நடுமேற்கு ஐக்கிய அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டாரங்களுக்கான வரையறைகள் மூலத்தைப் பொருத்து வேறுபடுகின்றன.இந்த நிலப்படம் கணக்கெடுப்பு ஆணையம் வரையறுத்துள்ளபடி அமைந்துள்ளது.[1]

நடு மேற்கு ஐக்கிய அமெரிக்கா (Midwestern United States அல்லது Midwest) அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடக்கு நடுவில் உள்ள மாநிலங்களைக் குறிப்பதாகும். இதில் உள்ளடங்கிய மாநிலங்களாவன: இலினொய், அயோவா, கேன்சஸ், மிசூரி, வடக்கு, மெற்கு டகோட்டா, நெப்ராஸ்கா, விசுகான்சின், மிச்சிகன், ஒகையோ, இந்தியானா, மினசோட்டா.

நடு மேற்கு என்ற பயன்பாடு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பரவலாக உள்ளது. இதற்குள்ள மற்ற பெயர்களான வட மேற்கு, பழைய வடமேற்கு, நடு-அமெரிக்கா, தி ஹார்ட்லாந்து தற்போது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. சமூகவியலாளர்கள் அடிக்கடி மிட்வெஸ்ட் என்ற இச்சொல்லை பொதுவான சித்தரிப்பாக நாடு முழுமைக்கும் பயன்படுத்துகின்றனர்.[2]

புவியியல்[தொகு]

காற்றில்லா வலயத்தின் பொதுவான நிலப்பரப்பு - விசுகான்சின்
நடுமேற்கில் உள்ள முதன்மையான நகரம் சிகாகோ ஆகும்

நடு மேற்கு அமெரிக்காவின் நிலப்பகுதி மலைகளும் மடுக்களுமாக கருதப்படுகின்றது. சில இடங்கள் சமவெளியாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் மலைப்பாங்கானவை. காட்டாக, கிழக்கு நடுமேற்கில் ஆப்பலேச்சிய மலைத்தொடர் அருகே, அமெரிக்கப் பேரேரிகள் வடிநிலம், விசுகான்சினின் வடபகுதி, மிச்சிகனின் மேல் மூவலந்தீவு மற்றும் தென்பகுதி தவிர்த்த கீழ் மூவலந்தீவு, மின்னசோட்டா, இந்தியானாவின் பகுதிகள் போன்றவை சமவெளிகளாக இல்லை. மேல் மிசிசிப்பி பள்ளத்தாக்கின் வடக்குப் புறம் காற்றில்லா வலயம் எனப்படுகின்றது; கரடுமுரடான மலைகளை நடுவே கொண்டுள்ளது. விசுகான்சினின் மேற்கு முழுமையும் இந்தப் பள்ளத்தாக்கு நிறைந்துள்ளது. வடகிழக்கு ஐயோவா, தென்கிழக்கு மின்னசோட்டா, வடமேற்கு இல்லினாய் ஆகியவற்றின் சிறிய பகுதிகளும் இந்த வலயத்தில் வருகின்றன. விசுகான்சினின் ஓகூச் மலைகளில் காற்றில்லா வலயத்தின் உச்சிச் சிகரங்கள் அமைந்துள்ளன. தவிர, ஓசார்க் மலைத்தொடரின் வடக்குப் பகுதி தெற்கு மிசௌரியில் உள்ளது. மிசிசிப்பி ஆற்றின் மேற்கில் உள்ள மாநிலங்களில் பிரெய்ரி புல்வெளிகள் காணப்படுகின்றன. மேற்கு நடுமேற்கில் விழும் மழையின் அளவு கிழக்கை விட குறைவாக இருக்கிறது. இது பல்வேறு வகையான புல்வெளிகளை உருவாக்குகிறது. நடுமேற்கின் பெரும்பாலான பகுதிகளை தற்போது "நகரிய பகுதிகள்" என்றோ "வேளாண் பகுதிகள்" என்றோ வகைப்படுத்தலாம். வடக்கு மின்னசோட்டா, மிச்சிகன், விசுகான்சின், மற்றும் ஒகையோ ஆறு பள்ளத்தாக்கு ஆகியன நன்கு முன்னேறவில்லை.

இப்பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரம் சிகாகோ ஆகும். அடுத்ததாக டிட்ராயிட், இண்டியானாபொலிஸ் உள்ளன. இப்பகுதியிலுள்ள பிற முதன்மையான நகரங்கள்: மினியாப்பொலிஸ்-செயின்ட். பால், கிளீவ்லாந்து, செயின்ட் லூயிஸ், கேன்சஸ் நகரம், மில்வாக்கி, சின்சினாட்டி, கொலம்பஸ், டி மொயின், மேடிசன்.

பண்பாடு[தொகு]

நடுமேற்கு அமெரிக்கர்கள் திறந்தமனதுடைய, நட்புள்ள, கள்ளங் கபடமற்றவர்களாக கருதப்படுகின்றனர். சிலநேரங்களில் ஒரேபோன்ற, பிடிவாதமான பண்பாடற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இப்பகுதியின் பண்பாட்டில் சமய நம்பிக்கைகளும் வேளாண் மதிப்புகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. நடு மேற்கு இன்றைய காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையினரும் கால்வினரும் கலந்து வாழும் ஓர் சமூகம்.

19 முதல் 29% வரையான நடுமேற்கத்தியர்கள் கத்தோலிக்கர்கள். ஓகியோ, இந்தியானா, மிச்சிகனில் 14%உம், மிசௌரியில் 22%உம் மின்னசோட்டாவில் 5%உம் திருமுழுக்கு சபையினர். விசுகான்சினிலும் மின்னசோட்டாவிலும் உள்ளவர்களில் 22-24% லூதரனியம் பின்பற்றுவோர். யூதர்களும் இசுலாமியரும் 1% அல்லது குறைவானவர்கள். சிகாகோ, கிளீவ்லாந்து போன்ற நகரங்களில் யூதர்களும் இசுலாமியரும் 1 %க்கு கூடுதலாக உள்ளனர். நடுமேற்கில் உள்ளவர்களில் 16% பேருக்கு சமயம் எதுவும் இல்லை.

நடு மேற்கு அரசியல் பிளவுபட்டுள்ளது. பல தாராளமான கொள்கைகளையும் சில கடுமையான பழமைவாதத்தையும் கொண்டுள்ளன. பேரேரிகள் பகுதியில், நகரங்கள் கூடுதலாக உள்ளமையால், மிகவும் தாராளமான பகுதியாக விளங்குகிறது. இருப்பினும், ஊரக பெரும் சமவெளி மாநிலங்கள் மிகவும் பழமைவாதிகள்.

தெற்கிலிருந்து 20ஆம் நூற்றாண்டு ஆபிரிக்க அமெரிக்கர் குடிபெயர்வால் பெரிய நகரங்களில் ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழ்கின்றனர். இருப்பினும் இங்குள்ள ஆபிரிக்க அமெரிக்கரை விட தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் மிகக் கூடுதலானவர்கள் வசிக்கின்றனர். தொழிற்றுறை, பண்பாடு கூறுகள் இணைந்து புதுவகையான இசைவடிவம் 20ஆம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. ஜாஸ், புளூஸ், ராக் அண்டு ரோல் உள்ளடங்கிய இவ்விசையில் டிட்ராயிட்டின் டெக்னோ இசையும் சிகாகோவின் புளூசும் அவுசு இசையையும் தனித்துவமானவை.

நடு மேற்கின் மக்கள்தொகை 65,971,974, ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 22.2% ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. U.S. Census Bureau. "Census Regions and Divisions of the United States" (PDF). U.S. Census Bureau. U.S. Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 24 October 2016.
  2. Sisson (2006) pp 69-73; Richard Jensen, "The Lynds Revisited," Indiana Magazine of History (Dec 1979) 75: 303-319, online at [1] பரணிடப்பட்டது 1999-10-13 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்[தொகு]