முதலாம் பாண்டியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முதலாம் பாண்டியப் பேரரசு (இடைக்காலப் பாண்டியர் எனவும் கூறுவர்) என்பது ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் நிலவிய பாண்டியர்களின் முடி அரசாட்சியையும் ஆட்சிப்பரப்புகளைக் குறிக்கும். இதை களப்பிரர்களை அழித்த பாண்டிய வேந்தன் கடுங்கோன் தொடங்கி வைத்தான். மூன்றாம் இராசசிம்மன் என்னும் பாண்டிய வேந்தனோடு இப்பேரரசு முடிவுக்கு வந்தது.

வரலாறு[தொகு]

எழுச்சி[தொகு]

சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த பாண்டியர்களின் ஆட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வீழ்ந்ததாக பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. அதன் காரணம் களப்பிரர் என்னும் மூலம் தெரியாத அரச மரபினரின் ஆட்சியே என்று சொல்லப்படுகிறது. ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் (கி. பி. 250 - கி.பி. 550) பாண்டிய நாட்டை களப்பிரர்கள் ஆண்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதியில் கடுங்கோன் என்னும் பாண்டிய வேந்தன் களப்பிரர்களை வென்றதாக வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன. இவனே முதலாம் பாண்டியப் பேரரசை தொடங்கி வைத்தவன்.[1]

வேந்தர்கள்[தொகு]

செப்பேடுகளில் இருந்தும் சில கல்வெட்டுகளில் இருந்தும் வரலாற்றாய்வாளர்களின் கணிப்பின் படியும் பின்வருமாறு பாண்டியர்களின் ஆட்சிப் பட்டியல் அமைகிறது.[2]

வேந்தன் ஆட்சி ஆண்டுகள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945

வீழ்ச்சி[தொகு]

பத்தாம் நூற்றாண்டில் நடந்த வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான் பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான்.ஜந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும்,வாள்,குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் முடிவிலேயே வீழ்ந்தது முதலாம் பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

சோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது.

முதலாம் பேரரசில் பாண்டிய நாடு[தொகு]

முதலாம் பாண்டியப் பேரரசின் போது ஒரு நிரந்தர ஆட்சிப்பகுதி என்று எந்த பாண்டிய மன்னர்களும் தொடர்ந்து ஆட்சி செய்யவில்லை. இவர்கள் பல்லவர்கள், சோழர்கள், சிங்களவர், சேரர், கங்கர், மராத்தியர் போன்ற‌ அரச மரபுகளோடு தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டிருந்தனர். அதனால் ஒரு மன்னன் ஆட்சி செய்த பகுதிகளை அடுத்த மன்னனும் தொடர்ந்து ஆள முடியவில்லை.

ஏழு முக்கியச்செப்பேடுகள்[தொகு]

முற்கால பாண்டியர் செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் பாண்டியர் வரலாற்றில் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவை,

 1. இளையன்புதூர் செப்பேடுகள்
 2. வேள்விக்குடிச் செப்பேடுகள்
 3. திருவரமங்கலத்துச் செப்பேடுகள்
 4. சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை)
 5. சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
 6. பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்
 7. சிவகாசிச் செப்பேடுகள்

முதலாம் பேரரசில் சமூகமும் பொருளாதாரமும்[தொகு]

பிரிவுகள்[3][தொகு]

முதலாம் பாண்டியப் பேரரசில் வர்ணாசிரமம் என்ற ஜாதிய அடுக்குமுறை இல்லை. அந்தணர், வேளாளர், வணிகர், இடையர் போன்ற பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையுடனே வாழ்ந்தார்கள். உயர்ந்த தாழ்ந்த மனித வர்க்கம் என்று பிரிவினைப் படுத்தும் முறை எதும் இல்லை. களப்பிரர் ஆட்சியில் நிலங்களை இழந்த அந்தணர்களுக்கு இறையிலி கிராமங்கள் மீளப்பெறப்பட்டு வழங்கப்பட்டன. சோமாசிக்குறிச்சி, திருவரமங்கலம், வேள்விக்குடி போன்ற ஊர்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அந்தணரும் அரசாங்கப் பணிகளிலும் படையிலும் அமைச்சகத்திலும் பங்கு பெற்றனர். பிரம்மராயன், பிரம்மாதி இராஜன் போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தனர்.

உழவர்கள் வேளாளர்கள் எனவும் பூமி புத்திரர் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர்களும் அரசாங்கப் பணிகளிலும் படையிலும் அமைச்சகத்திலும் பங்கு பெற்றனர். நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட வேளாண் குடிகளைப் போலவே வேளாண் நிலமில்லாமல் உறையுள் மட்டும் கொண்ட குடிகளும் இருந்தனர். சடையன் மாறனின் கீழ் இருந்த பராந்தகப் பள்ளி வேளான் நக்கன் புள்ளன், இராசசிம்மனின் கீழிருந்த காகூர்ச் சேரன் வேளாண் போன்றவர்களை வேளாளத் தளபதிகளாய் பாண்டியர் கொண்டிருந்தனர்.

இடையர்கள் பாண்டியர் ஆட்சியில் குறுநில மன்னர்களாக ஆயர்பாடி, ஆய்க்குடி போன்ற இடங்களில் இருந்தனர். பாண்டிய வேந்தனின் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டே இவர்கள் பெயர் வைத்தார்கள். சில சமயங்களில் பாண்டியர்களை எதிர்த்து போர் புரியவும் செய்தனர். இவர்கள் கோன், கோனார், மன்றாடியார் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர். இக்குறுநில மன்னர்களின் நான்கு முக்கியச் செப்பேடுகளும் பாண்டியர் செப்பேடுகள் போன்றே எழுதப்பட்டுள்ளன.

கல்வி[தொகு]

கல்வி பயில்வோருக்கு எனவே தனியாக மானிய நிலங்கள் வழங்கப்பட்டன. அக்கல்விக்கூடங்களில் உள்ள மாணவர்களுக்கு விதிமுறைகள் தனியாக பிறப்பிக்கப்பட்டிருந்தன. அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடக் கூடாது. சூதாடக்கூடாது. பணியாளர்களை வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் அதை மீறி நடந்தாலும் அவர்களுக்கான தண்டனைகளும் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் பார்த்திபசேகரபுரச் செப்பேட்டில் மேலும் விளக்கப்பட்டிருக்கிறது.[3]

வணிகம்[தொகு]

வணிகக்குழுக்கள்[தொகு]

வணிகர்குழுக்கள் அனைவருமே தங்களுக்கென சங்கம் அமைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அவர்கள் அத்தோடு அறப்பணிகளையும் செய்துள்ளார்கள். வெள்ளறை நிகமத்தோர், நானாதேசிகர், திசை ஐயாயிரத்து ஐநூற்றுவர், குதிரைச் செட்டிகள் போன்றவர்கள் இருந்தார்கள். செங்கல்பட்டில் உள்ள ஒரு திருமால் கோயிலுக்கு பாண்டிய வணிகர் தானம் செய்தததாக பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு சென்று வணிகம் செய்ததாலேயே நானாதேசிகர் என்று பெயர் பெற்றனர் அவ்வணிகர்கள். இவர்கள் திருமெய்யத்தில் உள்ள ஒரு குளத்தை பராமரிக்க தனி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார்கள்.

உக்கிரன்கோட்டையில் திசை ஐயாயிரத்து ஐநூற்றுவர் இராசசிங்கப் பேரங்காடி என தனி ஒரு அங்காடி அமைத்து வணிகம் செய்து வந்தார்கள். அதே ஊரிலுள்ள வடவாயில் அமர்ந்தாள் கோயிலுக்கு திருச்சுற்றாலயம் எடுத்ததும் இவர்களே. குதிரைச் செட்டிகள் வெளிநாடுகளில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து வேந்தர்களுக்கும் வேந்தர் குடும்பத்தினருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் கொடுத்தார்கள்.[3]

வரி விதிப்பு[தொகு]

நிலவரிகள் தனியாக வசூலிக்கப்பட்டன. வறட்சிக்காலங்களின் போது வரிவிலக்கும் வரித்தணிப்பும் இடம்பெற்றது. இவற்றை கண்கானிக்கத் தனிச்சபைகள் இருந்தன. இவர்கள் வறட்சிக் காலத்தின் போது வேந்தனிடம் பரிந்துரை செய்து வரிவிலக்கும் வரித்தணிப்பும் கிராமங்களுக்குப் பெற்றுத்தந்தார்கள்.

நிலவரிகள் தவிர செக்கு வைத்து எண்ணெய் தயாரிப்போர் செக்கிறையும், அங்காடி வணிகத்தில் ஈடுபடுவோர் அங்காடிப்பட்டமும், நெசவுத்தொழில் வினைஞர் தறியிறையும் கட்டினார்கள். இது தவிர முத்துக்குளிப்போருக்கு ஒரு குறிப்பிட்டக் கணக்கில் முத்தே வரியாகப் பெறப்பட்டது.[3]

காசுகள்[தொகு]

அவனீப சேகரன் காசு

முதலாம் பாண்டியப் பேரரசில் இரு அரசர்களின் பெயரில் மட்டுமே காசுகள் கிடைத்துள்ளன. அவை அவனீப சேகரன் கோளக என்று தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட செம்பு காசும் (படம்), ஸ்ரீ வரகுண என்று தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்கக்காசும் ஆகும். அவற்றுள் ஸ்ரீ வரகுண என்ற காசு சீமாற சீவல்லபனான இரண்டாம் வரகுணனைச் சேர்ந்தது (பொ.ஆ. 815-862). அவனீப சேகரன் கோளக என்ற காசில் “கோளக” என்பது “குளிகை” என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப் பெறுகிறது. இச்சொல்லாட்சி கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் பிந்தைய காலகட்டத்தில் (பொ.ஆ. 12 -13 ஆம் நூற்றாண்டு) வருவதால் குழப்பங்கள் உள்ளன.[4]

துறைமுகங்கள்[தொகு]

சங்ககாலத்துக்குப் பின், முற்கால பாண்டியர் காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர் காலம் வரை பாண்டி நாட்டில் ஏற்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியும் அந்நாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிக உறவுகள் வளர காரணமாயிருந்தது. இதன் விளைவாகவே பத்துக்கும் மேற்பட்ட துறைமுக நகரங்கள் பட்டினம் என்ற பின்னொட்டு பெயரோடு முதலாம் பாண்டியப் பேரரசில் தோன்றின.[5] வேறு சில சங்ககாலம் தொட்டே பயன்பாட்டில் இருந்தன. அவை,

பெயர் (நாடு) காலம் தற்போதைய பெயர் அல்லது வட்டம் ஆற்றுக்கழிமுகம்
தொண்டி (முத்தூர்க்கூற்றம்) சங்ககாலம் முதல் - கி.பி. 1310 வரை திருவாடானை வட்டம் -
காயல்பட்டினம் பொ.பி. 875க்கு முன் - 1310 திருவைகுண்டம் வட்டம் தாமிரபரணி ஆறு
மானவீரப்பட்டினம் (மானவீரவளநாடு) பொ.பி. 875க்கு முன் மருதூர், சாத்தான்குளம் வட்டம் கருமானியாறு
பாசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 875 - 1090 திருவாடானை வட்டம் பாசியாறு
உலகமாதேவிப்பட்டினம் (செவ்விருக்கை நாடு) பொ.பி. 875 - 1368 இளங்கோமங்கலம், திருவாடானை வட்டம் -
நானாதேசிப்பட்டினம் (முத்தூர்க்கூற்றம்) பொ.பி. 875 - 1368 வீரகேரளபுரம், திருவாடானை வட்டம் -
பவித்ரமாணிக்கப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 875 - 1368 இராமநாதபுரம் வட்டம் கப்பலாறு
மேன்தோன்றிப்பட்டினம் (கீழ்செம்பில்நாடு) பொ.பி. 875 - 1090 இராமநாதபுரம் வட்டம் -
கேரளாந்தகபுரம் (குரங்குடிநாடு) பொ.பி. 875 - 1090 பட்டினமருதூர், விளாத்திக்குளம் வட்டம் மலட்டாறு

சமயம்[தொகு]

முதலாம் பாண்டியப் பேரரசில் சமணம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம் போன்றவை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன.

முதலாம் பாண்டியப் பேரரசின் முற்பாதியில் சமணம் பாரிய செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தது. சமண இலக்கியங்களும் பல தோன்றின. சமண சமயத்தின் செல்வாக்கை அவர்களின் குகைகள் பாண்டிய நாடு முழுவதும் காணப்படுவதை வைத்தே அறியலாம். சமண முனிவர்களின் குகைகள் ஆனைமலை, அழகர்மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, சித்தன்னவாசல் போன்ற இடங்0களில் காணப்படுகின்றன. அரிகேசரி மாறவர்மன் சுந்தர பாண்டியன் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியன் ஆட்சியில் சமணர் கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்பட்டாலும் வரலாற்றாய்வாளர்களால் அவை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டிலும் சமண சமயம் ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்றிருந்தது கழுகுமலைக் கல்வெட்டுகளில் இருந்து தெரிகிறது. சமண சமயத்தில் பெண்களும் சமயக்குறத்தி என்ற பெயரில் ஈடுபட்டார்கள்.

முதலாம் பாண்டியப் பேரரசின் பிற்பாதியில் சைவமும் வைஷ்ணவமும் செல்வாக்குப் பெறத்தொடங்கின. சைவத்துக்கு நாயன்மார்களும் வைணவத்துக்கு ஆழ்வார்களும் தோன்றி அச்சமயங்களை வளர்த்தார்கள். அரிகேசரி வேந்தனும் மங்கையர்க்கரசியும் பாண்டிய அமைச்சர் குலச்சிறையாரும் 63 சைவ நாயன்மார்களில் மூவர் ஆனார்கள்.[3]

தேர்தல்[தொகு]

கோயில் ஆட்சிமுறைத் தேர்தலை கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலேயே பாண்டியர்கள் அறிமுகப்படுத்திவிட்டார்கள். பின்னர் பத்தாம் நூற்றாண்டில் சோழர் இதை பரலவலாக்கினார்கள். அந்த விதத்தில் பாண்டியர்களின் தேர்தல் முறையே தமிழகத்தின் மிகப்பழைய தேர்தல் முறை எனலாம். இதை ஆய்வாளர்கள் பாண்டியன் மாறன் சடையன் என்பவனின் மானூர் கல்வெட்டைக் கொண்டு உறுதிப்படுத்துகின்றனர்.[6]

கட்டிடக் கலை[7][8][தொகு]

கற்கோயில்கள்[தொகு]

குடைவரைகள் கட்டியவர்/தானம் செய்தவர் காலம்
கீழக்கரை சொக்கநாதர் கோயில் வரகுண பாண்டியன்[9] 8-9 ஆம் நூற்றாண்டு

குடைவரைகள்[தொகு]

இவர்களின் ஆட்சிகள் ஏராளமான குடைவரை கோயில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டன. பல்லவர்களுக்கு முன்னரே பாண்டியர் குடைவரை கட்டிடக் கலையில் சிறப்புற்று இருந்தனர்.[3] ஜைனம், சைவம், வைணவம் போன்றவற்றுக்கு குடைவரைகள் கட்டப்பட்டன.

குடைவரைகள் கட்டியவர்/தானம் செய்தவர் காலம்
பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை
மலையடிக்குறிச்சிக் குடைவரை செழியன் சேந்தன் இக்கோயிலுக்கு தானம் அளித்தான். கி. பி. 637க்கு முன்[3]
மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது.
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
யானைமலை நரசிங்கர் குடைவரை பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது.
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை

ஆதாரங்களும் சான்றுகளும்[தொகு]

 1. மயிலை சீனி. வேங்கடசாமி (ஏப்ரல் 2006). களப்பிரர் ஆட்சியில் தமிழகம். நாம் தமிழர் பதிப்பகம். 
 2. பாண்டியர் செப்பேடுகள் பத்து. சென்னை மாகாணம்: இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு, சென்னை அரசாங்கம் ஆகியோர் உதவியுடன் வெளியிடப்பட்டது. 1967. http://books.google.co.in/books/about/பாண்டியர்_செப்.html?id=fO72PAAACAAJ&redir_esc=y. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 முனைவர் கோமதி நாயகம் (2007). தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை). இராஜ பாளையம்: கங்கா பதிப்பகம். பக். 54 - 69. 
 4. மா. பவானி. "முந்தைய காலப் பாண்டியர் காசுகள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 5 அக்டோபர் 2014.
 5. ந. அதியமான், பா. ஜெயக்குமார், (நவம்பர் 2006.). தமிழகக் கடல்சார் ஆய்வுகள். தஞ்சாவூர்.: தமிழ்ப் பல்க்லைக்கழகம். 
 6. BANEEJI, R (1929-30). "Three Tamil Inscriptions of Laigudi". Epigraphia Indica 20: From 40. https://archive.org/stream/epigrahiaindicav014769mbp/epigrahiaindicav014769mbp_djvu.txt. 
 7. இரா.கலைக்கோவன், மு.நளினி. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1. சேகர் பதிப்பகம். 
 8. இரா.கலைக்கோவன், மு.நளினி. மதுரை மாவட்டக் குடைவரைகள் (தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 2). டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். 
 9. அ. இராமசாமி (1972). Tamil Nadu District Gazetteers Ramanathapuram. பக். PP 894-895. 

வெளி இணைப்புகள்[தொகு]