வரதட்சணை மரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரதட்சிணை மரணங்கள் (Dowry deaths) என்பது வரதட்சணைக் கொடுமையால் கணவன் மற்றும் கணவன் வீட்டைச் சார்ந்த உறவினர்களால் துன்புறுத்தலுக்கும் சித்திரவதைக்கும் ஆளாகிக் கொலை செய்யப்பட்ட அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்ட பெண்களின் மரணங்களைக் குறிக்கிறது.

வரதட்சணை மரணங்கள் இந்தியா,[1] பாகிஸ்தான்,[2] வங்காள தேசம்,[3] ஈரான்[4][5] ஆகிய நாடுகளில் நிகழ்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2010 ஆம் ஆண்டில் வரதட்சணை மரணங்கள் (8391) பதிவு செய்யப்பட்டன. அதாவது 100,000 பெண்களில் 1.4 பேர் வரதட்சணை மரணமடைந்தனர். பாகிஸ்தானில் பதிவான வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை 2000; 100,000 பெண்களில் 2.45 பெண்கள் இம்மரணத்துக்கு உள்ளாகின்றனர். மக்கட்தொகைக் கணக்கில் பார்க்கும்போது பாகிஸ்தானில் தான் வரதட்சணை மரணங்களின் விகிதம் அதிகமானதாகவுள்ளது.

வன்கலவி, மணமகள் எரிப்பு, பெண்களைக் கேலி செய்தல், அமிலத் தாக்குதல் போன்று வரதட்சணை மரணமும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியா[தொகு]

2012 இந்திய வரதட்சணை மரண விகிதத்தினைக் (100000 பெண்களுக்கு) காட்டும் வரைபடம்.

வரதட்சணைக் கொடுமையின் காரணத்தாலேயே இம்மரணங்கள் நிகழ்கின்றன. இம்மரணங்களில் பெரும்பாலான தற்கொலைகள் தூக்கில் தொங்குதல், கொடிய நஞ்சை உண்ணுதல் மூலமாகவே நடைபெறுகின்றன. பல மரணங்கள் பெண்கள் தீ விபத்தால் இறந்ததுபோல, கணவன் அல்லது அவனது உறவினரால் சோடிக்கப்படுகின்றன. பெண்கள் எரியூட்டப்படும் மரணங்களே இந்தியாவில் பெரும்பாலான வரதட்சணை மரணங்களாக உள்ளன.[6] பெண்களின் கொலை அல்லது தற்கொலை போன்ற வரதட்சணை மரணங்களுக்கு மணமகன் வீட்டாரே காரணமாக அமைகின்றனர்.[7]

இந்திய குற்றப்பதிவு அமைப்பின் அறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2012 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் பலபகுதிகளிலிருந்து 8233 வரதட்சணை மரணங்கள் பதிவாயின.[1] அதாவது இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் ஒரு பெண் வரதட்சணைக் கொடுமையால் எரிக்கப்படுகிறாள் அல்லது ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பெண்களுக்கு 1.4 பெண்களின் மரணத்திற்கு வரதட்சணைக் கொடுமை காரணமாக அமைகிறது.[8][9] பாகிஸ்தான், வங்காள தேசங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவின் வரதட்சணை மரண விகிதம் குறைவு என்றாலும் இந்தியாவில் இது ஒரு முக்கியமான சமூகச் சிக்கலாகவே உள்ளது. ஒரு ஒப்பீட்டுப்பார்வைக்காக, உலக முழுவதுமாக பெண்கள் கொலைசெய்யப்படும் விகிதம் ஒரு லட்சம் பெண்களுக்கு 3.6 பெண்கள்; வட ஐரோப்பியாவில் ஒரு லட்சத்திற்கு 1.6 பேர் என்ற 2012 ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையைக் கருத்தில் கொள்ளலாம்.[10]

1996 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியக் காவற்துறையில் ஒவ்வொரு ஆண்டும் 2500 மணமகள்-எரிப்பு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.[11] 2011 ஆண்டில் இந்தியாவில் 8331 வரதட்சணை மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய தேசியக் குற்றப் பதிவுகள் கழகம் (NCRB)தெரிவிக்கிறது.[1] இந்திய மக்கட்தொகையின் பத்தாண்டுகால அதிகரிப்பின் சதவீதம் 17.6% [12] என்ற நிலையில், 1998 ஆம் ஆண்டின் பதிவுகளோடு (7146) ஒப்பிட, 2008 ஆம் ஆண்டில் பதிவான வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை (8172) 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது[13] இத்தகைய மரணங்களில் அநேகமானவை வெளிக்கொணரப்படாமல் மறைக்கப்பட்டுவிடுகின்ற நிலையில், நிகழும் அனைத்து வரதட்சணை மரணங்களும் பதிவாவதில்லை; எனவே மேலே தரப்படும் எண்ணிக்கை துல்லியமானதல்ல என்ற விமரிசனத்திற்கு இக்கணக்கீடு உள்ளாகிறது.[14]

இந்தியாவில் நடைபெறும் வரதட்சணை மரணங்கள் மதம் அல்லது சாதியைச் சார்ந்ததாக இல்லை. அனைத்து மதங்களிலும் அவற்றின் மொத்த மக்கட்தொகையைப் பொறுத்து சம விகித அளவினதாகவே இம்மரணங்கள் நிகழ்கின்றன.[15][16][17]

தடை[தொகு]

இந்திய வரதட்சணை தடைச் சட்டம் 1961, வரதட்சணை கேட்பதையும், தருவதையும், ஏற்றுக்கொள்வதையும் தடை செய்கிறது. திருமணம் நடைபெறுவதற்கு முன்நிபந்தனைகளாகக் கேட்கப்படும் அல்லது தரப்படும் பரிசுகள் 'வரதட்சணை'யாகக் கருதப்படுகிறது. முன்நிபந்தனைகளற்றுத் தரப்படும் அல்லது பெறப்படும் பரிசுகள் வரதட்சணையாகக் கருதப்படுவதில்லை. மேலும் அது சட்டத்திற்குப் புறம்பானதுமில்லை. வரதட்சணை கேட்ட அல்லது அளித்த குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையோ, 5000 வரையிலான அபராதமோ விதிக்கப்படலாம்.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலும் செயற்பாட்டில் இருந்த வரதட்சணைக்கு எதிரான பல சட்டங்களுக்கு மாற்றாக இச்சட்டம் கொண்டுவரப்பட்டது[18] வரதட்சணை காரணமாக நிகழும் கொலைகள், கட்டாயத் தற்கொலைகள் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்கப்படும்.

வரதட்சணை மரணங்களை ஒழிப்பதற்காக இந்தியப் பெண்களின் உரிமைச் செயற்பாட்டாளர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்ததன் பலனாக "வரதட்சணை தடைச் சட்டம் 1961", "இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 498 a" (1983 இல் இயற்றப்பட்டது) ஆகியவை செயற்பாட்டிற்கு வந்துள்ளன. "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் 2005" (PWDVA) இன் கீழ், குடும்ப வன்முறை பாதுகாப்பு அலுவலரிடம் முறையீடு செய்வதன் மூலம் பெண்கள் தங்களுக்கு நேரும் வரதட்சணை வன்கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.

பாகிஸ்தான்[தொகு]

பாகிஸ்தானில் திருமணத்தின்போது வரதட்சணை எதிர்பார்ப்பதும் அளிப்பதும் கலாச்சாரத்தில் கலந்த ஒரு நிகழ்வாகவே உள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் 95% க்கும் மேலான திருமணங்களில், மணமகளின் குடும்பத்திலிருந்து மணமகன் குடும்பத்திற்கு பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது..[19]

பத்தாண்டு காலங்களாகப் பாகிஸ்தானில் வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது[20][21][22] வரதட்சணை தொடர்பான கொடுமைகளும் மரணங்களும் பல்வேறு இடங்களிலும் பரவலாக நடைபெறுகிறது[23][24][25] பாகிஸ்தானில் ஒரு ஆண்டிற்கு நிகழும் இம்மரணங்களின் எண்ணிக்கை 2000, அதாவது ஒரு லட்சம் பெண்களுக்கு 2.45 பெண்கள் என்ற விகிதம், பாகிஸ்தானை உலகிலேயே அதிக அளவிலான வரதட்சணை மரணங்கள் நிகழும் நாடு என நிலைநிறுத்துகிறது.[26][27]

பாகிஸ்தானின் வரதட்சணை மரண விகிதத்தில் முரண்பாடுள்ளதாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானில் அனைத்து வரதட்சணை மரணங்களும் அலுவலர்களால் பதிவு செய்யப்படுவதில்லையென்றும் பதிவுக் கணக்கில் வரும் மரணங்களின் எண்ணிக்கையைவிட உண்மையான எண்ணிக்கை அதிகமானதாகும் என்றும் இதழாளர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சராசரியாக ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் பெண்களுக்கு 33 பேர் சமையல் அடுப்பு விபத்துள்ளாகின்றனர் என்றும் அதில் 16 பேர் கட்டாய விபத்துகுட்படுத்தப்படுகின்றனர் (49%) என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.[28][29][30]

வரதட்சணைக்கு பாகிஸ்தானிய ரூபாய் 30000, பரிசுகளுக்கு பாகிஸ்தானிய ரூபாய் 50000 என மேல் எல்லையாக பாகிஸ்தானின் "வரதட்சணை மற்றும் பரிசுகள் (கட்டுப்பாடு) சட்டமுன்வரைவு", 2008 கட்டுப்பாடு விதிக்கிறது.[31] சட்டப்படி, மணமகன் வீட்டார் வரதட்சணையை வற்புறுத்திக் கேட்பதும், திருமணத்துக்கு முன்னரோ அல்லது திருமணத்தின் போதோ வரதட்சணையை காட்சிப்படுத்துவதும் சட்டமீறலாகும். எனினும் இச்சட்டத்துடன் இது போன்ற பிற வரதட்சணைக்கெதிரான சட்டங்கள் 1967, 1976, 1998; "குடும்ப வழக்காடுமன்றச் சட்டம்", 1964 ஆகியவற்றையும் செயற்படுத்த இயலாத நிலையுள்ளது. மேலும் பாகிஸ்தானின் காவற்துறையினர் வரதட்சணை தொடர்பான குடும்ப வன்முறை வழக்குகளைப் பதிவுசெய்ய மறுக்கின்றனர் என பாகிஸ்தானிய செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.[32]

பல பாகிஸ்தானிய இராணுவ மற்றும் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இந்தப் பாரம்பரியமான வரதட்சணைக் காட்சிப்படுத்தலையும், அதிகச் செலவீனமான விருந்துகளையும் ("வலிமா" ) சட்டப்படித் தடைசெய்ய பல முயற்சிகளை மேற்கொண்டன. இம்முயற்சியால் உருவானவையே 1997 ஆன்டுச் சட்டம், அரசாணை (XV) 1998, அரசாணை (III) 1999 ஆகும். ஆனால் இசுலாம் மதச் சட்டங்களை ஆதாரமாகக் காட்டி, இவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இச்சட்டங்களை அரசியலமைப்புக்குப் புறம்பானது எனத் தெளிவுபடுத்தியது.[32]

வங்காள தேசம்[தொகு]

வங்காள தேசத்திலும் வரதட்சணை மரணங்கள் அதிகளவில் நிகழ்கின்றன. வரதட்சணைக் கொடுமையால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஒரு லட்சம் பெண்களுக்கு 0.6 -2.8 பெண்கள் எனப் பதிவாகியுள்ளது.[33][34] தூண்டப்பட்டத் தற்கொலைகள், தீ எரிப்புகள், மேலும் பிற குடும்ப வன்முறைகள் என இம்மரணங்கள் நிகழ்கின்றன. 2013 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, பத்துமாத காலத்தில் 4470 பெண்கள் வரதட்சணை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது ஒரு லட்சம் பெண்களில் 7.2 மணமகள்கள் வரதட்சணை வன்கொடுமைக்குள்ளாகி உள்ளனர்.[3]

ஈரான்[தொகு]

பழங்காலத்திலிருந்தே பெர்சியாவில் காணப்பட்ட ஒரு வழமையாக வரதட்சணை ( jahīz jahaz or jaheez, ج‍ﮩ‍یز) இருந்துள்ளது.[35][36] வரதட்சணை தொடர்பான வன்கொடுமைகளும் மரணமும் ஈரானிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றுள் சில ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.[4][5]

பன்னாட்டளவில் வரதட்சணை வன்முறை ஒழிப்பு[தொகு]

வரதட்சணை மரணங்களின் பதிவுகள் பல நாடுகளிலுமுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இம்மரணங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கோடு உலகளவில் பல இயக்கங்கள் முனைப்பாகப் செயற்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியப் பங்கு வகிப்பது ஐக்கிய நாடுகள் சபையாகும். இது வரதட்சணை வன்கொடுமைகள் உள்ளிட்டப் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பன்னாட்டு மன்னிப்பு அவை[37][38], மனித உரிமைகள் கண்காணிப்பகம்[39] , வி-டே [40][41] போன்ற பல தனியார் அமைப்புகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காகப் பரப்புரைகள், நிதி திரட்டல்[42], விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் எனப் பல வழிகளில் போராடி வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "National Crime Statistics (page 196)" (PDF). National Crime Records Bureau, India. 2013-01-16. Archived from the original (PDF) on 2014-06-20. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
 2. PAKISTAN: The social injustice behind the practice of dowry-when greed dictates society Asian Human Rights Commission (2014)
 3. 3.0 3.1 UN Women, Bangladesh Report 2014 - Annexes[தொடர்பிழந்த இணைப்பு] United Nations (May 2014), Table 6 page xiii
 4. 4.0 4.1 Isfahan man kills daughter over inability to pay dowry Public Broadcasting Service, Washington DC (August 16, 2010)
 5. 5.0 5.1 Kiani et al. (2014), A Survey on Spousal Abuse of 500 Victims in Iran, American Journal of Forensic Medicine & Pathology, 35(1):50-54, March 2014
 6. Kumar, Virendra (Feb 2003). "Burnt wives". Burns 29 (1): 31–36. doi:10.1016/s0305-4179(02)00235-8. https://archive.org/details/sim_burns_2003-02_29_1/page/31. 
 7. Oldenburg, V. T. (2002). Dowry murder: The imperial origins of a cultural crime. Oxford University Press.
 8. Provisional 2011 Census Data, Government of India (2011)
 9. Crime statistics in India பரணிடப்பட்டது 2013-01-29 at the வந்தவழி இயந்திரம், Government of India (2011)
 10. UNODC Homicide Data by Sex United Nations (2013)
 11. Bride-burning claims hundreds in India: Practice sometimes disguised as suicide or accident CNN, August 18, 1996.
 12. Decadal Growth Rates in India Census of India, Government of India, New Delhi (2012)
 13. "Point No.17, Dowry Deaths" (PDF). Archived from the original on 2011-06-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-05.
 14. Caleekal, Anuppa. "Dowry Death". பார்க்கப்பட்ட நாள் 2012-01-05.
 15. Waheed, Abdul (February 2009). "Dowry among Indian muslims: ideals and practices". Indian Journal of Gender Studies (Sage Publications) 16 (1): 47–75. doi:10.1177/097152150801600103. http://dx.doi.org/10.1177/097152150801600103. 
 16. Newman, A. (1992). For Richer, For Poorer, Til Death Do Us Part: India's Response to Dowry Deaths. ILSA J. Int'l L., 15, 109.
 17. Kulshrestha, P., Sharma, R. K., & Dogra, T. D. (2002); The study of sociological and demographical variables of unnatural deaths among young women in South Delhi within seven years of marriage, Hindu, 103(88.03), 88-03.
 18. Section 1-4, Dowry Act
 19. Zeba Sathar, Cynthia Lloyd, et al. (2001–2002) "Adolescents and Youth in Pakistan" பரணிடப்பட்டது 2014-03-12 at the வந்தவழி இயந்திரம் pp.92-116, Population Council (with support from UNICEF)
 20. Yasmeen, S. (1999) "Islamisation and democratisation in Pakistan: Implications for women and religious minorities", South Asia Journal of South Asian Studies 22(s1), pages 183-195 எஆசு:10.1080/00856408708723381
 21. Ibraz, T. S., Fatima, A., & Aziz, N. (1993) "Uneducated and Unhealthy: The Plight of Women in Pakistan" பரணிடப்பட்டது 2014-11-07 at the வந்தவழி இயந்திரம் [with Comments], The Pakistan Development Review Vol.32 No.4 pp.905-915
 22. Niaz, U. (2004) "Women's mental health in Pakistan", World Psychiatry 3(1), 60
 23. Hussain, R. (1999) "Community perceptions of reasons for preference for consanguineous marriages in Pakistan", Journal of Biosocial Science Vol.31 No.4 pp.449-461
 24. Shah, K. (1960). "Attitudes of Pakistani students toward family life", Marriage and Family Living Vol.22 No.2 pp. 156-161
 25. Korson, J. H., & Sabzwari, M. A. (1984). "Age and Social State at Marriage, Karachi, Pakistan 1961-64 and 1980: A Comparative Study", Journal of Comparative Family Studies 15(2), pp. 257-279.
 26. Operational Note: Pakistan Refworld, A United Nations initiative (August 2011), see pages 16-21
 27. Subhani, D., Imtiaz, M., & Afza, S. (2009). To estimate an equation explaining the determinants of Dowry
 28. Nasrullah and Muazzam (2010) "Newspaper reports: a source of surveillance for burns among women in Pakistan", Journal of Public Health 32 (2): 245-249
 29. Juliette Terzieff (October 27, 2002) "Pakistan's Fiery Shame: Women Die in Stove Deaths" WeNews, New York
 30. Miller, B. D. (1984). "Daughter neglect, women's work, and marriage: Pakistan and Bangladesh compared", Medical anthropology 8(2), 109-126.
 31. Ashraf Javed (June 9, 2013) "Done to a daughter over dowry" பரணிடப்பட்டது 2013-09-01 at the வந்தவழி இயந்திரம், The Nation (Pakistan)
 32. 32.0 32.1 (2006) Fight Against Dowry பரணிடப்பட்டது 2014-11-08 at the வந்தவழி இயந்திரம், SACHET (Pakistan); also see Dr. A.Q. Khan's July 2003 foreword on widespread Dowry problems to the Prime Minister of Pakistan
 33. Shahnaz Huda (2006), Dowry in Bangladesh: Compromizing Women’s Rights பரணிடப்பட்டது 2015-04-26 at the வந்தவழி இயந்திரம், South Asia Research, November vol. 26 no. 3, pages 249-268
 34. Women’s Safety: Ghosts on the Prowl பரணிடப்பட்டது 2014-11-09 at the வந்தவழி இயந்திரம் Mahfuzur Rahman, Dhaka Courier, January 26, 2012
 35. Steingass Persian-English பரணிடப்பட்டது 2017-03-24 at the வந்தவழி இயந்திரம், University of Chicago, See explanation for Jahiz
 36. Persian English Dictionary see Dowry
 37. "Violence Against Women Information". Amnesty International. பார்க்கப்பட்ட நாள் 2012-09-04.
 38. "India". Amnesty International. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 2012-09-04.
 39. "India: Disappointing Year for Human Rights". 2012-09-04. Human Rights Watch. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.
 40. "Dowry Deaths & Bride Burning". V-Day. Archived from the original on 2013-06-03. பார்க்கப்பட்ட நாள் 2012-09-04.
 41. https://www.youtube.com/watch?v=urRejbq8dbs
 42. "Her Majesty Queen Noor and Nancy Pelosi Join GFW to Announce Endowment for the World's Women". Global Fund For Women. Archived from the original on 2014-11-08. பார்க்கப்பட்ட நாள் 2012-09-04.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதட்சணை_மரணம்&oldid=3602784" இலிருந்து மீள்விக்கப்பட்டது