அன்றில்
அன்றில் (Glossy Ibis) | |
---|---|
Breeding plumage | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Threskiornithidae
|
பேரினம்: | |
இனம்: | P. falcinellus
|
இருசொற் பெயரீடு | |
Plegadis falcinellus L, 1766 |
அன்றில் பறவை (Plegadis falcinellus) திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும்.[1]
- அன்றில் பறவை போல மகன்றில் பறவையும் இணைபிரியாமல் வாழும் இயல்பினை உடையது.
வசிப்பிடம்
[தொகு]இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம் கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன.
உணவும் வாழ்க்கைமுறையும்
[தொகு]அன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. இவை சதுப்பு நிலங்களில் மந்தையாக இரை தேடக்கூடியவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன.
இவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன.
பொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற கிர்ர்ர் என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது.
அன்றில், ஆபிரிக்க-யுரேசிய இடம்பெயர் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் (AEWA) [1] பொருந்தும் இனங்களுள் ஒன்றாகும்.
சங்கப்பாடல்களில் காட்டப்படும் அன்றில்
[தொகு]அன்றிலைப் பற்றிய செய்திகள்
[தொகு]- அன்றில் நெய்தல் நிலத்தில் வாழும் பறவையினம். இதன் தலை சிவப்பு நிறம் கொண்டது. இதன் அலகு இறால்மீனுக்கு உள்ளதுபோல் இருக்கும். மேலும் வளைவானது. கூர்மையானது. கடலோரப் பனைமரக் கொம்புகளில் கூடுகட்டிக்கொண்டு வாழும். நாரையைப்போல் இதன் உணவு மீன். அன்றில் தன் துணையுடன் சேர்ந்தே வாழும். துணையில் ஒன்று பிரிந்தாலும் குரல் எழுப்பும். இந்தக் குரலை ‘அகவல்’ என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும்போது எழுப்பும் குரலை ‘உளறல்’ என்றும், பெண் கருவிற்றிருக்கும்போதும் எழுப்பும் குரலை ‘நரலல்’ என்றும் சங்கத்தமிழ் பாகுபடுத்தி வழங்குகிறது.
தன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர்.
பாடல் வழிச் செய்திகள்
[தொகு]- வாழ்ந்த இடம்
- சங்ககாலத்தில் ஊணூரில் (இக்காலக் கோடியக்கரை, அயல்நாட்டுப் பறவைகளின் புகலிடம்) இது மிகுதி.[2]
- உருவம்
- கொடுவாய் அன்றில் [3]
- கூர்மையான அலகுகளை உடையது.[4]
- செந்தலை அன்றில், இறால் மீன் போல வளைந்த வாயை உடையது.[5]
- மரத்தில்
- பனை மரத்தில் இருந்துகொண்டு நரலும்.[6]
- அடியில் வழிபாட்டுக் கடவுள் இருக்கும் பனைமரத்தில் இருந்துகொண்டு துணைபுணர் அன்றில் உயவுக்குரல் எழுப்பும்.[7]
- பெண்ணை மரத்தில் இருந்துகொண்டு அகவும்.[8]
- பரியரைப் பெண்ணை அன்றில்.[9]
- பெண்ணை மடல்சேர் வாழ்க்கை கொண்டது.[10]
- கூடு
- பெண்ணையின் சிறுகோலில் கட்டியிருக்கும் தன் குடும்பையில் இருந்துகொண்டு வயவுப்பெடை அகவும்.[11]
- வாடைத் தூவலின்போது குடம்பையில் இருந்துகொண்டு துணைபுணர் அன்றில் உயங்குகுரல் அளாவும்.[12]
- சிறு சிறு கோல்-குச்சிகளால் அதன் கூடு கட்டப்பட்டிருக்கும்.[13]
- உணவு
- நாரையும் அன்றிலும் நெய்தல்நிலத்தில் மீன் உண்டு வாழும் பறவைகள். பெண்ணை மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்பவை.[14]
- இணை பிரியா உறவு
- தன் துணையோடு சேர்ந்தே வாழும்.[15]
- மடிவாய் அன்றில், துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்.[16]
- தன் துணை எங்கே என்று தலைவியைக் கேட்பது போல் அகவுமாம்.[17]
- தன் துணைவன் இல்லாமல் வாழும் இவள் வருந்துவாளே என்று அன்றில் இரவில் அகவவில்லைநாம்.[18]
- ஒன்று இல்காலை அன்றில் புலம்பு கொண்டு உறையும்.[19]
- நரலும் அன்றிலே! என்னைப்போல் இன்துணைப் பிரிவு உனக்கும் உண்டோ?[20]
திரைப்படப் பாடல்களில் அன்றில்
[தொகு]- என்னடி மீனாட்சி (1979)
- பாடல்: "ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை.." | கவிஞர்: | இசை: சங்கர் கணேஷ்
- .. அன்றில் பறவை கண்ட உறவை
- பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ..
- சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
- பாடல்: "அதிசய நடனமிடும் அபிநய சரஸ்வதியோ.." | கவிஞர்: வாலி | இசை: இளையராஜா
- .. அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று
- அட்டைப்போல ஒட்டிக்கொண்டு
- இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது..
- ஜீன்ஸ் (1997)
- பாடல்: "கண்ணோடு காண்பதெல்லாம்.." | கவிஞர்: வைரமுத்து | இசை: ஏ. ஆர். ரகுமான்
- .. அன்றில் பறவை இரட்டைப் பிறவி
- ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
- பிரியாதே விட்டுப் பிரியாதே..
- எனக்கு 20 உனக்கு 18 (2003)
- பாடல்: "அழகினா அழகி.." | கவிஞர்: பா. விஜய் | இசை: ஏ. ஆர். ரகுமான்
- .. அற்றை திங்களில் அன்றில் பறவையாய்
- ஓடிப் போக நீயும்..
- பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)
- பாடல்: "கரு கரு விழிகளால்.." | கவிஞர்: தாமரை | இசை: ஹாரிஸ் ஜயராஜ்
- .. தாமரை இலை நீர் நீ தானா.. தனி ஒரு அன்றில் நீ தானா
- புயல் தரும் தென்றல் நீ தானா.. புதையல் நீ தானா..
- சிவாஜி (2007)
- பாடல்: "அதிரடிக்காரன் மச்சான்.." | கவிஞர்: வைரமுத்து | இசை: ஏ. ஆர். ரகுமான்
- .. தில் திக் தில் தென்றல் நெஞ்சில்
- தித்திக்கிற அன்றில் குஞ்சில்..
- தாம் தூம் (2008)
- பாடல்: "அன்பே என் அன்பே.." | கவிஞர்: நா. முத்துக்குமார் | இசை: ஹாரிஸ் ஜயராஜ்
- .. அன்றில் அடை மழைக்காலம்
- இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்..
- ரௌத்திரம் (திரைப்படம்) (2011)
- பாடல்: "அடியே உன் கண்கள்.." | கவிஞர்: லலிதா ஆனந்த் | இசை: பிரகாஷ் நிக்கி
- .. அடியோடு எனை சாய்த்த அன்றில் பெண்ணே வா
- ஆசை மெய்யா பொய்யா நீ சோதிக்க..
- உயிர்மொழி (2012)
- பாடல்: "அன்றில் பறவை நானடி.." | கவிஞர்: அருண்ராஜா காமராஜ் | இசை: சந்தோஷ் நாராயணன்
- .. அன்றில் பறவை நானடி
- அண்டம் அதிரும் தானடி..
இரும்பு குதிரை (திரைப்படம்) (2014) பாடல்:"பெண்ணே பெண்ணே.." கவிஞர்:தாமரை இசை:ஜி.வி.பிரகாஷ் குமார் "பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்.."
என்.ஜி.கே. (திரைப்படம்) (2019) பாடல்:"அன்பே பேரன்பே.." கவிஞர்:உமா தேவி இசை:யுவன் சங்கர் ராஜா "உறவே நம் உறவே ஒரு அனுவின் பிரிவில் அன்றில் ஆகுதே ஆகுதே.."
மேற்குறிப்புகள்
[தொகு]- BirdLife International (2004). Plegadis falcinellus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006. Database entry includes justification for why this species is of least concern
- Handbook of the Birds of Europe, the Middle East, and North Africa: The Birds of the Western Palearctic
- Field Guide to the Birds of North America, 4th Edition
புகைப்படத் தொகுப்பு
[தொகு]-
வயலில் அன்றில் பறவைகள், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா.
-
பருவம் வந்த அன்றில் பறவை, பாரத்பூர், ராஜஸ்தான், இந்தியா.
-
குஜராத் மாநிலம் தொல் பகுதியில்
-
கொல்லேறு ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
கொல்லேறு ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
கொல்லேறு ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
கொல்லேறு ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
கொல்லேறு ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
போச்சாரம் ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
கருப்பு அன்றிலுடன் (Pseudibis papillosa) - போச்சாரம் ஏரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா.
-
Museum specimen - Bitola, Macédoine
புற இணைப்புகள்
[தொகு]- BirdLife Species Factsheet பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- IUCN Red List
- Glossy Ibis Information with photographs and sound from the Cornell Laboratory of Ornithology.
- Glossy Ibis videos, photos & sounds பரணிடப்பட்டது 2016-04-04 at the வந்தவழி இயந்திரம் on the Internet Bird Collection
- Glossy Ibis Information and Photos from South Dakota Birds and Birding
- Glossy Ibis Information பரணிடப்பட்டது 2006-11-29 at the வந்தவழி இயந்திரம் from eNature.com
- Field Guide Photo Page on Flickr
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ தமிழில் பறவைப் பெயர்கள் - டாக்டர். க. ரத்னம் - உலகம் வெளியீடு ; பக். 20 ; வ. எண் 33
- ↑ முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் நோலா இரும்புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சி - அகநானூறு 220
- ↑ குறிஞ்சிப்பாட்டு 219,
- ↑ அகநானூறு 305,
- ↑ குறுந்தொகை 160,
- ↑ நற்றிணை 335,
- ↑ நற்றிணை 303,
- ↑ அகநானூறு 120,
- ↑ நற்றிணை 218,
- ↑ குறுந்தொகை 177,
- ↑ குறுந்தொகை 301,
- ↑ நற்றிணை 152,
- ↑
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,- குறுந்தொகை 301 - ↑ அகநானூறு 360,
- ↑ அகநானூறு 260,
- ↑ அகநானூறு 50,
- ↑ கலித்தொகை 137,
- ↑ கலித்தொகை 131,
- ↑ நற்றிணை 124,
- ↑ கலித்தொகை 129,