பாவிக அணி
பொருள் அணிகளில் உள்ள மற்ற முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச் செய்யுளில் (ஒரு தனிப்பாடலில்) அமையுமாறு தண்டி ஆசிரியரால் கூறப்பட்டவை ஆகும். பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ பற்றியதாகக் கூறப்படுகிறது[1]
பாவிக அணியின் இலக்கணம்
[தொகு]பாவிகம் என்று சொல்லப்படுவது, காப்பியமாகிய தொடர்நிலைச் செய்யுளில் கவிஞரால் கருதிச் செய்யப்படுவதோர் குணம் ஆகும். இதனைத் தண்டி ஆசிரியர்,
பாவிகம் என்பது காப்பியப் பண்பே --(தண்டியலங்காரம், 91)
என்ற நூற்பாவால் கூறுகிறார்.
கவிஞரால் கருதிக் கூறப்படும் காப்பியப் பண்பு, தொடர்நிலைச் செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது அல்லாமல், தனித்து ஒரு பாட்டால் நோக்கிக் கொள்ளப் புலப்படாதது என்று தண்டியலங்கார உரை இவ்வணி அமையும் இயல்பு பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே ஏனைய முப்பத்து நான்கு அணிகளும் ஒரு பாடலில் கொள்ளப்படும் என்பது புலனாகும்.
தண்டியலங்கார உரையில் பாவிக அணிக்குச் சான்றாக,
- இராமாயணம்,
- பாரதம்,
- அரிச்சந்திர புராணம்
ஆகிய காப்பியங்கள் முழுவதும் வைத்து நோக்கிக் கொள்ளப்படும் பண்புகள் மிக அழகாகவும் சுருக்கமாகவும் கூறப்படுகின்றன. அவை வருமாறு:
- பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப;
- பொறையில் சிறந்த கவசம் இல்லை;
- வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை.
'பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப' என்பதற்குப் பொருள், 'பிறன் மனைவியை விரும்புவோர் சுற்றத்தொடும் கெடுவர்' என்பதாகும். இஃது இராமாயணத்தால் உணரப்படும்.
'பொறையில் சிறந்த கவசம் இல்லை' என்பதற்குப் பொருள், 'பொறுமையைக் காட்டிலும் சிறப்புற்ற பாதுகாப்பு இல்லை' என்பதாகும். இது பாரதத்தால் உணரப்படும்.
'வாய்மையில் கடியது ஓர் வாளி இல்லை' என்பதற்குப் பொருள், 'வாய்மையைக் காட்டிலும் துன்பத்தை அழிக்கத்தக்க கூர்மை உடையதோர் அம்பு இல்லை' என்பதாகும். இஃது அரிச்சந்திர புராணத்தால் உணரப்படும்.
தண்டமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் ஊடாடி நிற்கும் காப்பியப் பண்புகளை இளங்கோவடிகள் மிக அழகாகப் பதிகத்தில்,
- அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
- ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்
என்று கூறுகிறார். பாவிக அணிக்கு இளங்கோவடிகள் கூறுவதும் நல்ல சான்றாக ஆன்றோரால் கொள்ளப்படுகின்றது.