நிதரிசன அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள். அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர். தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுவதற்காவே நிகழ்கின்றன என்ற அரிய நோக்கில் பாடத் தலைப்படுகின்றனர். இப்பொருள்பட அமைந்த அணியே நிதரிசன அணி. அல்லது காட்சிப் பொருள் வைப்பு அணி என்று அழைக்கப் படுகிறது[1][2].

நிதரிசன அணியின் இலக்கணம்[தொகு]

இயற்கையாக நிகழும் நிகழ்ச்சிகளின் பயன், வேறு ஒரு பொருளுக்கு நன்மையோ, தீமையோ தோன்றுமாறு இருப்பதாகச் சொல்லுவது நிதரிசனம் என்னும் அணி ஆகும்.

ஒருவகை நிகழ்வதற்கு ஒத்தபயன், பிறிதிற்குப்
புகழ்மை தீமை என்றுஇவை புலப்பட
நிகழ்வது ஆயின் நிதரிசனம் அதுவே
                         --(தண்டியலங்காரம், 85)

(புகழ்மை - நன்மை.)

நிதரிசன அணியின் வகைகள்[தொகு]

நிதரிசன அணி இரண்டு வகைப்படும். அவை,

  • புகழ்மை நிதரிசனம்
  • தீமை நிதரிசனம்

என்பன ஆகும்.

புகழ்மை நிதரிசனம்[தொகு]

ஒரு பொருளின் பயன் வேறு ஒரு பொருளுக்கு நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது புகழ்மை நிதரிசனம் எனப்படும். இதை நற்பொருள் காட்சி என்று கூறுவர்.

(எ.கா.)

பிறர்செல்வம் கண்டால் பெரியோர் மகிழ்வும்
சிறியோர் பொறாத திறமும் - அறிவுறீஇச்
செங்கமலம் மெய்மலர்ந்த; தேம்குமுதம் மெய்அயர்ந்த;
பொங்குஒளியோன் வீறுஎய்தும் போது

(செங்கமலம் - செந்தாமரை மலர்; மெய் - உடல்; மலர்ந்த - மலர்ந்தன; தேம் - தேன்; குமுதம் - அல்லி மலர்;அயர்ந்த - குவிந்தன; பொங்குஒளியோன் - மிகுந்த ஒளியை உடைய கதிரவன்; வீறு - ஒளி.)

பாடல்பொருள்:

பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவதையும், சிறியோர் பொறாமை கொள்வதையும் அறிவுறுத்தி, மிகுந்த ஒளியை உடையவனாகிய கதிரவன் தோன்றி ஒளி மிகும் காலத்தில், செந்தாமரை மலர்கள் உடல் நெகிழ்ந்து மலர்ந்தன; தேன் பொருந்திய அல்லி மலர்கள் உடல் வாடிக் குவிந்தன.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் புகழ்மை நிதரிசனம், தீமை நிதரிசனம் ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

1) கதிரவனின் ஒளியைக் கண்டு தாமரை மலர்கள் மலர்வது, பிறர் செல்வத்தைக் கண்டால் பெரியோர் மகிழ்ச்சி அடைவர் என்பதைக் காட்டுகிறது. இங்கே தாமரை மலர்களின் மலர்ச்சி ஆகிய பயன், பெரியோரிடத்து மகிழ்ச்சி என்னும் நன்மை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது புகழ்மை நிதரிசனம் ஆயிற்று.

2) கதிரவனின் ஒளியைக் கண்டு அல்லி மலர்கள் குவிவது, பிறர் செல்வத்தைக் கண்டால் சிறியோர் பொறாமை கொள்வர் என்பதைக் காட்டுகிறது. இங்கே அல்லி மலர்களின் குவிதல் ஆகிய பயன், சிறியோரிடத்துப் பொறாமை என்னும் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லப்பட்டதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று.

இப்பாடல் புகழ்மை, தீமை ஆகிய இருவகை நிதரிசனத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தாலும் தண்டியலங்கார உரையாசிரியர் இப்பாடலைப் புகழ்மை நிதரிசனுத்துக்கு மட்டுமே எடுத்துக் காட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தீமை நிதரிசனம்[தொகு]

ஒரு பொருளின் பயன் பிறிது ஒரு பொருளுக்குத் தீமை புலப்பட நிகழ்வதாகச் சொல்லுவது தீமை நிதரிசனம் எனப்படும். இதைத் தீப்பொருள் காட்சிஎன்று கூறுவர்.

(எ.கா.)

பெரியோர் உழையும் பிழைசிறிது உண்டாயின்
இருநிலத்துள் யாரும் அறிதல் - தெரிவிக்கும்,
தேக்கும் கடல்உலகில் யாவர்க்கும் தெள்ளமுதம்
வாக்கும் மதிமேல் மறு

(உழையும் - இடத்தும்; பிழை - குற்றம்; இரு - பெரிய; தேக்குதல் - நிறைதல்; வாக்கும் - பொழியும்; மதி - நிலவு; மறு - களங்கம். )

பாடல்பொருள்:

நீர் நிறைந்த கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் யாவருக்கும் தெளிவான அமுதத்தைத் தன் கதிர்களால் பொழிகின்ற நிலவின் மேல் உள்ள களங்கமானது, பெரியவர்களிடத்தும் சிறிதளவு குற்றம் உண்டானால், அது இப்பூமியில் உள்ள எல்லோராலும் அறியப்படும் என்பதை விளக்கிக் காட்டும்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில், நிலவிடம் பொருந்தி உள்ள களங்கமானது, பெரியவர்களிடமும் குற்றம் உண்டு என்ற தீமைப் பயனைத் தெரிவிக்கும் என்று கூறப்பட்டிருப்பதால் இது தீமை நிதரிசனம் ஆயிற்று. இப்பாடல்,

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
                                 --( திருக்குறள், 957 )

என்னும் திருக்குறளின் கருத்தை ஒட்டி எழுந்ததாகும்.

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதரிசன_அணி&oldid=3218464" இலிருந்து மீள்விக்கப்பட்டது