பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1870களில் ஐரோப்பிய பொம்மை

பொம்மை (doll), ஒரு விளையாட்டுப் பொருள் ஆகும். பொதுவாக, பொம்மைகள் குழந்தைகளுடனும் வளர்ப்பு விலங்குகளுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டாலும், சில சமயங்களில் பெரியவர்களும் வீட்டில் வளர்க்கப்படாத விலங்குகளும் கூட பொம்மைகளுடன் விளையாடுவதைக் காணலாம். பொம்மையாக பயன்படுத்துவதற்காகவே பல விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. என்றாலும், வேறு முதன்மைப் பயன்பாடு உடைய பொருட்களும் பொம்மை போல் பயன்படுத்தப்படுவதை காணலாம். சில பொம்மைகள், பொம்மை விரும்பிகளால் சேகரிப்பதற்காக மட்டுமே இருக்கின்றன. அவற்றை விளையாடப் பயன்படுத்துவது இல்லை. எனினும் சிலர் விளையாடுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர்.

உலகை அறிந்து கொள்ளவும் வளர்ச்சி அடையவும் விளையாட்டுகளும் பொம்மைகளும் உதவுகின்றன. குழந்தைகள், பொம்மைகளைக் கொண்டு உலகை அறிந்து கொள்ளவும், தங்கள் உடல் வலுவைக் கூட்டவும், வினை - விளைகளை அறியவும், தொடர்புகளைப் புரிந்து கொள்ளவும், பெரியவர்களாக வளரும் போது தங்களுக்குத் தேவைப்படும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

பெரியவர்கள், சமூகத் தொடர்புகளை பெருக்கிக் கொள்ளவும், குழந்தைகளுக்குக் கற்றுத் தரவும், தங்கள் சிறுவயதில் கற்ற பாடங்களை நினைவூட்டிக் கொள்ளவும், மனதுக்கும் உடலுக்கும் பயிற்சி அளிக்கவும், அன்றாடம் பயன்படுத்தாமல் போகக் கூடிய திறன்களில் பயிற்சி எடுக்கவும், தங்கள் வாழிடத்தை அழகூட்டவும் பொம்மைகளைப் பயன்படுத்துகின்றனர். வெறும் கேளிக்கை, விளையாட்டு என்பவற்றைத் தாண்டி, பொம்மைகளும் அவை பயன்படுத்தப்படும் முறைகளும் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை உருவாக்குகின்றன.

பொம்மைகள் களிமண், நெகிழி, காகிதம், மரம், உலோகம் முதலானவற்றால் செய்யப்படுகின்றன. பொம்மைகள், முன் வரலாற்றுக் காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. குழந்தைகள், விலங்குகள், போர் வீரர்கள் ஆகியோரை உருவகிக்கும் பொம்மைகள், தொல்லியல் ஆய்வுக்களங்களில் காணக் கிடைத்திருக்கின்றன. 2004ஆம் ஆண்டு நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் சுமார் 4000 வருட பழமையான கல் பொம்மை இத்தாலியத் தீவுகளுள் ஒன்றான பான்தலேரியா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இருப்பினும் இது விளையாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதா?, என்பதற்கான சான்றுகள் இல்லை.[1]

வரலாறு[தொகு]

குழந்தைகளின் விருப்பப் பொருளான பொம்மைகள், உலகின் கலை, பண்பாடு, அறிவியல், சமூகம் மற்றும் காலம் சார்ந்து பல ஆண்டுகளாக மேம்பாடடைந்துள்ளது. பொம்மைகளின் வரலாறு மிகச்சரியாகக் கணிக்க இயலாவிடினும் பல்வேறு மாற்றம், படிமங்கள் சார்ந்து அவற்றின் கால அளவைகளைக் கண்டறியலாம். பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கு மட்டுமின்றி கற்றல், மாயம், ஆன்மிகம், சடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

  • சிந்துவெளி நாகரிகத்தில் (கி.மு 3010 - 1500) வண்டி, ஊதல், நூலினால் இயக்கபடும் சாயும் குரங்கு பொம்மைகள் சிறார்கள் பயன்படுத்தியுள்ளதற்கான படிமங்கள் உள்ளன.[2]
  • எகிப்திய சிறார்கள் துடுப்பு பொம்மைகளை கி.மு 2040 - 1750 களில் பயன்படுத்தியுள்ளனர். கல், மட்பாண்டம், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கை, கால்கள் அசைக்கும் படியான பொம்மைகளைப் பயன்படுத்தியுள்ளதற்கான ஆய்வுகள் உள்ளன.[3]
  • பண்டைய கிரேக்க சிறுமிகள் கி.பி 100ஆம் ஆண்டில் பொம்மைகள் வைத்திருந்ததாக பண்டைய கதைகள் குறிப்பிடுகின்றன. கிரேக்க சிறுமிகள் தங்கள் திருமணச் சடங்கின் போது தங்களின் விளையாட்டு பொம்மைகளைக் கடவுளுக்கு அற்பணிக்கும் சடங்குகளும் இருந்து வந்தன.[4][5]
  • ரோமானிய பொம்மைகள் களிமண், யானைத் தந்தம், மரம், துணிகள் போன்றவற்றால் செய்யப்பட்டிருந்தன. உரோமானிய சிறார்களின் கல்லறைகளில் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்காலத்தைப் போன்று சிறார்கள் பொம்மைகளுக்கும் ஆடைகளை உடுத்தியுள்ளது அறியப்படுகிறது. கி.பி 300 களில் முழுதும் துணியால் செய்யப்பட்ட ரேக் (Rag) பொம்மைகளையும் உரோம சிறார்கள் பயன்படுத்தியுள்ளனர்.[6]
ஆப்பிரிக்க பழங்குடிகளின் அகுவாபா பொம்மைகள்
  • ஆப்பிரிக்க பழங்குடிகளான கானா சுற்றுவட்டார மக்கள், அகுவாபா (Akuaba) எனும் மரத்தாலான பெரும் தலைகளுடைய பொம்மைகள் தாய்வழி மகளுக்கு சீதனமாகவும் சடங்குப் பொருளாகவும் கொடுக்கின்றனர். அசாந்தி எனும் பழங்குடிகளின் அகுவாபா பொம்மைகள் தட்டையான தலையுடன் காணப்படும்.
சப்பானிய நாட்டு பாரம்பரிய ஹினமட்சுரி விழாக் கொலு
  • சப்பானிய நாட்டு பாரம்பரிய பொம்மைகள் டோகு காலம் (கி.மு 8000-200 வரையிலும்) களிமண்ணால் செய்யப்பட்டவை, ஹனிவா இறுதிக்காலம் (கி.பி 300-600 வரையிலும்) சுட்ட மண்பொம்மைகள் என வேறுபட்டிருந்தன. பதினொன்றாம் நூற்றாண்டு வரையிலும் சப்பானில் பொம்மைகள் சிறார்களின் விளையாட்டிற்கும், சமய சடங்கில் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தென்னிந்தியாவிலுள்ள கொலுவைப் போன்று ஹினமட்சுரி விழாவின் போது சப்பானிய மரபு பொம்மைகள் வரிசைக்கிரமமாக படிகளில் அடுக்கி வைக்கப் படுகின்றன. இப்பொம்மைகள், வைக்கோல், மரத்தால் செய்யப்பட்டு வண்ணமிடப்பட்டு பரந்த ஆடைகளை பல்லடுக்குகளில் அணிவித்து காட்சிக்கு வைக்கின்றனர். கோள வடிவிலான, கருவிழியற்ற வெண்ணிறத்தலையும், சிவப்பு உடலுமான தருமா பொம்மைகளும் இதில் அடங்கும். இப்பொம்மைகள் தென்னிந்தியாவிலிருந்து சென்று சென் புத்த மதத்தைப் பரப்பியவரும், குங்ஃபூ கலையின் தந்தையுமான பல்லவ வம்சாவளி போதி தருமரை நினைவுறுத்தும் விதமாக உள்ளன. மரத்தால் செய்யப்பட்ட கோகேசி பொம்மைகள் கைகால்களற்று உருளை வடிவ உடலுடன் சிறுமிகளைப் போன்று பிரதிபலிக்கின்றன.
  • ருஷ்யா வில் 1890களில் செதுக்கப்பட்ட மாத்ரியோஸ்கா பொம்மைகள் ஒன்றனுள் ஒன்றாக துளைக்கப்பட்ட மரப்பேழையுள் கூடு போன்று அமைந்திருக்கும்.
  • தீய சக்திகளாக உருவகிக்கும் உருவ பொம்மை எரித்தல் முறை ஆப்பிரிக்க, அமெரிக்க பழங்குடிகள், ஐரோப்பிய பண்பாடுகளுள் காணப்படுகின்றன. இந்தியாவில் தசரா அல்லது ராவண வதம் இம்முறைப்படியே நடக்கிறது.
  • பொம்மைகளின் உருவத்தை ஒரு நபருடன் ஒப்பிட்டு சிறுசிறு ஆணிகளால் குத்திட்டு அப்பொம்மையை துன்புறுத்தல் மூலம் சூனியங்கள் செய்யும் முறை பல நாடுகளின் மாயங்கள் செய்பவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இதன் உண்மை நிலை ஆய்வுக்குட்பட்டது.

பண்பாடு[தொகு]

பொம்மைகள் சிறார்களின் விளையாட்டு சாதானமாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பண்பாடு அல்லது கலையின் பிரதி பிம்பமாகவும் விளங்குகிறது. பொம்மைகளைக் கொண்டு சமயம், காலம், சமூகம், பழக்க வழக்கம் போன்றவைகளைக் கணிக்க இயலும்.

குழந்தைகளின் திறன் மேம்பாடு[தொகு]

பொம்மைகள் சிறார்களைக் கவருவதோடு அவர்களின் விடாமுயற்சி, ஆர்வம், ஊக்கம், வெற்றி, பெருமிதம், தன்னிறைவு உள்ளிட்ட பண்புகளை செப்பனிடுவதாகவும் உள்ளன.

குழந்தைகள் விளையாட்டு மூலம் பல திறன்களை வளர்த்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தொடர்பறி கற்றல் முறைமை எளிதாக நினைவில் கொள்ள உதவுகிறது. பொம்மைகள் குழந்தைகளின் கணிதம், வரலாறு, சமூக அறிவியல் ஆகியவற்றின் கற்றல் முறையை எளிமையாக்குகின்றன.

பாலினம்[தொகு]

பொம்மைகளுக்கு பாலின வேறுபாடுகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்தும் சிறார்களின் (சிறுவர், சிறுமியரின்) பயன்பாடுகள் கொண்டும், பொம்மைகளின் உருவ அமைப்புகளின் படியும் பாலின வேறுபாட்டை அறிய இயலும்.

பொருளாதாரம்[தொகு]

சிறார்களின் பொம்மைகள் அவர்களின் விருப்பத் தேர்வு, அனைவராலும் அறியப்பட்ட பிரபலம், நவீன சந்தைப்படுத்தல் (அ) புதுவரவு, கையிருப்பு போன்ற காரணிகளால் மிகப்பெரும் பொருளாதாரச் சந்தையினையும் அதிகம் உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயத்தையும் கொணர்கிறது. பார்பி பொம்மை (Barbie dall), டெடி கரடிக்குட்டி பொம்மைகள் உலகப் பிரசித்தி பெற்றன. இவற்றின் சந்தை மதிப்பு இன்றளவும் பல மாதிரிகளுள் வேறுபடும். ஒவ்வொரு நாடு மற்றும் இனத்தின் பண்பாட்டைக் கொண்டு இப்பொம்மைகளின் அலங்காரங்கள் மாறுபடும்.

இந்திய பொம்மைகள்[தொகு]

நவராத்திரி வழிபாடும் பொம்மைகளும்[தொகு]

கொலு[7] என்பது இந்து சமயத்தில் தெய்வ மற்றும் சான்றோர்களின் சிறிய பொம்மைகளை படிப்படியாக வைத்து ஒன்பது இரவுகளுக்கு நவசக்தி விழாவில் வழிபாடு நடத்துவதாகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் நவராத்திரியின் போது தெய்வ சிற்றுருக்கள் வரிசையாக முறைப்படுத்தப் பட்டிருக்கும். மகளிரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக பொம்மைகளின் அமைப்பு மற்றும் அலங்காரங்கள் இருக்கும்.

புராணகால கதைமாந்தர்களை சித்தரிக்கும் வகையில் பொம்மைகள் இருக்கும், குறிப்பாக தசாவதார பொம்மைகள் (திருமாலின் பத்து அவதாரங்கள்), முப்பெருந்தேவியர் (கலைமகள்,மலைமகள்,திருமகள்), விநாயகர், சிவன், பிரம்மா, முருகன் உள்ளிட்ட கடவுள்களின் சிற்றுருக்கள் முறைப்படி அடுக்கப்பட்டிருக்கும். இத்தோடு மரப்பாச்சி பொம்மைகள், தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மைகளும் இக்கொலுவில் இடம் பெறும்.

கொலுவானது இந்தியாவின் பல இடங்களிலுள்ள பொம்மைகளை ஒருசேர அடுக்கி அதன் பெருமைகளை உரைக்கும் விழா ஆகும். பொதுவாக, எட்டிகொபக்கா (ஆந்திரா), கொண்டபல்லி (ஆந்திரா), கின்னல் (கர்நாடகா), சன்ன பட்டினம் (கர்நாடகா), தஞ்சை (தமிழ்நாடு) போன்ற பல்வேறு இடங்களிலுருந்து மர மற்றும் களிமண் பொம்மைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப் படுகின்றன.

இந்திய நடனக் கலைகளைப் பறைசாற்றும் விதமாக பரதம், கதகளி, தாண்டியா, ஒடிசி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, போன்ற நடன அமைப்பைக் கொண்ட நடன பொம்மைகளும் இடம் பெறும். சமூக மாதிரி வடிவங்களாக சிறுசிறு பொம்மைகள் பல்வேறு விழாக்கள், அலுவலகங்கள், சமூகக் கூடங்கள், தொழில் நிலையங்கள் போன்றவற்றின் மாதிரிகளாகவும் இடம் பெற்றிருக்கும்.

தஞ்சை பொம்மைகள்[தொகு]

தஞ்சையின் சிறப்பு வாய்ந்த கலை நுட்பம் மற்றும் கலை வல்லமைக்கு தலையாட்டி பொம்மைகள் சான்றாகும்.

தஞ்சை பொம்மை

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை[தொகு]

மண்ணில் செய்யப்பட்டு பலவகை வண்ணம் பூசப்பட்ட இவ்வகைப் பொம்மைகளின் தலை சிறிய கம்பியினால் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்டு ஆடிய வண்ணம் இருக்கும். இதனால் இக்காரணப்பெயர் பெற்றது. உடலின் அடிப்பாகம் சம்மணமிடப்பட்டு அல்லது சமதளத்தில் தலை மட்டும் உச்சியில் தணித்து ஆடிய வண்ணம் இருக்கும். சான்றாக செட்டியார், செட்டிச்சி பொம்மைகள் சம்மணமிட்டு சிரித்த வண்ணம் தலையை அசைத்த வண்ணமிருக்கும்.

சாய்ந்தாடும் பொம்மை[தொகு]

தலை, உடல் ஆகியன ஒன்றிணைத்து கூம்பு வடிவில் சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் அடிப்பாகம் அரைக்கோள வடிவிலிருக்கும். மேலும் இதனுள் அதிக எடையுள்ள சிறிய கோலிக்குண்டு ஒன்றும் உள்ளது. மேற்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் ஆடும் நிலைப்பாட்டுடன் எவ்வாறு அசைத்தாலும் அசைந்தாடும். புவியீர்ப்பு விசையின் காரணமாக இறுதியில் நேர் செங்குத்தாக நிலை நிறுத்தப்படும்.

நடன மங்கை பொம்மை[தொகு]

தலை, உடல் ஆகியன தனித்தனி கம்பிகளால் தனித்துவிடப்பட்டு சாய்ந்து ஆடும் வண்ணம் அமைக்கப் பட்டிருக்கும். இப்பொம்மைகள் தலைப்பாகம் தனிக்கம்பியுடனும், அடிப்பாகம் கூம்பு போன்றும் செங்குத்தாக நிறுத்தப்படுவதால் இவை அசைந்தாடும். தலை, உடல், பாதம் என அனைத்தும் தனிதிருக்கும் நடன மங்கை பொம்மை வகை கடலூர், புதுச்சேரி, காஞ்சிபுரம் போன்ற இடங்களிலிருந்து தருவிக்கப் படுகிறது.

இந்திய அரசால் 2008-09ஆம் ஆண்டு தலையாட்டி பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.[8]

மரப்பாச்சி பொம்மைகள்[தொகு]

மரப்பாச்சி பொம்மைகள், இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்திய ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட மருத்துவ குணம் கொண்ட பொம்மைகளாகும். இப்பொம்மைகள் பல்வேறு குடும்ப உறவுகளை விளக்கும் விதமாகவும், கடவுளின் சிற்றுருவாகவும் அமைந்திருக்கும்.

வண்ண சாயம் பூசப்பட்டும், வண்ணம் அற்றும் இரு வகைகளில் உள்ளன. மேலும் பல்வேறு அலங்கார ஆபரணமிட்டு சிறுமியர் விளையாடி மகிழ்வர். இம்மரப்பாச்சி பொம்மைகளில் திருமண மணமகன், மணமகள் பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றன.

சன்னப்பட்டின பொம்மைகள்

சன்னப்பட்டின பொம்மைகள்[தொகு]

கர்நாடக மாநிலத்தின் சன்னபட்டின கிராமத்தில் பல வருடங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பொம்மைகள் சன்னபட்டின பொம்மைகள் ஆகும். இவை பலவகை வண்ணங்களுடன் யானை மரம் (அ) தந்த மரம், நூக்க மரம், மற்றும் சந்தன மரத்தால் (அரிதாக) செய்யப்படுபவை. பாவாஸ் மியான் சன்னப்பட்டின பொம்மைகளின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் தாம் கற்றுணர்ந்த சப்பானிய தொழில்நுட்பப் மூலம் பொம்மைகளைத் தயாரித்தார். பின்னர் இந்திய கலை மற்றும் ரசனைகளுக்கேற்ப உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் உதவியால் பொம்மைகளை உருவாக்கினார்.

வகைகள்[தொகு]

கட்டுமான பொம்மைகள்[தொகு]

கட்டிட வடிவிலான ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படும் பொம்மைகள் இவ்வகையிலானவை. சிறுசிறு அச்சுகள் ஒன்று சேர்ந்து ஒரு உருவ அமைப்பைத் தாங்குதல் போன்று வடிவம் பெறும்.

கைப்பாவைகள் (அ) சிற்றுருக்கள்[தொகு]

மனித, விலங்கு, கற்பனைக் கதாபாத்திரம், போன்றனவற்றின் சிற்றுருக்கள் அல்லது சிறிய கையடக்கப் பாவைகள் இவ்வகையின.

வண்டி வடிவங்கள் (அ) சிறுத்தேர் பொம்மைகள்[தொகு]

சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஓரிடத்திலிருந்து சிறு வடத்தின் மூலம் இழுத்துச்செல்ல இயலும் வண்டிகள் மற்றும் சிறிய தேர்வகைப் பொருத்தப்பட்ட பொம்மைகள். பொதுவாக ஆண் சிறார்களால் அதிகம் விரும்பப்படுவதும் ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிறுத்தேர் விளையாட்டுடன் இப்பொம்மைகள் ஒப்பு நோக்கப்படுகின்றன.

தானியங்கி பொம்மைகள்[தொகு]

உரோபட்டுகள் எனப்படும் எந்திர தானியங்கிகள் மின்கல மின்னூட்டம் மூலம் பொம்மைகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அசைவு சமிக்ஞைகள், சிறு ஒளி விளக்குகள், ஒலிப்பான்கள் மூலம் குழந்தைகளைக் கவருகின்றன.

அசைவுறும் பொம்மைகள்[தொகு]

தானாக அசையும் படியான எந்திர பொம்மைகள் சாவிகள் மூலமாக எந்திர சக்கரம் அல்லது சுருள்களினால் சுழற்றப்படுகின்றன. இதனால் இவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஓடல், தாவல், சுழலுதல், உருளுதல் போன்ற முறைகள் மூலம் அசைகின்றன.

பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்[தொகு]

  • பொம்மைகள் இரும்பு, பஞ்சு, நெகிழிகளால் அதிகம் செய்யப்படுவதால் அதன் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • குழந்தைகள் உட்கொள்ளா வண்ணம் தடுக்க வேண்டும்.
  • பழைய பொம்மைக்கழிவுகள் முறைப்படி நீக்க வேண்டும்.
  • பொம்மைகளின் தன்மை, கூரிய முனைகள், துருக்கம்பிகள், ரசாயண பூச்சு, கிருமித்தொற்று ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படா வண்ணம் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்.

விலங்கு மாதிரியுருக்கள்[தொகு]

காட்டில் வாழும் விலங்குகளை மாதிரியாக வைத்து பல்வேறு பொம்மைகள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் காடுகளின் மாதிரிகளை எளிதில் உருவாக்க இயலும். குழந்தைகளுக்கும் தொடர்புபடுத்தி கற்றல் முறை மூலம் காட்டு சூல்நிலை மண்டலத்தை எடுத்துக்காட்டாக விளக்க இயலும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.popsci.com/science/article/2012-01/what-oldest-toy-world
  2. MrDonn.org - Daily Life in Ancient India, including the mysterious Indus Valley Civilization பரணிடப்பட்டது செப்தெம்பர் 19, 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. Gaston Maspero. Manual of Egyptian Archaeology and Guide to the Study of Antiquities in Egypt. Project Gutenberg. http://www.gutenberg.org/etext/14400. 
  4. Powell, Barry B. (2001). Classical Myth; Third Edition. Upper Saddle River, NJ: Prentice Hall. பக். 33–34. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-088442-1. https://archive.org/details/classicalmyth00powe. 
  5. Oliver, Valerie (1996). "History Of The Yo-Yo". Spintastics Skill Toys, Inc. Archived from the original on 2006-08-09. பார்க்கப்பட்ட நாள் 2006-10-30.
  6. British museum exhibit
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-26. பார்க்கப்பட்ட நாள் 2017-05-20.
  8. "Geographical indication". Government of India. Archived from the original on 26 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை&oldid=3583034" இலிருந்து மீள்விக்கப்பட்டது