உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாதிரி தாவர உயிரணுவின் உள்ளுறுப்புகள்:
a. செல் இணைபு இழை (Plasmodesmata)
b. உயிரணு மென்சவ்வு
c. உயிரணுச் சுவர்
1. பச்சையவுருமணி
d. தலகொயிட் மென்சவ்வு (thylakoid membrane)
e. மாப்பொருள் மணி (Starch grain)
2. சாற்றுக்குழி (Vacuole)
f. சாற்றுக்குழி
g. சாற்றுக்குழி உறை
h. இழைமணி
i. Peroxiosome
j. கரு முதலுரு
k. சிறிய மென்சவ்வாலான புடகம் (Small membranous vesicles)
l. அழுத்தமற்ற அகக்கலவுருச் சிறுவலை
3. உயிரணுக் கரு m. கரு துளை
n. கரு மென்சவ்வு
o. கருவின்கரு அல்லது புன்கரு
p. இரைபோசோம்
q. அழுத்தமான அகக்கலவுருச் சிறுவலை
r. அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலை
s. கொல்கி உபகரணம்
t. இழையுருவான கலச்சட்டகம் (filmentous cytoskeleton)

உயிரணு (Cell) என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம்[1]. தமிழில் உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது[2].

தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சை இனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து, தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண், பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணந்து உருவாகும் முதலாவது உயிரணு கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது.

மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரணுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கத்தின் போதும் கூட அதன் வடிவத்தை ஆராயும் நுண்நோக்கி இருக்கவில்லை. மேலும் பல்லாயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் திறம் கொண்ட நுண்ணோக்கிகள் வந்த தற்காலத்திலும் பல்வேறு வேதிப்பொருள்களின் துணையுடனும், கணிப்பீட்டுக் கணிதவியல் துறைகளின் உதவியுடனுமே உயிரணுவின் கட்டமைப்பு மாந்தர் கண் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக உயிரணுக்கள் மனிதக்கண்ணின் பார்வைப்புலத்தினை விடவும் ஐந்து மடங்கு சிறியளவான 10 முதல் 20 மைக்ரோமீட்டர் (1000 μm= 1mm) விட்டம் கொண்டதாக காணப்படுவதையும், ஒளியூடுமை (ஒளியை ஊடுபுக விடும் தன்மை) கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம்.

உயிரணுக் கொள்கையின் முக்கிய கூறுகள் [தொகு]

  • அனைத்து உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை.
  • உயிரணுப் பிரிதல்|உயிரணுப் பிரதலினால் ஒரு உயிரணுவில் இருந்து இன்னொன்று உருவாகிகிறது.
  • வளர்சிதை மாற்றம்
  • டி.என்.ஏ-வில் உயிரணுக்களின் வளர்ச்சி, உருவாக்கம் மற்றும் செயல்களுக்கான தகவல்கள் உள்ளது.
  • வெளித்தூண்டுதல்களை உணர்ந்து செயற்படல்.

உயிரணுவின் அமைப்பு [தொகு]

ஒவ்வொரு உயிரணுவும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளன.

  1. உயிரணு மென்சவ்வு (Cell Membrane) - வெளியுறை
  2. குழியுருவு (Cytoplasm) - பாய்பொருள்
  3. கரு - உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி)

என மூன்று பெரும் பிரிவுகளும் அதற்குள் ஏராளமான சிறு சிறு மேடுகள், பள்ளங்கள், துளைகள் என்பவைகளையும், உட்பகுதிக்குள் வளைந்து நெளிந்தும், சுருண்டும் செல்லும் அமைப்புகள், மற்றும் வெளிப்புறமாக நீண்டு செல்லும் பகுதிகள் என மிக மிக சிக்கலான அமைப்புகளை இத்தலைப்புகளை ஆழ ஆராயும் போது உப தலைப்புகளாக கொண்டு வரலாம். பிரபலமான டி.என்.ஏ எனும் சொற்பதமும் உயிரணுவின் கருவை (Nucleus) ஆழமாக ஆராயும் போதே அறிமுகமாகிறது. இதனூடாகவே மரபுத் தகவல்களும் கடத்தப்படுகிறது.

உயிரணுவின் தொழில் [தொகு]

முதன்மைக் கட்டுரை: உயிரணுவின் தொழில்

தொடர்ந்தும் கலங்களை மீளமைத்தல், புரதங்களை உருவாக்கல், உயிர்ச்சத்துக்களை பிரித்தெடுத்தல் , தூண்டற்பேற்றை காட்டல் என ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான இன்னுமின்னும் முக்கியப்பணிகளும் இவ்வுயிரணுவின் உள்ளேயே இடம் பெறுகின்றன. ஒருவரின் பரம்பரை நோய்கள், குணங்கள் மற்றும் தோற்றங்கள் என்பதை குழந்தைகளுக்கு கடத்திச்செல்லவும் இக்கலத்தின் கருவே பயன்படுகிறது.

  • மூளைக்கலங்கள் - செய்திப் பரிமாற்றம்
  • தசைக்கலங்கள் - இயக்கம்
  • குடற்கலங்கள் - சமிபாடு
  • நாவுக்கலங்கள் - சுவை

ஆய்வுகள் [தொகு]

இது குறித்த ஆய்வுகள் உயிரணுவியல் (Cell Biology) என அழைக்கப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே "உயிரியலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உயிரணுவியல் பற்றிய ஆய்வு தீர்வு தரும்" என நம்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்று வரை "உயிரணுவியல்" உயிரியலின் பெரும் பகுதியாகவும் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதியாகவும் உள்ளது. 2008ம் ஆண்டு முற்பகுதியில் சர்வதேச விஞ்ஞானிகள் கழகம் சமர்ப்பித்த இரண்டாவது கட்ட DNA மரபணு அட்டவணையில் மனிதர்களின் மரபணு ஒன்றில் 99 வீதமானவை மனிதர்களிடையே பொதுவாகவே காணப்படுவதாகவும் மீதி ஒரு வீதமே ஆளாளுக்கு வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெரும் பகுதி உயிரணு ஆய்வில் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது.

இக்கலங்களின் சிக்கலான அமைப்பு குறித்து விளக்கும் ப்லோபெல் (Blobel, The Nobel Prize in Physiology or Medicine 1999)

இவ்வுயிரணுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் நாம் இல்லை எனும் போது எமது அறிவின் சிறுமை எம்மை வியக்கவைக்கிறது. முழுக்கலம் பற்றி அறிய நாம் மிக மிக நீண்ட காலத்தை எடுக்க வேண்டி வரும் என குறிப்பிடுகிறார்.

இவ்வாறே அனைத்து உயிரியல் பேராசிரியர்களினால் மதிக்கப்படுபவரும், "DNA யின் அமைப்பு இரட்டைச் சங்கிலியுருவுடையது" என்பதை எடுத்துக்காட்டியாவருமான (James Dewey Watson) கூறும் போது

இவ்வளவு பிரமாண்ட வளர்ச்சியுடன் நாம் நமது அதி திறமை வாய்ந்த விஞ்ஞானிகளினதும் தரமானதும் மிக மிக நுணுக்கமானதுமான கருக்களினதும் உதவியைக்கொண்டு ஆய்ந்தும்கூட கல உயிரியலின் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கின்றோம் என கூறுவதற்கு நான் தயங்கவில்லை..

இவ்வாறான சிக்கல் வாய்ந்த இக்கல அமைப்பினையும் அதனுள் இடம் பெறும் பரிமாற்றங்களை ஆராயும் நோக்குடனும் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களையும் உள்ளடக்கி 2000 ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே AfCS (The Alliance for Cellular Signaling) ஆகும். அடுத்தடுத்த கட்டங்களில் இவ்வமைப்பு கலத்தின் தகவல் வங்கிகள், களஞ்சிய சாலைகள் அடுக்கடுக்கான பாதைகள் இலட்சக்கணக்கான தொழில்களை செய்யும் தனித்தனி பகுதிகள் என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது.

செயற்கைமுறை உயிரணு வளர்ப்பு [தொகு]

ஒரு உயிர்க்கலத்தை வளர்ப்பூடகங்களில் (Growth media or Cell culture media) வளர்ப்பதன் மூலம் அக்கலத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இழைய வளர்ப்பு (Tissue Culture) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து மேலும் நவீன உத்திகளையும் கொண்டு உயிரணு வளர்ப்பு (Cell Culture) முறை சாத்தியமாகி வெற்றியடைந்தது. இவ்வெற்றியே அடுத்த படியெடுப்பு (Cloning) என்ற கிளை வளர்ச்சிக்கு வித்திட்டது. படியெடுப்பு பற்றிய ஆய்வின் அடுத்தப்படியாகவே இன்றைய குருத்தணு ஆய்வு (Stem Cell Research) நோக்கப்படுகிறது

காட்சியகம் [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]

உசாத்துணைகள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

- ஆண்டு 12 தமிழ்நாடு பாடநூல் - (தமிழில்)


மேற்கோள்கள் [தொகு]

  1. Cell Movements and the Shaping of the Vertebrate Body in Chapter 21 of Molecular Biology of the Cell fourth edition, edited by Bruce Alberts (2002) published by Garland Science
  2. Campbell, Neil A.; Brad Williamson; Robin J. Heyden (2006). Biology: Exploring Life. Boston, Massachusetts: Pearson Prentice Hall. ISBN 0-13-250882-6. http://www.phschool.com/el_marketing.html. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிரணு&oldid=1342129" இருந்து மீள்விக்கப்பட்டது