ந. மு. வேங்கடசாமி நாட்டார்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ந. மு. வேங்கடசாமி நாட்டார் | |
---|---|
பிறப்பு | நடுக்காவேரி, தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) | 2 ஏப்ரல் 1884
இறப்பு | 28 மார்ச்சு 1944 | (அகவை 59)
அறியப்படுவது | தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் |
பெற்றோர் | முத்துச்சாமி நாட்டார், தையலம்மாள் |
உறவினர்கள் | க. முத்துசாமி வல்லத்தரசு (பேர்த்தியின் மாமனார்) |
நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944)[சான்று தேவை] 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். இவர் நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது.
பிறப்பு
[தொகு]2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் கள்ளர் இனத்தில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.[1] சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது.[சான்று தேவை] இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அஃது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்.
கல்வி
[தொகு]அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடா பெற்றார்.
பணி
[தொகு]- தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.
- கோயம்புத்தூர் தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.
- திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
- அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுச் சொந்த ஊருக்குத் திரும்பினார்.
- தமிழவேள் உமா மகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புரவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார்.
தமிழறிஞர்கள் தொடர்பு
[தொகு]1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.
ஆக்கங்கள்
[தொகு]- வேளிர் வரலாறு (1915)
- நக்கீரர் (1919)
- இந்நூல் இலண்டன் பல்கலைக் கழகம், காசி இந்துப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது)
- கபிலர் (1921)
- கள்ளர் சரித்திரம் (1923)
- சமுதாய வரலாறாகக் கருதப்படும் இந்நூல், "கள்ளர்களைப் பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களைப் பற்றிய வரலாற்று நூலாகும். கலாசாலை மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கத் தகுதி பெற்றது" என்று தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களால் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி, தனது தென்பாண்டிச் சிங்கம் நூலின் முன்னுரையில்,‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று எழுதியுள்ளார்.
- கண்ணகி வரலாறும் - கற்பும் மாண்பும் (1924)
- சோழர் சரித்திரம் (1928)
- கட்டுரைத் திரட்டு
- சில செய்யுள்கள்
- காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது
உரைகள்
[தொகு]எட்டுத்தொகை நூல்கள்
[தொகு]அகநானூறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
[தொகு]- இன்னா நாற்பது
- களவழி நாற்பது
- கார் நாற்பது
காப்பியங்கள்
[தொகு]- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
அறநூல்கள்
[தொகு]வ.எண் | ஆண்டு | நூலின் பெயர் | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1941 சூன் | அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
02 | 1949 மே | ஒளவை இயற்றிய கொன்றை வேந்தன் | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
03 | 1949 செப்டம்பர் | உலகநாதனார் இயற்றிய உலகநீதி | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
04 | 1950 சனவரி | ஒளவை இயற்றிய மூதுரை | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
05 | 1950 ஏப்ரல் | ஒளவை இயற்றிய ஆத்திசூடி | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
06 | 1950 திசம்பர் | ஒளவை இயற்றிய நல்வழி | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
07 | 1952 மார்ச் | துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி | திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை | பதவுரையும் பொழிப்புரையும் |
மேலே கண்ட ஏழுநூல்களும் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிநூற்கொத்து என்னும் தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் நிறுவனத்தால் தொகைநூலாக வெளியிடப்பட்டது [2]
புராணங்கள்
[தொகு]- திருவிளையாடற் புராணம் (அ.ச.ஞானசம்பந்தன் அவர்தம் தந்தையார் அ.மு.சரவண முதலியாருடன் இணைந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்டது)
உரை திருத்தம்
[தொகு](1) அகத்தியர் தேவாரத் திரட்டு, (2)தண்டியலங்காரப் பழைய உரை, (3) யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிற்குத் தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உரைத்திருத் தங்களும் எழுதினார்.
பட்டம்
[தொகு]வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர்.
கனவு நனவானது
[தொகு]தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார்.மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் கையகப்படுத்தப்பட்டு விட்டது.
1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள்.
வேற்று மொழிச்சொல் பயன்பாடு
[தொகு]தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.
ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும். புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும்.ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.
மணிவிழா
[தொகு]இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார். நாட்டாரின் மணிவிழாவை 8 மே 1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28 மார்ச்சு 1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவருக்கு நூற்றாண்டு விழா நடத்தி (1984இல்) அவர்க்குச் சிலை எடுக்க எடுத்த முயற்சிகள் தடங்கலும் தாமதமும் ஆகி, அவரின் பெயர்த்தி திருமதி அங்கயற்கண்ணி செயதுங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அறக்கட்டளையினரால் (13.02.2005) அன்று நாட்டாரின் பெயரால் இயங்கும் கல்லூரி வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது.
ஆக்கங்கள் நாட்டுடைமை
[தொகு]அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது.[சான்று தேவை] இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின. 1984-இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.
மரபுரிமைப் பேறுகள்
[தொகு]இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992-இல் நாவலர் ந மு வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது.
சான்றடைவு
[தொகு]- ↑ இராமசாமிப்புலவர் (1968). தமிழ்ப்புலவர் வரிசை. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். p. 92.
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு என்னுஞ் சிவப்பதிக்கு அண்மையில் உள்ள நடுக்காவேரி என்னும் ஊரில் வேங்கடசாமி நாட்டார் 1884 - ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் நான்காம் நாள் பிறந்தார் .நாட்டாருடைய தந்தையார் பெயர் முத்துச்சாமி நாட்டார்
- ↑ நீதிநூற்கொத்து: மூலமும் உரையும் (முதற் பாகம்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 1974
வெளி இணைப்புகள்
[தொகு]1.நாவலர் எழுதி உலக தமிழாராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மின் புத்தகங்களின் தொகுப்பு