நறுந்தொகை
தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும். இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும்.[1] அதிவீரராம பாண்டியர் என்பவர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார். இளைஞர்கள் நல்ல நெறிகளை அறிய வேண்டி நல்ல சொற்றொடர்களால் இந்நூல் யாக்கப்பெற்றுள்ளது.
நூலின் அமைப்பும் சிறப்பும்
[தொகு]நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை என்று பொருள் கொள்ளப்பட்டு, பழைய நீதிநூல்களின் சாரமாக அமைந்த எளிமையான நூல் என்று உரைக்கப்படும். மேலும் இந்நூலின் சில சொற்றொடர்கள் புறநானூறு, நாலடியார் போன்ற நூல்களின் பாக்களோடும், சொல்லோடும், பொருளோடும் ஒத்து இருக்கின்றன.
இந்நூல் எண்பத்தியிரண்டு எளிமையான சொற்றொடர்களால் ஆனது.
*எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
- கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல்
- உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
- ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்
- துணையோடு அல்லது நெடுவழி போகேல்
போன்ற எளிமையான ஆயின் பொருள் செறிந்த தொடர்களை உடையது.
இஃது இதற்கு அழகு, இஃது இதற்கு அல்ல, இஃது இஃது ஆகாது, இதற்கு இது இல்லை போன்று ஒரே தன்மையதான நீதிகளை (அல்லது இயல்புகளை) வரிசைபட சொல்லுதல் இந்நூலை மனப்பாடம் செய்ய உதவும் வகையில் அமைந்துள்ளது.
ஆசிரியரும் காலமும்
[தொகு]இந்நூலின் ஆசிரியர் அதிவீரராம பாண்டியர் என்ற செய்தி இந்நூலின் பாயிரத்தில் கிடைக்கிறது,
வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை ஆளி குலசேகரன் புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரே
இதிலிருந்து இந்நூலாசிரியரான அதிவீரராமர் என்பவர் கொற்கை என்னும் நகரை ஆண்ட ஒரு பாண்டிய மன்னர் என்று அறிகிறோம். இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இந்நூல்கள் பெரும்பானமை வடமொழி நூல்களின் வழியில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம்.
இவரின் காலம் கி.பி. 11 அல்லது 12ம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்[2] இதுவே நூலினது காலமாகவும் இருக்க வேண்டும்.
அழகுப் பண்புகள்
[தொகு]அழகுப் பண்புகள் என்று பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.
கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
மன்னர்க்கு அழகு செங்கால் முறைமை
வணிகர்க்கு அழகு வரும்பொருள் ஈட்டல்
உழவர்க்கு அழகு உழுதூண் விரும்பல்
மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல்
தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
விலைமகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
குறிப்புகள்
[தொகு]- ↑ ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற நீதிநூல்கள் அவைகளின் முதல் தொடரால் பெயர் பெற்றதைப் போல் இந்நூலும் இதன் (பாயிரத்தின்) முதல் தொடரான “வெற்றிவேற்கை” என்பதை பெயராகக்கொண்டும் அறியப்படுகிறது
- ↑ கி.பி. 15ம் நூற்றாண்டு என்பாரும் உளர்.
உசாத்துணை
[தொகு]- “நறுந்தொகை”, ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு, சனவரி 1997