வைக்கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வைக்கோல் போர்

நெற் பயிர் அறுவடைக்குப் பின் அதன் தாள் உலர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு (குறிப்பாக மாடுகளுக்கு) உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைக்கோல் என்று அழைக்கப்படுகிறது. வைக்கோல், அதன் உலர்ந்த நிலையிலேயே கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால், உழவர்கள் வைக்கோல் ஈரப்படாமலும் மழையில் நனையாமலும் காக்க முயல்வர். அப்படி ஈரப்பட்டாலும் வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைப்பதன் மூலம் வைக்கோலை உலர வைத்து கால்நடைகளுக்கு உண்ணத் தர முடியும். ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட வைக்கோலை வைக்கோல் போர் அல்லது வைக்கோல் படப்பு என்பர். அவ்வாறு குவித்து வைத்த வைக்கோல் காற்றில் பறந்து விடாமல் காக்க, வைக்கோல் போரை சுற்றி வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியை சுற்றி வைப்பர். வைக்கோல் போர்களை, தானிய மூட்டைகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் கிடங்காகவும் உழவர்கள் பயன்படுத்துவர். இது தவிர வைக்கோலை குடிசைகளின் மேலும் இட்டு கூரை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவதும் உண்டு.

வைக்கோல் தயாரிப்பு[தொகு]

வைக்கோல் வேயப்பட்ட கூரை

அறுவடை செய்யப்பட்ட நெற் பயிரை உரல்களில் அடித்து நெல் மணிகளை பிரித்தெடுப்பர். இவ்வாறு அடித்த பிறகும் நெற் பயிரில் எஞ்சி ஒட்டிக் கொண்டுள்ள நெல் மணிகளை பிரித்தெடுப்பதை போரடித்தல் என்பர். சோழர்கள் யானை கட்டி போரடித்தவர்கள் என்ற கூற்றும் இங்கு நினைவுகூரத்தக்கது. இவ்வாறு போரடிப்பதற்கு தற்பொழுது பெரும்பாலும் காளை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இயன்ற சிலர், இயந்திரங்களை பயன்படுத்துவதும் உண்டு. அறுவடை செய்யப்பட்டு பெரும்பாலான நெல் மணிகள் உதிர்க்கப்பட்ட நெற் பயிர் வட்ட வடிவில் பரப்பப்படும். அதன் மீது இணை மாடுகள் சுற்றி சுற்றி வந்து நையப் புடைப்பதின் மூலம் மீதமுள்ள நெல் மணிகளை உதிரச்செய்யும். அதன் பிறகு நெற் தாள்கள் வெட்ட வெளியில் பரந்த நிலப்பரப்பில் பரப்பப்பட்டு ஓரிரு நாட்களில் உலர்த்தப்பட்டு வைக்கோலாக மாற்றப்படுகின்றன.

அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனிவீட்டுக்கு என்ற பழமொழியில் நடு மாட்டுக்கு என்பது வைக்கோலைக் குறிக்கிறது.

வைக்கோலால் வரும் பிரச்சினைகள்[தொகு]

  • எளிதில் தீப்பற்றக்கூடிய வைக்கோல், பல கிராமங்களில் தீ விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைவது உண்டு.
  • இட வசதி இல்லாத உழவர்கள் சிலர், வைக்கோலை உலர்த்துவதற்காக சாலைகளை பயன்படுத்துவது உண்டு. பெரும்பாலான சமயங்களில் இது வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைவது உண்டு.
  • வைக்கோல், உடலில் அரிப்பை ஏற்படுத்தக்கூடியது.
  • வைக்கோலினால் பாம்பு ேபான்ற ஜந்துகளின் வருைக அதிகரிக்கும்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கோல்&oldid=1553992" இருந்து மீள்விக்கப்பட்டது