புன்வெற்றிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாவரக் கலத்தில் புன்வெற்றிடம்
விலங்குக் கலத்தில் புன்வெற்றிடம்

அனைத்து தாவர மற்றும் பூஞ்சை உயிரினங்களின் உயிரணுக்களிலும் காணப்படும் மென்சவ்வால் சூழப்பட்ட ஒரு புன்னங்கமே புன்வெற்றிடம் (Vacuole) ஆகும். விலங்குக் கலங்களில் இடையிடையே சிறிய அமைப்பாகத் தோன்றுவதுடன், சில அதிநுண்ணுயிரி மற்றும் பாக்டீரியா போன்ற உயிரினங்களின் கலங்களிலும் இது உள்ளது. ஒளி நுணுக்குக்காட்டியில் ஒன்றுமில்லாத வெற்றிடம் போலத் தோற்றமளிக்கும். இதனாலேயே இப்புன்னங்கத்திற்கு இப்பெயர் வந்தது. எனினும் இது வெற்றிடமல்ல. புன்வெற்றிட மென்சவ்வுள் நீர், சேதன மற்றும் அசேதன மூலக்கூறுகள் மற்றும் நொதியங்கள் கரைசல் வடிவில் காணப்படுகின்றது. சிலவேளைகளில் உள்ளெடுக்கப்பட்ட திண்மத்துகள்களும் காணப்படலாம். சிறிய நுண்குமிழிகள் ஒன்று சேர்ந்து புன்வெற்றிடம் உருவாவதாகக் கருதப்படுகின்றது. புன்வெற்றிடத்திற்கென்றொரு குறித்த வடிவம் காணப்படுவதில்லை. புன்வெற்றிடத்தின் வடிவம் ஒவ்வொரு கலத்தின் வடிவத்துக்கும் தேவைக்குமேற்றபடி வேறுபடும். விலங்குக் கலங்களில் புன்வெற்றிடம் அவ்வளவாக முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கம் அல்ல. தாவரங்களிலும், பூஞ்சைகளிலும், சில அதிநுண்ணுயிரிகளிலும் புன்வெற்றிடம் அதி முக்கியத்துவம் வாய்ந்த புன்னங்கங்களில் ஒன்றாக உள்ளது.

புன்வெற்றிடத்தின் தொழில்கள்[தொகு]

தாவர மற்றும் பூஞ்சைக் கலங்களில் பொதுவாக பின்வரும் தொழில்களை புன்வெற்றிடம் மேற்கொள்ளும்:

  • கலத்துக்குத் தீங்கு விழைவிக்கக்கூடிய பொருட்களைப் பிரித்தெடுத்தல்
  • கழிவுப் பொருட்களை சேகரித்தல்
  • நீரைச் சேமித்தல்
  • நீர்நிலையியல் அமுக்கத்தைப் பேணல்
  • கலத்தின் pH பெறுமானத்தைப் பேணல், அமில உட்பகுதியைக் கொண்டிருத்தல்
  • சிறிய மூலக்கூறுகளை சேமித்து வைத்தல்
  • தேவையற்ற பொருட்களை சேமித்தல்
  • தாவரங்களுக்கு தாங்குமியல்பை வழங்கல்
  • வித்துக்களில் வித்து முளைத்தலுக்குத் தேவையான புரதத்தை சேமித்தல்

தாவரங்களிலும், பூஞ்சைகளிலும் விலங்குகளில் இருப்பதைப் போல முறையான கழிவகற்றும் தொகுதி காணப்படாமையால் அனுசேபத்தின் போது வெளியிடப்படும் கழிவுகள் கலத்தினுள்ளேயே சேமிக்க வேண்டும். இவ்வடிப்படையில் தாவர மற்றும் பூஞ்சைக் கலங்களில் புன்வெற்றிடம் மிகவும் முக்கியமானதாகும்.

தாவரக் கலத்தில் புன்வெற்றிடம்[தொகு]

விருத்தியடைந்த தாவரக் கலத்தில் 30% தொடக்கம் 80%க்கும் மேற்பட்ட கனவளவை புன்வெற்றிடம் உள்ளடக்கியிருக்கும். இதன் கனவளவே இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. தாவரப் புன்வெற்றிடத்தை உருவாக்கும் மென்சவ்வு இழுவிசையிரசனை எனப்படுகின்றது. இதனைப் புன்வெற்றிட மென்சவ்வு எனவும் அழைப்பர். கலச்சாற்றிலிருந்து புன்வெற்றிடத்திற்கு கலத்தின் அமிலத்தன்மையைக் குறைப்பதற்காக H+ அயன்கள் கடத்தப்படுவதால் புன்வெற்றிடச் சாறு குறைவான pH பெறுமானத்தைக் கொண்டிருக்கும். இவ்வமிலத்தன்மை நொதியங்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகின்றது; கரையங்களைக் கடத்தவும் பயன்படுகின்றது. பொதுவாக முதிர்ச்சியடைந்த தாவரக் கலத்தில் அதிக கனவளவைப் பிடித்திருக்கும் ஒரு தனி புன்வெற்றிடம் காணப்படும். வளர்ந்து கொண்டிருக்கும் முதிர்ச்சியடையாத தாவரக் கலத்தில் பல சிறிய புன்வெற்றிடங்கள் காணப்படலாம்.

புன்வெற்றிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் நீர் கலச்சுவருக்கு எதிராக நீர்நிலையியல் அமுக்கத்தைக் கொடுக்கின்றது. இவ்வமுக்கம் தாவரத்தை வாடாமல் விறைப்புத்தன்மையுடன் பேண உதவுகின்றது. இதனாலேயே நீரூற்றப்படாத தாவரங்களும், பிரசாரணம் மூலம் நீரகற்றப்பட்ட தாவரங்களும் புன்வெற்றிடம் மூலம் கொடுக்கப்படும் அமுக்கம் குறைவடைவதால் வாட்டமடைகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புன்வெற்றிடம்&oldid=1603500" இருந்து மீள்விக்கப்பட்டது