நீலகிரி மலையின மக்களின் இசைக்கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீலகிரி மலைத்தொடரிலுள்ள கோத்தகிரிப் பகுதி
தோடர், ஆண்டு : ~1870

நீலகிரி மலைத்தொடரில் வாழும் மலையின மக்கள் எனப்படுவோர் அங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, அம்மலைத்தொடரின், பல்வேறு மலைகளில் வாழும் பூர்வீக மக்கள் ஆவர். அவர்களில் தோடர், கோத்தர், இருளர் , குரும்பர், படுகர் ஆகிய ஐவரும் (Nilgiris tribes - Irula, Badaga, Toda, Kota and Kurumba) முக்கியமானவர்கள் ஆவர்.[1]. இவருள் தோடர், கோத்தர், இருளர் ஆகிய மூவரின் இசைப்பாங்கு இன்றளவும், நயம் மாறாமல் வளர்ந்து வருவதாக இசையறிஞர் இயம்புகின்றனர். அவர்களின் இசையில், தற்கால வாழ்வியல் சூழ்நிலைகளும், பழமையான கலச்சார அடிச்சுவடுகளும் காணப்படுகின்றன.

பொருளடக்கம்

மலையின மக்களின் இசையறிவு[தொகு]

மனிதன் உருவாக்கும், ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசைகளின் வழியே, இசை பிறக்கிறது. இசைக்கருவிகளின் வழியே, இசையானது, இசைக்கப்படும்போது, வெவ்வேறு முறைகளில், வெவ்வேறு கருவிகளில், அதன் உருவத்திற்கே ஒப்ப, இசை உண்டாக்கப்படுகிறது. மக்களின் உணர்வுகள், இசைக் கருவிகளின் வழியேயும் வெளிப்படுவது இயல்பு ஆகும். பின்பு அது கேள்வி ஞானமாகி, குறிப்பிட்ட இசையறிவாக ஆர்வமுள்ள, குறிப்பிட்ட மக்களிடையே நிலைபெறுகிறது. இங்கு தோடர், கோத்தர், இருளர் ஆகிய முதன்மையான மலையின மக்கள் மூவரின் இசையறிவும், இன்றளவும் பயன்படுத்தும், அவர்களின் இசைக் கருவிகளின் விவரங்களும், அவற்றின் செய்முறைகளும், இயக்கமுறைகளும், செப்பனிடும் முறைகளும், அவற்றிற்கே உரிய நிலைகளில் அறியப்படுகின்றன. அந்த மலையின இசைக் கருவிகள் இணைந்த நிலையில், அவற்றின் தன்மைகளை அடிப்படைக் கருவிகள், துணை நிலைக் கருவிகள் என்ற வகையில் விளங்கப் பெறுகின்றன. அந்த இசைக் கருவிகளின் இயக்க முறைகளுக்கும், ஆட்ட அசைவுக் கூறுகளுக்கும் உள்ள இணைவு நிலைகள், பொருத்திக் காட்டப்படுகின்றன.

மலையின மக்களிசையை ஆய்ந்தவர்கள்[தொகு]

மலையின மக்கள் இசைக் கருவிகள் கொண்டு இசைக்கும் குறிப்புகளை மட்டுமே, சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வர்க்கிஸ்[2], எட்கார் தர்ஸ்டன்[3] , பிரீக்ஸ்[4] ஆகிய அறிஞர்களும், பிலோ இருதயநாத் [5] , சு. சக்திவேல் [6] போன்றவர்களும், மலையின மக்களின் இசைக் கருவிகள் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளனர். கபில வாத்ஸ்யாயன்[7], சச்சிதானந்த வாஸ்யாயன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள நூலும், டாக்டர் மா. நவநீதகிருட்டிணன், கே. ஏ. குணசேகரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள 'கிராமிய நடனங்கள்' பற்றிய நூலும், டாக்டர் மு.இராமசுவாமி, டாக்டர் அ. அறிவுநம்பி ஆகியோரது கூத்து பற்றிய ஆய்வு நூல்களும், தமிழர் தோற் கருவிகள் பற்றிய ஆர். ஆளவந்தாரின் நூலிலும், நாட்டுப்புற இசைக் கருவிகளைப் பற்றிய செய்திகளிலும், நீலகிரி மலையின மக்களின் இசையறிவு பொதிந்து இருக்கின்றன.

மலையின மக்களின் இசைக் கருவிகள்[தொகு]

பீக்கி எனப்படும் கொகாலு
இசைக்கருவிகளுடன் இருளர், ஆண்டு:1871
தோடர்-ஆண், பெண். ஆண்டு: 1871
மங்கெ எனப்படும் இசைக் கருவி

குழலிசைக் கருவி, தோலிசைக் கருவி. நரம்பிசைக் கருவி, கஞ்சக் கருவி என்று இசைக்கருவிகளின் வகைகள் குறித்து செவ்வியல் இலக்கியத்தில் காண முடிகிறது. இம்மலை மக்கள் கொண்டுள்ள இசைக் கருவிகளில், நரம்பிசைக் கருவியைத் தவிரப் பிறவற்றைக் காண முடிகிறது.

 • கோத்தர் இசைக் கருவிகள் : இன மக்களிடம் குழலிசைக் கருவியான 'குரல்' வாத்தியம் காணப்படுகிறது. இதனை ஊதுகுழல், பீக்கி, குரல் என்றும் தமிழில் கூறுகின்றனர். கோத்தர்கள் பேசும் மொழியில் இதற்குக் 'கொலு' என்கின்றனர். மேலும், குழலிசைக் கருவியான 'கொம்பு' எனும் இசைக் கருவி ஒன்றும் காணப்படுகிறது. இவர்களது மொழியில் இதனை 'கொப்' என்கின்றனர். தோலிசைக் கருவியாக மத்தளம் எனும் இருபுற முழவு இசைக் கருவி உள்ளது. இம்மத்தளத்தைப் 'பர்' என்கின்றனர். தமிழில் மத்தளம் என்றும் 'மேளம்' என்றும் கூறுகின்றனர். ஒரு புற முடிவு வகையில் அமையும் தம்பட்டை எனும் ஒரு தோலிசைக் கருவியை இவர்கள் பயன்படுத்துகின்றனர். கோத்தர்கள் மொழியில் 'த பட்க்' என்று கூறுகின்றனர். தமிழில் 'தம்பட்டை' என்றும், 'கொட்டு' என்றும் அழைக்கின்றனர்.
 • இருளர் இசைக் கருவிகள் : இதே குழலிசைக் கருவி காணப்படுகிறது. இதற்குப் 'பீக்கி' என்று அழைக்கின்றனர். மத்தளத்தை, மத்தளம் என்றே அழைக்கின்றனர். இதனைத் தோளில் தொங்க விட்ட நிலையில் வாசிப்பர். குஞ்சப்பனை, கோளிக்கரை, மூப்பக்காடு, கொலக்கம்பை ஆகிய இடங்களில் காணப்படுகிற தோல் பானைத் தாளக் கருவி இருபுற முழவு ஆகும். இத்தோல் பானைத் தாளக் கருவியினை, 'கடிமெ' என்று அவர் தம் மொழியில் கூறுகின்றனர். இது ஒரு மண் பானையில் இருபுறங்களிலும் தோல் கொண்டு இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கருவி குன்னூர், கோத்த கிரிப் பகுதிகளில் வாழும் இருளர்களால் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. இவர்கள் பயன்படுத்தும் இரு மத்தளங்களில் ஒன்று, 'பொரெ/பெரெ' என்பதாகும்.'கும் கும்' என இசை தரும் மத்தளத்தை, 'கும் பொரை' என்று கூறுகின்றனர். குழலிசைக் கருவியை, 'கேல்' என்று கூறுகின்றனர்.
 • கஞ்சக் கருவிகள் : ஆடும் போது ஆடவர்கள் மட்டும் கால்களில், கால் மணிக் கச்சங்கள் அணிந்து கொள்கின்றனர். குமிழ் கொண்ட வட்டத் தகட்டுச் சால்ரா இரண்டு கொண்டு, 'சிங்கி' இசைக் கருவி இசைக்கப் படுகிறது. இதனை 'சால்ரா' போன்று வாசிக்கின்றனர். மேலும், இதனைச் 'சால்ரா' என்றும் அழைக்கின்றனர். வட்டமணித்தட்டு ஒன்றினை மரக்கட்டையால் அடித்துப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

மலையின மத்தளங்கள்[தொகு]

மலையின் மக்களிடையே தோலிசைக் கருவிகள், விலங்குகளை ஒட்டவும், வேட்டையாடவும், விலங்குகளிடமிருந்து தங்களையும், அவர்களின் குடியிருப்புக்களையும் காத்துக் கொள்ளவும் உரத்து வாசித்துக் கொள்ள பயன்படுகின்றன. இருளர்கள், கோத்தர்கள் ஆகியோரிடம் மத்தளம் எனும் இசைக்கருவி ஒரே வடிவம் உடையதாகவே விளங்குகின்றன. இரு மத்தளங்கள் இணைந்த நிலையில் பயன்படுத்துவது, இம் மலையின மக்களிடையே வழக்கமாக உள்ளது. அவற்றில் ஏற்படுத்தப்படும், இரு வேறு ஒலிப்பு முறைகள், தரத்தக்கவையில் ஒன்றினை 'கும்பொரெ' என்றும், மற்றொன்றினை, 'சிம்ள பொரெ' என்றும், ஒலிப்பு முறையால் வேறுபடுத்தி அழைக்கின்றனர்.[8]

மத்தளங்களின் உருவாக்கம்[தொகு]

இரு புற முழவு : மரத்தால் அல்லது தகர உலோகத்தால் செய்யப்பட்ட உருளை வடிவத்தின் இருபுறங்களும், பதப்படுத்தப்பட்ட தோல்களால் இணைக்கப்பட்டுள்ளன. இரு புற இணைப்பின் ஒரப்பகுதிகள் தோலிலிருந்து, தயாரிக்கப்பட்ட கயிறுகள் கொண்டு இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கடைமான், புள்ளிமான், காட்டு ஆடு, மாடு ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் தோல்களைப் பதப்படுத்தி, மத்தளத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

மத்தளங்களை இசைக்கும் முறை[தொகு]

 • மத்தளம் வாசிக்கும் முன் கோத்தர், இருளர் ஆகியோர் முன் நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர். தோல் பகுதி விரைப்பாக இருக்குமானால் நாதம் இனிமையாகவும் ஒலிப்புத்தன்மை கூடியதாகவும் அமையும். எனவே மத்தளம் வாசிப்பவர்கள், தம் மத்தளக் கருவிகளின் தோல் பகுதியினைச் சூடுபடுத்திக் கொள்ள, அடிக்கடி நெருப்பில் அனல் தைக்குமாறுசெய்து கொள்கின்றனர்.
 • இடப்புறக் கையால், இடப்புற மார்பின் பக்க வாட்டில் மத்தளத்தை அணைத்து, ஒரு புறத்தே இரு கைவிரல்களாலும் வாசிப்பர். முழவுப் பகுதிகளுக்கு மேற்பகுதியில், கட்டப்பட்ட கயிற்றின் வழியே இடப்புறத் தோளில் மத்தளம் தொங்க விடப்பட்டிருக்கும். மத்தளத்தை அணைத்துள்ளவாறு வாசிக்கும் கை விரல்களிலிருந்து, எழும் தாள இசை உரத்த தன்மையின்றியும், வலப்புறக் கை விரல்களால் வாசிக்கும் தாள இசை, உரத்த ஓசையுடையதாக இருக்கும். கோத்தர்கள் கொண்டுள்ள இரு மத்தளங்களில் ஒன்றான, குப்பர்' தரும் தாள நடை 'ட்டேட்..டே..டுபுக்கு..டுப்பே' என்பதாகும்.[9]
 • கோளிக்கரை இருளர்களிடம் பெறப்பட்ட, மத்தளம் (பொரெ) வாசிப்பு ஓசை முறையை, அம்மக்கள் வாசித்துக் காட்டிச் சொல்ல, ஒரு ஆய்வாளரால், கீழ்கண்டவாறு, குறிக்கப் பட்டவை ஆகும்.
  • 'கின்வர்' தரும் தாள நடையில், 'டின்..டேக்..டக்ன்..டேக்' என்று சொல்லிக் காட்டுகின்றனர். இருளர் கொண்டுள்ள கும் பொரெ: 'கும்..தா..கும..தா..கும்..தா..கும்..தா' எனவும்,
  • சிம்ள பொரெ: 'சட்..டை..ஜெட்..டா..சட்..டை..ஜெட்..டா..'எனவும் தாள நடைகள் தருகின்றன,
 • பொக்காபுரம் இருளர்கள் வாசிக்கும் இசைக்கருவிகளின் வாசிப்பு நடைகளை, வாயினால் சொல்லிக் காட்ட முடியவில்லை. மாறாக, இசைக் கருவிகளின் வழியே மட்டுமே நடைகளை உணர்த்திக் காட்டும் திறன் பெற்றுள்ளனர். வாய் வழியே வாசிப்பு நடைகளைச் சொல்லிக் காட்டும் அளவுக்குத் திறன் பெற்றிருக்கவில்லை.
 • குன்னுரர் வட்டத்தில் உள்ள மூப்பக்காடு என்னும் ஊர் இருளர்கள், 'ஜிப்..ஜிபிக்கா..ஜிபிம்..ஜிப்..ஜிபிக்கா..ஜிபிம்..', என்றவாறு மத்தளத்தில், நடை வாசிக்கும் முறையினை வாய் வழியே சொல்லிக் காட்டு கின்றனர்.[10]

மத்தளங்களின் செப்பனிடுதல் முறை[தொகு]

 • மத்தளத்தின் தோல் பகுதி உடைபட்டாலோ, வெடிப்பு ஏற்பட்டாலோ, தெறித்துப் பிறவு ஏற்பட்டாலோ, வேறு தோல் பொருத்திக் கொள்வர். தோலிசைக் கருவியில் வெடிப்பு ஏற்படின், சேங்கொட்டைப் பால் கொண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில், பூசிக் கொண்டு வாசிப்பார்கள். சில வேளைகளில் மெல்லிய நரம்பினாலோ, நூல் கொண்டோ தைத்துக் கொள்வர். பின்னர், அதை வளையங்களில் இணைத்து வாசிப்பது வழக்கம். இவர்கள் வாழிடங்களில், தோலுக்குப் பஞ்சமில்லை. மலை வாழிடம் என்பதால், தோல் அடிக்கடிக் குளிரில், பதம் இழந்து, விரைப்புக் குறைந்து தொய்வு ஆகி விடுகிறது. வெப்பம் மிகுதியாகையால், விரைப்பு அடிக்கடிக் கூடி விடும். இந்த சூழ்நிலைகளில், வளையங்களில், இழுத்துக் கட்டப்பட்ட கயிறுகளைத் தொய்வுபடுத்திக் கொள்வர்.
 • 'கோத்தர்' போன்ற, சில மலையின மக்கள் இரண்டு மத்தளங்கள், இரண்டு தம்பட்டைகள் கொண்டு வாசிப்பது வழக்கம். எனவே இரண்டில் ஒன்று பழுதானால் பாதகமில்லை. உடனுக்குடன் செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய தேவை, எழுவது இல்லை. குடியிருப்புக்களுக்கு அருகிலேயே, இவர்களின் வாசிப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் அமைவதால், மத்தளத்தில் பழுதேற்படின், அவர்களின் குடியிருப்புகளில் இருந்து, வேறு ஒன்றை எடுத்துப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால், சேங்கொட்டைப் பால் போன்ற ஏனைய பொருட்கள் கொண்டு, உடனுக்குடன் செப்பனிட்டுக் கொள்ளும் சூழ்நிலை, இவர்களிடத்தில் உருவாவது இல்லை.

மலையினத் தம்பட்டை[தொகு]

தோலிசைக் கருவியான 'தம்பட்டை' என்னும் இந்த ஒரு புற முழவுக் கருவி அடிகுச்சிகள் கொண்டு, தொலை தூரத்திற்கு, கேட்கும் அளவுக்கு ஓசை எழுப்பக் கூடியதாகும். மத்தளத்தைப் போலவே, இக்கருவியும், இம் மக்களின் வாழ்வோடு தொடர்பு கொண்டு விளங்குகிறது. மலையின ஆடவர்கள் அனைவராலும், தோலிசைக் கருவிகள் எளிதாக வாசிக்க முடிகின்றது.

தம்பட்டை உருவாக்கம்[தொகு]

ஒரு புற முழவு வகையில் அடங்கிய, தோலிசைக் கருவி தம்பட்டை ஆகும். இரண்டு சாண் அளவு, குறுக்கு வட்டம் கொண்ட ஒரு இரும்பால் ஆன வளையத்திலோ, மரத்தாலான வளையத்திலோ, ஒரு புறம் இழுத்துக் கட்டப்பட்டு, தோலிசைக் கருவியின் மறுபுறம் கயிறுகளால் பின்னப் பட்டிருக்கும், கயிறுகள் தோலிலிருந்து எடுக்கப்பட்டது. இதனை 'வார்' என்று அழைப்பர். தோல்கள் கடை மான், புள்ளி மான், காட்டு ஆடு, மாடு ஆகியவற்றிலிருந்து எடுத்து, பதப்படுத்தப்பட்டதாக அமைந்திருக்கும்.

தம்பட்டையை இசைக்கும் முறை[தொகு]

 • 'டண்.. டண்.. டண்..டண்..டண்..டண்' என்றும்,'ஜட்.. ஜெண்டே..ஜட்..ஜெண்டே..என்றும்
 • 'ஜெட்டடே.. ஜெண்டே.. ஜெட்டடே..ஜெண்டே' என்றும் பல நடைகளில் தம்பட்டை இசைக்கப்படுகிறது.
 • கோத்தர்கள், 'டட்டிக்குடிட்.. டிக்கே..டாட்டிக்குடிட்..டிக்கே' என்று தம்பட்டையில் நடைகள் வாசிக்கின்றனர்.

மத்தளத்தைப் போலவே, தம்பட்டை இடப்புறத் தோளில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். இடப்புற மார்பின் பக்க வாட்டில், தம்பட்டையின் முழவுப் பகுதி தெரியுமாறு, இடப்புறக் கை அணைப்பில் வைத்து, இரு கை விரல்களின் பிடிப்பில், இரு குச்சிகள் கொண்டு, இது இசைக்கப்படும். இடப்புறக் கைக்குச்சி தட்டையாக இருக்கும். இக்குச்சிகள் இரண்டும், இரண்டுச் சாண் அளவு நீளம் உடையவையாக இருக்கும். இடப்புறக் குச்சி ஒலிப்பு முறை, உரத்த ஒலி அற்று விளங்கும். உருண்டைக் குச்சி, உரத்த ஒலி தரத்தக்கதாக அமையும். தம்பட்டையின் ஒலிப்பு முறையில், சுதி கெடாமல் மேல் நிலை, அடி நிலை என்று கொள்ளும் அளவுக்கு, உருண்டைக் குச்சியின் உரத்த நிலை வாசிப்பும், தட்டைக் குச்சியின் மென்மை நிலை வாசிப்பும் அமைவதை உணர்ந்து அறியலாம். மத்தளத்தைப் போல, இதனை வாசிப்போர் அடிக்கடி நெருப்பில், அனல் தைக்குமாறு செய்து கொள்கின்றனர்.

தம்பட்டைகளின் செப்பனிடுதல் முறை[தொகு]

தம்பட்டையின் தோல் பகுதியில் ஒட்டை அல்லது விரிசல் ஏற்படுமாயின், தோல் பகுதியை எடுத்து விட்டு, வேறு தோலினைப் பயன்படுத்திக் கொள்வர். இவர்களது தம்பட்டையின் தோலை, அடிக்கடி மாற்றிக் கொள்வதை விட, வாசிக்கப் பயன் படுத்தும் அடி குச்சிகளையே, அடிக்கடி மாற்றிக் கொள்கின்றனர். தோலில் விரைப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டி, முழவுப் பகுதியின் பின்புறத்தே, பின்னப் பட்டிருக்கும் கயிறுகளை, இழுத்துக் கட்டிக் கொள்கின்ற முறையும், சில வேளைகளில் பின்பற்றப்படுகிறது.

மலையினத் தோல்பானைத் தாளிக் கருவி[தொகு]

மண், மரம், உலோகம் ஆகியவற்றால் இசைக் கருவிகள் செய்யப்படுகின்றன. மண்ணாலான இசைக் கருவி, தோல்பானைத் தாளக் கருவி ஆகும். இதனைக் 'கடிமெ’ என்று இருளர்கள் அழைக்கின்றனர். நீலகிரி மலையில் காணப்படும் இசைக் கருவிகளும், மண்ணாலும் தோலாலும் இணைத்துச் செய்யப்பட்ட இந்த “கடிமெ" இசைக்கருவி குன்னூர் வட்டத்தில் உள்ள குஞ்சப்பனை, கோளிக்கரை, செம்பனாரை, மூப்பக்காடு, கொலக்கம்பை ஆகிய பகுதிகளில் வாழும் இருளர்களிடம் மட்டுமே காணப்படுகிறது.

தோல்பானைத் தாளிக் கருவி உருவாக்கம்[தொகு]

மண்ணாலான குடம் போல் வடிவம் பெற்றுள்ள இக் ’கடிமெ’, இருபுறமும் வாய்ப் பகுதிகள் அமைந்திருக்குமாறு செய்யப் படுகிறது. பின்னர், சுடப்பட்டு எடுக்கப் படுகிறது. இதன் இரு புற வாய்ப் பகுதிகளிலும், பதப்படுத்திய தோல்கள் கொண்டு ஒட்டப்பட்டு, தோல் கயிறுகளால், மண் குடப் பகுதிகளின் மேல் இழுத்துப் பிணைத்துக் கட்டப்படுகின்றது. தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, வாசிப்பதற்கு ஏற்ப தோல் கயிறும் அமைக்கப்படுகிறது. ஏனைய தோலிசைக் கருவிகளின், தோல் பகுதியை அடிக்கடிச் சூடுபடுத்திக் கொள்வது போல, இதையும் செய்து கொள்கின்றனர்.

தோல்பானைத் தாளிக் கருவியை இசைக்கும் முறை[தொகு]

    'குண்டக்.. குண்டக்..
    குண்டக்.. குண்டக்..' என்றும் [11]

    'னக்கு..னக்கு..
     னக்கு..னக்கு..
    'டுன்னுக்கு..டங்க்..
    முன்னுக்கு டங்க்..' என்றும் [12]

    'குஞ்சனுக்குஞ்..சனுக்
    குஞ்சனுக்குஞ்..சனுக்’ என்றும்[13]

என பலவித நடைகளில், 'கடிமெ' வாசிக்கப்படுகின்றது. கை விரல்களால் வாசிக்கப்படும் இத் தோல்பானைத் தாளக் கருவி, தோளில் தொங்க விட்ட நிலையில், இரு புறத்தேயும் வாசிக்கப்படுகிறது,

தோல்பானைத் தாளிக் கருவியை செப்பனிடும் முறை[தொகு]

மண் குடத்தில் விரிசல் கோடுகள் ஏற்படின், ஒலிப்பில் தரம் இருக்காது. எனவே, வேறு ஒரு குடத்தில் தோல்கள் போர்த்திக் கட்டப்படுகிறது. இக்கருவி, ஏனைய இசைக் கருவிகளினூடே இணைந்து வாசிக்கக் கூடியது ஆகும். எனவே, உடனுக்குடன் வாசித்தாக வேண்டிய சூழ்நிலை தேவையில்லை என்பதால், விரிசல் பகுதியில் ஏதேனும் செப்பனிட்டு ஒட்டுதல் செய்து, பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுவது இல்லை.

மலையின குரல் வாத்தியம்[தொகு]

இருளர்களால் 'பீக்கி' என்றும், கோத்தர்களால் 'கொலு' என்றும் அழைக்கப்படும் குரல் வாத்தியம், குழலிசைக் கருவி ஆகும். மரத்தாலான, இக்குழலிசைக் கருவியின் ஒலிவெளிக் கிண்ணங்கள், கோத்தர் இனமக்களிடத்தில், உலோகங்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன. மரத்தாலான, ஒலிவெளிக் கிண்ணத்திலிருந்து வெளிப்படும் இசை, உலோகத்தாலான ஒலிவெளிக் கிண்ணத்திலிருந்து, சற்று வேறுபட்டுக் கேட்க, இனிமையாகவும் மென்மையாகவும் அமைகிறது.

மலையின குரல் வாத்திய உருவாக்கம்[தொகு]

முழங்கை அளவு நீளம் கொண்ட இக்குழல் இசைக் கருவி, மரத்தால் செய்யப்படுகிறது. ஒரு புறம் அகன்றும், மறுபுறம் வரவரக் குறைந்தும் அமையப் பெற்று இருக்கும். இதன் குழலின், அகன்ற குழல் பகுதியில், ஒரு ஒலி வெளிக் கிண்ணம் பொருத்தப்பட்டிருக்கும். மறுபுறம், வாயில் வைத்துக் காற்றைச் செலுத்தி வாசிக்கப் படுவதற்காக, புல்லால் அமைந்த ஒரு பொருள் செருகப் பட்டு இருக்கும். புல்லால் அமைந்த பொருளுக்கும், குழல் பகுதிக்கும் இடையே, பறவை இறகின் வெண்மையான குழல் பகுதி அமைந்து இருக்கும். பறவை இறகுகளின் வெண்மையான குழல் பகுதிக்கும், மரத்தால் செய்யப்பட்ட குழல் பகுதிக்கும் இடையே, ஒரு வட்ட உலோகத் தட்டு ஒன்று பொருத்தப் பட்டிருக்கும். இப்போது புழக்கத்திலுள்ள ஐம்பது காசு நாணயம் போல, அது வடிவம் பெற்றிருக்கும். இது மரத்தாலான குழல் பகுதிக்கும், வாய்ப் பகுதியில் வைத்து வாசிக்கும் புல் குழல் பகுதிக்கும், இடையே அமைக்கப் பட்டு இருக்கும். புல் குழல் பகுதியை, உதட்டில் வைத்து வாசிப்பதற்கு ஆதாரமாக, இந்த வட்டத்தட்டு துணைச் செய்கிறது. ஒலி வெளிக் கிண்ணம் பொருத்தப்பட்ட பகுதிக்கும், குழல் பகுதிக்கும் இடையே பொருத்திக் கொள்வதற்கு ஏற்றாற் போல, குரல் வாத்தியம் அமைக்கப்பட்டிருக்கும். சில இடங்களில், ஒலிவெளிக் கிண்ணமும், குழல் பகுதியும், பிரித்துப் பொருத்த முடியா வண்ணம், ஒரே மரத்திலிருந்து, கடைந்து எடுக்கப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கும்.

குரல் வாத்தியத்தை இயக்கும் முறை[தொகு]

மரக்குழல் பகுதியில், ஐந்து துளைகள் இடப் பட்டிருக்கும். குழலிசைக் கருவியைக் கையால் பிடித்து, வாயில் வைத்து, துளைகளைக் கை விரல்களால் அடைத்தும், விடுத்தும், மூச்சு இழுத்து வாசிக்கின்றனர். நாட்டுப்புறங்களில், 'ஒத்தூதிக் குழலிசைக் கருவி' என்று ஒன்று உண்டு. இதனை வாய் வழியே, காற்றினைக் கொடுத்து, ‘ம் . . ம் . . ம் . . ம்’ எனத் தொடர்ந்து ஒரியல்பு இசை தருமாறு இயக்குவர். இதனைக் கை விரல்கள் கொண்டு, துளைகளை அடைத்தும் விடுத்தும் செய்வதில்லை. இந்த குழலிசைக் கருவியை வாசிப்போர், தொடர்ந்து இசைக்குமாறு செய்யவேண்டி, வாய்ப் பகுதியில் காற்றைச் சேமித்துக் கொண்டு, தொடர்ந்து குழலுக்குள் செலுத்துவர். ஒத்தூதிக் குழல் வாசிக்கும் கலைஞர்களின் வாய் புடைத்திருப்பது போலவே, இடைவிடாது கை விரல்களால் வாசிக்கும் கலைஞர்களின் வாயும் புடைத்திருக்கும்.

          'லாலி..லாலில்லே..லே'
          'லாலி..லாலில்லே..லே' [14]

என்றவாறு தொடர்ந்து, சந்த அமைப்பினைத் தருவதாகக் கலைஞர்கள் இசைப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

 • 'கேல்' இசைக் கருவியில்,

          'லலாலி..லாலிலி..லாலே'
          'லலாலி..லாலிலி..லாலே'

என்றவாறு, இசை நடை அமைந்து இருப்பதாகக் கூறுகின்றனர். கோளிக்கரை இருளர்கள் வெவ்வேறு, பாடல் மெட்டுக்களை, தாம் ஆடும் ஆட்டத்திற்கு ஏற்றாற் போல, குரல் வாத்தியம் கொண்டு வாசிக்கின்றனர்.இக்குரல் இசைக்கருவியை, வாசிக்கத் தொடங்கும் முன், வாயின் எச்சிலைச் செலுத்தி, ஒலிவெளிக் கிண்ணம் வரை அமைந்துள்ள குழல் பகுதியை ஈரப்படுத்துவது வழக்கம். ஏனெனில், புல் குழல் பகுதி, ஈரத்தில் தோய்ந்தாலன்றி, நல்ல நாதம் தராது. அவசரமாக வாசிக்க வேண்டிய, சூழ்நிலைகள் வந்தால், எச்சிலுக்கு மாற்றாகத் தண்ணீரையேனும் ஊற்றி, அந்த குழல் உறுப்புகளை ஈரப்படுத்துவது உண்டு.

குரல் வாத்தியத்தைச் செப்பனிடும் முறை[தொகு]

இக்குழலிசைப் பகுதிகளான, 1) புல்குழல் பகுதி நூலால் சுற்றப்பட்டு, புல்குழல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள, 2) பறவை இறகின் குழல் பகுதி வட்டத்தட்டு, 3) குழாய்ப் பகுதியில் பொருத்தும் சிறு குழல் பகுதி, 4) குறுகிய நிலையில் தொடங்கி, வர வரப் பெருத்துள்ள, ஐந்திலிருந்து ஏழு துவாரங்கள் வரை கொண்டு அமைந்த குழல் பகுதி, 5) குழல் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள, ஒலிவெளிக் கிண்ணப் பகுதி ஆகிய உறுப்புகளைக் கொண்டு,உருவாக்கப்பட்ட, இக்குரல் வாத்தியத்தில் பழுது ஏற்படின், பழுது ஏற்பட்ட பகுதியை மட்டும் மாற்றிக் கொண்டு வாசிக்கின்றனர்.

மலையின கொம்பு இசைக்கருவி[தொகு]

'கொம்பு' என்பது மூன்று பிரிவுகளால் இணைக்கப்பட்டு, அரை வட்ட வடிவமான அமைப்புக் கொண்ட குழலிசைக் கருவி ஆகும். கோத்தர் கூறும் கொம்பு இசைக் கருவியின் ஓசை, நீலகிரி மலையின மக்கள் பயன்படுத்தும் ஏனைய இசைக் கருவிகளின் ஒலிப்புச் சக்தியை விடக் கூடுதலானது. மலை முகடுகளில் நின்று கொண்டு வாசித்து, அடுத்த மலையில் வாழும் தம் தோழர்களைக் கூவி அழைத்திட, இது பெரிதும் துணையாக இருந்து இருக்கிறது. இன்று இவ்வழக்கம் குறைந்து காணப்படுகிறது.

மலையின கொம்புபின் உருவாக்கம்[தொகு]

வெண்கல உலோகத்தால் செய்யப்படும் இக் கருவி, குறுகிய நிலையில் தொடங்கி, சிறுசிறிதாகப் பெருத்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இது மூன்று முழத்திலிருந்து ஐந்து முழம் வரை நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டு இருக்கும். உள்ளங்கை அளவுள்ள ஒலி வெளிக் கிண்ணமாக, வெளிப்புறக் குழல் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். அரை வட்ட வடிவமாக வளைக்கப்பட்டுப் பட்டறைகளில் வார்த்து எடுக்கப்படும். இந்த குழல் பகுதியின் மூன்று பிரிவுகளின் இணைப்புகளில் வேலைப்பாடுகள் அமைந்த தகடுகள் வெளிப்புறத்தே அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். இது மூன்று கிலோவிலிருந்து, ஐந்து கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும். வாயில் வைத்து வாசிக்கும் கொம்பின் பகுதி, உதடுகள் அமைந்து காற்றை வெளிச் சிதறாமல் குழலுக்குள் செலுத்தும் அளவுக்கு வசதியாக, பிறை போலச் செய்த இரண்டு வடிவப் பொருள்களால் பொருத்தப்பட்டு இருக்கும்.

மலையின கொம்பினை இசைக்கும் முறை[தொகு]

இந்த கொம்பிசைக் கருவியில், அடி வயிற்றிலிருந்து மூச்சிழுத்து, வாய்ப் பகுதியில் காற்றைச் சேமித்து வைத்து, உதடுகள் அதிரக் காற்றை அழுத்தமாகச் சிதறிச் செலுத்துவர். குரல் வாத்தியத்தில் உதட்டின் வழியே காற்றைச் சிதறாமல், குழல் பகுதிக்குள் செலுத்துவர். இவ்வாறு இசைக்கும் முறைகளின் வேறுபாடுகள், இரு குழலிசைக் கருவிகளுக்கும் இடையே அமைகின்றன. வளைந்த பகுதிகளைப் பிடித்து, வானத்தைப் பார்த்த நிலையில், ஒலிவெளிக் கிண்ணப் பகுதி அமைய, கொம்பு வாசிக்கப்படும். குரல் வாத்தியம் போல், இதில் வாசிப்பது இல்லை. மாறாக, ஒரே மூச்சில்,

     'குளு..குளு..குளு..ஊய்ய்..'
     'குளு..குளு..குளு..ஊய்ய்..' [15]

என்று வாசித்து விட்டு அமைவர். குரல் வாத்திய ஒலிக்கு, இடையே இடையிடையே, ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, கொம்பு வாசிப்பது வழக்கம். கொம்பு இசைக் கருவி, மத்தளம், தம்பட்டை ஆகியவற்றை வாசிக்கும் கலைஞர்கள், இருவராக இணைந்த நிலையில் வாசிப்பது போலவே, கொம்பு இசைக் கருவி வாசிப்போரும், இருவராக இணைந்து வாசிக்கின்றனர். யானைப்பிளிறும் முழக்கமும், இக்கொம்பின் ஒசையும் ஒருமித்து இருக்க உணரலாம்.

மலையின கொம்பினைச் செப்பனிடும் முறை[தொகு]

கொம்பு இசைக்கருவி, வெண்கல உலோகத்தால் எடையுள்ளதாகச் செய்யப்பட்டு இருப்பதால், அடிக்கடி பழுதேற்படும் வாய்ப்பு இதற்கு இல்லை. அவ்வாறு பழுதேற்பட்டால், தங்கள் பட்டறைகளில், அவர்களேச் செப்பனிட்டுக் கொள்கின்றனர்.

மலையினக் கஞ்சக் கருவிகள்[தொகு]

தோலிசைக் கருவிகளுக்கும், துளை இசைக் கருவிகளுக்கும், துணை நிலையாக அமைந்து இசையெழுப்ப உதவும் இசைக்கருவிகளே, கஞ்சக் கருவிகள் எனப்படுகின்றன. கால்மணிக்கச்சம், குமிழ் கொண்ட வட்டத் தகட்டுச் சால்ரா, வட்டமணித் தட்டு ஆகிய இசைக் கருவிகள் கோத்தர்கள் ஆடும் ஆட்டங்களில் மட்டுமே பரவலாகக் காண முடிகிறது. கோத்தர் இன மக்களிடம் ஒரு கொல்லம் பட்டறை, அவர் தம் குடியிருப்புகளில் கட்டாயமாக அமைந்திருக்கும் என்பது தனிச்சிறப்பு ஆகும்.

கால் மணிக்கச்சம்[தொகு]

இதனை ஆண்கள் மட்டுமே, இரு கால்களிலும், கட்டிக் கொண்டு ஆடுவர். பெண்கள் கட்டிக் கொண்டு ஆடுவது இல்லை. இரண்டு அடியிலிருந்து, ஐந்து அடி வரை மணிக் கோவை செய்யப்பட்டுக் கால்களில் கட்டிக் கொள்ளுமாறு இருப்பதே, கால் மணிக்கச்சம்[16] என்று அழைப்பர்.. ஒவ்வொரு மணியும், கயிறுகளால் கோவை செய்யப்படுவதற்கேற்ப, ஒரு துளையுள்ள, ஒரு இணைப்புடன் இருக்கும். அந்த சிறு மணியானது, கீறலிடப்பட்ட உருண்டை வடிவமாக, உட்புறத்தில், வெளியே வராதபடி, இடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மணிக்கும் இடையே சிறு சிறு இடைவெளிகள் இருப்பதால், மணிக்கு மணி இடித்து ஒலி தருகின்றன. காலடி வைப்புகள் செய்யும் போது, ஒவ்வொரு முறையும் தாளத்தை உணர்த்துமாறு ஒலி எழும்புகிறது.

வட்டத்தகட்டுச் சால்ரா[தொகு]

இது இரும்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து செய்யப்படுகிறது. 'சிங்கி' என்று, இதனை நாட்டுப் புறங்களில் கூறுவர். 'சால்ரா' என்று மலையின மக்களால் கூறப்படும் இக்கருவி, ஒரே வட்ட வடிவமாக இரண்டு சமதளப் பகுதிகளைக் கொண்டிருக்கும். இது பட்டறையில் வைத்து உருக்கி, தகடாகத் தட்டிச் செய்யப் படுகிறது. இந்த சால்ராவின் நடுப்பகுதி,உட்புறமாகக் குமிழ்ந்து இருக்கும். எனவே, வெளிப்புறத்தின் நடுப்பகுதி, குவிந்து இருக்கும். இதனை இசைப்பதற்கு ஏற்ப, இவ்விரண்டு குமிழ்ப்பகுதிகளின் நடுவில் உள்ள துளை வழியே, கயிறு கட்டப்பட்டு இருக்கும்.[17] நாட்டுப்புறங்களில் 'சிங்கி', சம கனம் உடையவையாக இருக்கும். சுதிக் குறைவு ஏற்படாதவாறு விளங்க, இக்கனம் மேற் கொள்ளப்படுகிறது, மலையின மக்கள் பயன்படுத்தும் இந்த வட்டத் தகட்டுச் சால்ராவில், இவ்விதக் கனம் மேற்கொள்ளப் படுவது இல்லை.

நீலகிரி மலையின மக்களிடத்தில் இசைக்கருவிகளின் நிலைமை[தொகு]

 • சிறுவர்கள் தற்போது பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். குழலிசைக் கருவியைப் பழகிக் கொள்ளும் வாய்ப்புக்களும், இளைஞர்களிடையே இன்று குறைந்து வருகின்றன. மேலும் இசைக் கருவிகள் செய்முறை, இயக்குமுறை, செப்பனிடும் முறை ஆகிய முறைகளும் முன்பிருந்த அளவுக்கு வளராமல் உள்ளன. கஞ்சக் கருவிகள் அண்மைக் காலங்களில் கோயில் பூசைக்காகப் பயன் படுத்தும் நோக்கில் வந்தவை ஆகலாம். பின்னாளில் இக்கஞ்சக் கருவிகள் ஆட்டத்திற்கு வாசிக்கப்படும், ஏனைய இசைக்கருவிகளுட்ன் இணைந்துள்ளன. இக்கஞ்சக் கருவிகளை இயக்குவோர் பெரும்பாலும் சிறுவர்களாகவே உள்னனர்.
 • இசைக் கருவிகள் ஆட்டத்தின் போது, தொடர்ந்து உரத்த நிலையில் வாசிக்கப்படுவதால், ஆட்டத்தின் போது பாடிக் கொள்ளும் ஆட்டப் பாடல்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் இவர்களிடம் குறைந்துள்ளன.
 • இளைஞர்கள் இன்று தோலிசைக் கருவிகளை வாசிக்க முன் வரும் அளவுக்கு, துளை இசைக் கருவிகளை இயக்க முன்வருவதில்லை. தாள இசைக்கருவிகளை விடக் குழலிசைக் கருவி. களை வாசிக்க அதிகப் பயிற்சி அவசியப்படுகிறது. சிறுவர்கள் ஒரு வகைப் புல்லிலிருந்து, எடுக்கப்பட்ட ஒரு குழலைக் கொண்டு இடைவிடாது வாயில் சேமித்து வைத்துள்ள காற்றைச் சீராக வெளிப்படுத்தி வாசிக்கின்றனர். பின்னரே குரல் வாத்தியம் வாசிக்கவும் அறிகின்றனர்.
 • குரல் வாத்தியம் இசைக்கின்ற திறன் இம்மக்களிடையே போற்றுதற்குரிய ஒன்றாக விளங்குகின்றது. துளைகளைக் கைவிரல்களால், அமைத்தும் விடுத்தும் வாசிக்கும் முறையில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. வாசிக்கும் விரல்கள் இருப்பிடத்திலிருந்து, வெவ்வேறு துளைகளுக்கு நகர்த்தி வைக்கப்படுவது, குறைவாக இருக்கிறது. கை விரல்கள் நகர்த்தப்படும் நிலை வளரும்போது, குழல் துவாரங்களில் வளர்ச்சிநிலை ஏற்படும்.
 • ஆட்டத்திற்கு வாசிக்கப்படும் இசை நடையிலிருந்து சமயச் சடங்குகள், சாவுச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்கு வாசிக்கும் நடையில் வேறுபாடு இருக்கிறது. ஆட்டத்தின்போது, வாசிக்கப்படும் தாள நடை முறையான வேகநடையில் அமையும்.
 • சடங்கு முறைக்கு ஆட்டம்இன்றி இசைக்கருவிகள் மட்டும் முழக்கிடும் இசைநடை முறையான வேக நடையில் தாளம் அமையாது. இழுத்துப்பாடும் முறையில் அமையும் தொகையறா போல தாள நடை இழுத்தவாறு அமைதியூாக அமையும்.
 • நாட்டுப்புறங்களில் உள்ளது போல இங்கும் இசைக்கருவிகளின் முழக்கங்கள் உரத்து ஒலிக்கப்படுகின்றன. இம்மலையின் மக்களிடையே தனித்தனிப் பேச்சு மொழிகள் உள்ளன. எனினும் இவர்களிடம் ஆட்டப் பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை. தோடர்களிடம், இசைக்கருவிகள் இல்லை. எனவே அவர் தம் ஆட்டங்களின் போது, பாடல் பாடிக்கொண்டு ஆடுகின்றனர். இசைக்கருவிகளை வாசிக்கும் கோத்தர், இருளர் ஆகியோரிடம், ஆட்டப்பாடல்கள் காணப்படவில்லை. மாறாக, இசையையே, பாட்டாகப் பின்பற்றுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1871 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணம்
 2. “Koth ' is a clarionet made by the Kota themselves. It is51 cms. long and the circumference of its outer is 6.8 cm. “Koth is a semi-circular brass-made bugle which the Kota purchase from the markets. Another drum. cylindrical in shape (17 long and 36 in circumference), both the ends of which are covered with the skin of deer or cow is called par. The drumming of this is done by fingers of both the hands on either side. -Bulletin, Vol. XVIII. No. 2, April 1969, Anthropological Survey of India, The Kota, Verghese P. 120.
 3. The resemblance was hightened by the distant sound as of pipers, produced by the Kota band (with two police constables in attendance), composed of four kotas, who made a weired noise with drums and flutes as , they drew near the scene of action. -Castes & Tribes of South India, E. Thurston, P. 148.
 4. On the seventh day they decorate themselves with leaves tie buffaloe horns to their heads, and go through various. appropriate pantomimes. The women also dance at this feast only; they sing at the same time, which is an improvemerit on the drum and horn accompaniment of the men's dancing. The primitive tribes of the Nilgiris, p. 45. James wilkinson Freeks, P. 45
 5. நூல்: கொங்கு மலைவாசிகள்; ஆசிரியர்: பிலோ இருதயநாத்
 6. நூல் : தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள் வாழ்வும் வரலாறும்; ஆசிரியர் : சு. சக்திவேல்.
 7. நூல் : இந்தியக் கிராமிய நடனங்கள்; ஆசிரியர் : கபில வாத்ஸ்யாயன் (தமிழில் எம். ஏ. , அப்பாஸ்)
 8. தகவலாளர் : ரமேஸ், 42 வயது, கோளிக்கரை 30.10.86
 9. தகவலாளர், எஸ். பெல்லன், 58 வயது, சோலூர் கோக்கால் 5.4.86
 10. தகவலாளர், சித்தன், 40 வயது, மூப்பர்காடு, 12:386
 11. 37 மேலது
 12. 38 மேலது
 13. 39 மேலது
 14. .1. மேலது 2. எஸ். முனுக்காலன், 65 வய்து, சோலூர் கோக்கால் 8.11.86
 15. எஸ். முனுக்காலன், சோகூர் கோக்கால், 8.11.86
 16. தமிழில் ஆய்வாளர் - கே.ஏ. குணசேகரன்
 17. கொங்கு மலைவாசிகள், பிலோ இருதயநாத் - பக்கம். 24.

உயவுத் துணைகள்[தொகு]

 • Madras District Gazetteer the Nilgiris by W. Francis - The name Irula is supposed to be derived from the Tamil Irula, 'darkness' which may refer either to the gloomy jungles if which they live or to their very swarthey complexions
 • பாரதப் பழங்குடிகள் எஸ். ஆர். வேங்கடராமன்
 • தமிழ் நாட்டுப்பழங்குடி மக்கள் வாழ்வும் வரிலாறும், டாக்டர் சு. சக்திவேல்
 • இருளர் கால் வழிகளும் உறவு முறைச் சொற்களும், ஆராய்ச்சி மலர் 5, 19, இதழ் 3, ஆர். பெரியாழ்வார்.
 • தாட்டுப்புறவியல் ஒரு விளக்கம், டாக்டர் கோ. கேசவன்
 • தோற்பாவை நிழற்கூத்து. மு. இராமசாமி
 • மார்க்சிய சமுக இயல் கொள்கை. நா. வர்ணமாமலை
 • கரு. அழ. குணசேகரன் நூல்கள் (தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகள்)

வெளியிணைப்புகள்[தொகு]