உள்ளடக்கத்துக்குச் செல்

தற்குறிப்பேற்ற அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

எ.கா.1:

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                சிலப்பதிகாரம்

விளக்கம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.

எ.கா.2:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாகக் கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

எ.கா.3:

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
                                நளவெண்பா

விளக்கம்:

நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதைக் கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்குறிப்பேற்ற_அணி&oldid=3632582" இலிருந்து மீள்விக்கப்பட்டது