தலைவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தலைவலி
Migraine.jpg
தலைவலி கொண்ட ஒரு நபர்.
ICD-10 G43.-G44., R51.
ICD-9 339, 784.0
DiseasesDB 19825
MedlinePlus 003024
ஈமெடிசின் neuro/517 neuro/70
MeSH D006261

தலைவலி அல்லது தலையிடி (இலங்கை வழக்கு) என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். தலையிடிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில் சர்க்கரை குறைதல், நெற்றியெலும்புப்புழை அழற்சி (sinusitis) என்பவற்றைக் குறிப்பிடலாம். உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே. தலைக் காயங்களுடன் தலைவலி ஏற்படும்போது காரணம் வெளிப்படையானது. பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலிவலிகளுக்கு, மாதவிலக்கு ஆண்டுகளில் எப்பொழுதும் இருக்கும் பெண்மை இயக்குநீர் (estrogen) அளவின் ஏற்ற இறக்கமே காரணமாகும்.

சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் போன்ற வலிநீக்கிகளே போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், சில குறிப்ட்பிட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். ஏற்படும் தலைவலியை, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் காணமுடியுமானால் அதனைத் தவிர்க்கமுடியும்.

மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

உலக சுகாதார அமைப்பு 2016, ஏப்ரலில் கொடுத்த அறிக்கையின்படி, சனத்தொகையின் அரைவாசியினராவது ஆண்டில் ஒருமுறையேனும் தலைவலிக்கு உட்பட்டிருக்கிறார்கள்[1]. அழுத்தங்களால் ஏற்படும் தலைவலியே மிகவும் பொதுவானதாகவும், கிட்டத்தட்ட 1.6 பில்லியன் மனிதர்கள் (மொத்த சனத்தொகையின் 21.8%), அதைத் தொடர்ந்து அடுத்த நிலையில் ஒற்றைத் தலைவலியும், கிட்டத்தட்ட 848 மில்லியன் (மொத்த சனத்தொகையின்11.7%) காணப்படுகின்றன.[2]. தலைவலியால் அவதிப்படுபவர்கள் அந்த தலைவலி ஆபத்தற்றது என்பதை உறுதிப்படுத்தவும், சிகிச்சை பெறவும் மருத்துவரின் உதவியை நாடுதலே நன்று.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவலி&oldid=2256416" இருந்து மீள்விக்கப்பட்டது