புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோமைடு [1]
இனங்காட்டிகள்
24959-67-9 N
ATC code N05CM11
Beilstein Reference
3587179
ChEBI CHEBI:15858 Y
ChEMBL ChEMBL11685 Y
ChemSpider 254 Y
Gmelin Reference
14908
InChI
  • InChI=1S/BrH/h1H/p-1 Y
    Key: CPELXLSAUQHCOX-UHFFFAOYSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01324 N
பப்கெம் 259
SMILES
  • [Br-]
பண்புகள்
Br
வாய்ப்பாட்டு எடை 79.904 கி மோல்−1
மருந்தியல்
உயிரியல்
அரை-வாழ்வு
12 d
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−121 கியூ·மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
82 யூ·மோல்−1·கெ−1[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புளோரைடு

குளோரைடு
அயோடைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

புரோமைடு ( bromide) என்பது புரோமைடு என்ற அயனி அல்லது ஈனியைக் கொண்டுள்ள வேதிச் சேர்மமாகும். இதில் புரோமின் அணு −1 மின்சுமையைப் பெற்று (Br) ஆகக் காணப்படும். உதாரணமாக, சீசியம் புரோமைடில் சீசியம் நேர்மின் அயனிகள் (Cs+) (Br) எதிர்மின் அயனிகளின் மின்சுமையால் கவரப்பட்டு இணைந்து மின்சுமையற்ற நடுநிலையான CsBr உருவாகிறது. கந்தக இருபுரோமைடு போன்ற சகப்பிணைப்புச் சேர்மங்களில், புரோமைடு என்ற சொல் இச்சேர்மத்தில் −1 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் புரோமின் காணப்படுகிறது என்பதையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இயற்கையில் புரோமைடு[தொகு]

இயற்கையில் காணப்படும் கடல்நீரில் (35 செ.உ.அ) 65 மி.கி/ லி என்ற அடர்த்தியில் புரோமைடு காணப்படுகிறது. கடல்நீரில் கரைந்துள்ள அனைத்து உப்புகளின் அளவில் இது 0.2% ஆகும். கடல் உணவுகளும் ஆழ்கடல் தாவரங்களும் அதிக அளவு புரோமைடைக் கொண்டுள்ளன. ஆனால் நிலத்தில் இருந்து விளையும் உணவுகளில் இந்த அளவு வேறுபடுகிறது.

கண்டறிதல்[தொகு]

ஒரு உப்புடன் நீர்த்த நைட்ரிக் அமிலத்தையும் அதைத் தொடர்ந்து நீர்த்த வெள்ளி நைட்ரேட்டு கரைசலையும் சேர்த்தால் பாலேடு போன்ற வெள்ளி புரோமைடு வீழ்படிவாகக் கிடைத்தால் அவ்வுப்பில் புரோமைடு இருக்கிறது என்பதை உணரலாம்.

மருத்துவப் பயன்கள்[தொகு]

19 மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புரோமைடு சேர்மங்கள், குறிப்பாக பொட்டாசியம் புரோமைடு மயக்க மருந்தாகப் பயன்பட்டது. அமெரிக்காவில் 1975 ஆம் ஆண்டு வரையிலும் மயக்க மருந்து மற்றும் தலைவலி நீக்கியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த புரோமோ செல்ட்சர் என்ற மருந்து தன்னிச்சையாக தன் பயன்பாட்டை இழந்தது. நாட்பட்ட நச்சுத்தன்மைக்கு புரோமைடுகள் காரணமாக இருக்கும் எனக் கருதப்பட்டதுதான் இதற்குக் காரணமாகும்[3]

புரோமைடு என்ற சொல், அதிகப் பயன்பாட்டினால் தேய்வழக்கில் ஒன்று தன் உண்மையானப் பொருளை இழந்து விடும் என்ற பொருளுடையது. எனவே மயக்கமருந்து என்ற பயன்பாட்டின் அடிப்படையில் இப்பெயர் தோன்றியிருக்கலாம.

புரோமைடு அயனி ஒரு வலிப்புநோய் தணிப்பியாகும். இன்றுவரையிலும் கூட கால்நடை மருத்துவத்தில் இதே பயன்பாட்டிற்காக இது பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகங்களால் புரோமின் அயனி வெளியேற்றப்படுகிறது. பல மருந்துகளுடன் ஒப்பிடுகையில் மனித உடலில் புரோமின் அயனியின் அரை வாழ்வுக்காலம் (12 நாட்கள் ) என்பது அதிகமானது ஆகும். இதனால் மருந்தூட்டம் கொடுத்து கட்டுப்படுத்துவதில் பல சிரமங்கள் உண்டாகின்றன. ஒரு புதிய மருந்தூட்டம் கொடுக்கப்பட்டால் உடல் சமநிலையை எய்த பலமாதங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. மூளை முதுகுத்தண்டு நீரில் புரோமின் அயனியின் அடர்த்தி இரத்தத்தில் உள்ளதைப் போன்று முப்பது சதவீதமாகும். உடலின் குளோரைடு உட்கொள்ளல் அளவையும் வளர்சிதை மாற்றத்தையும் இந்த அளவு பெரிதும் பாதிக்கிறது[4].

இருந்தாலும், அமெரிக்காவில் கால்நடை மருந்தாக , குறிப்பாக நாய்களுக்கான வலிப்பு நோய் சிகிச்சையில் இன்னும் புரோமைடு பயன்படுத்தப் படுகிறது. கால்நடை நோய் கண்டறியும் இரத்தப் பரிசோதனை நிலையங்களில் இரத்தப் புரோமைடு அளவை சோதித்து வருகின்றனர். ஆனால் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப் படாத காரணத்தால் இது மனிதர்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப் படுவதில்லை. சிகிச்சைகான புரோமின் அளவு கண்டறியப்பட்டு செருமன் போன்ற சிலநாடுகளில் மனித வலிப்பு நோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

நாட்பட்ட புரோமைடு உபயோகம் விரைவில் புரோமியத்தில் கொண்டு சேர்க்கிறது. இதனால் பல்திற நரம்பியல் நோய்குறிகள் வெளிப்படுகின்றன. மேலும், புரோமைடு அதிகப்பயன்பாடு காரணமாக தோல் வெடிப்பு போன்ற தொல்லைகளும் உண்டாகலாம். பார்க்க:பொட்டாசியம் புரோமைடு

1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இலித்தியம் புரோமைடு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1940 ஆம் ஆண்டுகளில் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் சில இதய நோயாளிகள் இறந்த காரணத்தாலும், பாதுகாப்பு மற்றும் செயல்திறம் மிக்க (பார்பிட்டியூரேட்டுகள்) மயக்க மருந்துகள் எழுச்சி பெற்றதாலும் இலித்தியம் புரோமைடுகள் வழக்கிழந்தன[5]. இலித்தியம் கார்பனேட்டு மற்றும் இலித்தியம் குளோரைடு சேர்மங்கள் போல இதுவும் இருமுனைக் கோளாறுகள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.

முதலாம் உலகப்போரின் பொழுது வீரர்களின் பாலுணர்வுத் தேவைகளை மட்டுப்படுத்த ஆங்கிலேய சிப்பாய்களுக்கு புரோமைடு வழங்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவியது[6]. ஆனால் இச்செய்தி சரியான முறையில் ஆவணப்படுத்தப்படவில்லை. இராணுவ நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் என்பதால் இவ்விவாதம் நகரத்தில் நிகழ்ந்த வெற்றுப் புனைவுக் கதையாக முடிந்தது. ஒரு வீரனுக்கு நரம்பியல் நோய்க்காகவும் அதிகநேர வேலைக்காகவும் தன்னுடைய கவிஞனும் புகழும் என்ற நாடகக் கதையில் புரோமைடு வழங்கப்பட்டதாக இலார்டு தன்சானி குறிப்பிடுகிறார்.

உயிரியலில் புரோமைடுகள்[தொகு]

புரோமைடுகளில் உள்ள புரோமின் ஒர் அத்தியாவசியமான துணைக் காரணி என்பது சமீபத்தில் நிருபிக்கப்பட்டுள்ளது. தசைநார்ப் புரதங்களில் கந்தகலிமின் குறுக்கு இணைப்புகள் உருவாக்குவதில் இவை வினையூக்கியாகச் செயல்படுகின்றன[7]

புரதப்பெயர்ப்பிற்குப் பின்னான மாற்றங்கள் எல்லா விலங்குகளிலும் தோன்றும் என்பதால் புரோமைடுகள் சுவடறி தனிமங்களாக மனிதர்களுக்கு மிகவும் அவசியமாகிறது.

பல்லுயிர் சார் ஒட்டுண்ணிகளை எதிர்க்கும் வகை இரத்த வெள்ளையணுக்களுக்கு புரோமைடுகள் தேவைப்படுகின்றன. ஐப்போ புரோமைட்டு என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பிகளை உற்பத்தி செய்வதற்கு புரோமைடுகள் பயன்படுத்தப்படுகின்றன, வெள்ளையணு பெராக்சிடேசு மற்றும் ஆலோபெராக்சிடேசு என்ற நொதிகள் குளோரினை உபயோகித்து இவ்வெதிர்ப்பிகளை உருவாக்குகின்றன ஆனால் புரோமைடுகள் உள்ளபோது அவை இதையே தேர்ந்தெடுக்கின்றன[8].தசைநார்ப் புரதங்களில் குறுக்கு இணைப்பு மற்றும் இரத்த வெள்ளையணுக்களில் ஒட்டுண்ணி எதிர்ப்பி என்ற பயன்பாடுகள் தவிர்த்து விலங்குகளில் புரோமைடுகளின் இதர அவசியப்பயன்பாடுகள் அறியப்படவில்லை. பெரும்பாலும் குளோரைடுகள் புரோமைடுகளுக்கு மாற்றாகச் செயல்பட்டு விடுகின்றன. நிலத்திலுள்ள தாவரங்கள் புரோமைடை எடுத்துக் கொள்வதில்லை.

புரோமைடு உப்புகள் சிலசமயங்களில் சூடான குளியல் தொட்டிகளில் தொற்று நோய் கொல்லிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

தசைநார்ப் புரதங்கள் உற்பத்தி செய்யும் சில கடல்வாழ் உயிரினங்களுக்கு புரோமைடு அவசியமான சத்துப்பொருளாக உள்ளது. மியூரெக்சு எனப்ப்படும் சிலவகை கடல் நத்தைகள் புரோமைடை உபயோகித்து கரிமச் சேர்மங்களை உருவாக்குகின்றன. சிலவகைக் கடல் பூஞ்சைகள் புரோமைடு அயனிகளை அதிக செரிவூட்டுகின்றன. அவை மெத்தில் புரோமைடு மற்றும் எண்ணிக்கையிலடங்காத புரோமோ கரிமச் சேர்மங்களை உருவாக்குகின்றன. இத்தயாரிப்பிற்காக வழக்கத்திற்கு மாறான நொதிகளான வனேடியம் புரோமோ பெராக்சிடெசைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆத்திரேலியாவில் உள்ள குயின்சுலாந்தில் உள்ள ஒருவரின் இரத்தத்தில் சராசரியாக 5.3±1.4 மி.கி/லி என்ற அளவில் உள்ளது. வயது மற்றும் பாலின அடிப்படையில் இவ்வளவு மாறுபடுகிறது[9]. இந்த அளவுக்கு அதிகமாக புரோமைடு இருந்தால் அது புரோமினேற்றம் பெற்ற வேதிப்பொருட்கள் காரணமாகவும் கடல்நீர் மற்றும் கடல் உணவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளாகவும் இருக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bromide - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. https://archive.org/details/chemicalprincipl0000zumd_u9g0. 
  3. Adams, Samuel Hopkins (1905). The Great American fraud. http://books.google.com/?id=fd_S2Van52EC&dq=%22The+Great+American+Fraud%22&printsec=frontcover#v=twopage&q&f=true .
  4. Goodman and Gilman, The Biological Basis of Therapeutics, Fourth Edition, Chapter 10 (Hypnotics and Sedatives), p. 121, The MacMillan Co., London, 1970.
  5. Bipolar disorder
  6. Yuki Tanaka, Japan's Comfort Women: Sexual slavery and prostitution during World War II and the US Occupation, Routledge (2002), pp.175
  7. McCall AS, Cummings CF, Bhave G, Vanacore R, Page-McCaw A, Hudson BG (2014). "Bromine Is an Essential Trace Element for Assembly of Collagen IV Scaffolds in Tissue Development and Architecture". Cell 157 (6): 1380–92. doi:10.1016/j.cell.2014.05.009. பப்மெட்:24906154. 
  8. Mayeno, AN; Curran, AJ; Roberts, RL; Foote, CS (1989). "Eosinophils preferentially use bromide to generate halogenating agents". The Journal of Biological Chemistry 264 (10): 5660–8. பப்மெட்:2538427. 
  9. Olszowy, HA; Rossiter, J; Hegarty, J; Geoghegan, P (1998). "Background levels of bromide in human blood". Journal of analytical toxicology 22 (3): 225–30. doi:10.1093/jat/22.3.225. பப்மெட்:9602940. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமைடு&oldid=3848995" இலிருந்து மீள்விக்கப்பட்டது