மலேசியத் தமிழர் தந்த தமிழ்ச் சொற்கள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
மலேசியத் தமிழர் தந்த அருந்தமிழ்ச் சொற்கள் என்பவை மலேசியாவின் தோட்டப்புறத் தமிழ் மக்களின் வழக்கிலிருக்கூம் சில தமிழ்ச் சொற்கள் பற்றியதாகும்.
வரலாறு
[தொகு]தமிழர்கள் இந்நாட்டிற்கு இரு நூறாண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டனர். தமிழரின் உலகப் பரவலை ஆய்வு செய்தால்கண்டறியும் நோக்கில் புதிய இடத்தில் பரவல், கடற் கோளின் கொடுமையால் புதிய இடங்களை நோக்கிப் பரவல்,வணிக நிமித்தமாக சென்று பரவல்,ஆட்சி அதிகாரங்கள் நிமித்தமாகப் பரவல், பிழைப்பு நிமித்தமாக பரவல்,போர் நிமித்தமாகப் பரவல், என்று பலவகையாகப் பிரிக்கலாம்.
இம்மலைத் திருநாட்டிற்கு வந்த தமிழர்கள் பிழைப்பு நிமித்தமாக வெள்ளையரால் கொண்டுவரப் பட்டவராகவே கருதப்படுகின்றனர். இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் முன்பின் அறியாத இடங்களில் முன்பின் அறியாத தொழிலுக்காக கூட்டம் கூட்டமாக குடியமர்த்தப் பெற்றனர்.
அன்றைய வெள்ளையர்களுக்கு இவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி இருந்ததே ஒழிய இவர்களின் குமுகாய அமைப்பு முறையைச் சிதறடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை. தமது வணிக நோக்கிற்காக மட்டுமே இவர்கள் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் எனலாம். அந்த வணிகச் சிந்தனைக்கு முரணான ஓர் இனத்தின் அடிப்படைக் கூறுகளை அவர்கள் எதிர்த்தனர். ஆனால், இன அழிப்பு நோக்கம் அவர்களுக்கிருக்கவில்லை.
எனவேதான் முதலாளிய மேலாண்மை இருந்த சூழலிலும் தமிழ்க்கல்வி, தமிழ்ப்பண்பாடு தமிழ்மக்களால் தடையின்றி பேணப்பட்டன எனலாம்.
இத்தகு நிலையில்தான் முதலாளிய வெள்ளையருக்கு உழைத்த தமிழ் மக்கள் குமுகாய கட்டமைப்பு சிதறாமல் தோட்டப்புறங்களில் வாழ்ந்தனர்.
ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற வகையில் ஒன்றுபட்ட தமிழ் மக்கள் ஒரே இடத்தில் வாழுகின்ற பொழுது தாங்கள் பேணி வந்த பழக்க வழக்கங்களையும், மொழி வழக்கங்களையும் மறவாமல் பேணிக் காக்கலாயினர். அனைத்து வகையான விழா நிகழ்வுகளிலும் அவர்களின் அடிப்படையான மரபுகள் பேணப்பட்டன.
இவற்றுள் மொழிப் பேணலை முகாமையான ஒன்றாகச் சொல்லலாம். கற்றவரை விட கல்லாதவராய் மரபுவழி வாழ்ந்த தோட்டப்புற மக்கள் தமிழின் நிலைப்பாட்டுக்கு ஆற்றிய இயல்பான பங்களிப்புகள் இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது வியக்கத் தக்கவனாக உள்ளன.
இத்தோட்டப்புற மக்கள் புதிய சூழலில் தாங்கள் முன்பின் அறியாத ஒரு தொழிலை மேற்கொண்ட பொழுது, அத்தொழிலை ஒட்டிய பல்வேறு பொருள்களுக்கு பெயர் வைக்க சொல்லைத் தேடி அலையவில்லை. இவர்கள் உருவாக்கிக் கொடுத்த பன்னூற்றுக் கணக்கான சொற்களுக்கு வேர் மூலம் தமிழ் மண்ணில் தோன்றியதாக இருக்கலாம். ஆனால், அவ்வேர்ச் சொற்களையும், மூலச் சொற்களையும் அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளுக்கு பொருந்த பொருளுரைத்ததும் சொல்லமைத்ததும் எண்ணிப் போற்றத் தக்கதாகும். அவற்றுள் சிலவற்றை இங்குக் காண்போம்.
- ஒட்டுப் பால் அல்லது கோட்டுப் பால்
- கட்டிப்பால்
கோட்டில் வழிந்தோடும் பால் கீழிறங்கி வடிகுழாயின் வாயிலாக பால் குவளையில் வந்து நிறையும்; இவ்வாறு நிறைந்த பாலை எடுத்த பின் மீண்டும் வைக்கப்படும் குவளையில் வடிந்து காய்ந்து போகும் பாலையே கட்டிப்பால் என்றனர். பால் எடுத்த பின்பு வடிகின்ற பால் வடிபால் என்றும் அவ்வடிபால் காய்ந்து போனால் கட்டிப்பால் என்றும் அழைக்கப் பெற்றது. கட்டிப்பாலை எடுப்பதற்கு மங்கு துடைப்பார்கள். கட்டிப்பாலை எடுக்கும் வேளையில் கோட்டுப் பாலையும் உருவி, கீழே கிடக்கும் குச்சியை எடுத்துக் கட்டி தூண்டில் போடுவார்கள்.
- ஏணிக் கோடு அல்லது கழுத்துக் கோடு
உழைப்பதற்கென்றே பிறப்பெடுத்தவராய் காடு மேடெல்லாம் சென்று மரம் வெட்டி காண்டா கம்பு கொண்டு இரு முனைகளிலும் வாளிகளில் பால் நிரப்பி தோள்களில் சுமந்து நெடுந்தொலைவு எம் அன்னைமார்கள் நடந்து சென்று பெரிய தோம்புகளில் ஊற்றுவர். அந்தக் காண்டா கம்புகளின் இரு முனைகளிலும் கொக்கிக் கம்பிகள் இருக்கும்.
நெற்றி விளக்கை நெற்றியில் கட்டிக்கொண்டு, தீட்டுக் கல்லில் தீட்டப்பெற்ற சுணை மிகுந்த மரஞ்சீவும் கத்திகளையும் எடுத்துக் கொண்டு பேர் கொடுத்து விட்டு வேலைக்குச் செல்வர்.
அவர்கள் மரம் சீவும் பொழுது சில மரங்களில் கீழ்க்கோடு இருக்கும் சில மரங்களில் கழுத்துக் கோடு இருக்கும். கழுத்தளவு நிமிர்ந்து சீவுவது கழுத்துக்கோடு எனப்பட்டது. கழுத்துக்கும் மேலே இருக்கும் வெட்டுகளுக்கு ஏணி தேவைப்பட்டது. எனவே ஏணி வைத்து ஏறி மரஞ் சீவீனர். இதற்குப் பெயர் ஏணிக் கோடு.
- நிரை
நான் மூன்றாவது நிரையில் மரம்வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கங்காணி வந்துவிட்டார்; நீர் - நேர் நீர் - நீரல் - நிரல் நீர் - நீரை - நிரை நிரல் = வரிசை எ.கா. நிகழ்ச்சி நிரல் நிரை = பத்தி
- வரிசை வரிசையாக ஒழுங்குடன் அமைக்கப்பெற்ற சொற்றொடர் தொகுப்பு
- நேர் நேராக ஒழுங்குடன் நடப்பெற்ற மர வரிசை;
- வேலைக்காடு:
வேலைக்குச் செல்லும் இடத்தை வேலைக்காடு என்றனர்; வேலைக்காடு காடாக இருந்ததனாலா? காடு அடர்ந்த பகுதி அவர்கள் வேலை செய்த இடம் என்பதால் வேலை செய்யும் இடத்தை வேலைக்காடு என்றனர்.
இவ்வாறு ஆய்வு செய்கின்ற பொழுது நம் தோட்டப்புற மக்கள் வகுத்து தொகுத்துக் கொடுத்த தூய தமிழ் கலைச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை.
- சாமக்காரன்
- ஓடும்பிள்ளை
- நடுகாட்டான்
- ஆலை
- புகைக்கூண்டு
- ஒட்டுக்கன்று
- தவரணை
- கான்
- வாய்க்கால்
- செம்பனை
- எண்ணெய்ப்பனை
- அந்தி வேலை
- பசியாறல்
- தொடுப்பு
- ஓம்பல்
- திரட்டி
- தொங்கல்
- தண்டல்
- நாட்டாண்மை
- வெட்டியான் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்று இச்சொற்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம். காலம் மாறுகின்றது; மக்கள் வாழ்க்கை முறை மாறுகின்றது; அவர்களின் சூழலும் மாறுகின்றது.
பழக்க வழக்கமே மொழி வளர்ச்சிக்கு முதன்மை காரணம் என்பாரும் அறிவின், மனத்தின் முதிர்ச்சியே மொழி வளர்ச்சி என்பாரும் முரண்பட்டு வழக்காடியதுமுண்டு. சுக்கின்னர் என்பாரும் நோம் சோம்சுகியும் இவ்வகையில் முரண்பட்டு நின்றனர். இவ்வகையில் சுகின்னரின் கருத்தும் சோம்சுகியின் கருத்தும் தமிழரைப் பொருத்தவரை பொருந்த கூடியதாகும்.
இருபது முப்பது ஆண்டுக்கு முன் இருந்த தோட்டப்புற சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகளில் பணியாற்றுகின்றவராய் இன்றைய பெரும்பான்மை தமிழர்கள் வாழ்கின்றனர். ஒரு காலத்தில் புதிய சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் அச்சூழ்நிலைக்குரிய தமிழ்ச்சொற்களை தமிழ் மக்கள் உருவாக்கினர்.
பேராக்கில் கூலா தோட்டம் என்றொரு தோட்டம் இருக்கிறது. இங்கு சென்பனைத் தோட்ட வாய்க்கால்களில் சேற்றை வாரும் எந்திரத்திற்கு சேற்றுக் கப்பல் என்று தோட்டப்புற மக்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்; செம்பனைக் கன்றுகளும் பால் மரக்கன்றுகளும் பயிரிடப்பெற்று பேணப்படும் இடத்திற்குப் பெயர் தவரணை; சாலை வளைவு ‘முடக்கு' என்று அழைக்கப்பெற்றது. நாட்டிலுள்ள எல்லா தோட்டங்களிலும் இந்நிலையே. எடுத்துக்காட்டுக்குச் சில சொற்களைக் காணலாம்.
குச்சு = குடியிருப்புப் பகுதி - யாவாக்குச்சு பச்சைக்காடு = அடர்ந்த காடு பொட்டல் = காட்டில் நடுவே தென்படும் வெளிப்பகுதி பொட்டு = பால்மார வெட்டுகளின் அளவைக் குறிக்க வைகப்படும் குறியீடு. மயிர் முளைத்தான் = இரம்புத்தான் (மயிர் முளைச்சான்) திரட்டி - திரட்டு = பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு கம்பிச் சடக்கு = தண்டவாளம் வழிமறித்தான் = இரவு நேரங்களில் வழிகளில் நிற்கும் பறவை (வழிமறிச்சான்) கால்கட்டை = கட்டையால் செய்யப் பெற்று கால்களில் அணியும் காலணி ஆட்டுக்கல் = இட்டலி, தோசை செய்வதற்காக அரிசியை குழைய ஆட்டி அறைக்கும் கல் எந்திரக்கல் = வறுத்த அரிசியை மாவாக அறைக்கும் கல் மத்து = கீரைகளை கடைவதற்குப் பயன்படுத்தப்படுவது.
இப்படியாக எத்தனையோ சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இங்கு சொல்லப் பெற்ற சில கருவிகளும் பெயர்களும் பழம்பொருள்களாகி விட்டன. வீடுகளில் பயன்படுத்தமையால் அறியப்படாத பொருள்களாகியும் விட்டன. சொற்களும் மறையுண்டு வருகின்றன. மலேசியாவில் தோட்டப்புற மக்கள் பாதுகாத்து வந்த அருந்தமிழ்ச் சொற்கள் பன்னூற்றுக் கணக்கானவை.