ஒற்றைத் தலைவலி
Migraine | |
---|---|
The Head Ache. George Cruikshank (1819) | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நரம்பியல் |
ஐ.சி.டி.-10 | G43. |
ஐ.சி.டி.-9 | 346 |
ம.இ.மெ.ம | 157300 |
நோய்களின் தரவுத்தளம் | 8207 (Migraine) 31876 (Basilar) 4693 (FHM) |
மெரிசின்பிளசு | 000709 |
ஈமெடிசின் | neuro/218 neuro/517 emerg/230 neuro/529 |
பேசியண்ட் ஐ.இ | ஒற்றைத் தலைவலி |
ம.பா.த | D008881 |
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்க்குறி ஆகும். உடலியங்கியல் நோக்கில் பார்க்கும்போது, இந்த ஒற்றைத் தலைவலியானது ஆண்களைவிட பெண்களிலேயே அதிகம் ஏற்படும் ஓர் நரம்பியல் அசாதாரண நிலையாகும்[1][2]. குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது[2]. இதன் முக்கியமான அறிகுறிகளாக குமட்டல், வாந்தி, ஒளி, ஒலிக்கான சகிப்புத் தன்மை குறைவு என்பன இருக்கின்றன[3][4][5].
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்பட முன்னர் சில எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். பார்வைப் புலத்தில் மாற்றங்கள் ஏற்படல் (உ.ம்: பிரகாசமான ஒளி, கறுப்புப் புள்ளிகள், "Z" வடிவங்கள் தெரிதல்), கழுத்து, தோள்மூட்டுப் பகுதியில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு ஏற்படல், உடற் சமநிலை குழம்புதல், பேச்சில் தடுமாற்றம் ஏற்படல், மணம் நுகர முடியாமை போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் என்பவையே பொதுவான அந்த எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கின்றன[6]. இவ்வகையான எச்சரிக்கை அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடம் தொடக்கம் 1 மணித்தியாலம் முதல் ஏற்படலாம். இவ்வாறான ஒற்றைத் தலவலி ஏற்கப்பட்ட அல்லது மரபார்ந்த ஒற்றைத் தலைவலி (Classical migraine) எனவும், அப்படி பிரத்தியேகமான எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் ஏற்படும் ஒற்றைத் தலைவலி பொதுவான ஒற்றைத் தலைவலி (Common Migraine) எனவும் அழைக்கப்படுகிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும்போது ஒளி, ஒலிக்கு சகிப்புத்தன்மை குறைவதால். இதனால் அவதிப்படுபவர்கள் இருளான, அமைதியான நிலையில் இருக்க விரும்புவார்கள்.
ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் பெண்களில் அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் சமநிலை மாற்றங்களும் காரணமாகக் கருதப்படுகிறது.
ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள்
[தொகு]மனோவியல் காரணிகள்
[தொகு]- மனஅழுத்தம்
- கோபம்
- பதற்றம்
- அதிர்ச்சி
உடலியல் காரணிகள்
[தொகு]- களைப்பு
- தூக்கமின்மை
- அதிகநேர பயணம்
- மாதவிடாய் நிறுத்தம்
உணவு வகைகள்
[தொகு]- உணவின் அளவை அதிகம் கட்டுப்படுத்தல்
- உணவை குறித்த நேரத்தில் எடுக்காதிருத்தல்
- உடலில் நீரினளவு குறைதல்
- மதுபானம்
- காப்பி, தேநீர்
- சாக்கலேட், பால்கட்டி
சூழலியற் காரணிகள்
[தொகு]- பிரகாசமான ஒளி
- புகைத்தல்
- அதிக சத்தம்
- காலநிலை மாற்றங்கள்
- தூய காற்றின்மை
- மருந்துகள் (உ-ம்: கருத்தடை மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்)
சிகிச்சை
[தொகு]ஒற்றைத் தலைவலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அம் மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்படல் வேண்டும்.
தலைவலி வராமல் தவிர்க்க சில நடைமுறைகளை செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். அவற்றை இனங்கண்டு தவிர்த்தல் வேண்டும். எச்சரிக்கை அறிகுறிகள் முதலே ஏற்படுமாயின் அவற்றை இனக்கண்டு தகுந்த நடவடிக்கையை தாமதிக்காது எடுக்க வேண்டும்.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Stovner LJ, Zwart JA, Hagen K, Terwindt GM, Pascual J (April 2006). "Epidemiology of headache in Europe". European Journal of Neurology 13 (4): 333–45. doi:10.1111/j.1468-1331.2006.01184.x. பப்மெட்:16643310.
- ↑ 2.0 2.1 The International Classification of Headache Disorders, 2nd Edition
- ↑ "NINDS Migraine Information Page". National Institute of Neurological Disorders and Stroke, National Institutes of Health. Archived from the original on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Advances in Migraine Prophylaxis: Current State of the Art and Future Prospects" (PDF). National Headache Foundation (CME monograph). Archived from the original (PDF) on 2010-12-30. பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.
- ↑ Gallagher RM, Cutrer FM (February 2002). "Migraine: diagnosis, management, and new treatment options". The American Journal of Managed Care 8 (3 Suppl): S58–73. பப்மெட்:11859906. http://www.ajmc.com/pubMed.php?pii=363.
- ↑ "Guidelines for all healthcare professionals in the diagnosis and management of migraine, tension-type, cluster and medication-overuse headache, January 2007, British Association for the Study of Headache" (PDF). Archived (PDF) from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.