உள்ளடக்கத்துக்குச் செல்

என். ஆனந்த் வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்
நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ்
நீதியரசர், சென்னை உயர்நீதி மன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 பிப்ரவரி 2020
பரிந்துரைப்புநீதிபதிகள் தேர்வுக் குழு, இந்திய உச்ச நீதிமன்றம்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
கூடுதல் நீதியர்சர், சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
4 சூன் 2018 – 12 பிப்ரவரி 2020
பரிந்துரைப்புநீதிபதிகள் தேர்வுக் குழு, இந்திய உச்ச நீதிமன்றம்
நியமிப்புராம்நாத் கோவிந்த், இந்தியக் குடியரசுத் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1969 (1969-07-04) (அகவை 54)
பெற்றோர்s
 • எம். ஏ. நந்தா (தந்தை)
 • சூடாமணி (தாய்)
முன்னாள் கல்லூரிமீனம்பாக்கம் ஏ. எம். ஜெயின் கல்லூரி
டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் (Justice N Anand Venkatesh), சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசராக 13 பிப்ரவரி 2020 முதல் பொறுப்பு வகிக்கிறார். இவர் கூடுதலாக மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கிறார். முன்னர் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதியரசராக 4 சூன் 2018 முதல் 12 பிப்ரவரி 2020 முடிய பதவி வகித்தவர்.

கல்வி[தொகு]

4 சூலை 1969 அன்று நந்தா-சூடாமணி தம்பதியருக்கு பிறந்த ஆனந்த் வெங்கடேஷ் பள்ளிப்படிப்பை சென்னை பெரம்பூர் புனித மேரி உயர்நிலைப் பள்ளியிலும், இளநிலை வணிகப் படிப்பை மீனம்பாக்கம் ஏ. எம். ஜெயின் கல்லூரியிலும், சட்டப்படிப்பை அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் பயின்றார்.[1]

நீதியரசர், சென்னை நீதிமன்றம்[தொகு]

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு என். ஆனந்த் வெங்கடேஷை 4 சூன் 2018 அன்று சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதியரசராக தேர்வு செய்து நியமித்தது.[2]பின்னர் 13 பிப்ரவரி 2020 அன்று அதே நீதிமன்றத்தில் நிரந்தர நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[3]

தாமாக முன்வந்து விசாரணை நடததும் வழக்குகள்[தொகு]

அமைச்சர் க. பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் மறு விசாரணை[தொகு]

திமுக அமைச்சர் க. பொன்முடி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சூன் 2023ல் இவ்வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாற்றப்பட்டது. 28 சூன் 2023 அன்று வேலூர் மாவட்ட நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அமைச்சர் க. பொன்முடியை விடுதலை செய்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு இலஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை.

மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை 10 ஆகஸ்டு 2023 அன்று தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கு ஏன் மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தை தனது 17 பக்க உத்தரவில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினார். தான் பார்த்ததில் இது மிகவும் மோசமான வழக்கு என நீதிபதி தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு இலஞ்ச ஒழிப்புத்துறைக்கும், அமைச்சர் க. பொன்முடிக்கும் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. நீதிபதியின் உத்தரவில் இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை முடியும் தருவாயில், வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டிருப்பதில் முறையான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடைசி நேரத்தில் இப்படி மாற்றப்பட்டதுக்கு பின்பற்றிய நடைமுறையில் தவறு இருப்பதாக தெரிகிறது. வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் சூன் 23ம் நாள் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 28 சூன் 2023 அன்று , 228 பக்க தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்கும் 228 பக்க தீர்ப்பை எப்படி நான்கு நாட்களில் எழுதி முடித்தார் என நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்ட நீதிமன்ற வழக்கின் விசாரணை கோப்புகளை ஆய்வு செய்த போது, இந்த சந்தேகங்கள் சரி என்பது தெரியவருகிறது” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், “இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து, வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது. இவ்வாறு செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. உயர்நீதிமன்றமே வழக்கை மாற்றும் அதிகாரத்தை கொண்டுள்ளது” என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை கண்காணிக்கும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.[4]

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு & சாத்தூர் இராமச்சந்திரன் சொத்து குவிப்பு வழக்குகள்[தொகு]

கடந்த 2006-2011 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு 2012ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்குகள் திருவில்லிபுத்தூர் மக்கள் பிரதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. டிசம்பர், 2022ல் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை, இவ்வழக்கில் இலஞ்ச ஒழிப்புத் துறை போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காததால் டிசம்பர், 2022ல் திருவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாத்தூர் ராமச்சந்திரனை விடுவித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இலஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் இவ்வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விளக்கம் அளிக்க அவர் உத்தரவிட்டார். அப்போது தமிழ்நாடு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இவ்வாறு தாமாக முன்வந்து விசாரணை நடத்துவது தவறான முன்னுதாரணமாகி விடும் என்றும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், அமைச்சர்கள் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்த லஞ்ச ஒழிப்பு காவல் விசாரணை அதிகாரி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும்விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்கிறோம் என்றார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இரு வழக்குகளின் விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை' எனக்கூறி, இந்த இரண்டு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதாலேயே தாமாக முன் வந்து விசாரணை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுகள் ஒரே மாதிரியாக உள்ளது. இதனை பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் கடமையில் இருந்து தவறியது போல் ஆகிவிடும். எனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரும், 2 அமைச்சர்களும் உரிய பதில் அளிக்க உத்தரவிடுகிறேன் என்றார்.[5][6][7]

ஒ. பன்னீர்செல்வம் சொத்துக்குவிப்பு வழக்கில்[தொகு]

2001-2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ. பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலெட்சுமி, மகன்கள் இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், தம்பி ஓ. ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ. பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்குக் குவித்தாக தேனி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் 2007ல் வழக்கு பதிவு செய்தது. 2012ம் ஆண்டில் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், இலஞ்ச ஒழிப்புத் துறையினர், இவ்வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால், புகாரை திரும்ப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிர்த்தது. இதனால் ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து விடுவித்தது.

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இலஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஒ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.[8][9][10]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Madras High Court | Profile of Judges". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
 2. Sureshkumar (1 Jun 2018). "Madras high court gets seven more judges | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
 3. "9 additional judges at MHC made permanent". dtNext.in (in ஆங்கிலம்). 2020-02-14. Archived from the original on 28 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
 4. விடுவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடியிடம் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?
 5. சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
 6. 2 அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஐகோர்ட் நீதிபதி கடும் அதிருப்தி
 7. "தீர்ப்பை படித்து 3 நாட்களாக தூங்கவில்லை": அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதி வேதனை
 8. சொத்துக் குவிப்பு வழக்கில் ஓபிஎஸ் விடுதலை விவகாரம்: லஞ்ச ஒழிப்புத் துறை மீது உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
 9. ஓ.பி.எஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கு; ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை
 10. ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை-

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஆனந்த்_வெங்கடேஷ்&oldid=3851765" இலிருந்து மீள்விக்கப்பட்டது