கழுத்திரு (அணிகலன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுத்திரு (நகரத்தார் தாலி)

கழுத்திரு என்பது செட்டிநாட்டு அணிகலன்களுள் ஒன்றாகும். இது நகரத்தார் தாலி என்றும் அழைக்கப்படுகிறது. செட்டிநாட்டினர் என அழைக்கப் பெறும் என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினரில் நடைபெறும் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன் ஆகும்.

அமைப்பு[தொகு]

கழுத்திரு என்பது இரட்டைவடச் சங்கிலியும் அதனுடன் கோர்த்து இணைத்துள்ள 34 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய அழகிய துணை நகைகளாகும். இவற்றுள் இரண்டு தொங்கட்டான்கள் (பெண்டன்ட்கள்) மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தொங்கட்டான்களில் ஒரு பக்கம் தேவி இலக்குமியின் உருவமும் மறு பக்கம் காளை வாகனத்தில் அமர்ந்து காட்சி தரும் மீனாட்சி சுந்தரேசுவரர் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். தேவி இலக்குமி மற்றும் ரிஷபாருடர் உருவங்கள் செட்டிநாட்டில் இருக்கும் நகரத்தார் மிகவும் விரும்பி நகைகளில் பதிக்கப்படும் திருவுருவங்களாக இருக்கின்றன.

அணிவிப்பதன் பொருள்[தொகு]

கழுத்திரு என்பது கழுத்தில் அணியும் மங்கல சங்கிலி. இறைத் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள கழுத்திருவை அணிவிப்பதன் மூலம், கழுத்தில் திரு என்ற இலக்குமியைத் தங்க வைப்பதான நம்பிக்கையும், மணமக்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அளித்துக் காப்பான் என்பதான நம்பிக்கையும் நகரத்தார் சமூகத்தினரிடம் இருக்கிறது.

தங்கத்தின் அளவு[தொகு]

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கழுத்திரு என்ற இந்த அணிகலனை 100 பவுன் (சவரண்) எடையுடைய தங்கத்தில் செய்வார்கள். தங்கம் விலை அதிகரிப்பிற்குப் பிறகு இந்த அளவு சற்றுக் குறைந்து போயிருக்கிறது. இது போல கழுத்திரு நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு என்கிற எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள். மணப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் சமயம் தாய் தன் பெண்ணுக்கு இந்தக் கழுத்திருவை அணிவிப்பது வழக்கம். ஒன்றுக்கு மேல் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் மொத்தக் கழுத்திருவையும் அழித்துப் பின் தேவைக்கேற்ப பிரித்துப் புதுப்புதுக் கழுத்திருக்களாகச் செய்து கொள்வது வழக்கம். இதனால் கழுத்திருவின் தங்க அளவு குறைந்து வருகிறது. தற்போது கழுத்திரு அளவில் குறைந்து 11 முதல் 16 பவுன் என்கிற அளவில் சிறிய கழுத்திருக்களாக உருமாறி வருகின்றன.[1]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுத்திரு_(அணிகலன்)&oldid=1296898" இலிருந்து மீள்விக்கப்பட்டது