உள்ளடக்கத்துக்குச் செல்

குமரி மாவட்டத் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமரிமாவட்டத் தமிழ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
ஆதிதிராவிடர் பேச்சு தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

'குமரித் தமிழ்' (Kumari Tamil) அல்லது 'வேணாட்டுத் தமிழ்' என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன. இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும், இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் மிகுதியாகக் கலந்திருக்கின்றன. இன்றைய 'குமரித் தமிழ்' மூன்று வகைகளில் பேசப்படுகிறது.

1 தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் உள்ள வெள்ளாளர் மக்கள் பேசும் நாஞ்சில் நாட்டுத் தமிழ்.
2 குமரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் நாடார் மக்கள் பேசும் வேணாட்டுத் தமிழ்.
3 கடலோரக் கிராமங்களை உள்ளடக்கிய (முக்குவர், பரதவர்) வட்டார மீனவர் தமிழ்.

ஒட்டுமொத்தமாக இந்த எல்லா வகைகளிலும் தமிழ்ச் சொற்களின் / இலக்கணத்தின் மருவலே அதிகம் காணப்படுகிறது. ஆனாலும் மலையாள வழக்கும் கலந்து உள்ளது.

கீழ்க்காணும் விளக்கங்களில், 'மலையாள வழக்கு' என்பது 'மலையாளத்தில் இருந்து மருவியது' என்று பொருள்படாது. மாறாக, 'இந்தச் சொல் பிற வட்டார வழக்கில் (அவ்வளவாகப்) பயன்படுத்தப்படாமல், குமரித் தமிழிலும், மலையாளத்திலும் (மட்டுமே) வழக்கத்தில் உள்ளது' என்றே பொருள்படுகிறது. அச்சொற்கள் அடிப்படையில் தமிழ் வேர் கொண்ட சொற்களாகவோ, சமசுகிருத வேர் கொண்ட சொற்களாகவோ, மலையாளத்தின் தனித்துவமான சொற்களாகவோ இருக்கலாம்.

குமரித் தமிழ்ச் சொற்கள் மற்றும் விளக்கம்.

[தொகு]
குமரித் தமிழ்ச் சொல் பொதுத் தமிழ்ச் சொல் சொல் விளக்கமும் சான்றும்
அக்கானி பதநீர் பனை மற்றும் தென்னை மரப் பாளைகளில் இருந்து பெறும் வடிநீர்.
அங்கணம் / அங்ஙணம் உள்முற்றம், கழிவுநீர் மடை திருக்குறள்: "அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொள"
அங்கன / அங்கிண அங்கே "மோனே, அங்கன போவாதே" - "மகனே அங்கே போகாதே"
அங்கோடி அந்த வழியாக "அவ அங்கோடி பேயிட்டிரிக்யும்போது பாம்பு ஒண்ணு குறுக்கால போச்சாம்." இங்கு 'பேயிட்டிரிக்யிம்போது' (போய்க்கொண்டிருக்கும்போது) இல் 'போ'க்குப்பதிலாக 'பே' என்றும், 'இருக்கும்' என்பது 'இரிக்கும்' அல்லது 'இரிக்யிம்' என்றே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கேரள எல்லை வட்டங்களில் இவ்வழக்கு உள்ளது
அசல் துணி உலர்த்தும் கொடி
அசை துணி போடும் கொடி
அடிச்சு மாத்துவது திருடுவது
அண்டிப் பருப்பு முந்திரிப் பருப்பு
அண்டை அடுப்பு
அத்தம் கடைசி அற்றம்
அத்தாழை / அத்தாழம் அந்தி உணவு, அற்றாலம் அத்தாழப் பட்டினி - அந்தி உணவு இல்லாதவர்.
அத்து வெட்டி அற்று/அறுத்து எனபனவற்றின் திரிபு. பொதுத்தமிழிலும் உள்ளது
அந்தால அந்த வழியாக / அப்படி / அதற்குப்பிறகு
அப்பச்சி தாத்தா மலையாள வழக்கு
அப்பம் அப்போது "லே கொப்பன் அப்பமே வந்தாச்சி" - "உன் அப்பா அப்போதே வந்தாயிற்று". அரிசி மாவில் செய்யப்படும் பண்டத்திற்கும் அப்பம் என்ற பெயருண்டு
அம்மாசி அம்மாவாசை
அம்படம் / அம்புடம் அவ்வளவு அம்மட்டம் என்பதன் திரிபு
அயத்து மறந்து அயத்து போச்சி - மறந்து போயிற்று
அல்லா அல்லவா
அல்லாம அல்லாமல், இல்லாமல் மருவல்
அலட்டல் பேசிக்கொண்டே இருப்பது பொதுத்தமிழிலும் உள்ளது
அலவாக்கரை கடற்கரை அலைவாய்க்கரை
அவயம் பெருத்த ஓசை
அவயான் பெருச்சாளி
அவிய அவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது
அற்றம் / அத்தம் கடைசி, இறுதி, முடிவு, கரை "தெருவுக்க அத்தத்துல தான் அந்த கடை இருக்கு" - "தெருவின் கடைசியில் தான் அந்த கடை உள்ளது".
அரங்கு வீடு சேமிப்பு அறை, பூசை அறை
அரதி துன்பம், விருப்பமின்மை
அரிஷ்டம் போலிச் சாராயம் அடிப்படையில் 'அரிஷ்டம்' என்பது ஆயுர்வேத மருத்துவ முறையில் தயாரிக்கப்படும் ஒரு திரவ மருந்தின் வகை. சில காலம் முன்பு, இந்த மருந்தான அரிஷ்டத்தை தயாரிக்கும் உரிமத்தை வைத்துக்கொண்டு சில சமூக விரோதிகள் சாராயம் தயாரிக்கலானர். இப்போது மக்களின் போராட்டங்களின் பயனாக அவ்வுரிமைகள் அரசால் திரும்பப்பெறப்பட்டு, அரிஷ்டம் தயாரிப்பிற்கும் தடை உள்ளது.
அளி / அழி கம்பி போட்ட பெரிய சாளரம் அளிபோட்ட வீடு
அளுவ ஒரு உயர்தர வகை மீன்
அறுப்பு திட்டு, வசை, திட்டுதல், அறுவடை "எங்கையா இன்னிக்கி ஒரே அறுப்பு" - "என் தந்தை இன்று என்னை நன்றாக திட்டினார்"
அன்னா அதோ, அங்கே "அன்னா நிக்காம்லே" - "அங்கே நிற்கிறான் டா"
அனக்கம் சத்தம், அசைவு, இயக்கம் "என்ன அனக்கமே இல்லை!" - "என்ன அமைதியாக இருக்கிறது!"
ஆக்கத்தி சிறிய வகை அரிவாள் மலையாள வழக்கு. குறிப்பாக தென்னை ஓலை அரிய பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கர் கடை காயலான் கடை
ஆகுல்லா ஆகிறது அல்லவா
ஆட்டும் சரியென ஆமோதித்தல், ஆகட்டும் ஆகட்டும் என்பதன் மருவல்
ஆயினி சக்கை / ஐனிச் சக்கை ஈரப்பலா பலாப்பழத்தில் ஒரு சிறிய வகை
ஆராசனை இறை அருள் "அவியளுக்கு ஆராசனை வந்துட்டு" - "அவர்களுக்கு இறையருள் வந்துவிட்டது"
ஆராங்கு ஒரு மீன் வகை
ஆவி ஆகி "அவுருக்கு விபத்து ஆவிட்டு" - "அவருக்கு விபத்து ஆகி விட்டது"
இங்கன / இங்கிண இங்கே
இங்கோடி இந்த வழியாக
இஞ்ச இங்கே "லேய், இஞ்ச வால" - "ஏய், இங்க வாடா"
இஞ்சோத்திருங்கோ இங்கே வந்து உக்காருங்கள் இஞ்ச+வந்து+இருங்கோ
இணிஞ்சு / இனிஞ்சி பிய்த்து / பறித்து, பிடுங்குதல், கொய்தல், 'அடத்து' எடுத்தல்,'கிள்ளி' எடுத்தல் "மட்டிப்பளத்த தார்ல இருந்து இணிஞ்சு தின்னு" - "மட்டிப்பழத்தை தாரில் இருந்து உரித்து உண்". "நடுத்தெங்கிலிரிந்து நாலு கருக்கு இணிஞ்சுப் போடு" - "நடுத்தென்னை மரத்திலிருந்து நான்கு இளநீர் தேங்காய்கள் பறித்துப் போடு"
இம்படம் / இம்புடம் இவ்வளவு இம்மட்டம் என்பதன் திரிபு
இரி இரு, உட்கார் மலையாள வழக்கு
இலையப்பம் தென்னை, பனை, பலா, பூவரசு, வாழை, பாதாம், தேரளி இலையில் அரிசி மாவு, வெல்லம் அல்லது உப்புக்காரம், தேங்காய், எள், இஞ்சி/சுக்கு சேர்த்து வேகவைத்து சமைக்கும் அப்பம்
இவிய இவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது
இளச்சல் சீவுதல் / வாருதல் தல இளச்சாச்சா? - தலை வாரியாச்சா?
இன்னா இதோ, இங்கே
ஈக்கல் தென்னை ஓலையின் நடுநரம்பு
ஈக்கான்பெட்டி பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
ஈச்சீ
ஈரக்கொலை ஈரல்
உச்சி / உச்சை மதியம் உச்சிவேளை என்பது நண்பகலைக் குறிக்கும். மலையாள வழக்கு
உத்திப்போல மிகச்சிறிய அளவு, கொஞ்சம் "பாயாசத்துல உத்திப்போல ஏலம் போட்டாப் போரும்" - "பாயாசத்தில் மிகச்சிறிய அளவு ஏலம் இட்டால் போதும்"
உணக்கு / ஒணக்கு காயவை பொதுத் தமிழிலும் உள்ளது. "மருதாணி எலைய நல்லா ஒணக்கி அப்பறம் பொடிக்கணம்". திருக்குறள்: "தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்"
உப்புக்குத்தி கணுக்கால்
உழக்கு, பக்கா, மரக்கால் அரிசி அளவைகள் பொதுத் தமிழில் உள்ளன.
உழக்கான்பெட்டி பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
உரியாடல் உரையாடல், பேச்சு "அவிய ரெண்டுவேரும் ஒடக்காச்சே, இப்போ உரியாடல் உண்டா?" - "அவர்கள் இருவருக்கும் இடையில் மனக்கசப்பாயிற்றே. இப்போது பேசிக்கொள்கிரார்களா?"
உருமா திருமணத்தின் போது மணமகனின் தலையில் கட்டும் துணி
உலும்பு வாடை இறைச்சி வாடை (கவுச்சி வாடை)
உள்ளுடுப்பு பெண்களின் உள்ளாடை
உளுக்கு சுளுக்கு பொதுத்தமிழிலும் உள்ளது
உறை ஒருவகை நண்டு ஆங்கிலத்தில் 'மோல் க்றாப்' எனக் கூறுவர்.
ஊச்சாளி மற்றவர்களை விட தகுதியில் உயர்ந்தவன் என ஏளனமாகச் சொல்லுதல் மலையாள வழக்கு. "அவரு பெரிய ஊச்சாளி. நம்மட்ட எல்லாம் பேசமாட்டாரு"
ஊதாப்பட்டி பலூன்
எங்கன / எங்கிண எங்கே
எங்கோடி எந்த வழியாக
எடவாடு/எடபாடு வேலை/பணி
எத்து உதை பொதுத் தமிழிலும் உள்ளது.
எதுப்பு எதிராக "அவரு வரும்போது எதுப்பு போகப்பிடாது" - "அவர் வரும்போது அவரின் எதிராகப் போகக்கூடாது"
எப்பம் எப்போது "பொறவுண்ணா எப்பம்?" - "பிறகென்றால் எப்போது?"
எம்படம் எவ்வளவு எம்மட்டம் என்பதன் திரிபு
எரப்பாளி இழிச் சொல் / வசைச் சொல், இரந்து உண்பவர் மலையாள வழக்கு
எல்லு எலும்பு மலையாள வழக்கு
எவிய எவர்கள் பொதுத்தமிழிலும் உள்ளது
எளளுப்போல சிறிதளவு
ஏசுதல் திட்டுதல் பொதுத் தமிழில் உள்ளது
ஏம்பக்கம் ஏப்பம்
ஏத்தன் பழம் நேந்திரன் பழம் வாழைப்பழத்தின் வகை
ஏனம் பாத்திரம்
ஐயம் / அய்யம் கெட்டது, கெட்டுப்போனது "ஐயே, அது ஐயப் பழம்", அழுகிய என்பதன் மருவல்.
ஐயா / அய்யா தகப்பன்
ஐயாவழி / அய்யாவழி அய்யா வைகுண்டர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்ட சமய நெறி.
ஒக்கல் இடுப்பு "எப்போ பாத்தாலும் கொளந்தைய 'ஒக்கல்லயே' ஒக்காத்தி வெச்சிரிக்கியே.. அத கீளத்தான் உடேன்" - "எப்போது பார்த்தாலும் குழந்தையை இடுப்பிலேயே வைத்துக்கொண்டிருக்கிராயே.. அதனை கீழத்தான் விடேன்"
ஒக்கும் / ஒக்காது முடியும் / முடியாது மலையாள வழக்கு
ஒட்டாங்கண்ணி உடைந்த மண்பானையின் ஒரு துண்டு
ஒடக்கு / உடக்கு சண்டை, மனக்கசப்பு "சந்தைல அவிய ரெண்டுவேருக்கும் ஒடக்காயிப்போச்சு" - "சந்தையில் அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை வந்துவிட்டது"
ஒடயக்காறன் உரிமைக்காரன்
ஒடுக்கம் பிறகு, கடைசியில் மலையாள வழக்கு. "ஒடுக்கம், என்ன ஆச்சி?" - "அப்புறம், என்ன ஆயிற்று?"
ஒண்ணி ஒன்றாக்கு ஒண்ணிசது - ஒன்றாகியது (அஸெம்பிள்ட்)
ஒருபாடு / ஒருவாடு நிறைய மலையாள வழக்கு
ஒலுங்கு கொசு பொது வழக்கிலும் உள்ளது
ஒறச்சு உரக்க மலையாள வழக்கு. "லேய், அந்த மூணாவது பாடத்த ஒறச்சு படி பாப்பம்" - "ஏய், அந்த மூன்றாவது பாடத்தை உரக்கப் படி பார்ப்போம்"
ஒறப்பு காரம் உறைப்பு
ஓட்டன்காய் பிஞ்சு புளியங்காய்
ஓணப்பந்து விளையாட்டு எருமைத்தோல் மற்றும் தேங்காய் நாரால் செய்யப்படும் பந்தினை ஏழுபேர் கொண்ட ஒரு அணி எறிந்திட, அதனை எதிரணி காலால் தடுத்திடும் விளையாட்டு.
ஓர்மை / ஓற்மை நினைவு-ஞாபகம் மலையாள வழக்கு. "ஓர்மை இருக்கா?"
கக்குமடி வேட்டியை மடித்துக் கட்டுதல் மீனவர் வழக்கு
கச்சவடம் வியாபாரம் மலையாள வழக்கு
கசேரி (சாய்வு) நாற்காலி மலையாள வழக்கு
கஞ்சித்தாள் ஈகநார் காகிதம் (பாலிதின் பேப்பர்)
கட்டை குட்டை
கடலாசு காகிதம் மலையாள வழக்கு
கடவப் பெட்டி பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டி
கடுவன் ஆண் மிருகம் "கடுவன் பூனை" - "ஆண் பூனை"
கண்டெழுத்து (நில) மதிப்பீடு ான்

ற/அறிக்கை ||

கணியான் ஆட்டம் சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் பாடி ஆடப்படும் ஒரு கூத்தாட்டம். கணியான் கூத்து
கத்தம் ஓதல் முழு ஆற்றலுடன் ஒருவருக்கு எடுத்துக்கூறல் உண்மையில் 'கத்தம் ஓதுதல்' என்பதாவது, இசுலாமியர் ஒருவர் இறந்தபின் அவருக்காக ஓதப்படும் மந்திரமாகும். ஆனால், பேச்சுவழக்கில் 'முழு ஆற்றலுடன் ஒருவருக்கு எடுத்துரைத்தல்' அல்லது 'மாரடித்தல்' என்ற பொருளில் கையாளப்படுகிறது. காட்டு: எளவெடுத்த பயட்ட காலைலிந்தே கத்தம் ஓதிஓதி எனக்க தொண்டத்தண்ணி வற்றியதுதான் மிச்சம்.
கதம்பல் / கதம்ப தேங்காய் மட்டை
கயப்பு கசப்பு என்பதன் திரிபு மலையாளத்தில் கய்ப்பு என்கிறார்கள்
கம்புக் கூடு கைக்குழி, அக்குள், கக்கம், கழக்கட்டு
கயலி ஒரு வகை மீன்
கயறு / கேறு ஏறு மலையாள வழக்கு
கரச்சி அழுகை "நேத்து எம்பையன் மிட்டாஸ் வேண்டித்தரணம்னு ஒரே கரச்சி" - "நேற்று என் மகன், மிட்டாய் வாங்கித்தரவேண்டும் என ஒரே அழுகை"
கரமடி கடலில் கட்டுமரம் (அ) நாட்டுப்படகில் சென்று மடி (வலை) போட்டுவிட்டு அந்த வலையின் இரு அற்றங்களையும் நாட்டுப்படகில் கரைக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பல பேர் (தோராயமாக 30 முதல் 40 பேர்) ஒன்றாக சேர்ந்து கரையிலிருந்தபடியே இழுக்கும் பெரிய வகை மடி (வலை) இது பகல் நேரங்களில் தான் நடக்கும். தற்போது இந்த கரமடி வகை வலைகள் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டன. மேற்கு கடற்கரை மேல்மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளில் ஒன்றிரண்டு இருக்கலாம்.
கருக்கு இளநீர், இளம் தேங்காய்
கருங்காய் பச்சை முந்திரிக் காய்
கல்சான் கால்சட்டை மீனவர் வழக்கு
கலவாய் ஒரு வகை மீன்
கலுங்கு மதகு, அணை, உயரம் குன்றிய சுவர் பாலத்துக்கலுங்கு - பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும் சிறு சுவர்கள்
கவக்கம்பு பிரம்பு, லத்தி, ஊன்றுகோல், மூங்கில் கம்பு
கவுட்டை கால்கள் இடுப்பில் கூடும் இடம்
கறண்டை கணுக்கால்
கறுக்கு / கறுக்கல் இருளாகும் மாலை பொழுது, அந்தி, முன்னிரவு
கழச்சி / கச்சி கோலி குண்டு
கழஞ்சி தண்ணீர் ஊற்றி வைத்த பழைய சோறு
கழனி / கழநி கழுநீர், மாடுகள் குடிக்கும் ஒரு வகையான கலவை. சமையலில் வடி கட்டிய தண்ணீர், பழத்தோல்கள் எல்லாம் சேர்ந்தது
கழுமாடன் கழுமர மாடன் - காவல் கடவுள் கழுமரம்
கழைக் / களைக் கம்பு மரங்களிலிருந்து காய்கனிகள் பறிப்பதற்காக உதவும் நீண்ட கம்பு
கறண்ட கணுக்கால்
கள்ளத்தீனி / கள்ளப்பண்டம் நொறுக்குத்தீனி
களிம்பு குழைவான பூசிக்கொள்ளும்படியான மருந்து பொதுத்தமிழிலும் உள்ளது
களை தூண்டில் மீனவர் மொழி
கன்னாமண்டை உச்சந்தலை
கன்யாரி / கன்யாமாரி கன்னியாகுமரி என்பதன் கொச்சை வடிவம் கன்னியாகுமரி
கனமா நிறைய கனமா குடு - நிறைய கொடு
கஷண்டி தலை வழுக்கை மலையாள வழக்கு.
காஞ்ச வெள்ளம் வெந்நீர், சுடுதண்ணீர்
போதும்/பத்தும்
காத்தாடி மரம் சவுக்கு மரம்
காந்தல் எரியும் உணர்வு பொதுத்தமிழிலும் உள்ளது
காடந்தரம் காட்டுவிலங்கு
காணாம் கொள்ளு மலையாள வழக்கு
கிந்தி தொட்டு நொண்டி எடுத்து
கிண்டி கிளறி
கிண்ணி கரண்டி, வாயகண்ட சிறு கிண்ணம்
கிரேந்தி செவ்வந்தி எனும் செம்மஞ்சள் நிறப் பூ வகை பிறமாவட்டங்களில் கேந்தி எனவும் அழைக்கப்படுவதுண்டு. எ.கா: மக்கா, தோவாளச் சந்தைல கிரேந்நிக்க வெல ரொம்ப கொறஞ்சுபோச்சாண்டே
கிறங்கு / கெறங்கு / கறங்கு சுற்று "வெயில்ல கடந்து கறங்காதே" - "வெயிலில் சுற்றாதே"
கிளாத்தி / க்ளாதி கெளுத்தி மீன்
குசுனி சமையல் அறை வேறு வழக்கிலும் உள்ளது
குங்குவப் பச்சை சுடலை மாடன் சிலைக்கு சார்த்தப்படும் சிகப்பான ஒரு கலவை
குட்டுவம், குத்துப்போணி பெரிய, வாய் அகன்ற பாத்திரம்
குண்ணை ஆணுறுப்பு
குண்டனி கோள் சொல்லுதல், புறம் சொல்லுதல் பொதுவாக கோள்-சொல்லும் / கெட்ட-எண்ணம்-கொண்ட பெண்களைக் குறிக்கும் சொல்
குத்தா மீன் வகை
குத்துப்போணி பெரிய பாத்திரம்
குப்பி புட்டி பொதுத் தமிழில் உண்டு.
கும்பாரி நண்பர் மீனவர்த் வழக்கு
கும்பிளி (நீர்) குமிழி
குருசு சிலுவை மலையாள வழக்கு. க்ராஸ் என்பதன் மருவல்.
குழை / கொழை ஆடு மாடுகளுக்கு உணவாக வைக்கப்படும் இலை தழை
குழை இறக்கம் மரத்தில் இருந்து உபரி இலைகளை வெட்டுதல்
குளிவு சிறு கிண்ணம்
குளியை / குளிகை மாத்திரை மலையாள வழக்கு
குளுத்தி குளிர் "மழ பியாஞ்சி ஒரே குளுத்தியா இரிக்யுவு" - "மழை பெய்து ஒரே குளிராக இருக்கிறது"
குளுவன் / குளுவத்தி குறவன்/குறத்தி போன்ற நாடோடிகள்
குறுக்கு பின் இடுப்பு, கீழ் முதுகு
குறுங்கட்டி உயரம் மிகக்குன்றிய சிறு மேசை "ஒரு காலத்தில் சாப்பிடுபவர் தரையிலமர்ந்து, உணவை சிறு குறுங்கட்டி மீது வைத்து சாப்பிடுவார்களாம்"
குன்னிமுத்து குந்துமணி / குன்றிமணி / குண்டுமணி
கூந்தை / கூந்த உண்டு முடித்த நுங்கின் எஞ்சிய பகுதி கூந்த வண்டி - இரு கூந்தைகள் வைத்து சிறுவர்கள் விளையாடும் வண்டி
கூறம் காய்வது கடலில்/ஆற்றில் குளித்துவிட்டு சுடு மணலில் படுத்து வெயில் காய்வது மீனவர் வழக்கு
கூனி உருவத்தில் சிறியதாய் இருக்கும் ஒருவகை இறால் (ஷ்ரிம்ப்)
கெளிறு மீசை வைத்த குளத்து மீன் வகை
கேரை ஒரு மீன் வகை டுனா
கைலேஞ்சி / கைலேஞ்சு / கைலேஞ்ச் கைக்குட்டை
"கையும்-கணக்கும்" "அளவே" "போரும்ல! ஒங்கள்ளத்தீனி கையும்-கணக்கும் இல்லாம பேயிட்டிரிக்கி" - "போதும்! நீ நொறுக்குத்தீனியை ஒரு அளவே இல்லாமல் உட்கொள்கிறாய்"
கொச்சங்காய் குரும்பைத் தேங்காய் மலையாளத்தில் 'கொச்சு' என்றால் 'சிறியது' என்று பொருள்
கொச்சு முறி சிறிய அறை மலையாள வழக்கு.
கொண்டி கதவு மற்றும் சாளரங்களை இறுக்கிச் சார்த்தப் பயன்படும் கொக்கி போன்ற அமைப்பு
கொதம்பு தென்னம் பாளை
கொப்பன் தகப்பன் 'உங்கப்பன்' அல்லது 'எங்கப்பன்' என்பதன் மருஉ
கொப்பு மரக்கிளை
கொப்புள் தொப்புள் கொப்பூழ் என்பதே தூயதமிழ்ச்சொல்
கொம்மை தாயார் 'உங்கம்மை' அல்லது 'எங்கம்மை' என்பதன் மருஉ
கொமை ஏளனம் செய், கிண்டல் செய் "சும்மா எப்ப பாத்தாலும் அவள கொமைக்யாதே டெ, அழுதுருவா" - "அவளை ஏளனம் செய்யாதே, அழுதுவிடுவாள்"
கொய்வு கொசு
கோடி புதுத்துணி பொதுத்தமிழிலும் உள்ளது
கொடை கோயில் திருவிழா
கோம்பை பித்தன், அசடு, கிறுக்கன்
கோரி குடி மொண்டு குடி
கொல்லாம் / கொல்லமாவு / கொல்லாவு முந்திரி கொல்லாங் கொட்டை - முந்திரிப் பருப்பு, கொல்லா மரம் - முந்திரி மரம், கொல்லாம் பழம் - முந்திரிப் பழம்
கொல்லைக்கு இருத்தல் மலமிருத்தல்
கொள்ளாம் நன்று / நன்றாக-உள்ளது மலையாள வழக்கு.
கோளாம்பி துப்புக் கிண்ணம் "லெய், அங்கன இரிக்கில்லா அந்த 'கோளாம்பிய' எடுல.. எச்சி துப்பனு"
சக்கரம் பணம்
சக்கரை வெல்லம் பொதுத் தமிழிலும் உள்ளது.
சக்கைப் / சக்கப் பழம் பலாப் பழம் மலையாள வழக்கு.
சக்கக்கோட்டை பலாப்பழக்கொட்டை
சக்கோளி அரிசிமாவு, தேங்காய் மற்றும் இரால் / இறைச்சியால் தயாரிக்கப்படும் காரமான அசைவ உணவு
சங்கு கழுத்து கடல்-சங்கு என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது
சட்டம்பி கேடி, தாதா, ரவுடி மலையாள வழக்கு. சட்டாம்பிள்ளை என்பது பள்ளிகளில் முதன்மையாக விளங்கிய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பெயர். தலைவர் என்பது பொருள்.
சட்டவம் வாய் அகன்ற பெரிய பாத்திரம்
சட்டுவம் / சட்டாப்பை தட்டையான கரண்டி தோசைச் சட்டுவம் - தோசைக் கரண்டி
சடவு சொம்பல், உடல் உளைச்சல்
சண்டமுறியன் நேந்திரன் பழத் துண்டுகள் மற்றும் சர்கரை வெல்லப் பாகு ஆகியவற்றில் செய்யப்படும் பஞ்சாமிருதம் போன்ற ஒரு உணவுப்பொருள் மலையாளத்தில் பழநொறுக்கு என்பார்கள்
சத்தி / சர்த்தல் வாந்தி ஸ்ரத்தி எனும் மலையாளச் சொல்லின் திரிபு
சப்பட்டை கெட்டுப்போன, கெட்டவர் "அந்த வானொலிப்பெட்டி சப்பட்டையாப் போச்சு" - "அது வானொலிப்பெட்டி கெட்டுவிட்டது/பழுதாகிவிட்டது"; "அந்த ஆள் ஒரு சப்பட்டை" - "அந்த ஆள் கெட்ட குணமுள்ளவர்". ஆனால், 'சப்பட்டை' என்னும் வழக்குச்சொல் தமிழகத்தின் நடு மற்றும் வட மாவட்டங்களில் "சப்பையான" அல்லது "நசுங்கிய" எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
சப்புஞ்சவறும் குப்பையும் கூளமும் மலையாள வழக்கு
சமுட்டுதல் / சமுண்டு / சவுட்டுதல் / சவட்டுதல் மிதித்தல்
சரக்கு / வெடி / படக்கு / டாக்ஸி வேசி
சருவம் சிறிய பாத்திரம்
சவன்டீஸ் / ஸவன்டீஸ் ஏழு தட்டை கற்களை அடுக்கிவைத்து இரு அணிகளாகப் பிரிந்து ஒரு பந்தை வைத்து ஆடும் விளையாட்டு "ஸவன் டைல்ஸ்" என்னும் ஆங்கிலச் சொற்றொடரின் திரிபு. பொதுவழக்கிலும் உள்ளது
சவுக்கு முட்டாய் சவ்வு மிட்டாய்
சள்ளை தொல்லை "அவன் ஒரு சள்ளையாக்கும், கேட்டியா" - "அவன் ஒரு தொல்லை தருபவனாக்கும்"
சளம் வஞ்சகன், வீணானவன், உருப்படாதவன் (சரியான பொருளா?)
சறக்குதல் சறுக்குதல், வழுக்குதல்
சாடுதல் தாவுதல், குதித்தல் "மக்களே, அங்கெல்லாம் தொளியா இருக்கு, சாடிச்சாடி வராதே டெ, சறக்கி விளுந்துருவெ". என்றாலும், பொதுவழக்கில், சாடுதல் என்றால் திட்டுதல் என்று பொருள்.
சாணாங்கி சாணம்
சாணிப்பால் நீர் ஊற்றிக்கலக்கிய மாட்டுச்சாணம். இது வாசல் மொழுகப்பயன்படும்
சாப்பு / சேப்பு சட்டை பை
சாயிப்பு இஸ்லாமியர் சாகிப் என்பது பொதுவான இசுலாமியப் பெயர். இதைக் கொண்டு இசுலாமியரைக் குறிக்கலாயினர்.
சாரம் லுங்கி தெற்காசியாவில் பரவலான சொல். வேற்று மொழிச் சொல்.
சாளை மீன் வகை, மத்தி
சிக்கு போதை
சிக்குவண்டி குடிகாரன்
சிங்ஙன் பழம் வாழைப்பழத்தில் ஒரு நீண்ட வகை
சிங்காம்புள் கிட்டிப்புள் அல்லது கிட்டிப் புள்ளு அல்லது கில்லி விளையாட்டு
சிப்பல் விருந்துகளில் சோறு பரிமாறப் பயன்படும் அகன்ற கரண்டி
சிவீந்திரம் சுசீந்திரம் என்பதன் கொச்சை வடிவம் ஊரின் பெயரின் மருஉ
சில்லாட்டை தென்னை மரத்தில் இருக்கும் வலை போன்ற பகுதி, பன்னாடை
சிலேபியாக்கெண்டை (சிலேபிக்)கெண்டை மீன் பொதுவழக்கிலும் உள்ளது
சிறுபயறு பாசிப்பயறு
சின்ன உள்ளி / ஈருள்ளி சின்ன வெங்காயம்
சீணம் / ஷீணம் சோர்வு, உடல் உபாதை பொதுவழக்கிலும் உள்ளது
சீலா மீன் வகை, வஞ்சிரம்
சீனிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சீனிச்சட்டி வாணலி
சீனிவரக்காய் கொத்தவரங்காய் / சீனி அவரைக்காய் பொதுவழக்கிலும் உள்ளது
சுட்டிபிடி பெண்கள் ஆடும் ஒரு விளையாட்டு
சுண்டு உதடு மலையாள வழக்கு.
சும்மை சும்மா
சுருக்கா ஒரு வகை பலகாரம்
சுவர்முட்டி ஒருவகை நாட்டுச்சாராயம் நெல்லை மாவட்டத்திலும் உண்டு
சூடு அடித்தல் போர் அடித்தல்
சூரம்பாடு சூரன் போர், சூரன் திருநாள்
செத்தோல சிறிது "கடைக்காரரே செத்தோல சுண்ணாம்பு குடுமே!" - "கடைக்காரரே சிறிது சுண்ணாம்பு கொடுங்களேன்!", செத்த என்பது சிறிதே என்பதன் மருவல். பிற தமிழ் வழக்குகளிலும் காணப்படும்.
செணம் சீக்கிரம் / விரைவாக க்ஷணம் எனும் சங்கதச்சொல்லின் பொருளை ஒத்தது
செயின்ற் செயின்ட் / புனித 'ட'னாவின் மெல்லிய ஒலிக்கு 'ற'னாவை பயன்படுத்துவது வழக்கம். இது மலையாளத்தில் முழு பயன்பாட்டில் உள்ளது. செயின்ட் (സെയിന്റ്) - இங்கு 'ന്റ്' என்பது 'ன்ற்' என்பதைக் குறிக்கிறது. மேலும் டாட்டா(Tata) என்பதை டாற்றா (ടാറ്റാ) என்றே எழுதுகிறார்கள் ('റ്റ' - 'ற்ற'). இலங்கைத் தமிழிலும் இந்த முறை உள்ளது (மீட்டர் - மீற்றர்)
செரவி / செரவம் தேங்காயத் துருவி
செல்லி தென்னை மரத்தைத் தாக்கும் ஒருவகை வண்டு
செவி காது "அவன் செவில என்னலே சென்ன", "அவன் காதில் என்ன கூறினாய்". பொதுவழக்கிலும் உள்ளது
செவிள் / செவளை கன்னம்+காது சேர்ந்த பகுதி, மீன்களுக்கு செவுள் இருக்கும் பகுதி "அவன் செவிட்ல பொளீர்னு அறஞ்சான்".
செறை / செற தொல்லை, எரிச்சல்
செறுத்தல் தடுத்தல், வழிமறித்தல் பொதுவழக்கிலும் உள்ளது
செறுப்பம் / சிறுப்பம் சிறு வயது
சொக்காரன், சொக்காரி சொந்தக்காரன், சொந்தக்காரி / சகோதரன், சகோதரி / ஒன்று விட்ட பெரியப்பா சித்தப்பா பிள்ளை / பங்காளி
சொளவு / சொளகு முறம்
சோக்கேடு / சூக்கேடு நோய் சுகக்கேடுவல் இருந்து மருவியது, மலையாள வழக்கு
சோறு வைப்பு திருமணத்தின் முந்தைய தின விருந்து
டப்பர் வாளி ஞெகிழி வாளி, பிளாஸ்டிக் வாளி
ஞாறாச்ச ஞாயிற்றுக்கிழமை. ஞாயிறாழ்ச்சா எனும் மலையாளச்சொல்லின் திரிபு
டப்பி சிறு பெட்டி பொது வழக்கிலும் உள்ளது
தட்டிப்பிழிச்சல் / தட்டிப்புளிச்சல் காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம் ஆகியவற்றிர்க்கு வீட்டில் தயாரிக்கப்படும் கைமருந்து
தட்டு மாடி
தட்டுமடி டலில் கட்டுமரத்தில் சென்று வலை போட்டுவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கட்டுமரத்தில் சென்று வலையை எடுத்து கரைக்கு கொண்டுவரும் சிறியவகை மடி (வலை) இதற்கு 2 அல்லது 3 பேர் போதும்
தடியங்காய் சாம்பற் பூசணிக்காய் மலையாள வழக்கு
தடுக்கு பனை ஓலையால் செய்யப்பட்ட சிறு பாய்
தண்டு துடுப்பு தேங்காய்பட்டணம் வழக்கு
தணுப்பு குளிர் பொது வழக்கிலும் உள்ளது. மலையாளத்திலும் வழக்கத்தில் உள்ளது
தலகெறக்கம் தலைசுற்றல்
தலமண்டை தலை
தவுக்கா தவளை
தள்ளை தாய்
தாக்கோல் சாவி
தாமிரபரணி ஆறு குழித்துறை ஆறு நெல்லை மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை
தாளி இலைச்சாறு, ஒரு வசைச்சொல் (தாயளி)
தாறா வாத்து ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
திராணி தைரியம், ஆற்றல், வலு பொது வழக்கிலும் உள்ளது
திருப்பன் கொண்டையில் வைத்து கட்டும் ஒரு அலங்காரப்பொருள்
துட்டி வீடு துக்க வீடு
துண்டு குற்றாலந்துண்டு, சுட்டித் துவர்த்து, ஓணத்துண்டு பொதுத் தமிழில் உள்ளது
துப்புணி உமிழ்நீர் "மடையா, துப்புணி தெளிக்யாம ஒனக்கு பியாசத் தெரியாதா?". துப்புநீர் என்பதன் மருவல்.
துவர்த்து / தொவற்து / துவற்து / தொர்த்து தலைதுடைக்க பயன்படும் துண்டு, துவட்டுவது "மண்டைல இன்னும் ஈரம் போகல்ல பாரு.. அங்கன கடக்க பச்ச தொவற்தால தோற்திக்கோ". மலையாள வழக்கு
துவரன் பொரியல் மலையாள வழக்கு
துள்ளுமறி / துள்ளுமாறி பலி கொடுக்க பயன்படும் ஆட்டுக்கிடா அல்லது ஆட்டுக்குட்டி பொதுத் தமிழிலும் உள்ளது.
துளுவன் பழம் வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை பொதுவழக்கிலும் உள்ளது
துறையல் / தொறவால் சாவி திறவுகோல் என்றும் தமிழில் அழைக்கும் வழக்கம் உண்டு.
தூப்பு துடைப்பம்
தூரணி கடலுக்குள் அலை எழும் இடம் மீனவர் மொழி
தூரமா? வெளியே செல்கிறீர்களா? / எங்கே செல்கிறீர்கள்?
தூரை சிறிய மண்டபம்
திருவலை தேங்காய்த் துருவி
தின்னக்கு / உண்ணக்கு தின்பதற்கு / உண்பதற்கு
தீட்டம் மலம் மலையாள வழக்கம்
தெங்கு / தெங்ஙு தேங்காய் / தென்னை மலையாள வழக்கு. ஔவையாரின் மூதுரை: "நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி; என்று தருங்கொல் எனவேண்டா - நின்று; தளரா வளர்`தெங்கு` தாள்உண்ட நீரைத்; தலையாலே தான்தருத லால்"
தெண்டல் ஓணான்
தெரக்கு தேடு
தெரச்சி மீன் வகை
தெரளி இலை பிரிஞ்சி இலை
தெவக்கம் தேக்கம், தாகம், தேம்புதல், மூச்சுவாங்குதல்
தெறி இளகிய மணல்மேடு, கெட்டவார்த்தை மலையாள வழக்கு.
தெறி மண் செம்மண்
தேரடு இறுகிய மண்மேடு
தேழி / தேளி மீசை வைத்த குளத்து மீன் வகை
தொட்டி ஒரு இழிச்சொல் / வசைச்சொல், வெட்டி / ஊதாரி / நாகரீகம்-இல்லாதவர் தண்ணீர் தொட்டி போன்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. "அவனா, அவன் ஒரு தொட்டிப் பய". தொட்டியர் என்போரும் உளர்.
தொரப்ப, துறப்ப, தொறப்பை துடைப்பம், விளக்குமாறு
தொலி தோல் "பளத்த தின்னிட்டு தோலிய தொட்டீல போடு மக்கா, செரியா"
தொளவடை துளையிட்ட வடை தொள - துளை என்பதன் மருவல்
தொளி / தொழி சேறு
தோளி உழவு மழைக்கால/பனிக்கால உழவு
தோண்டி பனை ஓலையில் செய்யப்படும் ஒரு தண்ணீர் சுமக்கும் குழிந்த பாத்திரம் பொதுத்தமிழில் 'தோண்டி' என்பது மண்ணால் செய்யப்படும் பாத்திரம்.
நம்பட்டி மண்வெட்டி
(வீட்டு) நடை வீட்டு வாசற் படி நடை என்பது வீட்டின் முற்றத்தில் இருந்து பின்வாசல் வரை உள்ள நேர் பாதையை, நடந்துசெல்லும் பாதையைக் குறிக்கும். பொதுத் தமிழிலும் உள்ளது.
நடூஸ் நடுவில், மையத்தில்
நம்மாட்டி மண்வெட்டி
நல்லமாவு மா
நளி (செல்லமாக) கேலி செய்தல் "தாத்தா சிறுவர்களிடம் நளி அடித்து அவர்களை மகிழ்வித்தார்" - "தாத்தா சிறுவர்களை கேலி செய்து அவர்களை மகிழ்வித்தார்"
நாணக்கேடு கேவலம்
நாயடி ஒரு பழங்குடியினத்தின் பெயர்
நாரோயில் / நாறோல் நாகர்கோவில் என்பதின் கொச்சை வடிவம் நாகர்கோவில்
நிக்கர் அரைக்கால் சட்டை நிக்கர் (knicker) என்றால் பெண்களின் உள்ளாடை என்று பொருள்.
நிக்கான் / நிக்கா/நிக்கிறாள் நிற்கிறான்/ நிற்கிறாள், வேலை செய்கிறான் / வேலைசெய்கிறாள் "அவ துணிக்கடைல நிக்கா" - "அவள் துணிக்கடையில் வேலைசெய்கிறாள்". நிற்கிற என்பதன் மருவல்
நிச்சாம்பலம் நிச்சய தாம்பூலம்
நிலவா சோறு பரிமாறப்பயன்படும் கரண்டி
நுள்ளல் கிள்ளல் "மகன்: அம்மா, இவன் என்ன நுள்ளுகான், ரெம்ப வலிக்யு; தாய்: மோனே ரொம்ப நோவுகா?" - "மகன்: அம்மா, இவன் என்னை கிள்ளுகிறான், ரொம்ப வலிக்கிறது; தாய்: மகனே வலிக்கிறதா?"
நீக்கம்பு திமிர், வயிற்றுப்போக்கு, பெருமழை
நிழல் தங்கல் ஒரு அய்யாவழி வழிபாட்டுத் தலம்
நெக்கல் அழுத்தி பிதுக்கல்
நெட்டி கஞ்சி அல்லது கூழ் குடிப்பதற்கு சிலவகை இலைகளால் (மா, பலா, தென்னை) செய்யப்படும் கரண்டி போன்ற அமைப்பு
நெரிபிரி அவசரகதி, நெரிசல் "அங்கன ஒரே நெரிபிரியா இருக்யு" - "அங்கே ஒரே மக்கள் நெரிசலாக இருக்கிறது"; "அக்கா நெரிபிரியா வேல செஞ்சிட்டிருக்கா" - "அக்கா அவசரகதியில் வேலை செய்துகொண்டிருக்கிறாள்".
நேரியல் நீண்ட துண்டு
நோவு / நோகல் வலி பொதுத்தமிழிலும் உள்ளது
பக்கரா சுருக்குப் பை
பக்கி வண்ணத்துப்பூச்சி
பச்சம் நட்பு கொளல்
பசியாறல் உணவு உண்ணல், சாப்பிடல் பொதுத்தமிழிலும் உள்ளது
பஞ்சசாரை சீனி
பட்டை கஞ்சி குடிப்பதற்காக பனை ஓலையில் செய்யப்பட கரண்டி
படக்கு பட்டாசு
படத்தி ஒரு வாழை வகை
படிக்கம் துப்புச் செட்டி, எச்சில் உமிழ்வதற்கு பயன்படும் அகண்ட வாய் கொண்ட பாத்திரம்
பண்டு முன்பு, பழைய காலம் மலையாள வழக்கு
பத்தாயம் தானியங்கள் பாதுகாக்கும் அறை, குதிர் பொதுத் தமிழில் உண்டு.
பதி ஒரு [அய்யாவழி]] வழிபாட்டுத் தலம் பதி என்பது தலைவனையும், தலைமையான இடத்தையும் குறிக்கும்.
பய்ய / பைய மெதுவாக, மெல்ல "ஏல பைய பேயிட்டு வா என்னா" - "அடெ, மெதுவாக போய்விட்டுவா, சரியா". திருக்குறள்: "அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் `பைய` நகும்.". இரண்டாவது அடியில் தலைவி மெதுவாக சிரிக்கிறாள் என்பதை "பைய நகும்" என்கிறார் வள்ளுவர்.
பயறுவது பயம் கொள்வது "நான் இருட்ல நின்னிட்ரிந்தேன்லா.. என்ன பியாய்னி நெனச்சு அவன் பயறிட்டான்.. லே.. பயறாதே டே" - "நான் இருட்டில் நின்றுகொண்டிருந்தேன் அல்லவா, என்னை பேய் என எண்ணி அவன் பயந்துவிட்டான்.. ஏய். பயந்து விடாதே"
பயினி பனை பதநீர்
பரவர் மீனவர்களிடையே இருக்கும் ஒரு சாதி வகை
பல்பனாபுரம் பத்மநாபபுரம்
பல்லாரி உள்ளி பெரிய வகை வெங்காயம் பல்லாரி என்னும் ஊரில் விளையும் வெங்காயம்.
பலவஞ்சனம் மளிகை, பலசரக்கு மலையாள வழக்கு
பலிசை வட்டி மலையாள வழக்கு
பராதி குறை, புகார், முறைப்பாடு சங்கதச்சொல். மலையாள வழக்கு. "அவன் இவனப்பத்தி பராதி சொன்னான்" - "அவன் இவனைப்பற்றி புகார் சொன்னான்"
பரானம் படபடப்பு
பரிகேடு / பரியடு இழிவு, கேவலம், அவமானம் மீனவ வழக்கு
பறதல் (வீட்டில்) பயனற்று அடைந்து கிடக்கும் பழைய பொருட்கள்
பறதி அவசரம், பதற்றம் போதுவழக்கிலும் உள்ளது
பாச்சா கரப்பான்பூச்சி
பாஞ்சுப்பழம் / பாஞ்சிப்பழம் சீதாப் பழம் "அன்னா செபஸ்டியான் வீட்ல பாத்தியா, பாஞ்சுப்பழம் கொத்துகொத்தா காச்சுக் கெடக்கு"
பாம்பிரி திண்ணை, வராந்தா தேங்காய்ப்பட்டண வழக்கு
பாம்பு குடிகாரன் "அவன் ஒரு பாம்பு, லேய்" - "அவன் ஒரு குடிகாரன்"
பாம்புராணி அரணை, பாம்பரணை
பாரை மீன் வகை
பாளயன்கொட்டன் புளிப்பும் இனிப்புமான ஒரு வாழைப்பழம்
பாறக்கோல் / பாரைக்கோல் கடப்பாரை
பிறுத்தி / புறுத்தி அன்னாசி
பின்ன அப்புறம், அப்போ "சரி, பின்ன விடு" - "சரி, அப்போ விடு"; "பின்ன பாத்துக்கலாம்" - "அப்புறம் பாத்துக்கலாம்"
பின்னல்லாம? / பின்னல்லாதக்கி? எரிச்சலோடு ஆமோதித்தல், "அந்த பதிலைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்?" "நபர்1: எல்லா சோத்தையுமா சாப்டுட்டெ? நபர்2: பின்னல்லாதக்கி? அவ்ளோ பசி" - "நபர்1: சோற்றை முழுவதுமாக நீயா உண்டாய்? நபர்2: எனக்கு அவ்வளவு பசி. அதைத் தவிர வேறு என்ன என்னால் செய்திருக்கமுடியும்?".
பீயாத்தி கத்தி 'பிச்சாத்தி' எனும் மலையாள வழக்கின் மருஉ
புட்டான் தட்டான் பூச்சி
புள்ளியோ சிறு பிள்ளைகள் பிள்ளைகள் என்பதன் மருவல். ஆம்புள்ளியோ, பெம்புள்ளியோ.. "ஆண் பிள்ளைகள், பெண்பிள்ளைகள்"
புள்ளோ மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது
புளியமுத்து புளியம்பழ கொட்டை புளியங்கொட்டையை முத்து என்றும் அழைக்கும் பழக்கம் உள்ளது. பல்லாங்குழி விளையாடுவோர் புளியங்கொட்டையை முத்து என்றே அழைப்பர்.
புளியாணம் ரசம் இசுலாமியர்களிடையே பிரபலமான ஒருவகையான சுவை, மணம் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட ரசம். காயல்பட்டினம், தேங்காய்பட்டினம் மக்களிடையே இந்த ரசம் மிகப் பிரபலம்.
புறத்தால / புறத்தோடி / பொறத்தால / பொறத்தோடி பின்னால், வெளியே "இந்த குப்பைய பொறத்தால இருக்ய குப்பத்தொட்டீல போய் கொட்டு" - "இந்த குப்பையை வீட்டிற்கு பின்னால் இருக்கும் குப்பைத்தொட்டியில் போய் கொட்டு"; புறம் - வெளி
பூஞ்சட்ட / பூஞ்சட்டை துடப்பம் செய்ய பயன்படும் ஒருவகை மெல்லிய புல், மெல்லிய மயிர்
பூவெண்ணெய் நறுமணம் சேர்த்த கூந்தல் எண்ணெய்
பிழாவு பனை ஓலையால் மாவு உலர்த்தப் பயன்படும் பொருள்
பின்ன அப்புறம்
பெனஞ்சு பிசைந்து
பெர / பெரை அறை / பந்தல் / ஓய்வுக்கூடம் மலையாள வழக்கு
பெறம பிறகு / பின்னால்
பெகளம் அமைதியின்மை / கொந்தளிப்பு / குழப்பம் மலையாள வழக்கு.
பேடு பூச்சி அரித்த ஒரு மரத்தின் கெட்டுப்போன பகுதி, முதிராமல் கெட்டுப்போன தேங்காய் "அந்த மரத்துல பேடு விளுந்துருக்கு"
பேயன் பழம் வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை பொதுவழக்கிலும் உள்ளது
பேயிட்டு / பேயிற்று போய்விட்டு. 'போ' என்பது 'பே' என திரிந்துள்ளது "அவ பேயிற்றாளா? நா பேயிட்டாறேன்" - "அவள் போய்விட்டாா? நான் போய்விட்டு வருகிறேன்"
பைத்தாறன் / பைத்யாறன் பைத்தியக்காரன்
பொக்கன் சின்னம்மை நோய்
பொடவு பொந்து
பொடி உழவு வெயில் கால உழவு
பொத்தை உடல்பருத்த, குண்டு, தடித்த
பொதப்பு போர்வை
பொழி தட்டல் / மறம் அடித்தல் விளை நிலத்தை சமன்படுத்துதல்
பொறவு / பொறபு பிறகு, அப்புறம் "பொறவு, அந்த கதைல என்னாச்சினி செல்லு" - "பிறகு, அந்த கதையில் என்ன ஆயிற்று என்று சொல்லு"
பொறத்தால பின்னால் "அந்த போட்டோல அந்த வளத்தியான ஆளுக்க பொறத்தால ஒருத்தன் நிக்க்யானில்லா, அது நானாக்கும்"
போஞ்சி எலுமிச்சை பழரசம்
போட்டு அது போகட்டும், கவலை கொள்ளாதே
பொடதி பின் மண்டை பிடறி என்பதன் மருவல்.
போணி வாய் அகன்ற உயரம் குறைந்த பாத்திரம்
போயில புகையிலை
மக்கா / மக்களே மகனே / மகளே, செல்லமாக யாரையும் அழைப்பது "மக்கா, ஒங்க வீட்ல எல்லாரும் சௌக்கியமா?"
மகுடம் கணியான் ஆட்டத்தில் இசைக்கப்படும் பறை/தப்பட்டை போன்ற ஒரு மேளம்
மங்களா வரவேற்பு அறை
மசை இளம்பெண்டிரைக் குறிக்கும் கொச்சையான சொல்
மஞ்சணாத்தி மல்பரி பொதுவழக்கில் மஞ்சணாறி என அழைக்கப்படுகிறது
மஞ்சு கூரையை இரு பக்கத்திலிருந்தும் தாங்கிப்பிடிக்கும் முக்கோண வடிவிலான சுவர் அமைப்பு
மட்டுப்பாவு / மட்டுப்பா மாடி, உப்பரிகை, மொட்டை மாடி
மட்டம் தடவை "அவன் வீட்டுக்கு போகாதேன்னு, எத்தன மட்டம் ஒங்கிட்ட சொல்லிருக்கேன்?" - "அவன் வீட்டுக்கு போகாதே என்று எத்துனை தடவை உன்னிடம் சொல்லியிருக்கேன்?"
மட்டிப் பழம் வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகை குமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.
மடி சோம்பல் / மீன் வலை
மண்ணாந்தை அறிவிலி; முட்டாள்
மண்டகனம் தலைவலி + ஜலதோஷம், திமிர் அவ மண்டகனம் புடிச்சவ - அவள் திமிர் பிடித்தவள்
மண்டக்குத்து / மண்டயிடி தலைவலி
மணக்கா சோப்பு சவக்காரம், சலவை சோப்பு
மணிக்கூர் மணி நேரம் மலையாள வழக்கு
மணிமேடை மணிக் கூண்டு
மம்பெட்டி மண்வெட்டி பொதுவழக்கிலும் உள்ளது.
மயினி மச்சினி(மச்சினன்), கொழுந்தி, கொழுந்தியாள், மாப்பிளையின் தங்கை, அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மனைவியின் அக்கா "மதினி" என்பதின் மரூஉ
மரக்கறி காய்கறி ஈழத்தமிழ் வழக்கு, மலையாள வழக்கு.
மரச்சீனிக் கிழங்கு மரவள்ளிக் கிழங்கு பொதுவழக்கிலும் உள்ளது.
மல்லாரி ஆர்ப்பரிப்பு, ஆர்ப்பாட்டம் செய்தல், உரத்த ஓசையோடு பேசுதல் "நடு ரோட்ல நின்னிட்டு மல்லாரி வெச்சிட்டிருந்தான்" - "சாலையின் நடுவில் நின்றுகொண்டு ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தான்"
மலத்து கவுத்து "அடிமுறை தெரிஞ்சா மட்டும் அவன மலத்தித் தள்ளீருவேறு!" - "அடிமுறை (தற்காப்புக்கலை) தெரிந்தால் மட்டும் அவனை அடித்து கவுத்தி தள்ளிவிடுவேராக்கும்!", மலத்து - கவிழ்த்து என்பதை விட நிமிர்த்து என்பது உசிதம். மலந்து கிடந்தான் என்பது காண்க. போட்டு மலத்திட்டான் என்பதூஉம்.
மற்றவன் / மத்தவன் / மற்றவள் / மத்தவள் / மற்றது / மத்தது / மற்றவரு / மத்தவரு இங்கு இல்லாத இன்னொருவர், மூன்றாமவர் "அதோ, மத்தவரு வறாரு"
மனசிலாகுதல் / மனசிலாவுதல் புரிதல் "என்னா, நான் சொன்னது மனசிலாச்சா?" - "என்ன, நான் சொன்னது புரிந்ததா". 'மனசிலாகுதல்' என்பது ஒரு மலையாள வழக்குச் சொல்
மாப்பிள்ளைக்கு இருந்தாச்சா? பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டதா? இசுலாமியர் வழக்கு
மாம்பட்டை ஒருவகை நாட்டுச்சாராயம் இச்சாராயத்தை காய்ச்சும்போது அதில் மாம்பட்டை அல்லது மஞ்சணாத்தி, காட்டுக் காஞ்சிரம் ஆகியவைகளை போடுவார்கள் என்பது பேச்சு.
மாறி அதற்கு பதிலாக, அதற்கு மாறாக, ஆனால் "நேத்து நல்ல மழை பெய்யும்னு நெனச்சென், மாறி நல்ல வெயில்" - "நெற்று நல்ல மழை பெய்யும் என நினைத்தேன், அதற்கு மாறாக நல்ல வெயில் அடித்தது"
மிட்டாசு / மிட்டாஸ் / மிட்டாசி மிட்டாய் பொது வழக்கிலும் உள்ளது
மிளா கடா மான் தென்காசி , அம்பாசமுத்திரம் பகுதிகளிலும் இந்த.வழக்கு இருக்கிறது
முக்கு மூலை பொதுத்தமிழிலும் உள்ளது. முக்கம் என்றும் அழைப்பர்.
முக்குவர் மீனவர்களிடையே இருக்கும் ஒரு சாதி வகை
முந்திரி கொத்து பயத்தம்பருப்பால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பலகாரம்
முட்டாசு / முட்டாஸ் / முட்டாசி மிட்டாய் பொது வழக்கிலும் உள்ளது
முடுக்கு சந்து
முடை / மோடை பின்னு பொதுத் தமிழிலும் உள்ளது. கூடை செய் என்பதைக் காட்டிலும், கூடை முடைதல் என்பதே பொருத்தம். "கூடைய மோடை" - "கூடையைப் பின்னு"
முண்டு வேட்டி மலையாள வழக்கு.
முறி அறை
முத்தம் முற்றம்
முள்ளன் ஒரு சுறாமீன் வகை
முனை பின்னு ஓலை முனை - ஓலையை பின்னு
மூடு மரத்தின் வேரின் மேலே தெரியும் கனமான பகுதி
மூப்லு தகப்பன்
மேல / மேல் மேற்கு பொதுத் தமிழிலும் உள்ளது.
மைக்கோட்டி கம்பளி பூச்சி
மொந்தன் பழம் வாழைப்பழத்தில் ஒரு தடித்த வகை
மொரால் மீன் வகை
மொளவுக்கா மிளகாய் மிளகாய் என்பதன் மருவல்
மொளவாடி மிளகாய்ப்பொடி என்பதன் மருவல்
மொளுதிரி மெழுகுத்திரி என்பதின் திரிபு
மோந்தி அந்தி, சாயுங்காலம்
மோட்டுவளை வீட்டுக் கூரையின் உச்சிச் சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டு முகட்டுவளை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு. வீட்டு முன்வாசாலில் உள்ள வளைவு.
மோளே (செல்லமாய்) மகளே
மோனே (செல்லமாய்) மகனே
யாமுல / யாம்ப்ல என்ன டா
யானம் பாத்திரம்
ரஸகதலிப் பழம் வாழைப்பழத்தில் ஒரு சிறிய வகை ரஸ்தாளி என்றும் அழைப்பர்.
லாந்தல் மந்தமான வான்நிலை
லாமடி உலை மூடி, மீன்கறி வைக்கும் மண்சட்டியின் மூடி மீனவர் வழக்கு
லாறி லாரி
லெட்டு பந்துமுனை பேனா பொதுவழக்கிலும் உள்ளது. எ.கா: "லெட்டு இருக்கா?" - "பேனா ரீபில் இருக்கா?
வச்சூத்தி புனல் (funnel) வைத்து ஊற்றி என்பதன் திரிபு. முன்னைக் காலத் தமிழில் வைத்தூற்றி என்ற சொல் இருந்ததாக பாவாணர் சொல்கிறார்.
வசக்குதல் வதக்குதல் "வியண்டக்காய சட்டீல போட்டு கொஞ்சோல எண்ண ஊத்தி வசக்கி..." - "வெண்டைக்காயை சட்டியில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி..."
வசக்கேடு வசதிகுன்றிய, அசௌகரியமான
வட்டி பனை ஓலையால் ஆன பாத்திரம்
வட்டிலு தட்டு
வட்டு மாத்திரை
வட்டை உயரம் குறைந்த சம்படம்; சாப்பாட்டுச் சம்படம்
வண்ணம் உடல்பருத்த, குண்டு, தடித்த "அவ என்னா வண்ணம்!" - "அவள் உடல்பருத்து காணப்படுகிறாளே!"
வத்தல் / வற்றல் காய்ந்த மிளகாய் "அண்ணே ஒரு கிலோ வத்தல் கொடுங்க" - இங்கு "வத்தல்" என்பது காய்ந்த மிளகாயையே குறிக்கிறது. பொதுத் தமிழிலும் காய்ந்த மிளகாயைக் குறிக்கின்றனர். ஆனால், பொதுவாக, காய்ந்த காய்கறிகளை வற்றல் என்பது வழக்கம்.
வந்தேட்டி, வரத்தேட்டி வந்தேறி பிற பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள்
வல்லச்சாதியும் ஒருவழியாக
வழுதலங்காய் / வழுதனங்காய் நீண்ட கத்தரிக்காய், வழுதுணைக் காய் மலையாள வழக்கு. என்றாலும், மலையாளத்தில் எல்லா வகையான கத்தரிக்காய்களையும் வழுதலங்காய் என்றே அழைக்கின்றனர். ஆனால், குமரிமாவட்டத்தில், உருண்டை கத்தரிக்காய்களை 'கத்தரிக்காய்' என்றே அழைக்கின்றனர். பழைய தமிழில் வழுதனங்காய் என்றே அழைத்தனர்.
வார்ப்பு பெரிய விருந்துகளுக்கு சோறு சமைத்திடப்பயன்படும் உயரம் குறைந்த மிகப் பெரிய பாத்திரம்
வார்ப்புச்சோறு திருமணம் மற்றும் பிற விழா வீடுகளில் மிக அகண்ட பாத்திரத்தில் சமைத்த சோறு
வாரியல் துடைப்பம் வாரிக்கட்டை - துடப்பக்கட்டை.
வாலாம் பாதாம் வாலாமரம், வாலாங்கொட்டை, வாலாம்பருப்பு
வாலாமடை பொறுக்கி, சுட்டி, ரவுடி
வாறா/வாறாங்/வாறாவ/வருவு வருகிறாள்/வருகிறான்/வருகிறார்கள்/வருகிறது
விசர்ப்பு வியர்வை மலையாள வழக்கு
வியாளா ஒரு வகை மீன் வியாளா குட்டி காரை மீன் என்றும் கூறுவர்
விரவி பிசைந்து / கலந்து பொதுத் தமிழ்ச் சொல்
விலக்கு ஊரின் எல்லை
விளம்பு பரிமாறு
விளை, வெளை விளைநிலம் / தோப்பு
விறவு விறகு என்பதன் திரிபு
வீச்சம் துர்நாற்றம், கெட்ட வாடை ஒரு சில பொதுவழக்குகளிலும் உள்ளது
வீத்து ஊற்று லே மக்கா ஒரு வாளி வெள்ளத்தை கோரி வீத்து. மீனவர் வழக்கு
வீதி அகலம் பொதுவழக்கிலும் உள்ளது
வீடி பீடி
வெக்கை சூடு பொதுவழக்கிலும் உள்ளது
வெகளம் வம்புக்கிழுப்பது, பகடிசெய்வது, தொல்லைகொடுப்பது
வெசேல வேகமாக
வெட்டு வலிப்பு நோய் அங்கன ஒருத்தன் வெட்டிட்டு கியடக்கான் - அங்கு ஒருவனுக்கு வலிப்பு வந்துள்ளது
வெட்டோத்தி / வெட்டுக்குத்தி / வெட்டுக்கத்தி வெட்டருவாள்
வெடலை இளநீர் விடலை என்பதன் மருவல். பொதுவாக, இளமை என்று பொருள்.
வெப்ராளம் மனப்புழுக்கம் மலையாள வழக்கு. "லெய், வெப்ராளப்படாதே!" - "மனப்புழுக்கம் கொள்ளாதே"
வெறச்சிற்று / வெறச்சிட்டு நின்றுவிட்டது மழை வெறச்சிற்றா? - மழை நின்றுவிட்டதா?
வெறையல் நடுக்கம்
வெள்ளுள்ளி / வெளுத்துள்ளி / வெள்ளாஞ்ஞம் /

வெள்ளகூடு

பூண்டு நாகர்கோயில் வழக்கு /

மலையாள வழக்கு

வெளக்குமாறு துடைப்பம்
வெளிக்கு போறேன் மலமிருக்க போறேன்
வேண்டுதல் வாங்குதல் வேண்டுதல் என்பது பெறுவதற்காகக் கோருதல் என்னும் பொருளைத் தரும். மீனவர் வழக்கு. "திங்கள்சந்தைக்கு போறேன், ஏதாவது வேண்டணுமா?" - "திங்கள்சந்தைக்கு போகிறேன், ஏதாவது வாங்கவேண்டுமா?". "புது சைக்கிளா? எங்க வேண்டினீரு?" - "புதிய மிதிவண்டியா? எங்கே வாங்கினீர்கள்?"
வேளம் பேச்சு "இந்த ஒரு மாதிரி ஆளுவள மெனெக்கெடுத்துற வேளம் செல்லக்கூடாது" - "இந்த மாதிரி நேரத்த வீணடிக்கும் பேச்செல்லாம் பேசக்கூடாது"
வேனா வெயில் கடுமையான வெயில்
வைசூரி / வசூரி பெரியம்மை நோய் பொதுத் தமிழிலும் உள்ளது. சித்த மருத்துவத்தில் பெரியம்மை நோயை வைசூரி என்றே குறிப்பிடுகின்றனர்.
ஜெம்பர் / ஜம்பர் இரவிக்கை பொதுவழக்கிலும் உள்ளது.
*ட்டீ / *டே * டி வாட்டீ - வாடி; யாண்ட்டீ - ஏன் டி; என்னடே - என்ன டி. இதில், '*டே' விளியானது, பெரும்பாலும் (இளம்)பெண்களுக்கிடையே பயன்பாட்டில் இருக்கும் ஒன்று என்றாலும், சில ஆண்களும் பயன்படுத்துவதைக்காணலாம். இவ்விரு விளிகளும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரளவு காணப்படுகிறது.
*ல * டா வால - வா டா; யாம்புல - ஏன் டா. இவ்விரு விளிகளும் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரளவு காணப்படுகிறது என்றாலும், அங்கெல்லாம் '*ல' விளிக்குப்பதிலாக '*லே' விளிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
*இயம் *கிறோம் சாவியம் - சாகிறோம்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரி_மாவட்டத்_தமிழ்&oldid=3512395" இலிருந்து மீள்விக்கப்பட்டது