தூத்சாகர் அருவி
| தூத்சாகர் அருவி | |
|---|---|
2015 இல் தூத்சாகர் அருவி | |
![]() | |
| அமைவிடம் | Goa |
| ஆள்கூறு | 15°18′46″N 74°18′51″E / 15.31277°N 74.31416°E |
| வகை | Tiered (4 Tiered) |
| மொத்த உயரம் | 320 metres (1017 feet) |
| வீழ்ச்சி எண்ணிக்கை | 5 |
| சராசரி அகலம் | 30 metres (100 feet) |
| நீர்வழி | மாண்டோவி ஆறு |
பாற்கடல் அருவி என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) என்பது கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ள மூன்றடுக்கு அருவியாகும். இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து சாலை வழியாக 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இது பெலகாவி–வாஸ்கோ ட காமா தொடருந்து பாதையில், மட்காவிலிருந்து கிழக்கே சுமார் 46 கி.மீ தொலைவிலும், பெலகாவியிலிருந்து தெற்கே 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தூத்சாகர் அருவி ஒரு பிறை வடிவப் பள்ளத்தாக்கின் உச்சியில் அமைந்துள்ளது. மேலும் தூய்மையான காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது 310 மீட்டர் (1017 அடி) உயரமும், சராசரியாக 30 மீட்டர் (100 அடி) அகலமும் கொண்ட இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றாக உள்ளது.[1] உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் உள்ள பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பனாஜி வரை பாயும் மாண்டவி ஆற்றின் பயணத்தில், இந்த அருவி ஒரு முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றது. அருவியின் அடிப்பகுதியில் ஒரு பெரிய தடாகம் உள்ளது. அதில் பாதுகாப்பு உபகரணங்களுடன் குளிக்கலாம். இங்குதான் அந்த ஆறு அரபிக்கடலில் கலக்கிறது. இந்த பகுதி செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்தைக் கொண்ட இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது.[2]
தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது.
அணுகல்
[தொகு]அருவிக்குச் சாலை வழியாகச் செல்ல வசதியாக அமைந்துள்ள அருகிலுள்ள தொடருந்து நிலையம் கருநாடகத்தின் உத்தர கன்னடத்தில் உள்ள கேஸில் ராக் நிலையம் ஆகும்.[3] பார்வையாளர்கள் இங்கிருந்து ரயிலில் ஏறி தூத்சாகர் நிறுத்தத்தில் இறங்கலாம். அண்மையில், இந்திய ரயில்வே தூத்சாகர் தொடருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்குத் தடை விதித்துள்ளது; இது இரயில்வே விதிமுறைகளின் கீழ் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது.[4]
தூத்சாகர் மலையேற்றம்
[தொகு]அருவியை அடைய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, குலேமில் இருந்து மலையேற்றத்தைத் தொடங்கி, அருவியின் அடிவாரம் வரை ஜீப் பாதையில் செல்வது. இரண்டாவது வழி, சுமார் 11 கி.மீ. நீளமுள்ள தொடருந்து பாதை வழியாகச் செல்வது. இந்த மலையேற்றத்திற்கு கோவா அரசாங்கம் (வனத்துறை) அனுமதிப்பதில்லை, ஏனெனில் தொடருந்து பாதையில் நடந்து செல்வது மிகவும் ஆபத்தானது. தொடருந்து பாதை வழியாக மலையேற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம், மேலும் சிறைத் தண்டனை கூட கிடைக்கக்கூடும்.
காட்சியகம்
[தொகு]- முழுத் தோற்றம்
- தூத்சாகர் அருவியின் கீழ் பாதி
- ஆகத்து மாதத்தில் துத்சாகர் அருவி
- தூத்சாகர் அருவிக்கு அருகில் செல்லும் தொடருந்து
- 1850-களின் முற்பகுதியில் அன்டோனியோ லோப்ஸ் மெண்டிசால் வரையப்பட்ட தூத்சாகர் அருவி.
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "World's highest waterfalls". World Waterfall Database. Retrieved 2006-11-11.
- ↑ S.D. Gad; S.K. Shyama (2009). "Studies on the food and feeding habits of Gaur Bos gaurus H. Smith (Mammalia: Artiodactyla: Bovidae) in two protected areas of Goa". Journal of Threatened Taxa 1 (2): 128–130. doi:10.11609/jott.o1589.128-30.
- ↑ Castle Rock, India Accessed 2006-04-29
- ↑ "Oh!Mandovi". Navhind Times. Retrieved 2008-10-16.
வெளி இணைப்புகள்
[தொகு]- தூத்சாகர் அருவி (World Waterfall database) பரணிடப்பட்டது 2011-06-11 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)

