நாட்டுக்கோட்டை நகரத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாட்டுக்கோட்டைச் செட்டியார்
(நகரத்தார்)
Nagarathar-colombo-chetty.jpg
மொத்த மக்கள்தொகை: 1 மில்லியன்
அதிக மக்கள் உள்ள இடம்: தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
மொழி: தமிழ்
சமயம்/சமயம் அற்றோர்: சைவ சமயம், சைவ சித்தாந்தம்
தொடர்புடைய இனக்குழுக்கள்: தமிழர், திராவிடர்

நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டியார் என்று அழைக்கப்படும் வணிகச் சமுதாயத்தினர் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். வியாபார நிமித்தம் உலகின் பல நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சென்ற இவர்களின் வம்சத்தினரை இன்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலும் காணலாம்.

நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது இந்து சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்து கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. சமையலில் தங்களுக்கென்று ஒரு இடம் பிடித்தவர்கள் இவர்கள்.

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர்.

அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. மன்னர் அளித்த 9 ஊர்களில் ஊருக்கு ஒரு சிவகோயில் வீதம் மொத்தம் 9 கோயில்கள் கட்டப்பட்டன. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது.

செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக் கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் தற்போது மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான வணிகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சுவழக்கு மிகுதியும் தமிழ் வழக்கே என ஆய்வர் கருதுகின்றனர்.

பூர்வீக வரலாறு[தொகு]

கிட்டத்தட்ட ஐயாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சமூகம் நகரத்தார்கள். காலத்திற்கேற்ற புதிய பரிமாணமும், எந்தச் சூழ்நிலையிலும் தமது சமூகம் வளர்த்து பெருமை காத்த இவர்களது பரிணாம வளர்ச்சியும் போற்றுதலுக்குரியது. ஆதியில் நாக நாட்டில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படும் இந்த மக்கள் கலியுகம் பிறந்து 204ம் வருடத்தில் காஞ்சி மாநகரம் குறும்பர்கள் வசம் இருந்த போது அங்கு குடியேறிருக்கிறார்கள். கால மாற்றத்தால் குறும்பர்கள் வசமிருந்த காஞ்சி மண்டலம் தொண்டை மண்டலமானது.

தொண்டை மன்னனும் நகரத்தாரும்[தொகு]

தம் உழைப்பாலும், உயர் பண்புகளாலும், செல்லும் இடமெல்லாம் தமிழ் வளர்த்து முன்னேறிய நகரத்தார் பெரு மக்களின் அருமை உணர்ந்த தொண்டை மன்னன் நகரத்தார் மக்களை நன்கு உபசரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து தன் நாட்டிலேயே நிலைப்படுத்திக் கொண்டான். தன வைசியர்களான இவர்கள் பொன், ரத்தின வணிகத்திலும் சிறந்து விளங்கியிருக்கிறார்கள். தொண்டை மண்டலம் உலகப் புகழ்பெற்ற வணிக மையமாகவும் நல்லாட்சி நடந்து வந்த அரசு எனவும் வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு புகழ் பெற்ற அரச வம்சாவளியும் மண்மூடிப் போனதற்கு மிக முக்கியமான காரணம் கொடுங்கோன்மை புல்லுருவிகள் தான். அப்படி ஒரு புல்லுருவியாக பிரதாபன் என்னும் கொடுங்கோலன் சிம்மாசனமேற நகரத்தார்களின் நிம்மதி பறிபோனது. வணிக ரீதியான அநீதிகளைப் பொறுக்க முடியாது, 2108 வருடங்கள் வாழ்ந்து செழிப்பாக்கிய காஞ்சி மண்ணை விட்டு 8000 நகரத்தார் குடும்பங்களும் தெற்கு நோக்கி புறப்பட்டுச் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

சோழ நாட்டில் நகரத்தார்கள்[தொகு]

சோழ நாடு விவசாயத்தில் சிறந்து தொழிலில் பின் தங்கியிருக்கவே அப்போது சோழநாட்டை ஆண்ட மனுநீதிச் சோழன் நகரத்தார்களின் வருகையால் மிக்க மகிழ்ந்து வரவேற்று இவர்கள் குடியிருக்க காவிரிப்பூம்பட்டினத்தில் கிழக்கு, மேற்கு, தெற்குத் தெருக்கள் என ஒதுக்கித் தந்தான். நகரத்தார், அரச வம்சத்திற்கு மகுடம் சூட்டுகிற உரிமை தந்து 'மகுட வைசியர்' என்ற பட்டமும் தந்து கௌரவமாக நடத்தப்பட்டார்கள். இவர்களது மாளிகையில் தங்கக்கலசம் வைத்துக்கொள்ள அனுமதி தந்து சிங்கக்கொடிவிருதும் தந்து சிறப்பித்ததாக வரலாறு கூறுகிறது. அரசு கஜானாக்களை விட இவர்களிடம் மிகுந்த செல்வமிருந்ததாகத் தெரிகிறது. ஒரு கலையிலோ, தொழிலிலோ நிகரற்றவர்களுக்கு அறிகுறியாக சிங்கக் கொடிவிருது தரப்படுவதும், செல்வத்தில் நிகரற்றவர்களுக்கு அடையாளமாக தங்கக்கலசம் வைக்க அனுமதிப்பதும் அரச மரபு என்பதிலிருந்து இவர்களின் செல்வ நிலையும், தொழில் மேன்மையும் அறிந்து கொள்ள முடிகிறது.

பூவந்திச்சோழன் என்னும் அரசன் நகரத்தார் சமூகப் பெண்களுக்கு தீவினை செய்யத் துணிய தங்கள் ஆண்பிள்ளைகள் 1502 பேரையும், அவர்களது அனைத்துச் செல்வத்தையும் உபாத்தியாயராய் இருந்த ஆத்மநாத சாஸ்திரியாரிடத்தில் ஒப்புவித்து,சிசு பரிபாலனமும் மரகத விநாயகர் பூசையும் செய்விக்கச் செய்து மானம் காக்கும் பொருட்டு 8000 குடும்ப மக்களும் பிராணஹானி (தீயில் விழுந்து தற்கொலை செய்தல்) செய்து கொண்டார்கள்.

பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளைக் கவர்ந்து வரச்செய்து, பின் அதனைப் பார்த்து பரிகசிக்கப் போனபோது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தியிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம். ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் இருந்தார்.

பூவந்திச்சோழன் காலமாக, ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம். முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர், சோழிய வேளாளர், காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம். பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும், ஆதரவும், சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.

பாண்டிய நாட்டில் நகரத்தார்[தொகு]

பாண்டிய தேசத்து சௌந்தரபாண்டிய அரசன் தமது அரசாங்கத்தில் நற்குடி வேண்டி சோழ மன்னனிடத்தில் வேண்ட,அப்படியே அனுப்பி வைப்பதாக உறுதியளித்து நகரத்தார் சிலரை பாண்டிய தேசம் போயிருக்கும்படி வேண்ட அவர்களோ "எங்கிருந்தாலும் நாங்கள் பிரியாதிருப்போம் என்றும்,தாங்கள் நடத்திவந்தபடி பாண்டிய மன்னனும் மன்னிணை மரியாதை தந்து,அபிமானமாய் சம்ரக்ஷணை செய்வதாய் தங்கள் முன்னால் உறுதியளித்தால் நாங்கள் போகச்சித்தமாயிருக்கிறொம்" என்று கூற சோழ மன்னன் முன் பாண்டிய மன்னன் உறுதியளித்து நகரத்தார் மக்கள் பாண்டிய தேசம் வந்தது வரலாறு.காரைக்குடி அதனைச்சுற்றியுள்ள 74 கிராமங்களில் இவர்கள் தங்கள் குடியிருப்பை அமர்த்திகொண்டனர்.இவர்கள் சைவ நெறியைக் கடைப்பிடிப்பவர்கள்.தீட்சையும்,உபதேசம் பெற்று சிவபூசை நித்தம் செய்பவர்கள்.சிவபூசை எடுத்தவர்கள் புலால் உண்ண மாட்டார்கள்.மூன்று வேளாளப் பெண்களை மணந்த நகரத்தார் காலப்போக்கில் மூன்று பிரிவாகி ஒவ்வொரு பிரிவிற்கும் அரியூர்,சுந்தரப்பட்டினம்,இளையாற்றங்குடி நகரங்களும்,ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு கோவில் வீதம் சுந்தரப்பட்டினம் கோவில்,இளையாற்றங்குடிக்கோவில்,பிரான்மலைக்கோவிலும் விட்டுக்கொடுத்து கூட வந்த குருஸ்தானங்களுக்கும் க்ஷேத்திர சுவாத்தியங்களும் விட்டு,சகல மரியாதையும் பாண்டியமன்னர் செய்ததாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.

உறவுமுறைப் பெயர்கள்[தொகு]

ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும் மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப்பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள், என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது.

பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள்

தொழில்துறை வளர்ச்சி[தொகு]

1950ல் தமிழ் நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப் பயிற்சியாகும்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் என அழைக்கப்படும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் சிதம்பரம் கோயிலின் பல திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. செட்டி நாட்டு ராஜாவான சர் அண்ணாமலைச் செட்டியார், அவரின் சகோதரர் திவான் ராமசாமிச் செட்டியார் போன்றவர்களும், நாலு கோபுரங்களின் திருப்பணிகள், கனகசபையின் கூரையை மறு செப்பனிடுதல், சுற்றுச் சுவர்களைச் செப்பனிடுதல், பிரகாரங்களில் கல்லால் ஆன பாதை அமைத்தல், சிவகங்கைக் குளத்துப் படிக்கட்டுகளைக் கல்லால் செப்பனிடுதல், திரு வீதி உலாவுக்கான வாகனங்களைச் செய்து அளித்தல், விளக்குகள், பாத்திரங்கள் போன்ற முக்கியமான தேவைகளை அளித்தல் போன்றவற்றைச் செய்து கொடுத்து மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகமும் செய்து வைத்ததாயும் தெரிய வருகின்றது. 1891-ல் இவை நடந்ததற்குப் பின்னர் கிட்டத் தட்ட 64 வருடங்கள் சென்ற பின்னரே 1955-ல் திரு ரத்னசபாபதிப் பிள்ளையும், திரு ரத்னசாமிச் செட்டியாரின் முயற்சியாலும் கும்பாபிஷேகம் செய்யப் பட்டதாயும் தெரிய வருகின்றது.

நகரத்தார் கட்டிய 9 கோயில்கள்[தொகு]

 • இளையாத்தன்குடி
 • மாத்தூர்
 • வைரவன்கோயில்
 • நெமங்கோயில்
 • இலுப்பைக்குடி
 • சூரக்குடி
 • வேலங்குடி
 • இரணிகோயில்
 • பிள்ளையார்பட்டி

இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகள் உண்டு. அவை,

 • இளையாத்தன்குடி: கழனி வாசர்க்குடையர், கின்கினிக்கூருடையர், ஓக்குருடையர், பட்டனச்சாமியர், பெருசெந்துருடையர், சிறுசெந்துருடையர், பெருமருதுருடையர்.
 • மாத்துர்: அரும்பக்கூர், கண்ணுர், கருப்பூர், குளத்துர், மண்ணுர், மணலுர், உறையுர்.
 • வைரவன்கோயில்: கழனி வாசர்க்குடையர், மருதென்திரபுரம், பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு.

நகரத்தார் சமுதாயத்தின் ஊர்கள்[தொகு]

செட்டி நாடு அரண்மனை, காரைக்குடி

சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 9 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது (2007 கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது. நகரத்தார் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊர்கள் அவர்களால் வட்டகை எனும் பிரிவில் பிரிக்கப்பட்டுள்ளன. மேலவட்டகை, கீழப்பதூர் வட்டகை, கீழ வட்டகை, மேலபதூர் வட்டகை, பதினாறு வட்டகை, உறுதிக்கோட்டை வட்டகை போன்றவை. இந்த உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார்கள் சுமார் 203 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரிவினையில், மொத்தம் உள்ள 9 நகரத்தார் கோவில் பிரிவைச் சார்ந்தவர்களில் 4 கோவிலைச் சார்ந்த சில புள்ளிகள் பிரிந்து வந்து உறுதிக்கோட்டை வட்டகையை உருவாக்கினார்கள். இவர்கள் உறுதிக்கோட்டை வட்டகையைத் தவிர வேறு வட்டகையிலோ,வேறு சமுதாயத்திலோ கொள்வினை, கொடுப்பினை (திருமண உறவுகள்) செய்வது கிடையாது.

குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள்[தொகு]

அரசியல் பங்களிப்பாளர்கள்[தொகு]

கல்வியாளர்கள்[தொகு]

சட்டத் துறையினர்[தொகு]

 • நீதியரசர் A.R. லெட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி.
 • நீதியரசர் எம். சொக்கலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.

விளையாட்டுத் துறை[தொகு]

 • மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.)

திரைப்படத் துறையினர்[தொகு]

 • ஏ. வி. மெய்யப்ப செட்டியார், நிறுவனர், ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம்.
 • கவியரசு கண்ணதாசன், திரைப்படப் பாடலாசிரியர்.
 • இயக்குநர் எஸ். பி. முத்துராமன், 75-க்கும் மேற்பட்ட ஜனரஞ்சக திரைப்படங்கள் இயக்கியவர்
 • இயக்குநர் வசந்த், ஏறத்தாழ 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியவர்.

ஊடகத் துறையினர்[தொகு]

 • தமிழ்வாணன், எழுத்தாளர் (ம) பொறுப்பாசிரியர், கல்கண்டு இதழ்.
 • எஸ். ஏ. பி. அண்ணாமலை,பொறுப்பாசிரியர், குமுதம் வார இதழ்.
 • லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ்.

பிற துறையினர்[தொகு]

 • ரோஜா முத்தையா செட்டியார்

செட்டிநாட்டு நகைகள்[தொகு]

கழுத்திரு (நகரத்தார் தாலி)

இவற்றையும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]