தோடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோடர்
Todas
Kandelmund toda 1837.jpg
தோடா மக்களின் வாழ்விடத்தை (மந்து) விவரிக்கும் எண்ணெய்யோவியம். ரிச்சர்ட் பேரோனால் 1837 ஆம் ஆண்டிற்க்கிடையில் வரைந்த ஓவியம்.
மொத்த மக்கள்தொகை
(~1000)
மொழி(கள்)
தோடா மொழி
சமயங்கள்
இந்து சமயம் மற்றும் மரபற்ற நம்பிக்கைகள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோத்தர், காடர்
தோடர் இனத்தின் இரு ஆண்களும் ஒரு பெண்ணும். இவ்வொளிப்படம் 1870களில் பெயர் தெரியாத ஒருவர் எடுத்தது. இவர் மெட்ராஸ் ஸ்க்கூல் ஆஃவ் ஆர்ட்ஸைச் சேர்ந்தவர் (1871-72). இப்படம் ஜேம்ஸ் நில்க்கின்சன் பிரீக்ஸ் (James Wilkinson Breeks) என்பாரின் 'An Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris' (India Museum, London, 1873)" என்னும் தொகுப்பில் உள்ளது. பிரிட்டிஸ் மியூசியத் தொகுப்பில் இப்பொழுது உள்ளது.
தோடர்களின் குடிசை
தோடர்கள் வீடு, ஆண்டு : 1913

தோடர்கள் அல்லது தொதுவர்[1] என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம்மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.[2] இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள். இவர்கள் நீலகிரியின் பைகாரா ஆற்றை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.[3]

தோடர்கள் பண்பாடும் பழக்கவழக்கங்களும்[தொகு]

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.

தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.

தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.

தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடைக்கு பூத்துக்குளி என்று பெயர். விழாக் காலங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தோடர் மக்கள் பங்கேற்பர். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால் பூ வேலைப்பாடுகள் கொண்டிருக்கும். தோடர் இனப் பெண்கள் கையால் பின்னும் பூத்துக்குளி உடைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.[4]

மண உறவு[தொகு]

இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.[சான்று தேவை]

பண்டிகை[தொகு]

முதன்மைக் கட்டுரை: மொற் பர்த்

இவர்களின் வாழ்விடச்சூழலில் அதிக பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி திசம்பர் மாதம் மொற் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதற்க்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் மூன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவ கோயில் மற்றும் ஓடையாள்போ என்ற கோயில்களில் ஆண்கள் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர்.[5]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  • அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.
  • முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998

மேற்கோள்கள்[தொகு]

  1. சு. தியடோர் பாஸ்கரன் (2018 சூன் 23). "தொதுவர்களின் மீட்பர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 28 சூன் 2018.
  2. ., சு. சக்திவேல் (1998). தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். 
  3. நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987
  4. http://tamil.thehindu.com/tamilnadu/article23568649.ece பூத்துக்குளி: தோடர்களின் எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு
  5. எருமைகள் விருத்தி அடைய வேண்டி தோடர்கள் கொண்டாடும் ‘மொற் பர்த்’பண்டிகை, தி இந்து தமிழ் 21 டிசம்பர் 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடர்&oldid=2549376" இருந்து மீள்விக்கப்பட்டது