சல்லேகனை
சல்லேகனை அல்லது ஸல்லேகனை (சாந்தாரா, சாமடி மரணம், சன்யாசன மரணம் போன்ற வேறு பெயர்களும் உள்ளன.) (Sallekhanā ( அல்லது Santhara, Samadhi-marana, Sanyasana-marana) என்பது சைன சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும்.[1] சல்லேகனை என்ற சொல்லின் பொருள் மெலிந்துபோதல் என்பதாகும் இந்த உறுதி எடுத்தவர்கள் படிப்படியாக உணவு மற்றும் நீர் உட்கொள்ளுவதைக் குறைத்து உடல் மெலிந்து அதன் வழியாக அவர்கள் தங்களின் உயிரைத் துறப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இதை பெரும்பாலும் சைனத் துறவிகள் அனுசரிப்பர்.[2][3][4] சல்லேகனை உறுதியை துறவி அல்லாத சாதாரண வாழ்க்கை வாழ்பவர்களையும் அனுசரிக்க மதம் அனுமதிக்கிறது, அதாவது முதுமை, தீரா நோய் அல்லது வாழ விருப்பம் அற்றவர்கள் இதை மேற்கொள்கின்றனர்.[4][5] இது சைன சமூகத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் மரியாதைக்குரிய செயலாக உள்ளது. [6] இந்தியாவில் ஆண்டுதோறும் 250 முதல் 500 பேர்வரை இப்படி உயிர் துறக்கின்றனர். ஒருவர் சந்தாரா சடங்கில் இறங்கினால் அது பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து அனைவரையும் வந்து இறப்பைத் தரிசிக்க அழைக்கிறார்கள். சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் மந்திரங்கள் ஓதியபடி பார்த்திருக்க இந்த மரணங்கள் நிகழ்கின்றன.[7]
சைன நூல்களின்படி, சல்லேகனை அகிம்சை நடவடிக்கைஎனவும், இவ்வாறு இறந்துபோவதை தற்கொலையல்ல என்று சைனர்கள் நம்பினார்கள். இதனை வாமனமுனிவர் நீலகேசி எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.[1] இந்த செயலை ஒரு நபர் கவனித்து வருவார்.[8] இந்த செயலானது வடக்கிருத்தலுக்கு ஒப்பானது என்றாலும் சைன சமயத்தவர் மட்டுமே கடைபிடிக்க பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பரவலாக இருந்த வடக்கிருத்தல் சைன சமயத்தின் இந்த சல்லேகனையிலிருந்தே தோன்றியது என்று நம்பிக்கையுள்ளது.
சைன சமயத்தின் பெரியவர்கள் வடக்கே வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதால், அச்சமயத்தினை சார்ந்தவர்கள் வடக்கு திசையை புண்ணியத் திசை என்று கருதினார்கள். அதனால் இந்த சல்லேகனையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோம்பிருப்பதால், இந்த செயலை கடைபிடிக்கும் பிற சமயத்தவர்கள் வடக்கிருத்தல் என்று அழைத்துள்ளனர்.
சல்லேகனை செய்யும் முறை
[தொகு]- சல்லேகனை செய்ய தர்பைப் புல்லின் மீது வடக்கு நோக்கி அமர வேண்டும். அவ்வாறு அமர்ந்து சாகின்ற வரை உணவினை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். இருப்பினும் நீரினை உட்கொள்ளலாம்.[1]
- இந்தச் சடங்கில் இறங்குவோர் முதலில் திட உணவை மறுத்துப் பால் மட்டும் அருந்துவார்கள். பின்னர் பாலையும் நிறுத்தி முழுப் பட்டினியாகக் கிடந்து, உடல் மெலிந்து, ஆசைகள் மெலிந்து, பாவ எண்ணங்கள் மெலிந்து என எல்லாவற்றையும் மெலிய வைத்து இறுதியில் இந்த உடம்பிலிருந்து ஆன்மாவை விடுவிப்பது, அதாவது இறந்து போவதுதான் அந்தச் சடங்கின் நோக்கம்.
- இவ்வாறு சல்லேகனையை மேற்கொள்ளும் போது அருகரையும்[9], தீர்த்தங்கரர்களையும் நினைத்து தியானம் மேற்கொள்ள வேண்டும். வேறு எந்த நினைவுகளையும் கொள்ளுதல் கூடாது. அடுத்த பிறவியில் தேவராக பிறத்தல், பெருஞ்செல்வனாகவோ பிறப்போம் போன்ற எண்ணங்கள் இருக்க கூடாது.[1]
- அத்துடன் சல்லேகனை செய்யும் போது இதனால் தனக்கு விரைந்து உயிர் போகும் என்று எண்ணுதலும் கூடாது.[1]
எதிர்ப்பு
[தொகு]சல்லேகனை தற்கொலைக்கு ஒப்பானது என பௌத்தம் சாடுகிறது. இதனை பௌத்த காவியமான குண்டலகேசி பதிவு செய்துள்ளது.[1] 2015, ஆண்டு இராசத்தான் உயர்நீதி மன்றம் இச்செயலை ஒரு தற்கொலை செயல் என்று தடை செய்தது. இதற்கு சைனர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. 2015 ஆகத்து 31 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை நிறுத்திவைத்து தடையை நீக்கியது.[10]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 சமணமும் தமிழும் -மயிலை சீனி. வேங்கடசாமி - வடக்கிருத்தல்
- ↑ Wiley 2009, ப. 181.
- ↑ Battin 2015, ப. 47.
- ↑ 4.0 4.1 Tukol 1976, ப. 7.
- ↑ Jaini 2000, ப. 16.
- ↑ Kakar 2014, ப. 173.
- ↑ "பட்டினிக் கொடுஞ்சிறை". கட்டுரை. தி இந்து தமிழ். 29 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2017.
- ↑ Vijay K. Jain 2012, ப. 116.
- ↑ https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
- ↑ Ghatwai, Milind (2 September 2015), "The Jain religion and the right to die by Santhara", இந்தியன் எக்சுபிரசு