வேதிப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீரும் நீராவியும் ஒரே வேதிப்பொருளின் இரு வடிவங்கள்.

வேதிப்பொருள் (chemical substance) என்று குறிப்பிடப்படும் ஒரு பருப்பொருள் நிலையான வேதியியல் இயல்பும் குறிப்பிடத்தக்க வேதியியல் பண்புகளையும் கொண்ட ஒரு சேர்மமாகும்.[1] வேதிப் பிணைப்புகளை உடைக்காமல் இவற்றை தனித்துப் பிரிக்க இயலாது [2]. வேதிப் பொருட்கள் எளிய பொருட்களாக, மூலக்கூறுகளாக, வேதிச் சேர்மங்களாக, உலோகக் கலவைகளாக இருக்கலாம். தூய பொருட்கள் என்ற பெயராலும் இவற்றை அழைக்கிறார்கள்.

வேதிப்பொருட்கள் பெரும்பாலும் தூய நிலையில் உள்ள பொருட்களைக் குறிப்பிடுகின்றன. எளிதில் நாம் காணக்கூடிய ஒரு வேதிப்பொருள் தூய்மையான நீராகும். ஆற்று வெள்ளத்திலிருந்து எடுக்கப்பட்டாலும் சோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டாலும் நீரானது ஒரே இயைபைக் கொண்டதாக உள்ளது. இவற்றில் ஐதரசனும் ஆக்சிசனும் அதே விகிதத்தில் கலந்துள்ளன. வைரம், தங்கம், உண்ணும் உப்பு, சர்க்கரை போன்றன தூய்மையான நிலையில் கிடைக்கும் பிற வேதிப் பொருட்களாகும். பெரும்பாலும் நடைமுறையில் எந்த பொருளும் முழுமையாக தூய்மையான நிலையில் கிடைப்பதில்லை. பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள நோக்கம் கருதியே வேதியியல் தூய்மை பார்க்கப்படுகிறது. பொதுவாக வேதிப் பொருட்கள் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் கிடைக்கின்றன. வெப்பநிலை அல்லது அழுத்த மாற்றங்கள் மூலம் அவை ஓர் நிலையினின்றும் மற்றொரு நிலைக்கு மாறக்கூடியனவாக உள்ளன. வேதி வினையின் விளைவாக ஒரு வேதிப்பொருளை வேறொரு வேதிப்பொருளாக மாற்ற இயலும். ஆற்றலின் வடிவங்களான வெப்பமும் ஒளியும் பருப்பொருள்கள் அல்ல. எனவே இவை வேதிப்பொருட்களாக கருதப்படுவதில்லை.

வரையறைகள்[தொகு]

ஒரு குறிப்பிட்ட வேதியியல் இயைபு கொண்ட எந்தவொரு பொருளையும் வேதிப்பொருள் என்று வரையறுக்கலாம் என்று பொது வேதியியல் பாடப்புத்தகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வரையறையின் படி ஓர் இரசாயனப் பொருள் என்பது ஒரு தூய இரசாயனத் தனிமமாக அல்லது ஒரு சுத்தமான இரசாயன சேர்மமாக இருக்க முடியும். ஆனால் இந்த வரையறைக்கு விதிவிலக்குகள் உள்ளன; வேறுபட்ட பண்புகள் மற்றும் நிலையான இயைபு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு பொருள் என்றும் தூய்மையான பொருளை வரையறுக்க முடியும். வேதித் தொகுப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள வேதிப்பொருட்களின் பட்டியலில் நிலையான இயைபு அல்லாத பல கலப்புலோகங்களும் இடம்பெற்றுள்ளன. விகிதவியல் அளவுகளில் அமையாத சேர்மங்கள் சிலவும் நிலையான இயைபு விதிகளுக்கு விலக்காக உள்ளன. இவற்றை சேர்மம் அல்லது கலவை என்று வேறுபடுத்திப் பார்த்தல் கடினமாக இருக்கும். உதாரணம் பல்லேடியம் ஐதரைடு. இரசாயனங்கள் அல்லது இரசாயன பொருட்கள் குறித்த பரந்த வரையறைகள் மேலும் பல உள்ளன. எடுத்துக்காட்டாக: இரசாயனப் பொருள்" என்பது ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அடையாளம் கொண்ட எந்தவொரு கரிம அல்லது கனிம பொருளையும் குறிக்கிறது . ஒரு இரசாயன வினை அல்லது இயற்கையில் தோன்றுதல் ஆகிய நிகழ்வுகளால் முழுமையாக அல்லது பகுதியாக இணைந்திருக்கும் எந்தவொரு பொருளும் வேதிப்பொருள் எனப்படுகிறது.

நிலவியலில் சீரான இயைபுகளுடன் காணப்படும் சேர்மங்கள் கனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன, அதே சமயம் பல கனிமங்களின் (வெவ்வேறு பொருள்களின்) இயற்பியற் கலவைகள் பாறைகள் என வரையறுக்கப்படுகின்றன. இருப்பினும் பல தாதுக்கள் பரசுபர அடிப்படையில் திண்ம கரைசல்களில் கரைந்து விகிதவியல் அளவுகளில் கலக்காமல் ஒரு ஒற்றை பாறையாகவும் உருவாகின்றன. பெல்சுபார்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அனார்தோகிளேசு என்பது ஒரு கார அலுமினியம் சிலிக்கேட்டு ஆகும். இங்குள்ள கார உலோகம் சோடியம் அல்லது பொட்டாசியம் இரண்டில் ஒன்றாக மாறி இருக்கலாம். இரசாயன பொருட்கள் என்பவை வரையறுக்கப்பட்ட இயைபு கொண்ட அல்லது உற்பத்தி செயல்முறையில் உருவான தூய பொருட்கள் மற்றும் கலவைகளையும் சேர்க்கலாம் என விதிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய முறைப்படுத்தலான வேதிப்பொருட்கள் பதிவு மதிப்பிடு அங்கீகரிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு இவற்றை மூன்றாக வரையறை செய்துள்ளது. ஒற்றைப்பகுதிப் பொருட்கள், பலபகுதிப் பொருட்கள், அறியப்படாத பகுதி அல்லது மாறுபடும் பகுதி வேதிப்பொருட்கள் என்பன அவையாகும். பிந்தைய இரண்டும் பலபகுதி வேதிப்பொருட்களை உடைய பொருட்களாகும். இவற்றின் அடையாளம் நேரடி வேதிப் பகுப்பாய்வுகள் மூலம் அல்லது தனி தயாரிப்பு செயல்முறை மூலம் நிறுவப்படுகின்றன. உதாரணமாக மரக்கரி அதிக அணைவும் பகுதி பலபடியும் சேர்ந்த கலவையாகும். இது தயாரிப்பு செயல்முறை மூலம் வரையறுக்கப்படுகிறது.

பலபடிகள் பெரும்பாலும் வேறுபட்ட மோலார் நிறைகளுடன் கூடிய கலவைகளாகத் தோன்றுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி வேதிப் பொருள்களாகக் கருதப்படுகின்றன. எனினும் ஒரு பலபடி அறியப்பட்ட அதனுடைய முன்னோடி அல்லது வினைகள் மற்றும் மூலக்கூற்று நிறை பகிர்வு மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாலி எத்திலீன் என்பது மிக நீண்ட CH2- சங்கிலிகள் திரும்ப திரும்ப தோன்றும் ஒரு கலவையாகும். பல வேறுபட்ட மோலார் நிறை பகிர்வுகளுடன் இவை விற்கப்படுகின்றன. குறை அடர்த்தி பாலி எத்திலீன், நடுத்தர அடர்த்தி பாலி எத்திலீன், உயர் அடர்த்தி பாலி எத்திலீன், மீவுயர் மூலக்கூற்று எடை பாலி எத்திலீன் எனபன அவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதிப்பொருள்&oldid=2743084" இலிருந்து மீள்விக்கப்பட்டது