வேற்றுப்பொருள் வைப்பணி
கவிஞன் தான் கூறவிரும்பும் சிறப்புப் பொருளை உலகமறிந்த பொதுப்பொருளைக் கொண்டு விளக்கிக் கூறுவது வேற்றுப்பொருள் வைப்பணி எனப்படும்.
முன்னொன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
பின் ஒரு பொருளை உலகறி பெற்றி
ஏற்றி வைத்து உரைப்பது வேற்றுப்பொருள் வைப்பே.
எனத் தண்டி அலங்கார நூற்பா குறிப்பிடுகிறது..இந்த அணி எட்டு வகைப்படும். அவை,1 முழுவதும் சேறல், 2.ஒரு வழிச் சேறல் 3. முரணித் தோன்றல் 4. சிலேடையின் முடித்தல் 5.கூடா இயற்கை 6.கூடும் இயற்கை 7. இருமை இயற்கை 8 .விபரீதப்படுத்தல் என்பனவாகும்.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]பராவரும் புதல்வரைப் பயத்த யாவரும்
உராவரும் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேதமே அன்ன
இராமனைப் பயந்தஎற் கிடருண்டோ? என்றாள்!
பாடல்பொருள்:
வணங்கத்தக்க சிறந்த புதல்வரைப் பெற்ற யாவரும் துன்பம் நீங்கி நன்மை பெறுவர் என்பது பொதுப்பொருள். அப்பொதுப்பொருளைக் கொண்டு பாரெலாம் வேதமெனப் போற்றும் இராமனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்குத் துன்பம் உண்டோ? (இல்லை) எனும் சிறப்புப் பொருளைக் கைகேயி மந்தரையிடம் விளக்குகிறாள். ஆகவே இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணி.