கோவாவில் சுற்றுலாத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகுடா கோட்டையில் இருந்து எடுக்கப்பட்ட கண்டோலிம் கடற்கரையின் புகைப்படம்

கோவாவின் சுற்றுலா (ஆங்கிலம்: Tourism in Goa) பொதுவாக கடற்கரைப் பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகின்றன. 2004 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களுள் 400,000 பேர் அயல்நாட்டினர். உருசியாவில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [1]. உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். [2].2013ல், கோவாவிற்கு சுற்றுலா வந்த ரஷ்யர்களின் எண்ணிக்கை, 2.5 லட்சம்.

கோவா இரண்டு விதமான சுற்றுலா பயணிகளுக்கு உகந்த காலங்களைக் கொண்டுள்ளது. ஒன்று குளிர்காலம் மற்றது கோடைக்காலம். குளிர்காலத்தில் அயல்நாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள்(குறிப்பாக ஐரோப்பாவினர்) அதன் சிறப்பான தட்பவெப்ப சூழலை அனுபவித்து மகிழ வருகின்றனர். கோடைகாலத்தில் (அச்சமயம் கோவாவின் மழைக்காலம்) இந்தியாவைச் சார்ந்த சுற்றுலாவினர் தங்கள் விடுமுறையை கழிக்க வருகின்றனர்.

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடாகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலமாக கோவா இருந்தாலும், உலகத்தார் இதனை இந்திய மண்ணில் உள்ள பண்டைய போர்ச்சுகீசிய ஆதிக்கத்திற்குரிய பகுதியாகவே கருதுகின்றனர். போர்ச்சுகீசியரின் 450 ஆண்டுகால ஆதிக்கத்தின் விளைவாக கோவா இலத்தீன் கலாச்சாரத்தின் தாக்கத்தை பெற்று,தனது வேறுபட்ட வடிவங்களை காட்டி நாட்டின் பிற பாகங்களை விட அதிகமாக அயல்நாட்டினரை ஈர்க்கிறது. கோவா மாநிலம், அதன் சிறப்பு வாய்ந்த கடற்கரைகள், தேவாலயங்கள், மற்றும் கோவில்களால் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த இடம், பாம் இயேசு தேவாலயம் ஆகும்.இங்குள்ள அகுடா கோட்டையும் முக்கிய சுற்றுலாத் தலம் ஆகும். சமீபத்தில் இந்திய வரலாறு,கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த மெழுகுச்சிலை காட்சியகம் பழைய கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள்[தொகு]

இங்கு வரும் சுற்றுலா பயணிகள், கடற்கரையின் எழிலில் மயங்கியே இங்கு வருகின்றனர். சுமார் 77 மைல்களுடைய(125 கி.மீ) கரையோரப் பகுதியில் ஆங்காங்கே கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்கரைகள் வடக்கு கோவா கடற்கரைகள் மற்றும் தெற்கு கோவா கடற்கரைகள் என பகுக்கப்பட்டுள்ளன. நாம் வடக்கு அல்லது தெற்கு என எங்கு சென்றாலும், அதிக அளவிலான தனித்த கடற்கரைகளை காணலாம். இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன. சில குடில்கள் அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு சிறப்பு கேளிக்கைகளையும் நடத்துகின்றன.

உருசியாவில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் [1]. உருசியாவை அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் வருகையின் போது விசா வழங்கும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கோவா விமான நிலையம் வழங்கிய தவகவலின்படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட விசா பின் வருமாறு (டிசம்பர் 2014 ஆம் ஆண்டில்) : ரஷ்யா (595), உக்ரைன் (430) , அமெரிக்கா (25), ஜெர்மனி (15) , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (7) , ஆஸ்திரேலியா (4) , பிலிப்பைன்ஸ் (4) , இஸ்ரேல் (3) , ஜோர்டான் (3), நியூசிலாந்து (2 ), பிரேசில் (1) பின்லாந்து (1) , கென்யா (1) நார்வே (1) மற்றும் சிங்கப்பூர் (1)[3].

வடகோவா கடற்கரைகளின் அருகாமையில் அதிகத் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் 1500 ரூபாய் முதல் அறைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. வடகோவா கடற்கரைகளில் தண்ணீர் விளையாட்டுகள் சிறப்பாக உள்ளன. இங்கு உள்ள தண்ணீர் விளையாட்டுகள்: வான்குடை மூலமாக பறப்பது(பாராசெய்லிங்), தண்ணீர் வண்டி (ஜெட் ஸ்கிங்) போன்றவை ஆகும். டிசம்பர் 2014 ஆம் ஆண்டு தகவலின்படி வான்குடை மூலமாக பறப்பதற்கு(பாராசெய்லிங்) நபர் ஒன்றிற்கு சுமார் 800 ரூபாய் ஆகிறது. டிசம்பர் 2014 ஆண்டு தகவலின்படி தண்ணீர் வண்டி(ஜெட் ஸ்கிங்) செய்ய நபர் ஒன்றிற்கு சுமார் 250 ரூபாய் ஆகிறது.

வட கோவா கடற்கரைகள்[தொகு]

கலங்குட் கடற்கரை[தொகு]

கலங்குட் வட கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்கு உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். இந்தக் கடற்கரைகளில், வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள், சைவ உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன.

கண்டோலிம் கடற்கரை[தொகு]

கண்டோலிம் வட கோவாவில் அழகான கடற்கரை ஆகும். இது கலாங்குட் கடற்கரைக்கு தெற்கே அமைந்துள்ளது. இங்கு பன்னாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

பாகா கடற்கரை[தொகு]

கண்டோலிம் வட கோவாவில் உள்ள கடற்கரை ஆகும். இது கலாங்குட் கடற்கரை அடுத்து வலது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.

பணாஜி கடற்கரைகள்[தொகு]
மிராமர் கடற்கரை[தொகு]

மிராமர் பணாஜியில் உள்ள கடற்கரை ஆகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவில் வருகின்றனர். கடலில் குளிப்பதற்கு உகந்த கடற்கரை இதுவல்ல.

டோனா பவுலா கடல்[தொகு]

டோனா பவுலா பணாஜியில் உள்ள கடல் ஆகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவில் வருகின்றனர். இது குளிப்பதற்கு உகந்த கடற்கரை அல்ல. பிரபல இந்தி திரைப்படமான ஏக் தூஜே கே லியேவின் பெரும் பகுதி படப்பிடிப்பு இங்கே நடைபெற்றது. ரோஹித் ஷெட்டியின் சிங்கம் இந்திப் படத்தின் ஓரு சண்டைக்காட்சி இங்கே எடுக்கப்பட்டது.

தெற்கு கோவா கடற்கரைகள்[தொகு]

கோல்வா கடற்கரை, தெற்கு கோவா
கோல்வா கடற்கரை[தொகு]

தெற்கு கோவாவில் அமைந்துள்ள கோல்வா கடற்கரையானது வெண்மணல் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. கோல்வா கடற்கரை 2.4 கிலோ மீட்டர் (1.5 மைல்) நீண்டுள்ளது. கோல்வா கடற்கரை நீச்சல் பகுதிகளில் எச்சரிக்கைகள் கொடியிடப்பட்டுள்ளதோடு, உயிர் காக்கும் படையினர் ரோந்தில் உள்ளனர்.

பலோலம் கடற்கரை[தொகு]

பலோலம், கொங்கனாவில் அமைந்துள்ள ஒரு கடற்கரை கிராமம் ஆகும். பலோலம் கடற்கரை மர்கோவாவில்(தெற்கு கோவா மாவட்ட தலைமையகம்) இருந்து சுமார் 40 நிமிட பயணத் தொலைவில் அமைந்துள்ளது.

தென் கோவா பிற அண்டை கடற்கரைகள் அகோண்டா கடற்கரை மற்றும் கோலா கடற்கரை ஆகும்.

வரலாற்றுத் தலங்கள் மற்றும் சுற்றுப்புறம்[தொகு]

கோவா உலகப்புகழ் வாய்ந்த தலங்கள் இரண்டினைக் கொண்டுள்ளது. அவையாவன பாம் ஜீசஸ் பசிலிக்கா[4] மற்றும் சில குறிப்பிடத்தக்க கன்னி மாடங்கள் ஆகும். பசிலிக்காவில் கோவாவின் புனித இரட்சகர் என பல கத்தோலிக்கர்களால் மதிக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.(உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்ட ஜோசப் வாஸ் என்பவர் தான் கோவாவின் மறைமாகாணத்தின் இரட்சகர் ஆவார்). பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கும்,பார்வைக்கும் வைக்கப்படுகிறது. இந்நிகழ்வு கடைசியாக 2004 இல் நடந்தேறியது. தற்போது புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் வெளியே எடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்கும் பார்வைக்கும் 2015 ஜனவரி 6ம் தேதி வரை வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வெல்காஸ் கான்குயிஸ்டாஸ் என்கிற பகுதி போர்ச்சுகீசிய-கோவா காலத்துக் கட்டிடக்கலைக்குச் சான்றாகும். டிரக்கால், சோப்ரா, கோர்ஜியம், அகுடா, காஸ்பர் டயஸ் மற்றும் கபோ-டி-ரமா போன்ற பல கோட்டைகள் இங்குள்ளன.

கோவாவின் பல பகுதிகளில், இந்தோ-போர்ச்சுகீசிய காலக் கட்டிடக்கலைக்குச் சான்றாக இன்றும் பல மாளிகைகள் நிலைத்து இருக்கின்றன. இருப்பினும் சில கிராமங்களில், பெரும்பாலும் அவை சிதைந்து பாழடைந்த நிலையில் உள்ளன. பனாஜியில் உள்ள போன்டைன்ஹஸ் என்னுமிடம் கோவா மக்களின் வாழக்கையையும்,கட்டிடக் கலை மற்றும் கலாச்சாரத்தையும் காட்டும் கலாச்சார பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவாவின் மங்குய்ஷி கோவில் மற்றும் மஹலசா கோவில் போன்ற சில கோவில்களில் போர்ச்சுகீசியக் கால தாக்கம் கண்கூடாக காணப்பட்டது, எனினும் 1961 ஆம் ஆண்டிற்கு பிறகு இவற்றில் பெரும்பான்மையானவை இடிக்கப்பட்டு உள்நாட்டு மரபான இந்திய முறைப்படி புதுப்பிக்கப்பட்டது.

அருங்காட்சியங்கள் மற்றும் அறிவியல் மையங்கள்[தொகு]

கோவாவில் சில அருங்காட்சியகங்கள் இருந்த போதிலும் அவற்றில் இரண்டு மட்டும் மிக முக்கியமானவையாகும். ஒன்று கோவா மாநில அருங்காட்சியகம் மற்றொன்று கடற்படைத் தள அருங்காட்சியகம் ஆகும். பனாஜிம்மில் உள்ள கோவா மாநில அருங்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணம் எதுவுமில்லை. வாஸ்கோவில் அமைந்துள்ள கடற்படைத் தள அருங்க்காட்சியகத்தை பார்வையிட நுழைவுக்கட்டணமாக ரூ.6 வசூலிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே கோவாவில் மட்டும் தான் இது போன்ற கடற்படைத் தள அருங்காட்சியகம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாக கோவா அறிவியல் மையம் ஒன்று பனாஜிம்மில் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]