உள்ளடக்கத்துக்குச் செல்

சிலேடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலேடையணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு. தமிழிலும் பல பிற மொழிகளிலும் சிலேடைப் பயன்பாடு காணப்படுகின்றது.

தண்டியலங்கார ஆதாரம்

[தொகு]

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் சிலேடையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

"ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்"

"அதுவே, செம்மொழி பிரிமொழி யெனவிரு திறப்படும்"

"ஒருவினை பலவினை முரண்வினை நியமம்
நியம விலக்கு விரோதம் அவிரோதம்
எனவெழு வகையினும் இயலும் என்ப" [1]

சிலேடையின் வகைகள்

[தொகு]

தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,

  1. செம்மொழிச் சிலேடை
  2. பிரிமொழிச் சிலேடை

என்பனவாகும். செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக் கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு,

சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்

என்றாராம். இத்தொடர் எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது. ஒருவகையில், சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது. இங்கே, தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால் இது செம்மொழிச் சிலேடை ஆகும்.

ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.

துணுக்கு

[தொகு]

ஒரு சிலேடைச் சிறுவன் அவன். அன்று அந்திசாய்ந்த நேரம். மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. வீட்டாரின் நச்சரிப்பினால் மண்ணெய் வாங்கிவர, அருகிருந்த கடைக்குச் சென்றான். அங்கு கடைச்சொந்தக்காரனிடம், ஐயா, “கொஞ்சலாம்பெண்ணை தாருங்கள்“ என்றான். கடைக்காரன் மண்ணெய் கொடுக்க குவளையைக் கேட்டான். சிறுவன் மீண்டும் மீண்டும் அதனையே சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் கடைக்காரன் சீறிப்பாய, அவன் அமைதியாய் “மண்ணெய்யும் தாருங்கள், கொஞ்சலாம் பெண்ணையும் தாருங்கள்“ என்று போட்டானே ஒருபோடு.

  • லாம்பெண்ணை என்பது மண்ணெய்யைக் குறிக்கும் பேச்சுவழக்குச் சொல்லென்க.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

ஒரு வசனத்தில் சிலேடை

[தொகு]

சென்னை வரவேற்கிறது என்பதை ஆம், சென்னை வர வேர்க்கிறது (வியர்க்கிறது என்பதன் பேச்சு வழக்கு) என்று சிலேடை மூலம் பகடியாகச் சொல்லலாம்.

காளமேகப் புலவரின் பாடல் ஒன்று

[தொகு]

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே

இந்தப் பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால்: ஒரு பலசரக்குக் கடைக்காரரான வேரகம் எனப்படும் செட்டியாரைப் பார்த்துச் சொல்வதுபோல் இருக்கிறது.

வேரகச் செட்டியாரே!

சமிபாடின்மையைப் போக்க வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.

ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.

வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!

  • வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
  • சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
  • வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
  • இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
  • சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
  • வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

என்று பொருள்படுகின்றது.

யாழ்ப்பாணத்தின் ஊர்ப் பெயர்களைக் கொண்ட ஒரு சிலேடை[2]

[தொகு]

யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டத்தின் ஊர் பெயர்களை வைத்து வரும் கவிதை வடிவிலான சிலேடை. இங்கே உள்ள ஊர்ப் பெயர்களில், வேறு அர்த்தம் பொதிந்திருக்கும். இதை எழுதியவர் சுன்னாகம் முத்துக்குமாரசாமி கவிராயர்.மாவிட்டபுரம் வேட்டைத் திருவிழாவின்போது இருபாலைச் சேனாதிராயர் கேட்டதற்கிணங்க உடனடியாக அதே இடத்தில் பாடியதாகும்[சான்று தேவை].

முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைந்து
ஆனைக் கோட்டை வழி
கட்டுடை விட்டாள்

உடுவிலான் வர
பன்னாலையான் மிக உருத்தனன்
கடம்புற்ற மல்லாகத்தில்
இடை விடாது எனை அணையென
பலாலி கண் சோர வந்தாள்
ஓர் இளவாலையே

  • முடிவிலாதுறை சுன்னாகத்தான் வழி
  1. முடிவிலாதுறை = முடிவற்று உறைந்திருக்கும், அல்லது குடி கொண்டிருக்கும்
  2. சுன்னாகம் = சுன் + நாகத்தான் = வெள்ளை மலை (இமய மலை = கைலயங்கிரி)
  3. வழி = வழியில் வந்தவன்

இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன்,

  • முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்தடைய
  1. முந்தித் தாவடி = முன்னே தாவி வரும்
  2. கொக்குவில் மீது வந்தடைய

முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, (மாவிட்டபுரத்தில் வீற்றிருக்கும் முருகன் குதிரையில் வருவாராம்).....

  • கொடிகாமத்தாள் ஆனைக்கோட்டை வழி கட்டுடை விட்டாள்
  1. கொடி + காமத்தாள் = கொடி போன்றை இடையுடைய + ஆசை கொண்டவள்
  2. ஆனைக் கோட்டை வழி = பெரிய கோட்டை போன்ற மார்பகம் வழி
  3. கட்டுடை விட்டாள் = கண்ணீர் கட்டுடைந்து வழிய நின்றாள்

மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்......

  • உடுவிலான் வர பன்னாலையான் மிக உருத்தனன்
  1. உடு = நட்சத்திரம் /நிலவு
  2. பன்னாலை = கரும்பு
  3. உருத்தனன் = தொல்லை கொடுத்தான்

நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான்,

  • கடம்புற்ற மல்லாகத்தில் இடைவிடாது எனை அணையென
  1. கடம்புற்ற = கடம்பு எனும் பூக்களாலான
  2. மல்லாகத்தில் = மார்பகத்தில்
  3. இடை விடாது = இடைவெளியெதுவுமில்லாது
  4. எனை அணையென = என்னை அணைத்துக் கொள்ளென்று

கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்ளென்று,

  • பலாலி கண் சோர வந்தாள் ஓர் இளவாலையே
  1. பலாலி கண் = பல + ஆலி = பல கண்ணீர்த் துளிகள்
  2. சோர = சொரிந்து
  3. இளவாலை = இளம் வயதுடைய வாலைப் பெண் = குமரிப் பெண்

பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

முழுமையான அர்த்தம்: இமயமலையில் முடிவிலாது குடி கொண்டிருப்பவனது வழியில் வந்தவனாகிய முருகன், முன்னே தாவி வரும் குதிரையின் மீதேறி வந்து சேர, மிகுந்த ஆசை கொண்ட, கொடிபோன்ற இடை உடைய பெண் கண்ணீரை, தன் பெரிய மார்பகங்களின் வழியாக கட்டுடைந்து சிதற விட்ட வண்ணம் சொல்கிறாள்...... "நட்சத்திரம் / நிலவு வரும் நேரத்தில் கரும்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த தொல்லை கொடுக்கிறான், கடம்பு பூக்களாலான மாலையணிந்த உனது மார்பகத்தில், இடைவெளி எதுவுமில்லாமல் என்னை அணைத்துக் கொள்" என்று, பல கண்ணீர்த் துளிகளை சொரிந்த வண்ணம் இறைஞ்சி நிற்கிறாள் அந்த இளம் வயதுள்ள குமரிப் பெண்.

இஸ்லாத்தில் சிலேடை

[தொகு]

முகம்மது நபியின் தோற்றத்துக்கு முன்னர் அரபிகள் சிலேடையாகப் பேசுவதை உயர்வாகக் கருதியும் அதைத் தங்களது மொழிப் புலமை என்று கருதியும் வந்தனர். அவர்கள் நல்ல பொருளும் தீய பொருளும் கலந்து பேசி வந்தனர். யூதர்களும் அவ்வாறே சிலேடையாகப் பேசுவோராக இருந்தனர். ஒருவரை மேன்மையாகப் பேசுவது போலும் இழிவாக்குவதை மறைத்தும் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தெளிவான பொருள் கொண்டு பேசுவதையே இஸ்லாம் ஆதரிக்கிறது. எனவே, சிலேடையாகப் பேசுவதை இஸ்லாம் தடை செய்தது.

ஆதாரம்

[தொகு]
  1. "தண்டியலங்காரம் 76-78" (PDF). Archived from the original (PDF) on 2011-09-16. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
  2. ஈழத்து முற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலேடை&oldid=3554252" இலிருந்து மீள்விக்கப்பட்டது