க. பொன்முடி
க. பொன்முடி | |
---|---|
வனத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 செப்டம்பர் 2024 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 7 மே 2021 – 21 டிசம்பர் 2023 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
போக்குவரத்து அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தெய்வசிகாமணி ஆகத்து 19, 1950 டி. எடையார், திருக்கோயிலூர், விழுப்புரம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | விசாலாட்சி பொன்முடி |
பிள்ளைகள் |
|
பெற்றோர் | தந்தை : கந்தசாமி உடையார் தாயார் : மரகதம் அம்மாள் |
கல்வி | கல்வி வரலாற்றில் முனைவர் பட்டம் |
வேலை |
|
க. பொன்முடி எனும் கந்தசாமி தெய்வசிகாமணி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையின் தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் ஆவார். இவர் தனது ஆரம்ப காலத்தில் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் காலகட்டத்திலேயே திராவிடர் கழகம் பெரியார் கொள்கையில் பற்றுக் கொண்டார். பின்னாளில் அரசியல் களபணியாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1984ல் அன்றைய தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார். பிறகு 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் கருணாநிதி அவர்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது பொன்முடி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அந்த ஆட்சி காலத்திலேயே அமைச்சராகவே பொறுப்பேற்று கொண்டார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் காலத்திலும் தனக்கு தரப்பட்ட இலாக்காவில் மந்திரியாக பொறுப்பேற்று கொண்டு அதில் திறம்பட செயல்பட்டுள்ளார். இவர் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திமுக மாவட்ட செயலாளர் பதவியிலும், கூடுதலாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
இவர் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகிலான டி.எடையார் கிராமத்தில் உடையார்[1] சமுதாயத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு கந்தசாமி உடையார்–மரகதம் அம்மாள் இணையருக்கு 4வது மகனாக பிறந்தார். இவருக்கு முன்பு மூன்று மூத்த சகோதரர்கள் உள்ளனர். மேலும் திரு. பொன்முடி அவர்களின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியராகவே பணியாற்றியவர்கள் இவரது உடன் பிறந்தோர்கள் அனைவரும் பட்டம் படித்த கல்விமான்கள் ஆவர். பொன்முடி அவர்கள் வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்இதே திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் வென்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் 2021 மே 7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்த அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று தமிழக முழுவதும் பரவலாக பேசப்பட்டது .[4]
தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்
[தொகு]ஆண்டு | தொகுதி | முடிவு |
---|---|---|
1989 | விழுப்புரம் | வெற்றி |
1991 | விழுப்புரம் | தோல்வி |
1996 | விழுப்புரம் | வெற்றி |
2001 | விழுப்புரம் | வெற்றி |
2006 | விழுப்புரம் | வெற்றி |
2011 | விழுப்புரம் | தோல்வி |
2016 | திருக்கோயிலூர் | வெற்றி |
2021 | திருக்கோயிலூர் | வெற்றி |
குற்ற வழக்குகள்
[தொகு]நில அபகரிப்பு வழக்கு
[தொகு]1996-2001ல் திமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறமுள்ள ஸ்ரீநகர் காலனி விநாயகர் கோயில் எதிரே உள்ள தெருவில் சுமார் 3,630 சதுர அடி பரப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அக்காலி நிலத்தில் ரூபாய் 35 இலட்சம் செலவில் கட்டிடம் கட்டியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது கடந்த 2003ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல் 6 சூலை 2023 அன்று அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக கூறி தீர்ப்பளித்தார்.[5]
சொத்து குவிப்பு வழக்கு
[தொகு]1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 1.36 கோடி மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, திமுக ஆட்சி விலகி அதிமுக ஆட்சி தொடங்கிய போது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. சூன் 2023ல் இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 28 சூன் 2023 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, வேலூர் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.[6]
சொத்து குவிப்பு வழக்கில் மறு விசாரணை
[தொகு]தமிழக அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடியின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இதனை 10 ஆகஸ்டு 2023 அன்று தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில் இது மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத்துறைக்கும், அமைச்சர் பொன்முடிக்கும் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. நீதிபதியின் உத்தரவில் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில், வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் சூன் 23ம் நாள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28 சூன் 2023 அன்று , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்ட நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது, இந்த சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து, வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது. இவ்வாறு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் கிடையாது. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.[6]
சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
[தொகு]2006-2011 காலக்கட்டத்தின் மு. கருணாநிதி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் வருமானத்திற்கு மீறிய சொத்து குவிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட நீதிமன்றம், பொன்முடி குற்றமற்றவர் என்று வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து 19 டிசம்பர் 2023 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் தண்டனை விவரங்களை 21 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கப்படும் என்றும், அன்றைய நாளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது..[7][8][9][10]
3 ஆண்டு சிறைதண்டனை
[தொகு]21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.[11] தீர்ப்பு விவரங்களை வாசித்த நீதியரசர். கோ. ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனையைத் தீர்ப்பு நாளிலிருந்து 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.[12][13]
நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சியின் வயது, மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும் என்று கோரியதாகச் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.[14] எனவே பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.[15]. பொன்முடி வகித்த உயர் கல்வித் துறையை அமைச்சர் இராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது.[16]
உச்ச நீதிமன்றததின் இடைக்கால ஜாமீன்
[தொகு]11 மார்ச் 2024 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கபப்ட்ட 3 ஆண்டு சிறை தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமீன் வழங்கியது[17][18]இதனால் பொன்முடி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
செம்மண் குவாரி வழக்கு
[தொகு]2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாகச் செம்மண் எடுத்த வகையில் ரூபாய் 28.38 கோடி அளவிற்கு தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19 சூன் 2023 அன்று பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.[19][20][21][22]
பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை
[தொகு]17 சூலை 2023 அன்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களில் தேடுதல் சோதனைகள் நடத்தினர். விக்கிரவாண்டி சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இதேபோல், அவரது மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இச்சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூபாய் 81.7 இலட்சம் மிதிப்பிலான பவுண்டு பணத்தாள்கள் மற்றும் ரூபாய் 42 கோடி மதிப்பிலான வங்கி நிரந்தர வைப்பு நிதிகளுக்கான ஆவணங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.[23] சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சுமார் 13 மணி நேர சோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகு அவரை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று இரவு 9 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை மூன்று மணி வரை விசாரித்தனர். அடுத்த நாள் 18 சூலை 2023 அன்று மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொன்முடியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். 19 சூலை 2023 அன்று கவுதம சிகாமணியை அமலாக்கத்துறையினர் தங்கள் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.
சொத்துக்கள் முடக்கம்
[தொகு]26 சூலை 2024 அன்று அமலாக்கத் துறையினர், செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூபாய் 14.21 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.[24][25][26][27]
இதனையும் காண்க
[தொகு]- திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)
- நீதியரசர் கோ. ஜெயச்சந்திரன்
- தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் (இந்தியா)
- மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி.மு.க., வேட்பாளர் : பொன்முடி பயோடேட்டா. தினமலர் நாளிதழ். 12 மார்ச் 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ https://www.vikatan.com/news/politics/63455-will-ponmudi-win-in-tirukoilur-constituency.html
- ↑ "திருக்கோயிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-06.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
- ↑ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை
- ↑ 6.0 6.1 விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
- ↑ சொத்து குவிப்பு வழக்கு | அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து; டிச.21-ல் தண்டனை விவரம்: ஐகோர்ட்
- ↑ அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை.. ஹைகோர்ட் அதிரடி
- ↑ Trouble for DMK Minister K Ponmudi after Madras HC sets aside acquittal in Disproportionate Assets case
- ↑ SC refuses to entertain Tamil Minister Ponmudi’s plea
- ↑ Madras HC sentences Tamil Nadu Minister K Ponmudi and his wife to 3 years imprisonment in corruption case
- ↑ DMK Minister Ponmudi sentenced in disproportionate assets case
- ↑ Madras HC sentences Tamil Nadu Minister K Ponmudi and his wife to 3 years imprisonment in corruption case
- ↑ https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1171333-chennai-high-court-sentences-ponmudi-to-3-years-imprisionment.html
- ↑ பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை: எம்.எல்.ஏ, & அமைச்சர் பதவியை இழந்தார்
- ↑ இராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித் துறை ஒதுக்கப்பட்டது-ஆளுநர் ஒப்புதல்
- ↑ Supreme Court stays jail term of former Tamil Nadu Minister Ponmudy in disproportionate assets case
- ↑ Relief for ex-TN minister Ponmudi as SC stays his conviction in corruption case
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி
- ↑ Blow to Tamil Nadu minister Ponmudi as court dismisses plea in corruption case
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!
- ↑ செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
- ↑ பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்
- ↑ பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்
- ↑ பொன்முடியின் சொத்துக்கள் முடக்கம்
- ↑ அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்