கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ண ஜென்மபூமி வழக்கு, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், மதுரா நகரத்தில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியில் அமைந்த கத்ரா கிருஷ்ணர் கோயிலுடன் பகிர்ந்து கொள்ளும், சாகி ஈத்கா பள்ளிவாசலை அகற்றக் கோரியும், அந்நிலத்தை மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு வழங்கிடக் கோரியும், கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையினரும், பகவான் கிருஷ்ணர் சார்பில் இரஞ்சனா அக்னிஹோத்ரியும் மதுரா கீழமை நீதிமன்றத்தில் 2020-ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர்.

1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டத்தின் படி, இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்க இயலாது என மதுரா கீழமை நீதிமன்றம் கூறி வழக்கை 30 செப்டம்பர் 2020 அன்று தள்ளுபடி செய்தது.

மதுரா பள்ளிவாசலை அகற்றி, அதில் உள்ள நிலத்தை கிருஷ்ண ஜென்மபூமிக்கு வழங்கக் கோரி, கிருஷ்ண ஜென்ம பூமி அறக்கட்டளையினரும், இந்து அமைப்பினரும், பகவான் கிருஷ்ணர் சார்பில் இரஞ்சனா அக்னிஹோத்ரியும் மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.

19 மே 2022 அன்று இந்த வழக்கை மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணை ஏற்று கொள்ள முடிவு செய்தது.[1][2][3][4][5]இவ்வழக்கில் பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினரும், சன்னி மத்திய வக்ப் வாரியமும் எதிர் மனுதாரர்களாக உள்ளனர்.

1968 ஒப்பந்தம்[தொகு]

1815-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், கட்ரா கேசவ் தேவின் 13.37 ஏக்கர் நிலம் ஏலத்தில் விற்பனை செய்த போது, ராஜா பட்னி மால்[6] அந்நிலத்தை விலை கொடுத்து வாங்கினார். அப்போது ராஜா பட்னிமலின் நில உரிமை தொடர்பாக முஸ்லிம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் அதை நிராகரித்தது.

8 பிப்ரவரி 1944 அன்று ராஜா பட்னி மாலின் வழித்தோன்றல்களான ராய் கிஷன் தாஸ் மற்றும் ராய் ஆனந்த் தாஸ் ஆகியோர் இந்த 13.37 ஏக்கர் நிலத்தை மதன் மோகன் மாளவியா, கோஸ்வாமி கணேஷ் தத் மற்றும் பிக்கேன் லால் ஜி அத்ரேயின் பெயருக்கு மாற்றினார்கள். அதற்காக ஜுகல் கிஷோர் பிர்லா 13,400 ரூபாய் செலுத்தினார். இதற்குப் பிறகும் 1946ல் இந்த விற்பனை குறித்து முஸ்லிம் தரப்பு கேள்விகளை எழுப்பியது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. முந்தைய உத்தரவு செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு ஜுகல் கிஷோர் பிர்லா இந்த நிலத்தின் வளர்ச்சிக்காகவும் பிரமாண்டமான கிருஷ்ணர் கோயிலைக் கட்டுவதற்காகவும் 21 பிப்ரவரி 1951 அன்று கிருஷ்ண ஜென்மபூமி அறக்கட்டளையை உருவாக்கினார். அவர் 13.37 ஏக்கர் நிலத்தை 'பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மானுக்கு அர்ப்பணித்தார். இருப்பினும் கிருஷ்ணர் கோயிலை முழு நிலத்திலும் கட்ட முடியவில்லை. மேலும் அறக்கட்டளை 1958 இல் செயலிழந்தது.

1 மே 1958 அன்று கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. பின்னர் அதன் பெயர் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் என மாற்றப்பட்டது.

இதன் பின்னர் முஸ்லிம் தரப்பு நிலம் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கத்துக்கும் டிரஸ்ட் ஷாஹி ஈத்கா மசூதிக்கும் இடையே வழக்கு இருந்தது. பின்னர் 1968ல் இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சாகி ஈத்கா மசூதி அறக்கட்டளைக்கு நிலத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. அதே நேரம் நிலத்தின் வேறொரு பகுதியில் குடியமர்ந்திருந்த கோசி முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் கோயில் தரப்பிற்கு அளிக்கப்பட்டது.[7]

பின்னணி[தொகு]

மதுரா நகரத்தின் கத்ரா பகுதியில் கிருஷ்ண ஜென்மபூமியில் இருந்த பழைய கிருஷ்ணர் கோயிலை, முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கட்டளையின்படி இடித்த இடத்தில், மதுரா பிரதேச முகலாயப் படைத்தலைவர் அப்துன் நபி என்பவரால் 1662-இல் மதுரா சாகி ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டது.[8]பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1953-ஆம் ஆண்டில் மதுரா ஈத்கா பள்ளிவாசல் சுவரை ஒட்டிய இடத்தில் கிருஷ்ணர் கோயில் எழுப்பட்டு, தற்போது வரை இந்துக்களால் வழிப்பட்டு வருகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]