பெண்களுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறை (Violence against women, சுருங்க VAW) என்பது பெண்களுக்கு எதிராக முதன்மையாக அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களை மொத்தமாகக் குறிப்பிடுகின்றது. சிலநேரங்களில் வெறுப்புக் குற்றமாகக் கருதப்படும் [1][2][3]. பாதிக்கப்படுபவரின் பாலினத்தை முதன்மைக் காரணமாகக் கொண்டு, இத்தகைய வன்முறை குறிப்பிட்ட குழுவினரைக் குறி வைக்கிறது. அதாவது இத்தகைய வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அவர்கள் பெண்கள் என்பதாலோ இனத்தலைவர்/சமூக பால் கட்டமைப்புகளாலோ நிகழ்த்தப்பெறுகின்றன.
ஐக்கிய நாடுகளின் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சாற்றுரை இவ்வாறு கூறுகிறது:
- "காலங்காலமாய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமனில்லா செல்வாக்கின் வெளிப்பாடே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்";
- "ஆண்களை விடத் தாழ்ந்தநிலைக்குப் பெண்களைத் தள்ளும் இக்கட்டானச் சமுதாயச் செயற்பாடுகளுள் ஒன்று பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்."[4]
ஐக்கிய நாடுகள் பெண்களுக்கான வளர்ச்சி நிதியின் வலைத்தளத்தில் 2006க்கான அறிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான கோபி அன்னான் அறிவித்துள்ளதாவது:
பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் பரவும் அளவிலான பிரச்சினையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ, பிறவகையிலோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர்; இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளார்.[5]
பெண்களுக்கு எதிரான வன்முறை பல விரிந்த வகைப்பாடுகளில் அடங்கும். ‘தனிநபர்களால்’ நிகழ்த்தப்படுபவையும் ‘அரசுகளால்’ நிகழ்த்தப்படுபவையும் இவற்றில் அடங்கும். தனிநபர்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கலவி, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை மற்றும் திரள் வன்முறை, மற்றும் மரபுவழி அல்லது சமூக செயல்முறைகளாக கௌரவக் கொலை, வரதட்சிணை மரணம், பெண் உறுப்பு சிதைப்பு, கடத்திக் கல்யாணம், கட்டாயக் கல்யாணம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அரசுகளால் நிகழ்த்தப்பெறும் அல்லது மன்னிக்கப்படும் வன்முறைகளாக போர்களின் போது போர் வன்புணர்வு, பாலியல் வன்முறை மற்றும் பெண்ணடிமைத் தனம், கட்டாயக் கருவளக்கேடு, கட்டாயக் கருக்கலைப்பு, காவல்துறை மற்றும் அதிகார வர்க்கத்தினால் வன்முறை, கல்லால் அடித்தல் மற்றும் சவுக்கடி ஆகியன உள்ளன. தவிரவும் பெண்களைக் கடத்துதல், கட்டாய விபசாரம் போன்ற பல வன்முறைகள் கட்டமைக்கப்பட்ட குற்றப் பிணையங்களால் நடத்தப்படுகின்றன.[6]
பெண்களுக்கெதிரான வன்முறையை ஆய்ந்த உலக சுகாதார அமைப்பு (WHO), இவ் வன்முறை பெண்களின் வாழ்நாளின் ஐந்து நிலைகளில் நடைபெறுவதாக வகைப்படுத்தி உள்ளது: “1) பிறப்பிற்கு முன்னர், 2) மழலைப் பருவம், 3) சிறுமியர், 4) வளர்சிதை மாற்றம் மற்றும் வயது வந்தோர் 5) முதியோர்”[7]
அண்மை ஆண்டுகளில், பன்னாட்டளவில் நெறிமுறைகள், சாற்றுரைகள் போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் பாலினத் துன்புறுத்தலுக்கான வழிகாட்டுதலையும்[8] மாந்தக் கடத்துகைக்கு எதிரான வழிகாட்டுதலையும் வெளியிட்டுள்ளது.[9]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Angelari, Marguerite (1997). "Hate Crime Statutes: A Promising Tool for Fighting Violence Against Women". In Karen J. Maschke (ed.). Pornography, sex work, and hate speech. Taylor & Francis.
- ↑ Gerstenfeld, Phyllis B. (2013). Hate Crimes: Causes, Controls, and Controversies. Sage.
- ↑ McPhail, Beverly (2003). "Gender-Bias Hate Crimes: A Review". In Barbara Perry (ed.). Hate and bias crime: a reader. Psychology Press.
- ↑ "A/RES/48/104 - Declaration on the Elimination of Violence against Women". United Nations General Assembly. பார்க்கப்பட்ட நாள் 2014-08-06.
- ↑ Moradian, Azad. Domestic Violence against Single and Married Women in Iranian Society. பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம் Tolerancy International. September 2009. Retrieved 16 Nov. 2011.
- ↑ Prügl, E. (Director) (November 25, 2013). Violence Against Women. Gender and International Affairs Class 2013. Lecture conducted from The Graduate Institute of International and Development Studies (IHEID), Geneva, Switzerland.
- ↑ (1997). Violence against women: Definition and scope of the problem. World Health Organization, 1, 1-3. Retrieved November 30, 2013.
- ↑ Directive 2002/73/EC - equal treatment of 23 September 2002 amending Council Directive 76/207/EEC on the implementation of the principle of equal treatment for men and women as regards access to employment, vocational training and promotion, and working conditions [1]
- ↑ DIRECTIVE 2011/36/EU OF THE EUROPEAN PARLIAMENT AND OF THE COUNCIL of 5 April 2011 on preventing and combating trafficking in human beings and protecting its victims, and replacing Council Framework Decision 2002/629/JH http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2011:101:0001:0011:EN:PDF பரணிடப்பட்டது 2017-11-26 at the வந்தவழி இயந்திரம்