வஞ்சப் புகழ்ச்சியணி
வஞ்சப்புகழ்ச்சியணி என்பது புகழ்வது போல் மறைமுகமாக இகழ்வதும், இகழ்வது போல் மறைமுகமாகப் புகழ்வதுமாகும்.
உதாரணம்
[தொகு]புகழ்வது போல் இகழ்தல்
[தொகு]தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
"கயவர்கள் தம்மனம் விரும்பும் செயல்களைத் தடுப்பாரின்றிச் செய்து முடிப்பதால் தாம் விரும்பும் செயல்களைச் செய்யும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்" என்பது இக்குறட்பாவின் பொருள்.
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று புகழப்படுவது போல தோன்றினாலும், தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம். எனவே இது உண்மையில் கயவர்களை பழித்தலே ஆகும். (புகழ்வது போல் இகழ்தல்)
இகழ்வது போல் புகழ்தல்
[தொகு]பாரி பாரி என்றுபல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகுபுரப் பதுவே
"புலவர் பலரும் பாரி ஒருவனையே புகழ்கின்றனர். பாரி ஒருவன் மட்டுமா கைம்மாறு கருதாமல் கொடுக்கின்றான்? மாரியும்தான் கைம்மாறு கருதாமல் கொடுத்து இவ்வுலகம் புரக்கின்றது" என்பது இப்பாடலின் பொருள். இது பாரியை இகழ்வது போலத் தோன்றினும், பாரிக்கு நிகராகக் கொடுப்பாரில்லை என்று புகழ்ந்ததே ஆகும்.(இகழ்வது போல் புகழ்தல்)
விகடராமன் குதிரை
[தொகு]முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
- நூல்: தனிப்பாடல், பாடியவர்: காளமேகம்
விகடராமன் என்பவர் ஒரு மெலிந்த குதிரையையும் சில வேலைக்காரர்களையும் வைத்துக்கொண்டு ஊர் முழுக்க அலட்டல் உலா வந்துகொண்டிருந்தார். அதைப் பார்த்த காளமேகம் கிண்டலாகப் பாடிய பாடல் இது. எந்நேரமும் வேதம் படிக்கிறவன் விகடராமன். அவனுடைய குதிரைக்கு முன்னே கடிவாளம் உண்டு, ஆனால் அதைத் தொட்டு இழுத்து ஓட்டுவதற்கு ஒருவர் போதாது, மூன்று பேர் வேண்டும்.அப்போதும் அந்தக் குதிரை ஓடிவிடாது. பின்னால் நின்றபடி இரண்டு பேர் தள்ளவேண்டும். இப்படி ஐந்து பேரால் ‘ஓட்டப்படும்’ அந்தக் குதிரை, அதிவேகமாக ஓடும், மாதம் ஒன்றுக்குக் காத தூரம் சென்றுவிடும்.
’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை. ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
வெளி இணைப்பு
[தொகு]எழில்நிலா தளத்தில் உள்ள தகவல் பரணிடப்பட்டது 2011-10-18 at the வந்தவழி இயந்திரம்