உயர்வு நவிற்சி அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயர்வு நவிற்சி அணி ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்தி, அளவுக்கு மேல் மிகுத்துக் கூறுவது. அதாவது இரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

பிரதான இயல்புகள்[தொகு]

  • தன்மை நவிற்சி அணிக்கு எதிர்மாறானது.
  • ஒன்றைப் பற்றி மிகவும் உயர்த்திக் கூறுவது.
  • எதையும் ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.

எடுத்துக்காட்டு[தொகு]

காற்று மிகவும் வேகமானதொன்று. அதையும் விட வேகமாகப் பறப்பதென்பது மிகைப்படுத்திய கூற்று.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

எடுத்துக்காட்டு - 1[தொகு]

விண்மீன்களைக் கேட்டால்
அண்ணன்கள் எல்லாம் பறித்துப் பறித்துத் தருவார்கள்
நான் வானவில் கேட்டால்
ஏணியில் ஏறி ஒடித்து ஒடித்துத் தருவார்கள்
ஒற்றைத் தங்கை எனக்காக
ஊரைத் தருவார்கள்...

விண்மீன்களைப் பறிக்கவோ, வானவில்லை ஒடிக்கவோ முடியாது. தன்மேல் உள்ள அன்பினால் தான் எதைக் கேட்டாலும் தனது அண்ணன்மார்கள் தருவார்கள் என்பதை ஒரு தங்கை சொல்வதாக அமைந்திருக்கும் இப்பாடலில் நடக்க முடியாத ஒரு விடயத்தை கவிஞர் இயற்கைக்கு மாறாக உயர்த்திக் கூறியுள்ளார். இதுவே உயர்வு நவிற்சி அணியின் இயல்பு.

எடுத்துக்காட்டு - 2[தொகு]

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு - எங்கள்
உறையூரின் காவலரே வாழிய நீடு
கரையேறி மீன் வராது. வந்தால் துடிதுடித்து இறந்து விடும். காவிரி நீர் வளம் நிறைந்த நாடு. அதன் வளத்தை விளக்குவதற்கு மீன் கரையேறி விளையாடும் என மிகுத்துக் கூறப்படுகிறது.

எடுத்துக்காட்டு - 3[தொகு]

நிலவினில் இருக்கின்ற களங்கத்தை இவளது
பெருவிரல் துடைத்து விடும்
புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள்
சிறைகளை உடைத்து விடும்
அந்தப் பெண்ணிடம் தான் நினைத்ததை முடிககும் திறனும், வீரமும் உண்டு, அவள் வலியவள், உயர்ந்தவள் என்பதைக் காட்டுவதற்காக, எட்டாத நிலவின் களங்கத்தை இவளது பெருவிரல் துடைத்து விடும் நடக்க முடியாத ஒரு விடயத்தால் மிகுத்துக் கூறப்படுகிறது. கூடவே கண்ணாடி போல உடையக் கூடிய அவளது வளையல்கள் சிறைகளையே உடைத்து விடும் என்பதும் அவள் எத்துணை வலிமையுடையவள் என்பதை உணர்த்துவதற்கான மிகைப்படுத்தல்கள். இது உயர்வு நவிற்சி அணியின் தன்மை.

எடுத்துக்காட்டு - 4[தொகு]

தூசியின்றித் தெளிந்தோடும்
துறையினிலே நான்
மூழ்கித் தொட்டதேதோ
பாசி என்றெண்ணிக்
கையாலே பறித்தெறியப்
பற்றினேனா?
கூசி எதிர்த் துறையில்
குளித்த இளங்குமரி
எந்தன் கூந்தலென்றாள்

(கவிஞர் நீலாவணன்)

தூசியே இல்லாத தெளிந்த நீர்துறை. அக்கரையில் அவள் குளிக்கிறாள். இக்கரையில் நான். ஏதோ கைப்பட பாசி என்று பற்றினேன். எதிர்துறையிலிருந்து அவள் என் கூந்தல் என்று கத்துகிறாள். அவ்வளவு நீளமான கூந்தல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்வு_நவிற்சி_அணி&oldid=3307517" இலிருந்து மீள்விக்கப்பட்டது