி வழிபாடாக வளர்ச்சி கண்டது என்று உறுதியாகக் கூறமுடியாது என்போரும் உண்டு..[1]
வரலாறு
[தொகு]தேவி பாகவத புராணத்தில், சாகம்பரி தேவியின் யுத்தத்தில் உதவியவர்களில் ஒருத்தியாக தூமாவதியைக் குறிப்பிடுகின்றது.[3] "சக்திசங்கம தந்திரம்" நூல், தாட்சாயிணி தக்கன் வேள்விக்குண்டத்தில் பாய்ந்து உயிர்நீத்த பின், அவளது எரியும் சடலத்தின் புகையிலிருந்து கருநிறத்துடன் இவள் உதித்தாகச் சொல்கின்றது.[4] அடங்காப்பசியுடன் தன் கணவன் சிவனையே தின்று, அவள் விதவையானதாக "பிராணதோஷினி தந்திரத்தில்", ஒரு கதை உண்டு.[4] இன்னொரு வரலாற்றில், சும்ப நிசும்பரை அழித்த போது, துர்க்கையின் படையில் தோன்றி, புகை மூலம் தூமாவதி, அசுரர்களை மயக்கி அழித்ததாகச் சொல்லப்படுகின்றது.[5]
உருவவியலும் வர்ணனைகளும்
[தொகு]தூமாவதி தந்திரமானது, அன்னை தூமாவதியை, வயதான அசிங்கமான கைம்பெண்ணாக வருணிக்கின்றது. மெல்லிய, உயரமான நோய்பீடித்தவளாக கானப்படும் அவள், மிகக் கொடியவள். கலைந்த கூந்தலும் அழுக்காடைகளுமே அவளது அலங்காரங்கள். பல்லுதிர்ந்து போனவளாக, ஒருகையில் முறமும், மறுகையில் அஞ்சேல் முத்திரையும் தாங்கி அவள் அமர்ந்திருப்பாள். காகத்தால் இழுக்கப்படும் தேரில் ஊரும் அவள், அடங்காப் பசியும் பெருவிடாயும் கொண்டவள்.[2][6][7]
"பிரபஞ்ச சராசர சங்கிரகம்" நூலின் படி, கருநிறத்தவளான தூமாவதி, பாம்பணிந்து காணப்படுவாள். கத்தியும் கபாலமும் அவள் கைகளில் துலங்க,[7] துடைப்பமும் முறமும் விளக்கும் தண்டமும் தாங்கியவளாக, பிச்சைக்காரி போல் ஆடையுடுத்து, அச்சமூட்டும் கூரிய கண்களுடன் காட்சி தருவாள். எலும்புகளைக் கடிக்கும் அச்சமூட்டும் ஒலி, அவள் வாயிலிருந்து எழுந்துகொண்டிருப்பதாக, "சாக்தப் பிரமோதம்" நூல் துதிக்கின்றது. அசுரப் பிணங்களை இரசித்துண்பவளாகவும், குருதிவிடாய் கொண்டவளாகவும் அவள் போற்றப்படுகிறாள்.
கைம்பெண்கள், அமங்கலத்தையும் கெட்ட சகுனத்தையும் குறிக்கும் இந்தியப் பண்பாட்டில், தெய்வீகக் கைம்பெண்ணான தூமாவதி, அச்சமூட்டுபவளாக வலம்வருகிறாள். ஏழைகள், பசித்தோர், நோயாளிகள், வறுமை, அழிந்த ஊர்கள், வனாந்தரங்கள், பாலைவனங்கள் அனைத்தையும் ஆளும் கட்டற்ற தெய்வம் அவள்.[2][8]
கைம்பெண்ணாயினும், எழிலோடு விளங்குபவளாக, காமரூபிணியாக பிற்காலச் சித்தரிப்புக்களில் அவள் கூறப்படுகிறாள். போதையில் வழிபடப்படும் தேவதையாகவும், மது, மாமிசம்,மச்சம், மைதுனம், தானியம் சேர்த்த "பஞ்சமகார பூசை" மூலம் திருப்திப்படுத்த வேண்டியவளாகவும் அன்னை தூமாவதி சொல்லப்படுகின்றாள்.[9]
சிவனே மறைந்த பின்னும் எஞ்சுபவள் இவளென்றும் காலத்தைக் கடந்தவள் என்றும் தூமாவதி போற்றப்படுகின்றாள். பிரபஞ்சம் எரிந்தழிந்த பின் எஞ்சும் பெரும்புகையே தூமாவதி. கொடியவளாயினும் இளகிய மனம் படைத்தவள். பெண்களால் சூழப்பட்டவள். மூதாட்டியாக சிறுவர்களுக்குப் பேரறிவை வழங்கும் குருவும் அவள்.தீமையில் விளைகின்ற, அல்லது தீமையின் முடிவைக் கட்டியம் கூறுகின்ற நன்மையை, அவள் குறிப்பால் உணர்த்துகின்றாள்.
வழிபாடு
[தொகு]அமங்கலமானவளே எனும் போதும், அந்த அமங்கலங்களிலிருந்து விடுதலை பெறவும், மெய்ஞ்ஞானத்தை அடையவும், தூமாவதி போற்றப்படுகின்றாள்.[8][10] மணவாழ்க்கைக்கு எதிரான வரங்களையே அவள், அருள்வதால், சன்னியாசிகளும் விதவைகளும் அன்றி, இல்லறத்தார் அவளை வழிபட அனுமதிக்கப்படுவதில்லை.[8][10]
சக்திசங்கம தந்திரத்தின் படி, தூமாவதியின் அடியவர்கள், கருப்பாடைகளே அணியவேண்டும்,. பற்களையும் கருப்பாக்க வேன்டும். குறைவாக உண்டு, தரையில் படுத்து, உணர்வுகளை அடக்கியாள வேண்டும். "காககர்மம்" எனப்படும் இந்நடைமுறை மூலம், அவனும் காகமாக மாறி தூமாவதியின் அருளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரமான கோவணமணிந்து, அம்மணமாய் அமர்ந்து, தேய்பிறைச் சதுர்த்தியில் அவளை வழிபடமுடியும். இடுகாடு, காடு, அல்லது தனிமையான இடத்திலமர்ந்து, அவள் மந்திரத்தை செபிக்கவேண்டும்.[11] இவளைத் துதித்தபடியே, ஒரு காகத்தை சுடலையில் எரித்து, அச்சாம்பலை எதிரியின் வீட்டில் தூவினால், அவன் அழிவான் என்கின்றன சில தாந்திரீக நூல்கள்.[12]
தூமாவதிக்கென அமைந்த ஆலயங்கள் அரிதாகவே உள்ளன. காசியிலும் காமாக்யா கோவில் அருகிலும், அவளுக்குத் தனி ஆலயங்கள் உண்டு. காசியிலுள்ள அன்னை தூமாவதியின் ஆலயம், ஒரு சக்தி பீடமாகக் கருதப்படுவதுடன், அங்கு அவளது வழக்கமான நடைமுறைகளை மீறி, சிறுவர் முதல் பெரியோர் வரை- இல்லறத்தார் உட்பட, அனைவரும் வழிபடுகின்றனர்[13] மலர், பழங்களுடன், மது, இறைச்சி முதலானவையும் இங்குள்ள அன்னைக்கு படைக்கப்படுவதுடன் அவள், அங்கு உள்ளூர்க் காவல் தெய்வமாகவும் விளங்குகின்றாள்.[13]
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kinsley (1997), pp.178-181
- ↑ 2.0 2.1 2.2 Daniélou, Alain (1991-12-01). The myths and gods of India. Inner Traditions / Bear & Company. pp. 282–3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-354-4.
- ↑ Kinsley (1997) p. 31
- ↑ 4.0 4.1 Kinsley (1997) pp. 181-2
- ↑ Kinsley (1997) p. 34
- ↑ Kinsley (1997), p.11
- ↑ 7.0 7.1 Frawley p. 126
- ↑ 8.0 8.1 8.2 Kinsley (1997), p. 183
- ↑ Kinsley (1997), pp. 190-2
- ↑ 10.0 10.1 Kinsley (1997), p. 184
- ↑ Chawdhri, L. R. (2007-11-01). Secrets of Yantra, Mantra and Tantra. Sterling Publishers Pvt. Ltd. pp. 44–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84557-022-4.
- ↑ Goudriaan, Teun (1978). Māyā divine and human. Motilal Banarsidass Publishers. pp. 363–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2389-1.
- ↑ 13.0 13.1 Kinsley (1997), p. 186
நூல் ஆதாரங்கள்
[தொகு]- Kinsley, David R. (1988). "Tara, Chinnamasta and the Mahavidyas". 0-520-06339-2&q= Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition (1 ed.). University of California Press. pp. 161–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-06339-6.
{{cite book}}
: Check|url=
value (help) - Kinsley, David R. (1997). Tantric visions of the divine feminine: the ten mahāvidyās. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-20499-7.
- Frawley, David (March 1994). "Dhumavati: The Grandmother spirit". Tantric Yoga and the Wisdom Goddesses: Spiritual Secrets of Ayurveda. Lotus Press. pp. 121–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-910261-39-5.
- Bernard, Elizabeth Anne (2000). Chinnamasta: The Aweful Buddhist and Hindu Tantric Goddess. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1748-7.