உலக வங்கிக் குழுமம்
| உலக வங்கிக் குழுமம் | |
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 27 திசம்பர் 1945 |
|---|---|
| வகை | பன்னாட்டு அமைப்பு |
| அங்கத்துவம் | 185 நாடுகள் |
| தலைவர் | ராபர்ட் சொல்லிக் |
| இணையத்தளம் | worldbank.org |
உலக வங்கிக் குழுமம் (World Bank Group, WBG) ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் குழுமமாகும். இதன் முதன்மை நோக்கம் வறுமையான நாடுகளுக்கு கடன்கள் அமைத்துக் கொடுப்பதாகும். இது முறையாக பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள் ஏற்புறுதி வழங்கப்பட்டபின் திசம்பர் 27, 1945ஆம் ஆண்டு செயலுக்கு வந்தது. 1951ஆம் ஆண்டில் உலக மேம்பாடு அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓசியண்டர் குழுவிற்கு அடித்தளமாக இருந்தது. சூன் 25,1946இல் செயல்படத் தொடங்கி முதல் கடனை பிரான்சிற்கு மே 9, 1947 இல் வழங்கியது. டாலர் 250 மில்லியன் மதிப்புள்ள இந்தக் கடன் போர் பிந்தைய புனரமைப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே இன்றளவில் (உண்மையான மதிப்பில்) உலக வங்கி வழங்கிய மிகப்பெரும் கடன்தொகையாக உள்ளது. இதில் அங்கமேற்கும் அமைப்புகளாவன:
- பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD)
- பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA)
- பன்னாட்டு நிதிக் கழகம் (IFC)
- பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை (MIGA)
- பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)
"உலக வங்கி" என்பது பொதுவாக முதல் இரு நிறுவனங்களின் தொகுதியையேக் குறிக்கும். உலக வங்கிக் குழுமம் என்பது அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொகுதியைக் குறிக்கும்.[1]
உலக வங்கி (ஐபிஆர்டி & ஐடிஏ) மனிதவள மேம்பாடு (கல்வி, சுகாதாரம்), வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (பாசனங்கள், சிற்றூர் சேவைகள்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுக் கட்டுப்பாடு அமைப்புகளை நிறுவுதல்), கட்டமைப்பு (சாலைகள், நகர்ப்புற புத்துயிராக்கல், மின்துறை), அரசாண்மை (ஊழல் எதிர்ப்பு, சட்டபூர்வ அமைப்புகள் மேம்படுத்தல்) போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவி புரியுமாறு குவிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றிற்காக இரு அமைப்புகளும் உறுப்பினர் நாடுகளுக்கு முன்னுரிமை வட்டியில் கடன் வழங்குகின்றன; மிக வறிய நாடுகளுக்கு உதவி மானியங்கள் வழங்குகின்றன. இந்தக் கடன்களும் உதவி மானியங்களும் பெரும்பாலும் அந்தத் துறை அல்லது பொருளாதாரத்தில் உள்ள பரந்தளவு கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டவை. காட்டாக, கடலோரச் சூழல் மேலாண்மை மேம்பாடு திட்டத்திற்கான கடன் புதிய தேசிய மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் நிறுவனங்களை அமைப்பதையும் இனி சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் சட்டங்கள்/கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் கட்டாயப் படுத்தும்.
பன்னாட்டு நிதிக் கழகம் தனியார்துறை முதலீடுகளுக்கு கடன் ஏற்பாடு செய்யவும் பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை தனியார் முதலீடுகளுக்கு காப்புறுதிகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "About Us", wordbank.org, accessed May 30, 2007.