ஔவை துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரைவேந்தர்
ஔவை. சு. துரைசாமி
பிறப்புதுரைசாமி
5 செப்டம்பர் 1902
அவ்வையார்குப்பம்,
தென் ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா)
இறப்பு3 ஏப்ரல் 1981(1981-04-03) (அகவை 78)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
வயது மூப்பு
கல்லறைமதுரை
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
அறியப்படுவதுதமிழறிஞர்,
பேச்சாளர்,
எழுத்தாளர்,
உரையாசிரியர்
பெற்றோர்சுந்தரம் பிள்ளை,
சந்திரமதி
வாழ்க்கைத்
துணை
உலோகாம்பாள்
பிள்ளைகள்1. பாலகுசம் (மகள்),
2. ஔவை நடராசன் (மகன்),
3. மணிமேகலை (மகள்),
4. திலகவதி (மகள்),
5. தமிழரசி (மகள்),
6. ஔவை திருநாவுக்கரசு (மகன்),
7. ஔவை ஞானசம்பந்தன் (மகன்),
8. மருத்துவர் மெய்கண்டான்,
9. மருத்துவர் நெடுமாறன் (மகன்)
உறவினர்கள்ந. அருள் (பேரன்)
விருதுகள்கலைமாமணி விருது

ஔவை சு. துரைசாமி (5 செப்டம்பர் 1902 – 3 ஏப்ரல் 1981) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். நற்றிணை, சிலப்பதிகாரம், திருவருட்பா உள்ளிட்ட பல பனுவல்களுக்கு உரை எழுதியமையால் 'உரைவேந்தர்' என அழைக்கப்பெற்றார். கலைமாமணி விருது உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்றுள்ளார். தமிழறிஞர் ஔவை நடராசன் இவர் மகன்களுள் ஒருவராவார். மேலும் தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தற்போதைய இயக்குநர் ந. அருள் இவரின் பேரன் ஆவார்.

தொடக்க வாழ்க்கை[தொகு]

தற்போதைய விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள அவ்வையார்குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை - சந்திரமதி இணையர்க்கு மகனாக 5 செப்டம்பர் 1902 அன்று பிறந்தார்.

கல்வி[தொகு]

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பின்பு, வேலூர் ஊரிசு கல்லூரியில் இடைநிலை வகுப்பு பயின்றார். எனினும் வறுமைக்கு ஆட்பட்ட தன் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார். பின்னர் அப்பணியில் தொடர மனம் இல்லாமலும் தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலாலும் ஆறு மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.

ஆசிரியப்பணி[தொகு]

தன் 22-ஆம் அகவையில் தஞ்சாவூர் சென்ற துரைசாமி, கரந்தைத் தமிழ்ச் சங்கப் பள்ளியில், தமிழவேள் த. வே. உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். அப்பணியில் இருந்துகொண்டே, தமிழ்ப்பாடம் பயின்றார். 1928-இல் கரந்தையிலிருந்து வெளியேறினார். 1930-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் "வித்துவான்" தேர்வில் வெற்றி பெற்றார்.

தமிழ்ப் பணி[தொகு]

தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

1929 முதல் 1941 வரை காவேரிப்பாக்கம், செய்யாறு, செங்கம், போளூர் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளித் தமிழாரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்.

1943 முதல் எட்டு ஆண்டுகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1951 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

மணிமேகலை காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் எதிர்பாராமல் இயற்கை எய்தியதை அடுத்து, "கரந்தை கவியரசு" அ. வேங்கடாசலத்தின் விருப்பத்திற்கிணங்க, அக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார் துரைசாமி. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.

படைப்புகள்[தொகு]

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
? திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
? நற்றிணை உரை
? சிலப்பதிகாரம் சுருக்கம்
? யசோதரகாவியம் - மூலமும் உரையும்
? நந்தா விளக்கு
? ஔவைத் தமிழ்
? தமிழ்த்தாமரை
? வரலாற்றுக் காட்சிகள்
? சிவஞானபோதச் செம்பொருள்
? செம்மொழிப் புதையல் மணிவாசகர் பதிப்பகம்
? தெய்வப்புலவர் திருவள்ளுவர் கழகம் வெளியீடு
? Introduction to the story of Thiruvalluvar
1930 ஆர்க்காடு தமிழ்ப் பொழில் இதழில்

வெளிவந்த கட்டுரை

1935? திருவோத்தூர் தேவாரத் திருப்பதிக உரை
1938 எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு உரை
1940 சிவபுராணம்
1941 சீவகசிந்தாமணி சுருக்கம் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி
1942 முப்பெருங் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகார ஆராய்ச்சி கழக வெளியீடு
முப்பெருங் காவியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி
1943 ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்
மணிமேகலைச் சுருக்கம்
முப்பெருங் காவியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி ஆராய்ச்சி கழக வெளியீடு
1945 ஞானசம்பந்தர் வழங்கிய ஞானவுரை தருமை ஆதீனம்
1947 புறநானூறு உரை (பகுதி 1)
மதுரைக்குமரனார்[1] கழக வெளியீடு
1949 மதுரைக்குமரனார் (மறு வெளியீடு) கழக வெளியீடு
தமிழ் நாவலர் சரிதை - மூலமும் உரையும்
1951 புறநானூறு உரை (பகுதி 2)
பதிற்றுப் பத்து உரை
ஞானாமிர்த மூலமும் பழைய உரையும் (?)
1953 சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்
1954 ஊழ்வினை மயிலம் சிவஞானபாலய சுவாமிகள் மணிவிழா மலரில் வெளிவந்த கட்டுரை
1960 பெருந்தகைப் பெண்டிர் சாந்தி நூலகம், பிராட்வே [சென்னை]
1970 சூளாமணிச் சுருக்கம் கழக வெளியீடு
1972

(& 2002)

சேரமன்னர் வரலாறு திருவளர் பதிப்பகம், தூத்துக்குடி
1978 சைவ இலக்கிய வரலாறு
1979 - ?) திருவருட்பா- உரை

(ஒன்பது தொகுதிகள்)

1995 பரணர் கரந்தை
2003 தமிழ்ச் செல்வம் கட்டுரைத் தொகுப்பு வள்ளுவர் பண்ணை

அச்சில் வராத நூல்கள்[தொகு]

  • ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி
  • புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
  • மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
  • மருள்நீக்கியார் நாடகம்
  • புது நெறித்தமிழ் இலக்கணம்
  • தமிழ்த் தாமரை
  • தூத்துக் குடி சைவசிந்தாந்த சபை 65 ஆம் ஆண்டு நிறைவு விழாத் தலைமைப் பேருரை, சிறுதுண்டு வெளியீடு

சிறப்புகள்[தொகு]

  • 1964 ஆம் ஆண்டு மதுரை திருவள்ளுவர் கழகம் "பல்துறை முற்றிய புலவர்" என்ற பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்பித்தது.
  • இராதா தியாகராசனார் தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பாராட்டி "உரைவேந்தர்" எனும் பட்டம் வழங்கி தங்கப் பதக்கம் அளித்தார்.
  • 1980 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி "தமிழ்ப் பேரவைச் செம்மல்" எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
  • தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், "தமிழ்த் தொண்டு செய்த பெரியார்" எனும் பட்டமும், கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தனி வாழ்க்கை[தொகு]

தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம் கோட்டுபாக்கத்தைச் சேர்ந்த இலட்சுமி -அண்ணாபிள்ளை இணையரின் முதல் மகளான உலோகாம்பாள் என்பாரை மணந்ததார் துரைசாமி. இவர்களுக்கு ஔவை நடராசன், மருத்துவர் மெய்கண்டான் உள்ளிட்ட 11 பிள்ளைகள் பிறந்தனர். நடராசன் வழியில் துரைசாமிக்கு ந. அருள் என்ற பேரன் உள்ளார். இவர் தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தற்போதைய இயக்குநர் ஆவார்.

மறைவு[தொகு]

3 ஏப்ரல் 1981 அன்று, மதுரை மாநகரிலிருந்த தன் இல்லத்தில்‌ காலமானார் துரைசாமி. அவர் உடல் மதுரையிலேயே அடக்கம் செய்யப்பட்டு அவ்விடத்தின்மேல் கல்வெட்டுப்‌ பொறிக்கப்பட்டது.

புகழ்[தொகு]

இராஜா சர் அண்ணாமலைச்‌ செட்டியார்‌ நினைவு அறக்கட்டளை'யின்‌ சார்பில்‌, 25 செப்டம்பர் 2003 அன்று, சென்னையில்‌ 'அருட்செல்வர்‌' நா. மகாலிங்கம் தலைமையில்‌ துரைசாமியின் நூற்றாண்டு நினைவு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகங்களின்‌ துணைவேந்தர்கள்‌ உள்ளிட்ட அறிஞர்‌கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

உரைவேந்தர்‌ ஒளவை சு. துரைசாமிபிள்ளை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவை_துரைசாமி&oldid=3859910" இலிருந்து மீள்விக்கப்பட்டது