உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கமித்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கமித்தை
இலங்கையில் உள்ள சங்கமித்தை சிலை
பிறப்புகிமு 3ம் நூற்றாண்டு (கிமு 281 BC (?))
உச்சையினி, அசோகர் காலம், இந்தியா
இறப்புஅகவை 79
அனுராதபுரம், இலங்கை
கல்லறைஇலங்கை
மற்ற பெயர்கள்சங்கமித்ர (சமசுகிருதம்)
அறியப்படுவதுஇலங்கையில் தேரவாத பௌத்த கன்னியர் மடத்தை நிறுவியவர்
சமயம்தேரவாத பௌத்தம்
பெற்றோர்பேரரசர் அசோகர்
தேவி
வாழ்க்கைத்
துணை
அகிபிரம்மா
பிள்ளைகள்சுமணா (மகன்)

சங்கமித்தை (Sanghamitta, பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா) பேரரசன் அசோகனின் மகளாவார். இவளும், இவளுடன் இரட்டைப் பிள்ளைகளுள் ஒன்றாகப் பிறந்த உடன்பிறந்தானாகிய மகிந்தனும் புத்த சமயத் துறவிகள் ஆயினர். சில மூலங்களின்படி சங்கமித்தை அசோகனின் இளைய மகளும் மகிந்தனின் தங்கையும் ஆவாள்.[1][2][3]

வெள்ளரசு மரம்

[தொகு]

பின்னர் இவர்கள் இருவரும் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக இலங்கைக்குச் சென்றனர். முதலில் மகிந்தனே இலங்கைக்குச் சென்றான். அங்கே அவன் இலங்கை மன்னனுக்கு, புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்றைத் தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தான். இதனை நிறைவேற்று முகமாக பேரரசன் அசோகனே அவ்வெள்ளரசு மரம் இருக்கும் இடம் சென்று கிளையொன்றை வெட்டுவித்ததாகவும் இலங்கையின் பௌத்த வரலாற்று நூலான மகாவம்சம் கூறும்.

மகாவம்சம்

[தொகு]

இந்த வெள்ளரசு மரக்கிளையை இலங்கைக்கு எடுத்துச் செல்வதையும், இலங்கையில் ஒரு பெண் துறவிகளின் மரபுவழி ஒன்றை உருவாக்குவதையும், அங்குள்ள அரச குடும்பப் பெண்கள் சிலரை பிக்குணிகளாக நிலைப்படுத்தும்படியான கோரிக்கையை ஏற்றும் சங்கமித்தை இலங்கைக்கு அனுப்பப்பட்டாள். சங்கமித்தையுடன் ஏராளமான ஆளணிகளுடன் இலங்கை வந்து சேர்ந்தாள். இவளுடன் வந்தவர்களுள் அரச மரபைச் சேர்ந்த பதினெண்மரும், பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த பதினெண்மரும், பிராமணர், வணிகர் ஆகிய ஒவ்வொரு குலத்திலிருந்து எட்டுக் குடும்பங்களும், இவர்களுடன் இடையர், உழவர், நெசவாளர், குயவர், இயக்கர், நாகர் ஆகியோரும் இலங்கை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் அனைவரும் இன்று சம்புத்துறை என அழைக்கப்படுவதும், முன்னர் ஜம்புகோளத்துறை எனப்பட்டதுமான இடத்தில் வந்து இறங்கினர். இது இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளது. இவர்கள் இறங்கிய இடத்திலிருந்து அனுராதபுரம் வரையான நெடுஞ்சாலை இதற்கெனச் செப்பனிடப்பட்டதாகவும், வந்தவர்கள் தங்குவதற்காகக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பரிநிர்வாணநிலை

[தொகு]

இலங்கையின் அரசியாகிய அனுலாவும், ஐநூறு வரையான பணிப்பெண்களும் சங்கமித்தை மூலம் பிக்குணிகள் ஆகினர் என்பது மகாவம்சத்தின் மூலம் தெரிய வருகிறது. மகிந்தனையும், சங்கமித்தையையும் அழைப்பித்த இலங்கை அரசன் தேவநம்பிய தீசனின் மறைவுக்குப் பின்னரும் இருவரும் இலங்கையில் இருந்தனர். தேவநாம்பியதீசனைத் தொடர்ந்து அரசனான அவனது தம்பியின் ஆட்சிக்காலத்தில் தனது 59 ஆவது வயதில் சங்கமித்தை பரிநிர்வாணநிலை அடைந்ததாகத் தெரிகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sanghamittā Therī". What the Buddha said in plain English!. Archived from the original on 4 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2010-04-28.
  2. "A brief history of Sanghamitta". Bodhistav Foundation. Archived from the original on 25 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
  3. "Mahindagamanaya was more than a diplomatic mission". Daily Mirror. Archived from the original on 6 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கமித்தை&oldid=3893771" இலிருந்து மீள்விக்கப்பட்டது